/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
ஞாயித்துக்கிழமை டூட்டி பார்த்து அதிகாரிங்க கூத்து!
/
ஞாயித்துக்கிழமை டூட்டி பார்த்து அதிகாரிங்க கூத்து!
ஞாயித்துக்கிழமை டூட்டி பார்த்து அதிகாரிங்க கூத்து!
ஞாயித்துக்கிழமை டூட்டி பார்த்து அதிகாரிங்க கூத்து!
ADDED : அக் 14, 2024 11:42 PM

பணி நிமித்தமாக, கலெக்டர் ஆபீசுக்கு சித்ராவும், மித்ராவும் வந்திருந்தனர்.
பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிட, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வந்திருந்தார்.
அந்நிகழ்வுக்கு சென்று வந்த சித்ராவிடம், ''என்னக்கா... ஸ்டேட் லெவல் அறிவிப்புகளை, வழக்கமா சென்னையில இருந்துதானே வெளியிடுவாங்க. ஏன் இந்தவாட்டி நம்மூர்ல வெளியிட்டாங்க...'' என, கேட்டாள் மித்ரா.
''மித்து, சென்னைக்கு அடுத்தபடியா, கோவைக்கு கவர்மென்ட் தரப்புல கூடுதல் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. ஒரு கவர்மென்ட் ஸ்கூலை, பிரைவேட் கம்பெனிக்காரங்க சி.எஸ்.ஆர்., நிதியில ரெடி பண்ணி குடுத்தாங்க. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மினிஸ்டர், நம்மூர்ல இருந்தே பொதுத்தேர்வு அட்டவணையை, 'ரிலீஸ்' பண்ணியிருக்காரு...''
பரிவட்டம் கட்டி மரியாதை
''அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துனாங்களாமே...''
''அதுவா... ராமநாதபுரம் ஏரியாவுல, சமீபத்துல அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துச்சு; கோவில் நிர்வாகிகள் தரப்புல இருந்து, அமைச்சரை நேர்ல சந்திச்சு அழைப்பு குடுத்துட்டு வந்திருந்தாங்க. இருந்தாலும் கும்பாபிஷேகத்துக்கு அவரால வர முடியலை... நம்மூருக்கு வந்ததும் ஞாபகம் வச்சிருந்து, கோவிலுக்கு போயிருக்காரு. மாலை மரியாதை செஞ்சு, பரிவட்டம் கட்டி, ஆரத்தி எடுத்து தடபுடலா வரவேற்பு கொடுத்திருக்காங்க. அவரும் பயபக்தியோட சுவாமி தரிசனம் செஞ்சு, பிரசாதம் வாங்கிட்டு போயிருக்காரு,''
பொறுப்பாளர் மிஸ்ஸிங்
''மினிஸ்டர் செந்தில்பாலாஜியை நம்மூருக்கு பொறுப்பாளரா அறிவிச்சும் இன்னும் வரக் காணோமே... ஏனாம்...''
''திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அமலாக்கத்துறை ஆபீசுக்கு போக வேண்டியிருக்குதாம்; சனிக்கிழமை கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்குதாம். இடைப்பட்ட நாட்கள்ல தான் வெளியே வர முடியுமாம். சென்னையில மழை எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்திருக்கிறதுனால, அங்க இருந்து வர முடியாத நெருக்கடி ஏற்பட்டு இருக்குதாம். சீக்கிரம் வருவாருன்னு சொல்றாங்க,'' என பேசிக் கொண்டே, கலெக்டர் ஆபீஸ் பின்புறமுள்ள கேன்டீனுக்கு சென்றாள் சித்ரா.
விடுவிக்கப்படாத ஆபீசர்ஸ்
பின்தொடர்ந்து வந்த மித்ரா, ''கார்ப்பரேஷன் டவுன் பிளானிங் ஆபீசர்களை, வேற ஊருக்கு மாத்தியும், இன்னும் யாரையும் விடுவிக்கலையாமே...,'' என, கேட்டாள்.
''அதுவா... அசிஸ்டென்ட் டவுன் பிளானிங் ஆபீசர் மூனு பேரை, வெவ்வேறு நகரங்களுக்கு டிரான்ஸ்பர் செஞ்சு கவர்மென்ட் ஆர்டர் போட்டிருக்கு. அதுல ஒருத்தரு விருப்பப்பட்டு, அவுங்க சொந்த ஊருக்கே போறாராம். மத்த ரெண்டு பேரு மீதும் வலுவா கம்ப்ளைன்ட் போயிருக்காம்.
கார்ப்பரேஷன்ல இருக்கற, 'துணை'யானவர் கூட சேர்ந்துட்டு, லே-அவுட் அப்ரூவல் சம்பந்தமா விளையாடி இருங்காங்களாம். அதனால, ஊரு விட்டு ஊரு, டிரான்ஸ்பர் ஓலை வந்திருக்கு. இன்னும் அவுங்களை கார்ப்பரேஷன்ல இருந்து விடுவிக்கலை. டிரான்ஸ்பர் ஆர்டரை நிறுத்தி வைக்கிறதுக்கு, பெரு முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்...''
