/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கோட்டையை பிடிக்க ஆளுங்கட்சியில் உருளப்போகுது பலரது தலை
/
கோட்டையை பிடிக்க ஆளுங்கட்சியில் உருளப்போகுது பலரது தலை
கோட்டையை பிடிக்க ஆளுங்கட்சியில் உருளப்போகுது பலரது தலை
கோட்டையை பிடிக்க ஆளுங்கட்சியில் உருளப்போகுது பலரது தலை
ADDED : அக் 06, 2025 11:24 PM

வீ ட்டுத் திண்ணையில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய மித்ரா, ''என்னக்கா, விசேஷமான செய்தி ஏதாச்சும் இருக்குதா,'' என கேட்டபடி, வீட்டுக்குள் நுழைந்தாள்.
''ஆளுங்கட்சியில மாநகர் மாவட்டத்துக்கு புதுசா நியமிச்சிருக்கிற பொறுப்பாளர் பதவியேற்பு விழா, 'மாஜி' அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னால நடந் திருக்கு. 2026 அசெம்ப்ளி எலக்சன்ல, 10 தொகுதியையும் கைப்பத்தணும்னு, உடன்பிறப்புகள்ளாம் சூளுரை ஏத்துக்கிட்டாங்களாம். அதைப்பத்தி, படிச்சிக்கிட்டு இருக்கேன்,''
''முன்னாள் மாவட்ட செயலாளர் மேல இருக்கற அதிருப்தியை, பலரும் வெளிப்படையா சொன்னாங்களாமே...''
''ஆமா... உண்மைதான்! எக்ஸ் மினிஸ்டர் பொங்கலுார் பழனிசாமி பேசுறப்போ, 'நீங்க எதிர்பார்த்த மாற்றம் நிகழ்ந்திருக்கு. அதுக்கு காரணமான செந்தில்பாலாஜிக்கு நன்றி. அவரோட தேர்வு சரியானது'ன்னு சொல்லியிருக்காரு. எம்.பி.ராஜ்குமாரோ, 'மாவட்ட தி.மு.க.,வுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கு; அசெம்ப்ளி எலக்சன்ல ஜெயிச்சுக்காட்டுவோம்'னு சொல்லியிருக்காரு.
ரெண்டு பேரும் பேசுனதை கேட்டு, உடன்பிறப்புகள் ஆரவாரம் செஞ்சாங்க. இருந்தாலும், செந்தில்பாலாஜியோ, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திக் செஞ்ச கட்சி வேலைகளை, தொடர்ந்து செயல்படுத்துவாங்கன்னு பேசுனாரு. ஆனா, முன்னாள் மாவட்ட செயலாளர், இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலை,''
தொழிற்சங்க 'கசமுசா' ''ஆளுங்கட்சி தொழிற்சங்கத்துல, கசமுசாவாமே. அரசு போக்குவரத்து கழக உக்கடம் கிளைக்கு நடந்த, பேரவை எலக்சன்ல தோற்கடிச்சிட்டாங்களாமே...''
''அதுவா... கார்ப்பரேஷன் ஜோனல் ரெண்டெழுத்து சேர்மனின் சொந்தக்காரர், போக்குவரத்து தொழிற்சங்கத்துல மண்டல பொறுப்புல, கோலோய்ச்சிட்டு இருந்தாரு. இப்போ நடந்த பேரவை எலக்சன்ல உக்கடம் கிளையில போட்டி போட்டாரு. அவரோட வேட்பு மனுவே தப்பா இருந்திருக்கு; 'ரிஜக்ட்' பண்ணலாமான்னு மேலிடத்துல கேட்டிருக்காங்க,''
''வேண்டாம்; போட்டி போடட்டும்னு மேலிருந்து சிக்னல் வந்திருக்கு. ஆனா, 15 ஓட்டு வித்தியாசத்துல தோத்துப் போயிட்டாரு. அவரு மட்டுமில்ல; அவரோட ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமா தோத்துப் போயிட்டாங்களாம். 'ஸ்கெட்ச்' போட்டு, எல்லோரையும் தொழிற்சங்க பேரவையில இருந்தே வெளியேத்திட்டாங்கன்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க.
இருந்தாலும், அவரோட தலையீடு இன்னும் ஜாஸ்தியா இருக்குன்னு சொல்றாங்க. கட்சி தலைமையில இருந்து, 'வார்ன்' பண்ணனும்; இல்லைன்னா, அசெம்ப்ளி எலக்சன் சமயத்துல எதிர் முகாமுக்கு வேலை பார்த்து, உள்ளடி வேலை செய்றதுக்கு, வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க,''
கோவையில் வி.ஐ.பி. போட்டி ''அதெல்லாம் சரி... ஆளுங்கட்சி வி.ஐ.பி. நம்மூர்ல போட்டிப் போட போறதா, ஒரு தகவல் அரசியல் வட்டாரத்துல ஓடிட்டு இருக்கே...''
