/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
சி.எம்., பங்ஷனுக்கு 'ல'கரத்துல கல்லா கட்டிய ஆபீசர் போலீஸ் அதிகாரியை கதற விட்ட மாம்பழ கட்சிக்காரர்
/
சி.எம்., பங்ஷனுக்கு 'ல'கரத்துல கல்லா கட்டிய ஆபீசர் போலீஸ் அதிகாரியை கதற விட்ட மாம்பழ கட்சிக்காரர்
சி.எம்., பங்ஷனுக்கு 'ல'கரத்துல கல்லா கட்டிய ஆபீசர் போலீஸ் அதிகாரியை கதற விட்ட மாம்பழ கட்சிக்காரர்
சி.எம்., பங்ஷனுக்கு 'ல'கரத்துல கல்லா கட்டிய ஆபீசர் போலீஸ் அதிகாரியை கதற விட்ட மாம்பழ கட்சிக்காரர்
ADDED : ஆக 19, 2024 10:43 PM

அதிகாலையிலேயே எழுந்து உழவர் சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கி வந்த மித்ராவுக்கு, சூடாக காபி கொடுத்து வரவேற்றாள் சித்ரா.
''அக்கா... நியூஸ் பேப்பர் வந்துருச்சா... ஏதாச்சும் ஸ்பெஷல் நியூஸ் இருக்குதா...''
''நாம ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சாலே... அதுதானே நம்மூருக்கு 'ஹாட் டாபிக்கா' இருக்கும்...''
''அதெல்லாம் இருக்கட்டும்... ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சிக்கு போயிருந்தீங்களே... எப்படி இருந்துச்சு... ஷாப்பிங் பண்ணுனீங்களா...''
''ஆமாப்பா... செமய்யா இருந்துச்சு... 4 டோர் பிரிட்ஜ் அறிமுகம் செஞ்சிருந்தாங்க. ஷாப்பிங் செஞ்சது மட்டுமில்லாம, குட்டீஸ் விளையாடுறதுக்கு 'கேம் ஜோன்' இருந்துச்சு; வாய்க்கு ருசியா சாப்பிடுறதுக்கு 'புட் கோர்ட' இருந்துச்சு. என்டர்டெய்ன்மென்ட்டா இருந்துச்சு...''
''அடடே... இந்த தடவை நான் மிஸ் பண்ணிட்டேனே...'' என, 'உச்' கொட்டினாள் மித்ரா.
இன்ஸ்.,களுக்கு தயக்கம்
''அடுத்த வருஷம் நடத்துவாங்க; அப்போ, ரெண்டு பேரும் போகலாம்,'' என ஆறுதல் சொன்ன சித்ரா, ''கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையாங்கிற மாதிரி, ஒரே இன்ஸ்., ரெண்டு ஸ்டேஷனை கவனிக்கிறாராமே...'' என கேட்டாள்.
''ஆமாக்கா, உண்மை தான்! பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு மூனு மாசமா இன்ஸ்., இல்லை; ரத்தினபுரி இன்ஸ்., கூடுதலாக கவனிக்கிறாரு. ஏர்போர்ட், ஹாஸ்பிட்டல்ஸ், எஜூகேஷனல் இன்ஸ்டிடியூசன்ஸ் ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்கு.
மாமூல் கொட்டும்னு, போஸ்டிங் போடுறதுக்கு பெரிய 'அமவுன்ட்' எதிர்பார்க்குறதா போலீஸ் தரப்புல பேசிக்கிறாங்க. ஆனா, இந்த ஸ்டேஷனுக்கு மூனு மாசத்துக்கு முன்னாடி வந்த ஒரு இன்ஸ்., ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டாரு. மாமூலை காட்டிலும், உசுரு முக்கியமுங்கன்னு இந்த ஸ்டேஷனுக்கு வர்றதுக்கு இன்ஸ்.,கள் பலரும் தயக்கம் காட்டுறாங்கன்னு இன்னொரு தகவலும் சொல்றாங்க,''
கதற விடும் மாம்பழம்
''போலீஸ் உதவி கமிஷனரையே, மாம்பழக் கட்சிக்காரர் கதற விடுறாராமே...''