ஏஜன்சியோடு டீலிங்
''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் கமிஷனர் சொன்னாலும்... அனுமதியற்ற விளம்பர பலகைகளை டவுன் பிளானிங் ஆபீசர்ஸ் எடுக்கறதில்லையாமே...''
''ஆமா, மித்து! உண்மைதான்! விளம்பர ஏஜன்சி நிறுவனத்தினரும், டவுன் பிளானிங் ஆபீசர்ஸ்சும் ஒரு விதமான 'நெருக்கத்துல' இருக்காங்க. விளம்பர பலகை வைக்கிறதுக்கு அரசாணையில இடம் இருக்குன்னு, கமிஷனர்கிட்ட பொய்யான தகவல் சொல்லி, நம்ப வைக்கிறாங்க. அதனால, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, வீதிமீறல் விளம்பர பலகைகளை, இப்போ மறுபடியும் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க... கருமத்தம்பட்டியில மூணு பேர் உயிரிழந்த மாதிரி, ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்தா தான், கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் நடவடிக்கை எடுப்பாங்க போலிருக்கு,''
மூனு வீடுகளுக்கு சீல்
''ஹவுசிங் போர்டு குவார்ட்டர்ஸ்சை, உள்வாடகைக்கு விட்டிருந்த கவர்மென்ட் ஸ்டாப்ஸ் வசமா சிக்கிட்டாங்களாமே...''
''ஆமாப்பா, கவுண்டம்பாளையம் குவார்ட்டர்ஸ்ல, 20 வீடுகளை உள்வாடகைக்கு கொடுத்திருந்ததை, ஹவுசிங் போர்டு ஆபீசர்ஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. ஆதாரங்களை திரட்டிய அதிகாரி, ஆக்சன் எடுக்கச் சொல்லி, கலெக்டருக்கு 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காரு. அதுல, முதல்கட்டமா, அஞ்சு ஊழியர்கள் மேல, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஆர்டர் போட்டிருக்காரு. இதுல, மூனு வீடுகளை 'சீல்' வச்சு, ஹவுசிங் போர்டு வசம் கொண்டு வந்திருக்காங்க,''
கண்காணிக்க போலீஸ்
மசால் வடை எடுத்து சாப்பிட்ட மித்ரா, ''போலீஸ்காரங்களை கண்காணிக்குறதுக்கு போலீஸ்காரங்க நியமிச்சிருக்காங்களாமே...'' என, கேட்டாள்,
லெமன் டீ உறிஞ்சிய சித்ரா, ''குற்றப்பிரிவு போலீசுக்கு ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது. சட்டப்படி கேஸ் பைல் செய்யாம, ஸ்டேஷனுக்கு வெளியே 'பஞ்சாயத்து' பேசி, 'டீல்' பேசுறதாவும் ஒரு கம்ப்ளைன்ட் போயிருக்கு. அதனால, குற்றப்பிரிவு போலீசுக்கு வர்ற தகவலை 'என்கொயரி' செஞ்சு, 'கேஸ்' பைல் செய்றாங்களான்னு, கண்காணிக்கிறதுக்கு ஒரு ஆபீசரை நியமிச்சிருக்காங்க... அவரு, கம்ப்ளைன்ட் டீட்டெய்ஸ், ஆக்சன் சம்பந்தமா கண்காணிச்சு, உயரதிகாரிக்கு தகவல் சொல்வாராம்... அதனால, குற்றப் பிரிவு போலீஸ்காரங்க கதிகலங்கிப் போயிருக்காங்க...'' என்றாள்.
போலீசுக்கு மிரட்டல்
பில் தொகையை கொடுத்து விட்டு கிளம்பிய மித்ரா, ''காந்திபுரம் ஸ்பா விவகாரம் என்னவாம்... போலீஸ் தரப்புல புகைஞ்சுக்கிட்டு இருக்குதே...''
''அதுவா... காந்தி புரத்துல தனியார் ஓட்டல்ல, ஸ்பா நடத்திய அஞ்சு பேரை காட்டூர் போலீஸ்காரங்க 'அரெஸ்ட்' பண்ணுாங்க... வாடகைக்கு எடுத்த மூணு பேர் மேல கேஸ் போடுறதுக்கு போலீஸ் தரப்புல 'மூவ்' நடந்திருக்கு. அவுங்க, அரசியல் பின்புலத்தை பயன்படுத்தியும், அதிகாரத்தை பயன்படுத்தியும், போலீஸ்காரங்களையும் மிரட்டி இருக்காங்க. அதனால, அந்த மூனு பேரை மட்டும் போலீஸ்காரங்க விட்டுட்டாங்க...''
கட்டப்பஞ்சாயத்து ஸ்டேஷன்
''எந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாலும், கட்டப்பஞ்சாயத்து நடக்குதாமே...''
