/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கோவையில் ஜெயிக்கப்போறது யாரு? ஏனோ நம்மூர் 'மாஜி' கவனமா பேசுறாரு!
/
கோவையில் ஜெயிக்கப்போறது யாரு? ஏனோ நம்மூர் 'மாஜி' கவனமா பேசுறாரு!
கோவையில் ஜெயிக்கப்போறது யாரு? ஏனோ நம்மூர் 'மாஜி' கவனமா பேசுறாரு!
கோவையில் ஜெயிக்கப்போறது யாரு? ஏனோ நம்மூர் 'மாஜி' கவனமா பேசுறாரு!
UPDATED : ஏப் 16, 2024 12:38 AM
ADDED : ஏப் 16, 2024 12:27 AM

பணி நிமித்தமாக, சித்ராவும், மித்ராவும், கலெக்டர் ஆபீஸ் சென்றிருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்தபின், மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக, அலுவலர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர்.
அதை கவனித்த மித்ரா, ''என்னக்கா, தேர்தல் ஆணையம் படு ஸ்பீடா இருக்கு போலிருக்கே. இன்னும் ஓட்டுப்பதிவே நடக்கலை; அதுக்குள்ள, ஓட்டு எண்ணுறதுக்கு என்னென்ன செய்யணும்னு தயாராக ஆரம்பிச்சிட்டாங்க,''
''அதெல்லாம் இருக்கட்டும்... கள நிலவரம் எப்படி இருக்கு...''
''நம்ம தொகுதியை பொருத்தவரைக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை, களத்துல அதிகமா பார்க்க முடியறதில்லை. அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிர்பார்த்த அளவுக்கு, கட்சி நிர்வாகிங்க 'சப்போர்ட்' இல்லை. 'ரெய்டு'க்கு பயந்து 'மாஜி'யும் சைலன்ட்டா இருக்காரான்னு தெரியலை. பொள்ளாச்சி தொகுதிக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை, கோவைக்கு கொடுக்கறதில்லை,''
''அதனால, தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் நேரடி போட்டி இருக்கு. அண்ணாமலையை ஜெயிக்க விடக்கூடாதுன்னு, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சேர்ந்து எதிர்வேலை செய்றாங்க. அண்ணாமலையை பத்தி கேள்வி கேட்காதீங்கன்னு சொல்லிட்டு, அவரை பத்தியே எந்நேரமும் பேசிட்டு இருக்காங்க,''
சாதகமா, பாதகமா
''களம் அண்ணாமலைக்கு சாதகமா இருக்கா; பாதகமா இருக்கா,''
''இந்த தடவை பதிவாகற ஓட்டு, மூணு முக்கிய கட்சிகளுக்கும் பிரிஞ்சிடும். தி.மு.க., தரப்புல களப்பணி பக்காவா செஞ்சிட்டு இருக்காங்க. இருந்தாலும், நம்மூர்ல ஏகப்பட்ட பேருக்கு உரிமைத்தொகை கிடைக்காததால, லேடீஸ் பலரும் அதிருப்தியில இருக்காங்க,''
''இன்னொரு விஷயம்... நம்மூர்ல இலவச மகளிர் பஸ் கம்மி. சொகுசு பஸ்சுங்கிற பேர்ல ரெட் பஸ் ஓட்டுறாங்க; இதுல இரட்டிப்பு கட்டணம். நம்மூர்ல மட்டும் இலவச மகளிர் பஸ் குறைவுங்கிற விஷயம், தி.மு.க.,காரங்களுக்கே தெரியலை,''
''ஆளுங்கட்சி மீதான அதிருப்தியும், அ.தி.மு.க., சைலன்ட்டா இருக்கறதும் பா.ஜ.,வுக்கு பலத்தை அதிகப்படுத்தி இருக்கு. 2019 தேர்தலை காட்டிலும், இந்த தடவை ஓட்டு சதவீதம் அதிகரிச்சா, அண்ணாமலைக்கு சாதகமா இருக்கும்னு சொல்றாங்க. ஓட்டு சதவீதம் சொல்லும்படியா இல்லேன்னா... ரெண்டு கட்சியும் சமபலமா இருக்கும். சட்டசபை தேர்தல்ல கமலுக்கும், வானதிக்கும் இருந்த மாதிரி, இழுபறியா இருக்கும்னு சொல்றாங்க,''
கம்யூ.,வுக்கு சங்கடம்
''ராகுல் கலந்துக்கிட்ட கூட்டத்துல, கம்யூ., கட்சி நிர்வாகிகளை மேடை ஏத்தலையாமே...''
