/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
உடன்பிறப்புகள் காட்டுல பணமழை போதையின் தலைநகரமாகிறது கோவை!
/
உடன்பிறப்புகள் காட்டுல பணமழை போதையின் தலைநகரமாகிறது கோவை!
உடன்பிறப்புகள் காட்டுல பணமழை போதையின் தலைநகரமாகிறது கோவை!
உடன்பிறப்புகள் காட்டுல பணமழை போதையின் தலைநகரமாகிறது கோவை!
ADDED : ஆக 12, 2024 08:54 PM

பணி நிமித்தமாக, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு சித்ரா, மித்ரா வந்திருந்தனர்.
கேன்டீன் அருகே ஸ்கூட்டரை நிறுத்திய சித்ரா, ''என்ன மித்ரா, நம்மூர் கலெக்டருக்கு 'ஸ்டேட் அவார்டு' கொடுக்கப் போறாங்களாமே...'' என, விவாதத்தை ஆரம்பித்தாள்.
''ஆமாக்கா... உண்மைதான்! வழக்கமா கொடிநாள் வசூலை இலக்கை தாண்டி வசூலிச்சு சிறப்பு கேடயம் வாங்குவாங்க. இதுக்கு கார்ப்பரேஷனுக்கும், வட்டார போக்குவரத்து துறைக்கு 'டார்கெட்' நிர்ணயிப்பாங்க.
கலெக்டர் கிராந்திகுமார் அப்படி செய்யலை. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நிறைய வசதிகளை செஞ்சு கொடுத்திருக்காரு. வீடு இல்லாதவங்களுக்கு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டிக் கொடுத்திருக்காரு... இப்படி நிறைய விஷயங்களை சொல்லிட்டே போகலாம்...,''
ஸ்பெஷல் இல்லையே
''அதெல்லாம் இருக்கட்டும். சி.எம்., ஸ்டாலின் வந்திருந்தாரே... நம்மூருக்கு ஏதாச்சும் ஸ்பெஷல் அறிவிப்பு அறிவிச்சாரா...''
''தமிழ்ப் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்கிறதுக்குதான் சி.எம்., வந்திருந்தாரு. அதோட, உக்கடம் மேம்பாலத்தை திறந்து வச்சாரு. ஏற்கனவே கவர்மென்ட் ஹைஆபீசர்ஸ் தயாரிச்சுக் குடுத்த அறிக்கையை மட்டும்தான் பேசுனாரு; அதனால, கோவைக்குன்னு ஸ்பெஷல் அறிவிப்பு ஏதும் சொல்லலை,''
''கிரிக்கெட் மைதானம், கலைஞர் நுாலகம் கட்டப் போறதா சொல்லியிருந்தாங்களே...''
''ஆமாங்க... அந்த ரெண்டு மெகா திட்டங்களுக்கும் நிதி ஒதுக்குவாங்கன்னு எதிர்பார்த்தாங்க. இன்னும் அரசாணை வெளியிடலையாம். அதனால, அடிக்கல் நாட்டு விழா நடத்தலைன்னு ஆபீசர்ஸ் சொன்னாங்க.
மூனு மாசம் கழிச்சு மறுபடியும் அவரை வரவழைச்சு, இதுவரைக்கும் கட்டியிருக்கற பில்டிங்கை திறக்க வைச்சு, அடிக்கல் நாட்டு விழா நடத்துறதுக்கு பிளான் வச்சிருக்காங்களாம். அதுக்குள்ள அரசாணை வெளியிடுறதுக்கான ஏற்பாடுகளை ஆரம்பிச்சிட்டாங்களாம்,''
என்ன பேசுனாங்க?
''அதெல்லாம் இருக்கட்டும்... மேடையில் ஸ்டாலினுடன் வானதி சீனிவாசன் பேசுற மாதிரியான போட்டோ, சமூக வலைதளத்துல வந்துச்சே...''
''ஆமாக்கா... அந்த விழாவுக்கு நானும் போயிருந்தேன். விழா முடிஞ்சு திரும்பி போகும்போது, கொஞ்ச நேரம் நின்னு, நலம் விசாரிச்சிருக்காரு. அப்போ, விழாவுக்கு வந்ததுக்கு சி.எம்., தேங்க்ஸ் சொல்லியிருக்காரு. உடனே, வானதி சிரிச்சுக்கிட்டே விழா நடக்குற இடம் என் தொகுதிக்குள்ள வருதுன்னு சொல்லியிருக்காங்க.