''ஆமாப்பா... போலீஸ் ஸ்டேஷன்ல அதெல்லாம் சகஜமாகிடுச்சு. திருவிளையாடல் சினிமா படத்துல வர்ற தருமி வசனம் போல, 'பிரிக்க முடியாதது எதுவோ...' ன்னு கேள்வி கேட்டா... 'சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷனும், கட்டப்பஞ்சாயத்தும்'னு சொல்லலாம் போலிருக்கு...''
''ஏன்க்கா... அப்படிச் சொல்லிட்டே... அந்தளவுக்கு மோசமா நடந்துக்கிறாங்களா... என்ன...''
''அந்தக் கொடுமைய ஏன் கேக்குறே... ஆசை ஆசையா வாங்குன காரை அடமானம் வச்ச தம்பதி, அந்தக்காரை மீட்டுத்தரச் சொல்லி, ஸ்டேஷனுக்கு வந்திருக்காங்க. அடமானம் வாங்குன கும்பலோட ஸ்டேஷன் போலீஸ்காரங்க 'டீல்' பண்ணிட்டு, ஒரு வாரமா அந்த தம்பதியை அலைய விட்டுட்டு இருக்காங்க.
இது போதாதுன்னு... ஸ்டேஷன் வாசல்ல வச்சே... குடும்பத்தோட துாக்கிருவோம்னு அந்த தம்பதியை அடமானம் கும்பல் மிரட்டியிருக்கு; போலீஸ்காரங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்துருக்காங்க...''
''போதாக்குறைக்கு ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கற ஜாதிக்கட்சியை சேர்ந்தவங்களும் பஞ்சாயத்து பண்றாங்களாம். இதெல்லாம் உளவுத்துறை போலீஸ்காரங்களுக்கு தெரியாதா அல்லது அவுங்களுக்கும், ஸ்டேஷன் போலீஸ்காரங்களோட 'டீல் பார்ட்னர்ஷிப்' இருக்குதான்னு சந்தேகம் வந்துருக்கு,''
வாங்க... வாங்க...!
இருவரும் பேசிக்கொண்டே கலெக்டர் ஆபீஸ் முன்புறத்துக்கு வந்தனர். ஹெல்மெட் அணிந்துகொண்டு, ஸ்கூட்டரை மித்ரா ஸ்டார்ட் செய்தாள்.
பின்இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''பெரிய நாயக்கன்பாளையம் யூனியனுக்கு ஊராட்சி செயலர்கள் வந்தா... ஏகப்பட்ட மரியாதை கொடுக்குறாங்களாமே... '' என, கொக்கி போட்டாள்.
''ஆமாக்கா... நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்! பெரியநாயக்கன் பாளையம் யூனியன்ல ஒன்பது ஊராட்சி இருக்கு. அதுல, அஞ்சு ஊராட்சியில 'வருமானம்' ஜாஸ்தியா வருமாம். இந்த ஊராட்சியை சேர்ந்தவங்க யூனியனுக்கு வந்தா, ஏகப்பட்ட மரியாதையாம். வருமானம் குறைவான ஊராட்சியை சேர்ந்தவங்க வந்தா, கண்டுக்கறதே இல்லையாம். அட... ராமா.. இதையெல்லாம் யார்கிட்ட போயி சொல்றதுன்னு, ஊராட்சியை சேர்ந்தவங்க புலம்புறாங்க,''
கில்லி ஆபீசர்ஸ்
''அதெல்லாம் இருக்கட்டும்... லீவு நாளன்னைக்கும் வட்டார போக்குவரத்து துறை ஆபீசர்ஸ், கில்லி போல வேலை பார்த்தாங்களாமே...''
''அந்த கூத்தை ஏன் கேக்குறீங்க... மேட்டுப்பாளையத்துல இருந்து கோவைக்கு இயக்குற 'பூ' பெயர் கொண்ட பிரைவேட் பஸ், கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆக்சிடென்ட் பண்ணிருச்சு; ஒருத்தரு காயமடைஞ்சதால, ஸ்டேஷனுக்கு பஸ் எடுத்துட்டு போயிட்டாங்க,''
''ஆயுத பூஜைங்கிறதுனால, வட்டார போக்குவரத்து ஆபீஸ் மூடியிருந்துச்சு. ரூட்டுல மறுபடியும் பஸ் ஓட்டனும்னா போக்குவரத்து ஆபீசுல சர்ட்டிபிகேட் வாங்கணும். அதனால, ஆளுங்கட்சி தரப்புல சிபாரிசுக்கு ஆள் பிடிச்சு, ஞாயித்துக்கிழமை அன்னைக்கு அரசு அதிகாரிகளை ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, சர்ட்டிபிகேட் வாங்கியிருக்காங்க.
அரசியல் செல்வாக்கு இருந்தா போதும்; கவர்மென்ட் ஆபீசுல ஈசியா வேலைய சாதிக்கலாம்ங்கிற நிலைமை வந்திருக்கு. எங்க போயி முடியுமோ...'' என்றபடி, அலுவலகத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.