''கேரளாவுல காங்கிரசுக்கும், கம்யூ.,வுக்கும் போட்டி நடக்குது. மேடையில ராகுலை உட்கார வச்சுட்டு, பக்கத்துல கம்யூ., நிர்வாகிகளை ஒக்கார வச்சா நல்லா இருக்காதுன்னு தவிர்த்துட்டாங்களாம். ஆனாலும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சங்கடமாம்,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சித்ரா, எதிர் திசையில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தாள்.
புறக்கணிப்போம்
ரவா ரோஸ்ட் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''தி.மு.க.,வை புறக்கணிப்போம்னு பிட் நோட்டீஸ் அச்சடிச்சு வீடு வீடா, கடை கடையாய் கொடுக்குறாங்களாமே...'' என கேட்டாள்.
''அதுவா, கார்ப்பரேஷன்ல வேலை பார்க்குற, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலையை நிரந்தரம் செய்யணும்னு, தி.மு.க., அரசின் கதவை பலமுறை தட்டுனாங்க. கொரோனா ரெண்டாவது அலை பரவுனப்போ, முதல்வர் ஸ்டாலின் நம்மூருக்கு வந்தாரு. இ.எஸ். ஐ., ஆஸ்பத்திரிக்குள்ள அந்த உடை அணிஞ்சிட்டு போனாரு,''
''அன்னைக்கு சாயாங்காலம் குமரகுரு காலேஜ்ல அவரை சந்திக்கிறதுக்கு, ஏகப்பட்ட துாய்மை பணியாளர்கள் காத்துக்கிட்டு இருந்தாங்க. காரை நிறுத்தி, ஜன்னல் கண்ணாடியை இறக்கி பேசுனாரு. பணி நிரந்தரம் செய்யணும்னு துாய்மை பணியாளர்கள் சொன்னாங்க. 'சென்னைக்கு போனதும் நடவடிக்கை எடுக்குறேன்'ன்னு சொல்லிட்டு போனாரு,''
''ஆனா, சென்னையில இருந்து வந்த ஜி.ஓ.,வுல இனி துாய்மை பணியாளர்களுக்கு, அரசு வேலையே கிடையாது; பணியின்போது இறந்தாலும் கருணையில கொடுக்கற வாரிசு வேலையும் கிடையாதுன்னு, அரசாணை போட்டுட்டாங்க.
அதனால, துாய்மை பணியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, தி.மு.க., கவர்மென்ட் மேல கடுங்கோபத்துல இருக்காங்க. இதை தேர்தல்ல காட்டுறதுக்காக, 'தி.மு.க.,வை புறக்கணிப்போம்'ன்னு நோட்டீஸ் அச்சடிச்சு, வீடு வீடா கொடுத்துட்டு இருக்காங்க,''
ஆர்வலர்களுடன் பேச்சு
''சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கூப்பிட்டு, அமைச்சர் மதிவேந்தன் பேசி, சமாதானம் செஞ்சாராமே..''
''அதுவா... அண்ணாமலை பிரசாரம் செய்றப்போ, 'நொய்யல் ஆற்றை சீரமைக்க கொடுத்த நிதியில முறைகேடு நடந்திருக்கு; கவுசிகா நதியை மீட்டெடுக்கணும்; உப, கிளை நதிகளை காணோம்; பசுமை பரப்பை அதிகரிக்காததுனால, வெப்பம் அதிகரிச்சிருக்குன்னு பகிரங்கமா குற்றம் சுமத்துனாரு,''
''இதை லேட்டா புரிஞ்சுக்கிட்ட தி.மு.க., தரப்பு, சுற்றுச்சூழல் துறை அமைச்சரான மதிவேந்தனை நம்மூருக்கு வரவழைச்சு, தேர்தல் பணிமனையில சூழல் நிர்வாகிகளுடன் பேசுறதுக்கு ஏற்பாடு செஞ்சுருக்காங்க.