''யெஸ் மித்து! நானும் கேள்விப்பட்டேன். ஆளுங்கட்சியில மேற்கு மண்டலத்துல 35 தொகுதிகளை அவரோட கட்டுப்பாட்டுல குடுக்கப் போறாங்க. வேட்பாளர்களையே அவருதான் 'பிக்ஸ்' பண்ணுவாருன்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடி, சரியா செயல்படாத கட்சி நிர்வாகிகளை களையெடுக்குற வேலைய செஞ்சுக்கிட்டு இருக்காராம்,''
''இது சம்பந்தமா கட்சி தலைமையில பேசியிருக்காங்க. அப்போ, நம்மூர்ல அ.தி.மு.க., 'நெட் ஒர்க்'கை முறியடிக்கிறதுக்கு, அங்கேயே முகாம் போட்டு, அந்த ஏரியாவுல ஏதாச்சும் ஒரு தொகுதியில போட்டி போடுங்க. அங்க இருந்துக்கிட்டு, மேற்கு மண்டலத்தை கவனிச்சிக்கங்கன்னு 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்களாம்.
கரூர்காரர் நம்மூர்ல 'கேம்ப்' அடிச்சா, 2026ல தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையில போட்டி பலமா இருக்கும். அவ்ளோ ஈஸியா அ.தி.மு.க., ஜெயிக்க முடியாதுன்னு, உடன்பிறப்புகள் சொல்றாங்க,''
''ஆமாக்கா, நானும் அ.தி.மு.க., தரப்புல விசாரிச்சேன். இவ்ளோ நாளா, எதிர்தரப்புல வெயிட்டான ஆள் இல்லாம, ஜெயிச்சிட்டு இருந்தோம். 2026ல அப்படி ஜெயிக்கிறது ஈஸியில்லைன்னு, ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க,''
விஜய் கட்சியினர் சோகம் ''விஜய் கட்சி 'அப்டேட்' ஏதாவது இருக்கா...''
''ஆமாக்கா, அவுங்க கட்சிக்காரங்க ரொம்ப நொந்து போயிருக்காங்க. 'பப்ளிக்' சைடுல விஜய்க்கு இன்னும் நல்ல பேர் இருக்கு. ஆனா, பிரசாரத்துக்கு வரணுமே. ஏற்கனவே பிளான் பண்ணுன மாதிரி, நம்மூருக்கு வந்திருக்கணும். யாரோ சொன்னாங்கன்னு, பயண திட்டத்தை பிப்., மாசத்துக்கு மாத்துனாங்க. இப்போ, பிரசாரமே முடங்கியிருச்சு. அவரு சுதாரிச்சு, எலக்சன் சமயத்துல வருவாருன்னு எதிர்பார்க்குறாங்க. அதுவரைக்கும் நம்மூர் கட்சிக்காரங்க எந்தளவுக்கு தாக்குப்பிடிப்பாங்கன்னு தெரியலை. இதுசம்பந்தமா உளவுத்துறையை சேர்ந்தவங்க 'ஸ்டடி' பண்ணி, மேலிடத்துக்கு 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காங்க,''
கட்சியினர் அதிருப்தி ''அதெல்லாம் இருக்கட்டும். எல்லா அரசியல் கட்சிக்காரங்களும், நம்ம மாவட்ட நிர்வாகம் மேல கடுங்கோபத்துல இருக்காங்களாமே... ஏனாம்...''
''அதுவா... ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்துறதுக்கு கட்டுப்பாடு விதிச்சு சர்க்குலர் அனுப்பியிருக்காங்க. இது சம்பந்தமா கலெக்டர் ஆபீசுல, ஒரு மீட்டிங் நடத்தியிருக்காங்க. அதுல கட்சிக்காரங்ககிட்ட, 'ஒப்பீனியன்' கேட்கவே இல்லையாம். ஸ்கிரீன்ல சில காட்சிகளை ஓட விட்டு காட்டிட்டு, ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகிட்டயும் அறிக்கை கொடுத்திருக்காங்க,''
''எலக்சன் நேரத்துல கட்டுப்பாடு விதிச்சா நல்லாயிருக்குமான்னு, மா.கம்யூ., தலைமையில 'மீட்டிங்' போட்டு பேசியிருக்காங்க. இது ஆளுங்கட்சி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. இதுசம்பந்தமா, 'என்கொயரி' செஞ்சு 'ரிப்போர்ட்' கேட்டு, உளவுத்துறைக்கு தகவல் வந்திருக்கு. அவுங்க விசாரிச்சப்போ, கலெக்டர் அலுவலக மீட்டிங் சமாச்சாரம் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. இதுக்கு கூட்டணி கட்சிக்காரங்க எதிர்வினையாற்றுனதை, ஆளுங்கட்சி தரப்பு எதிர்பார்க்கலை,''
விவசாயிகள் கொந்தளிப்பு ''ஆனா, அரசியல் கட்சிக்காரங்களை விட, விவசாயிகள் சங்கங்கள் ரொம்பவும், 'ஆக்டிவ்'வா இருக்கற மேலிடத்துக்கு, ஒரு தகவல் போயிருக்காமே...''