அப்புறம், சென்னையில நடக்குற 'கலைஞர் - 100' நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வரணும்னு, நேருக்கு நேராவே அழைப்பு விடுத்திருக்காரு. அதுக்கு கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துறேன்னு சொன்ன வானதி, கோவைக்கு தேவையான திட்டங்கள் சம்பந்தமா நேர்ல பேசணும்; அப்பாயின்மென்ட் கொடுங்கன்னு கேட்டிருக்காங்க; டைம் தர்றேன்; நேர்ல வாங்க பேசிக்கலாம்னு சி.எம்., சொல்லியிருக்காரு,''
உடன்பிறப்புகள் 'அப்செட்'
''சி.எம்., எதுவுமே பேசாம, கையை மட்டும் அசைச்சிட்டுப் போனதுனால... உடன்பிறப்புகள் 'அப்செட்' ஆகிட்டாங்களாமே...''
''அதுவா... கணியூர்ல, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைச்சிருக்காங்க; கட்சி விழாங்கிறதுனால, 10 ஆயிரம் பேரை திரட்டி தடபுடலா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ஆனா, சிலையை திறந்து வச்சுட்டு, நிலம் கொடுத்தவங்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிச்சாரு. தொண்டர்களை பார்த்து, கையை மட்டும் அசைச்சிட்டு கெளம்பிட்டாரு. நாலு வார்த்தை பேசுவாருன்னு எதிர்பார்த்துக் காத்திருந்த உடன்பிறப்புகள், 'அப்செட்' ஆகிட்டாங்க...''
''மித்து... நம்மூருக்கு சி.எம்., வர்ற எல்லா நிகழ்ச்சியையும், 'டைட் செட்டியூலா' ஏற்பாடு செய்றாங்க. காலையில வந்துட்டு சாயங்காலத்துக்குள்ள சென்னைக்கு திரும்பிப் போயிடுறாரு. விழாக்களையும் அவசர அவசரமா முடிக்கிறாங்க.
கூட்டணி கட்சிக்காரங்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ சி.எம்., முன்னால பேசுறதுக்கு வாய்ப்பு கெடைக்கறதில்லை. அப்படி வாய்ப்பு கெடைச்சாதானே... கோவை மக்கள் என்ன எதிர்பார்க்குறாங்கன்னு நேருக்கு நேரா சொல்ல முடியும்னு, மக்கள் பிரதிநிதிகள் சொல்றாங்க,''
வேலுமணியின் அரசியல்
''முன்னாள் அமைச்சர் வேலுமணி, ஆதரவாளர்கள் படை சூழ ஆத்துப்பாலத்துல இருந்து உக்கடம் வரை, புது மேம்பாலத்துல வந்துட்டு போனாரே... இதிலயும் அரசியலை நுழைக்கிறாங்களா...''
''ஏ.டி.எம்.கே., ஆட்சியில, ஐம்பதாண்டு சாதனை செஞ்சதா மேடைக்கு மேடை பெருமையா பேசிட்டு இருக்காங்க. உக்கடம் மேம்பாலத்துக்கு அவுங்க ஆட்சியில நிதி ஒதுக்குனதுனால உரிமை கொண்டாடியிருக்காங்க.
'நாங்க கட்டுன பாலம்'ன்னு அ.தி.மு.க., தொண்டர்கள் சொன்னது, தி.மு.க., தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு,''
''இப்போ, வேலுமணிக்கு ஹைவேஸ் மினிஸ்டர் வேலு பதிலடி கொடுத்திருக்காரு. உக்கடம் மேம்பாலத் திட்டத்தை அறிவிச்சதே முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்; 2011ல் நடந்த கலெக்டர் மாநாட்டுல அறிவிக்கப்பட்ட திட்டம். ஏழு வருஷமா கெடப்புல போட்டுட்டு, 2018ல தான் துவக்கி வச்சிருக்காங்கன்னு தோலுரிச்சுக் காட்டியிருக்காரு,''
''அறிவிச்சா போதுமா...திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, துவக்கி வச்சது எங்க ஆட்சியிலதானேன்னு அ.தி.மு.க.,காரங்க சொல்றாங்க,'' என்றபடி கேன்டீனுக்குள் நுழைந்தாள் மித்ரா.