மூணு வருஷமா எதுவும் செய்யாம இருந்துட்டு, எலக்சன் வந்ததும் கூப்பிட்டு பேசுனது பலருக்கும் பிடிக்கலையாம். அரசியல் அழுத்தங்கிறதுனால நேர்ல போயி, கோரிக்கையை சொல்லிட்டு வந்துருக்காங்க,''
கட்டாய நெருக்கடி
டேபிளுக்கு வந்த ரவா ரோஸ்ட்டை சாப்பிட துவங்கிய மித்ரா, ''பிரதமர் மோடியை தொழில்துறையை சேர்ந்தவங்க சந்திச்சு பேசுன மாதிரி, முதல்வர் ஸ்டாலினையும் சந்திச்சு பேசுனாங்களாமே...'' என கேட்டாள்.
''ஆமா, மித்து! ஆளுங்கட்சி அதிகாரத்துல கட்டாயப்படுத்தி கூப்பிட்டாங்களாம். வேற வழியில்லாம திருப்பூருக்கு போயி, சிலர் மட்டும் பார்த்திருக்காங்க. இருந்தாலும், தொழில்துறை ஆதரவு பா.ஜ., பக்கம்தான் இருக்குது. தொழில்நிறுவனங்களை நடத்துற பலரும் வெளிப்படையாவே, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க,''
''மின் கட்டண உயர்வுல பாதிக்கப்பட்டு இருக்கிற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவங்க, இவ்ளோ நாளா போராட்டம் நடத்தியும், தி.மு.க., அரசு கண்டுக்கிடலை. இப்போ, சங்க நிர்வாகிகள் சிலரை 'கூல்' பண்ணி, முதல்வரை சந்திக்கிறதுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க. இதை தொழில் நடத்துறவங்க விரும்பலையாம்,''
கவுன்சிலர் எங்கே
''ஓட்டு கேட்டு போன, தி.மு.க.,வினரை லேடீஸ் சுத்தி வளைச்சு கேள்வி கேட்டு, துளைச்சு எடுத்துட்டாங்களாமே...''
''இந்த நிலைமை, நரசிம்ம நாயக்கன் பாளையத்துல தி.மு.க.,வுக்கு ஏற்பட்டிருக்கு. தேர்தல் பிரசாரத்துக்கு கட்சி நிர்வாகிகள் வீடு வீடா போனப்போ, 'இந்த ஏரியா கவுன்சிலர் எங்கே'ன்னு, பொதுமக்கள் கேட்டிருக்காங்க,''
''இதனால, வார்டுக்குள்ள கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு இருக்கான்னு முன்கூட்டியே தெரிஞ்சிட்டு, பிரசாரத்துக்கு போறாங்க. எதிர்ப்பு இல்லைன்னு தெரிஞ்சா தான், வார்டுக்குள்ளேயே போறாங்க,''
பட்டுவாடா துவங்கியாச்சு
''வீட்டுக்கு வீடு, பண பட்டுவாடா துவங்கியிருச்சாமே,''
''ஆமாப்பா, தி.மு.க.,வுக்குதான் கண்டிப்பா ஓட்டுப் போடுவாங்கன்னு தெரியற குடும்பத்துக்கு ஓட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்திருக்காங்க. இதை டோக்கன் அட்வான்ஸ்ன்னு சொல்லியிருக்காங்க. மத்த இடத்துல, ஒரு ஓட்டுக்கு இப்போதைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டு, வேறெந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கும் போகக்கூடாதுன்னு, கண்டிஷன் போட்டிருக்காங்க. இதை உளவுத்துறை போலீஸ்காரங்க மோப்பம் பிடிச்சு, ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க,''
''அக்கா, அவுங்க ரிப்போர்ட் கொடுத்து என்னாகப் போகுது. இதுவரைக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரா எலக்சன் கமிஷன் ஏதாச்சும் நடவடிக்கை எடுத்திருக்கா. அண்ணாமலை மேலயும், ஆதரவாளர்கள் மேலயும் அடுக்கடுக்கா கேஸ் போட்டு நெருக்கடி கொடுக்குறாங்க.