''அதுவா... மாம்பழக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருத்தரு, அவிநாசி ரோட்டுல நடந்து போனாரு; அந்த வழியா பைக்குல வந்த மூனு பேரு, அவரை தாக்கிட்டு 'எஸ்கேப்' ஆகிட்டாங்க. அவரு ரேஸ்கோர்ஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாரு. 'சிசி டிவி'யை பார்த்து, மூனு பேரையும் பிடிச்சு எப்.ஐ.ஆர்., போட்டாங்க. ஆனா, ஜாமின்ல வெளியே விட்டதால, மாம்பழக் கட்சிக்காரர் டென்ஷனாகிட்டாரு,''
''ஸ்டேஷனுக்கு போயி, 'ஜாமின் கெடைக்குற செக்சன்ல ஏன் வழக்கு பதிவு செஞ்சீங்க. எம்.வி.,3 ஆட்ஸ் மோசடியில சம்பந்தப்பட்டவங்க, அடியாட்களை அனுப்பி, என்னை தாக்கியிருக்காங்க; அதை விசாரிக்கணும். இந்த வழக்குல என்ன விசாரிக்கிறீங்களோ, அதையெல்லாம் எனக்கு முழுசா சொல்லியாகணும்னு கேக்குறாராம். இதுசம்பந்தமா இன்ஸ்.,க்கும், போலீஸ் உதவி கமிஷனருக்கும் தெனமும் போன் பண்ணி, 'டார்ச்சர்' செய்றாராம். மாம்பழக் கட்சிக்காரர் மேல, ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க கடுப்புல இருக்காங்க.
விவசாயிகள் கோபம்
''புதுசா வந்திருக்கிற எஸ்.பி., என்ன செய்றாரு. அவரு மேல விவசாயிகள் கடுங்கோபத்துல இருக்காங்களாமே...''
''போலீஸ் அதிகாரிக்கு நம்மூரை பத்தி இன்னும் முழுசா தெரியாது. சுதந்திர தின விழா அன்னைக்கு ஐக்கிய விவசாயிகள் சங்கத்துக்காரங்க, காரமடையில டிராக்டர் பேரணி நடத்துறதுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க; ஐகோர்ட்டும் பெர்மிஷன் கொடுத்திருந்துச்சு. ஆனா, காரமடையிலும், பொள்ளாச்சியிலும் போலீஸ்காரங்க தடுத்து நிறுத்திட்டாங்க,''
இதை கண்டிச்சு, நம்மூர்ல கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. அதுல பேசுன, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், போலீசாரின் செயல்பாடுகளை வெளுத்து வாங்குனாரு.
எஸ்.பி., சொல்லித்தான், டிராக்டர் பேரணியை தடுத்து நிறுத்தி இருந்தா, சட்ட ரீதியா பிரச்னைய சந்திப்போம்னு சொல்லியிருக்காங்க. என்னடா... இது வம்பா போச்சுன்னு போலீஸ்காரங்க பீதியில இருக்காங்க. புது எஸ்.பி., வந்திருக்காரு; ஆரம்பமே தலைவலியா ஆரம்பிக்குதேன்னு போலீஸ்காரங்க புலம்பிக்கிட்டு இருக்காங்க...''
கொட்டுது கரன்சி
''மித்து... போலீஸ்காரங்க புலம்பல் அப்படித்தான் இருக்கும். மாசந்தவறாம மாமூல் வந்துட்டா போதும்; எதைப்பத்தியும் கவலைப்பட மாட்டாங்க. அன்னுார் கோவில்பாளையம் ஏரியாவுல தாபா ஓட்டல் அதிகமாகிட்டே போகுது; புதுசு புதுசா ஆரம்பிச்சுட்டு வர்றாங்க. உணவுடன் 'சரக்கு' அடிக்கிறதுக்கும் 'பெர்மிஷன்' கொடுக்குறதுனால, நைட் நேரத்துல கூட்டம் அள்ளுது. போலீஸ்காரங்களுக்கு மாமூல் கரெக்ட்டா கொடுக்கறதுனால, கோவில்பாளையம் போலீஸ்காரங்களும் கண்டுக்கறதில்லை; மதுவிலக்கு அமலாக்கத் துறையை சேர்ந்தவங்களுக்கும் கண்டுக்கறதில்லை. இதெல்லாம் புதுசா வந்திருக்கிற எஸ்.பி., தெரியாது போலிருக்கு,''
//
சட்டை அழுக்காயிரும்
''ஆமா... நம்மூருக்கு இ.பி.எஸ்., வந்துருந்தாராமே... தடபுடலா பேட்டி கொடுத்ததா நியூஸ் படிச்சேனே...''