பண மழையில் உடன்பிறப்புகள்
ரெண்டு டீ ஆர்டர் கொடுத்த சித்ரா, ''ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கவர்மென்ட் ஆபீசுல கெத்துக் காட்டி கல்லா கட்டுறாங்களாமே...'' என கேட்டாள்.
''ஆமாக்கா... எல்லா டிபார்ட்மென்ட்டுலயும் இப்படித்தான் நடக்குது. ஆளுங்கட்சிக்காரங்களை பகைச்சுக்கிட்டா... மேலிடத்துல கம்ப்ளைன்ட் பண்ணி, வேற ஊருக்கு மாத்திடுறாங்க. பெட்டி படுக்கைய துாக்கிட்டு ஊர் ஊரா அலையறதுக்கு பயந்துட்டு, ஆளுங்கட்சிக்காரங்க சொல்றதை கவர்மென்ட் ஆபீசர்ஸ் செஞ்சு கொடுக்குறாங்களாம்,''
''இப்படித்தான்... அன்னுார் ஏரியாவுல குளம், குட்டையில மண் அள்ளுறதுக்கு ஆளுங்கட்சிக்காரங்களுக்கு 'கப்பம்' கட்ட வேண்டியிருக்குதாம். கவர்மென்ட் தரப்புல இலவசம்னு சொன்னாலும், ஆளுங்கட்சிக்காரங்களுக்கு 'கப்பம்' கொடுத்துட்டா... லோடு லோடா மண் அள்ளுறதை ஆபீசர்ஸ் கண்டுக்கறதில்லையாம்.
அதனால, உடன்பிறப்புகள் கரன்சி மழையில குளிக்கிறாங்க. ஆபீசர்ஸ் நமக்கேன் வம்புன்னு அந்தப் பக்கமே போறதில்லையாம். ஆளுங்கட்சிக்காரங்கள 'அட்ஜஸ்ட்' பண்றதுனால, சம்பந்தப்பட்ட ஆபீசருக்கு 'டைம்' முடிஞ்சும் அவரை மட்டும் டிரான்ஸ்பர் பண்ணாம இருக்காங்களாம்,''
லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரோஷம்
''லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்களுக்கு ரோஷம் வந்துருச்சா.. . மேட்டுப்பாளையத்திலும், பெரியநாயக்கன்பாளையத்திலும் ரெய்டு நடத்தி, பத்திரப் பதிவு அலுவலகத்துல ரெண்டு சப் - ரிஜிஸ்ட்ரார் மேல ஆக்சன் எடுத்திருக்காங்களே...''
''ஆமாக்கா... பத்திரப்பதிவு டிபார்ட்மென்ட்டுல இருக்கற, அந்த ரெண்டு ஆபீசர்களையும் ரொம்ப நாளா கண்காணிச்சுட்டு இருந்தாங்களாம். பெரியநாயக்கன்பாளையம் ஆபீசருக்கு அவரது உதவியாளர் பக்கபலமா இருந்துருக்காரு.
அவரது கார் மூவிங்கை ஒருவாரம் கண்காணிச்சப்போ, ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு ஆபீசர் கெளம்பியதும் குறிப்பிட்ட ஒரு இடத்துல கார் நிக்கிறதையும், உதவியாளர் வந்து 'மரியாதை' செய்றதையும் பார்த்திருக்காங்க. அதுக்கப்புறம் தேதி குறிச்சு, மடக்கி இருக்காங்க,''
''ஒரு நாள் லஞ்சப் பணமே, 2.80 லட்சம்னா மாசத்துக்கு எவ்ளோ ஆச்சு. பினாமிகள் யாருன்னு, விசாரிச்சிட்டு இருக்காங்களாம்,''
''மேட்டுப்பாளையத்துக்கு ரெய்டு போனப்போ, விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் என்கொயரி செஞ்சப்போ, கெடைச்ச இன்பர்மேஷன்ல அவுங்களே ஷாக் ஆகிட்டாங்களாம். லஞ்சப்பணத்தை 'போன் பே'வுல வாங்கி, வசமா சிக்கியிருக்காங்க.