''அதுவும் உண்மைதான்க்கா... விளைநிலங்கள் வழியா காஸ் பைப் லைன் பதிக்கிறது, கிழக்கு புறவழிச்சாலை, இனாம் நில விவசாயிகள் பிரச்னை, கல்குவாரியில குப்பை கொட்டுற பிரச்னை, நொய்யல் ஆத்துல கழிவு நீரை கலக்குறது, சின்னவேடம்பட்டி ஏரியில கழிவு நீரை தேக்கறதுக்கு எதிரா, விவசாயிகள் கொந்தளிப்புல இருக்காங்க,''
''ஒவ்வொரு பிரச்னைக்கும், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவங்க களமிறங்கி, ஆளுக்கொரு பக்கம் போராட்டம் நடத்திட்டு வர்றாங்க. அதைப்பார்த்து, அரசியல் கட்சிக்காரங்க மிரண்டு போயிருக்காங்க. அவுங்க பிரச்னையை கட்சி தலைமைக்கு எடுத்துச் சொல்லி, ஆதரவு தெரிவிச்சு, அறிக்கை விடச் சொல்லி அழுத்தம் கொடுத்துட்டு வர்றாங்க. நிலைமை புரிஞ்சு அரசியல் கட்சிகள் தரப்புல, ஸ்டேட்மென்ட் விடுறதுக்குள்ள, பிரச்னை வேற கோணத்துல போயிடுதுன்னு, உள்ளூர் கட்சிக்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''
வனத்துறை மெத்தனம் ''மித்து, ரோலெக்ஸ் யானையை பிடிக்கறதுல, பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுக்காரங்க ஏன் மெத்தனமா இருக்காங்கன்னு விசாரிச்சியா...''
''ஆமாக்கா, டிபார்ட்மென்ட் காரங்கள்ட்ட கேட்டுப் பார்த்தேன். கேரளா பார்ட்டுல அட்டுக்கல் ஆனைமடுவு ஏரியாவுல, ஆள் உயரத்துக்கு புல் வளர்ந்திருக்குது; அதை சாப்பிட யானை அந்தப்பக்கம் போயிடுச்சுன்னு, விவசாயிகளை சமாதானம் செய்றாங்களாம்,''
''ஆனா, மயக்க ஊசி போட்ட டாக்டர் விஜயராகவனோட, மெடிக்கல் செலவை பாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஏத்துக்க மறுத்துடுச்சாம். தனிப்பட்ட இன்சூரன்ஸ் ஸ்கீம்ல டிரீட்மென்ட் எடுத்துட்டு வர்றாரு. இதனால 'ரோலெக்ஸ்' யானையை பிடிக்கறதுக்கு, மத்த டாக்டர்கள் தயங்குறாங்க. எங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, யாரு டிரீட்மென்ட் பார்க்குறதுன்னு கேக்குறாங்களாம்,''
''ஆனா, பாரஸ்ட் ஆபீசர் ஒருத்தரு வேலை பார்க்குற ஊழியர்களுக்கு, இன்சூரன்ஸ் போட்டுக் கொடுத்திருக்கிறதா சொன்னாரே...''
''அது... பெரியநாயக்கன்பாளையம் ஏரியா. வனக்காவலர், வனக்காப்பாளர் உள்ளிட்டோருக்கு கவர்மென்ட் சைடுல, மெடிக்கல் இன்சூரன்ஸ் செஞ்சு கொடுக்கலை. பெ.நா.பாளையம் வனச்சரகர் சரவணன், வேலை பார்க்கற வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் அத்தனை பேருக்கும், சொந்த முயற்சியால, இன்சூரன்ஸ் செஞ்சு கொடுத்திருக்காரு.
இதை முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு, பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுல இருக்கற எல்லா தரப்பு ஊழியர்களுக்கும், இன்சூரன்ஸ் செஞ்சு கொடுத்தா நல்லாயிருக்கும்னு விரும்புறாங்க,'' என்ற மித்ரா, ''உங்களுடன் ஸ்டாலின்' கேம்ப்களுக்கு வர்ற மனுக்கள்ல, சில பேரு காசு பார்க்கறதா சொல்றாங்களே, உண்மையா,'' என, கேட்டாள்.
''ஆமா, மித்து! ஆயிரக்கணக்கானவங்க பெட்டிஷன் குடுக்க வர்றாங்க. புரோக்கர்ஸ் சிலபேரு, கேம்ப் நடக்குற இடத்துக்கு போயி, தனிப்பட்டா, நில அளவை, பட்டா மாறுதல், பெயர் மாற்றம் சம்பந்தமான அப்ளிகேஷன்களை, தற்காலிக உதவியாளர்களோட ஆன்லைன்ல பதிவேத்துறாங்க. துணை தாசில்தாரையும், தாசில்தார்களையும் சரிக்கட்டி, காசு பார்க்குறதா கம்ப்ளைன்ட் வந்துருக்கு. இந்த விஷயத்துல மாவட்ட அதிகாரிகள்தான், ஆக்சன் எடுக்கணும்னு பப்ளிக் சைடுல விரும்புறாங்க,'' என்றபடி, நகர் வலம் செல்ல தயாரானாள் சித்ரா.