''அதெல்லாம் வழக்கமான பேட்டி. சென்னைக்கும், சேலத்துக்கும் போறதுக்கு முன்னாடி, ஏர்போர்ட்டுல நின்னு, இன்டர்வியூ கொடுத்துட்டு போறது அவரோட ஸ்டைல். சூலுார் எம்.எல்.ஏ., கட்டியிருக்கற புது வீட்டுக்கு இ.பி.எஸ்., வந்திருந்தாரு. அவரோட, மத்த எம்.எல்.ஏ.,க்களும் வந்திருக்காங்க,''
''மரியாதை செய்றதுக்காக சால்வை, பூங்கொத்து, மலர் மாலையோட ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருந்தாங்க. இ.பி.எஸ்., வந்ததும் ஒவ்வொருத்தரா மரியாதை செய்ய ஆரம்பிச்சாங்க. ஒரு தொண்டர், மாலை போடுறதுக்கு வந்தாரு; அப்போ, 'மாலை போடாதப்பா... சட்டை அழுக்காயிரும்'னு, முன்னாள் அமைச்சர் ஒருத்தரு சொல்லி தடுத்துட்டாராம். அதனால, கட்சிக்காரங்க 'அப்செட்' ஆகிட்டாங்க,''
//
செலவுக்கு வசூல்
''இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். சி.எம்., கலந்துக்கிட்ட விழாவுக்கு செலவு அதிகமாயிடுச்சுன்னு சொல்லி, கல்வித்துறையைச் சேர்ந்த ஒரு லேடி ஆபீசர் கலெக்சனை அள்ளிட்டாங்களாமே...''
''ஆமாப்பா, உண்மைதான்! நானும் விசாரிச்சேன். காலேஜ் வட்டாரத்துல பேராசிரியர்கள் மத்தியில 'ஹாட் டாபிக்'கா இது தான் ஓடிட்டு இருக்கு. 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை துவக்கி வைக்கிறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சி.எம்., நம்மூருக்கு வந்தாரு. ஸ்டூடன்ஸ்க்கான நிகழ்ச்சிங்கிறதுனால, கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் கேம்பஸ்ல நடத்துனாங்க.
இதை சாக்கா வச்சு, காலேஜ்க்கு தகுந்த மாதிரி, 25 ஆயிரத்துல ஆரம்பிச்சு, 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபா வரைக்கும் வசூல் நடத்தியிருக்காங்க. மொத்த தொகையையும் கேட்டா... விழா நடத்திய கவர்மென்ட் ஆபீசரே ஆடிப்போயிடுவாராம். அந்தளவுக்கு அந்த லேடி ஆபீசர் 'கல்லா' கட்டியிருக்காராம்,''
//
பொய் கணக்கு காட்டுறாங்க
''பாலசுந்தரம் ரோட்டுல இருக்கற எஸ்.சி.,/ எஸ்.டி., ஹாஸ்டல்ல பொய் கணக்கு எழுதி, பணத்தை சுருட்டுறாங்களாமே...''
''அதையேன் கேக்குறே. அந்த ஹாஸ்டல் வளாகத்துல இப்ப தான் புது பில்டிங் கட்டிட்டு இருக்காங்க. ரெண்டு பழைய கட்டடத்துல ஸ்டூடன்ஸ் தங்கியிருக்காங்க. ஒரு பில்டிங்ல, 60 பேரும், இன்னொரு பில்டிங்ல, 40 பேரு தங்கியிருக்காங்களாம். ஆனா, 215 ஸ்டூடன்ஸ் தங்கியிருக்கறதா 'கணக்கு' காட்டுறதா சொல்றாங்க. வழக்கமா சிக்கன், மட்டன், எக் கொடுப்பாங்களாம். இப்போ, சிக்கன் மட்டும் தர்றாங்களாம். மட்டன், எக் தர்றதில்லைன்னு ஸ்டூடன்ஸ் சொல்றாங்க. பொய் கணக்கு காட்டி, கவர்மென்ட் ஒதுக்குற பணத்தை சுருட்டுறதா கம்ப்ளைன்ட் பண்றாங்க,''
//
என்னால முடியாது
''மகாத்மா காந்தி படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்த மாட்டேன்னு ஒரு ஆபீசர் சொன்னாராமே...''