மக்களுக்கான சேவையை எளிமைப்படுத்துறதுக்கு, கவர்மென்ட் டெக்னாலஜி கொண்டு வந்தா, ஆபீசர்ஸ் தரப்புல, லஞ்சம் வாங்குறதுக்கு எப்படியெல்லாம் யூஸ் பண்றாங்கன்னு கேட்டு, அதிர்ந்து போயிருக்காங்க.
ரிஜிட்ஸ்ட்ரேஷன் டிபார்ட்டுமென்ட்டுக்குள்ள போன மாதிரி, கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ளேயும் விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் போகணும்னு பப்ளிக் விரும்புறாங்க,''
ஆளுங்கட்சி அடாவடி
''ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே, அடாவடியா நடந்துக்கிறதுனால கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் என்ன செய்றதுன்னு, தெரியாம முழிக்கிறாங்களாமே...''
''ஆமாக்கா.... உண்மைதான்! கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள போஸ்டர் ஒட்டக்கூடாதுன்னு ஏற்கனவே தடை போட்டிருக்காங்க. இது சம்பந்தமா போலீஸ்ல கமப்ளைன்ட் பண்ணி, கேஸ் பைல் பண்ணாங்க. இப்போ, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு மாவட்டமும், அவரது ஆதரவாளர்களும் சிட்டியில ஆங்காங்கே போஸ்டர் ஒட்டிட்டு வர்றாங்க,''
''கட்சிக்குள்ள தங்களுக்கு இன்னமும் செல்வாக்கு இருக்குங்கிறதை காட்டுறதுக்காக சி.எம்., வர்றப்போ, மினிஸ்டர் உதயநிதி வர்றப்போ போஸ்டர் ஒட்டி, சிட்டியை நாறடிக்கிறாங்க. ஆளுங்கட்சிக்காரங்க மேல கேஸ் கொடுக்க முடியாம, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் முழிக்கிறாங்க. இப்போ, கார்ப்பரேஷன் சென்ட்ரல் ஜோன் ஆபீஸ் சுவத்துலயே ஒட்டிட்டாங்க... இனியாவது ஆபீசர்ஸ் நடவடிக்கை எடுப்பாங்களான்னு பார்ப்போம்,''
போதை உலகம்
''கவர்மென்ட்டுக்கு கணக்கு காட்டுறதுக்காக, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை போலீஸ்காரங்க எடுக்குறாங்க... ஆனா, உண்மையில எந்த நடவடிக்கையும் கடுமையா எடுக்கறதில்லைன்னு, பப்ளிக் சொல்றாங்க...''
''ஏன்க்கா... என்னாச்சு...''
''மித்து, கோவைப்புதுார், குனியமுத்துார் ஏரியாவுல ஏகப்பட்ட காலேஜ் இருக்குது. இங்க படிக்கற ஸ்டூடண்ட்ஸ், காலேஜ் ஹாஸ்டல்ல தங்காம, வாடகை வீடு எடுத்து தங்கியிருக்காங்க. இவுங்க இப்போ போதைக்கு அடிமையாகி, 'தள்ளாடி'ட்டு இருக்காங்க.
தெனமும் நைட், 9:00 மணிக்கு பிறகு கோவைப்புதுார் ஏரியாவுல, ஸ்டூடண்ட்ஸ் போதையில உலாத்துறதை பார்க்கலாம்னு சொல்றாங்க. இதுல, மாணவர்களோட மாணவிகளும் சேர்ந்து போதைக்கு அடிமையாகி இருக்காங்களாம்.
குனியமுத்துார் ஏரியாவுல இருக்குற, இளநீர் கடையில பகிரங்கமா கஞ்சா விக்கிறாங்களாம். இது மாதிரி, கோவைப்புதுார் ஏரியாவுல இருக்கற சில ஓட்டல்கள்ல, போதைப்பொருட்கள் கிடைக்குதாம். ரோந்து போலீஸ்காரங்க என்ன செய்றாங்கன்னே தெரியலை,'' என்றவாறு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பொடி நடையாய் நடந்து சென்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் சித்ரா.
அவளை பின்தொடர்ந்து சென்றாள் மித்ரா.