''ஆனா, ஆளுங்கட்சி நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்றதை தடுக்கவும் செய்யலை; பறிமுதலும் செய்யலை,''
''உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்; கேளுங்க! சூலுார் தொகுதியில பறக்கும் படையை சேர்ந்த எஸ்.ஐ., ஒருத்தரும், பறக்கும் படை அதிகாரி ஒருத்தரும், 'அன் கோ' போட்டு ரோட்டோரத்துல, வாகனத்தை நிறுத்தி, ஹாயா துாங்குறாங்க. ராத்திரி நேரத்துல மரத்துக்கு கீழ் வண்டிய நிறுத்திட்டு துாங்கி வழியுறாங்களாம். இவுங்களை பத்தி, தேர்தல் நடத்துற அதிகாரிகளுக்கு ஏற்கனவே கம்ப்ளைன்ட் போயிருக்கு. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்,''
பொழியுது கரன்சி மழை
ரெண்டு காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''நீலகிரி தொகுதியில கட்சிக்காரங்க கரன்சி மழையில குளிக்கிறாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள்.
''ஆமாக்கா.... மத்திய இணை அமைச்சர் முருகன், மத்திய முன்னாள் அமைச்சர் ராஜா, முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ்னு, அங்க மும்முனை போட்டி நிலவுது,''
''தி.மு.க.,வுல பூத் கமிட்டிக்கு இதுவரை 40 ஆயிரம் ரூபா கொடுத்திருக்காங்க. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், இன்னொரு ரவுண்ட் கொடுப்பாங்கன்னு சொல்லி இருக்காங்களாம்,''
''அ.தி.மு.க.,வுல மூனு தவணையா, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. இவுங்க தரப்புலயும் எலக்சனுக்கு முந்தைய நாள் அடுத்த கவனிப்பு இருக்குமாம். பா.ஜ., தரப்புல ரெண்டு தவணையா தலா 10 ஆயிரம் ரூபா, பூத் கமிட்டிகளுக்கு கொடுத்திருக்காங்களாம். இதே மாதிரி, சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகளுக்கும் பணம் பட்டுவாடா செஞ்சிருக்காங்களாம்,''
''எந்த தேர்தல்லயும் இந்த மாதிரி கட்சிக்காரங்களுக்கு பணம் கொடுத்ததில்லையாம்; இந்த தடவை போட்டி 'ரிஸ்க்'கா இருக்கறதுனால, மூணு வேட்பாளர்களும் கட்சிக்காரங்களை நல்லா கவனிக்கிறாங்களாம்,''
பணம் சுருட்டல்
''இருந்தாலும், தி.மு.க., தரப்புல அதிருப்தி நிலவுதுன்னு கேள்விப்பட்டேனே...''
''மேட்டுப்பாளையத்துல ராஜா பிரசாரம் செய்றதுக்கு மேலிடத்துல இருந்து பணம் கொடுத்திருக்காங்க; அதுல, பெருந்தொகையை நிர்வாகிங்க சில பேரு சுருட்டிட்டாங்களாம். கீழ்மட்ட நிர்வாகிங்க சிலபேரு, மேலிடத்துக்கு தகவல் சொல்லியிருக்காங்க; இதுசம்பந்தமா 'என்கொயரி' நடந்திருக்கு. கட்சி நிர்வாகிகளை கூப்பிட்டு, ராஜாவும் 'வார்னிங்' செஞ்சிருக்காராம்,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் மித்ரா.