''அதுவா... வெள்ளலுார் டவுன் பஞ்சாயத்துல சுதந்திர தின விழா நடந்துச்சு. தேசியக்கொடி ஏத்துனதுக்கு அப்புறம்... மகாத்மா காந்தி படத்துக்கு மலர் துாவி மரியாதை செஞ்சிருக்காங்க. அங்குள்ள ஆபீசர் ஒருத்தரு, 'என்னால மரியாதை செலுத்த முடியாது'ன்னு, சேர்மன் காதுல சொல்லியிருக்காரு. அதுக்கான காரணத்தை கேட்டதும், அவரும், கவுன்சிலர்களும் அதிர்ந்து போயிட்டாங்களாம். காந்திக்கும் மதச்சாயம் பூசிட்டாரேன்னு புலம்பிட்டு இருக்காங்க,''
//
வரப்போகுது களையெடுப்பு
''ஆளுங்கட்சி தரப்புல என்ன நடக்குது; உடன்பிறப்புகள் என்ன செய்றாங்க,''
''வடக்கு மாவட்டத்துல உட்கட்சி பூசல் எக்கச்சக்கமா இருக்குது. காரமடை, மேட்டப்பாளையம், காரமடை ஏரியாவை சேர்ந்த நிர்வாகிகள் மேல ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் போயிருக்கு. கட்சி தலைமையில இருந்து உளவுத்துறை மூலமா 'ரிப்போர்ட்' வாங்கியிருக்காங்க. மேட்டுப்பாளையத்துல இருக்கற வார்டு செயலாளர்கள்ட்ட, தலைமை கழகத்துல இருந்து போன் வாயிலாக 'என்கொயரி' செஞ்சிருக்காங்க. இதே மாதிரி, காரமடையிலும் பிரச்னை ஓடிட்டு இருக்கு. அவரை இதுநாள் வரைக்கும் காப்பாத்துன முக்கியப்புள்ளி, இப்போ கழட்டி விட்டுட்டாராம். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கப் போறதுனால ஆளுங்கட்சியில களையெடுப்பு சீக்கிரமாவே ஆரம்பிச்சிருவாங்கன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''
//
வெளுத்து வாங்கிய ஆபீசர்
''கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பிரச்னை, ஹனுமான் வால் மாதிரி நீண்டுக்கிட்டே போகுதாமே...''
''அதையேன் கேக்குறீங்க. அந்த குவார்ட்டர்ஸ்ல, 1,848 வீடு இருக்கு. ஏதாச்சும் ஒரு பிரச்னை வந்துட்டே இருக்கு. தண்ணீ பிரச்னை பூதாகரமா இருக்கு. தெனமும் ரெண்டு மணி நேரம் சப்ளை செய்வாங்களாம்; அதுக்குள்ள டிரம்ல பிடிச்சு வச்சுக்கிடணுமாம்.
கக்கூஸ் போனாலும் யூஸ் பண்றதுக்கு முன்கூட்டியே, தண்ணீரை சேமிச்சு வச்சிருக்கணுமாம். இதுமாதிரி பிரச்னை ஓடிட்டு இருக்கு. அதனால, ஹவுசிங் போர்டு ஆபீசர்ஸ்க்கும், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே, 'லடாய்' இருக்கு,''
''உணர்ச்சி வசப்பட்ட நிர்வாகி ஒருத்தரு, மொட்டை மாடிக்கு போயி, தொட்டியை ஓபன் செஞ்சு, தண்ணீர் இல்லைன்னு மொபைல் போனில் போட்டோ எடுத்து, குடியிருப்போருக்காக செயல்படுற 'வாட்ஸ்அப்' குரூப்புல பதிவிட்டிருக்காரு.
அதைப்பார்த்து டென்சனான ஆபீசர்ஸ், கலெக்டரேட் அதிகாரிகிட்ட போட்டுக் கொடுத்துட்டாங்க. சம்பந்தப்பட்ட நிர்வாகியை கலெக்டர் ஆபீசுக்கு வரவழைச்சு, 'மொட்டை மாடிக்கு எப்படி போனீங்க; சாவி யாரு கொடுத்தாரு; தண்ணீர் தொட்டியை எப்படி தெறந்தீங்க.
ஏதாச்சும் கலந்து, மக்களுக்கு பிரச்னை வந்தா யாரு பதில் சொல்றது'ன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியிருக்காங்க. குடியிருப்போர் நலச்சங்கத்துகாரங்க வெலவெலத்து போயிருக்காங்க,'' என்றபடி, சமையலறைக்குள் சென்றாள் சித்ரா.