/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கரன்சி குளியலில் கார்ப்பரேஷன் அதிகாரிகள்
/
கரன்சி குளியலில் கார்ப்பரேஷன் அதிகாரிகள்
ADDED : நவ 12, 2024 05:54 AM

தி யாகி குமரன் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த சித்ரா, ஸ்கூட்டரை ஓரம் கட்டி விட்டு, காய்கறி வாங்க ஆரம்பித்தாள்.
பின்தொடர்ந்து வந்த மித்ரா, ''என்னக்கா... சி.எம்., பங்சனுக்கு போயிருந்தீங்களே; 'விசிட்' எப்படி இருந்துச்சு...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''அவருக்கு, நம்ம மாவட்டத்துல இருக்கற, 10 தொகுதியையும் ஜெயிச்சாகணும். அதுக்காக, ஆறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்காரு,''
''ஓ... அதை தான், 'சிக்ஸர் அடிச்ச சி.எம்.,'ன்னு உடன்பிறப்புகள் சிலாகித்து பேசுறாங்களா...''
''ஆமாப்பா... அதுல ரொம்ப முக்கியமானது, தங்க நகை தொழிற்பேட்டை அமைக்கற திட்டம். பா.ஜ., தரப்பிலும் வானதியும், அண்ணா மலையும் தேர்தல் வாக்குறுதியில சொல்லியிருந்தாங்க. அவுங்க சைடுல எந்த அறிவிப்பும் வெளியிடலை.
கெம்பட்டி காலனியில இருக்கற ஒரு பட்டறைக்கு சி.எம்., போயிட்டு வந்துட்டு, அறிவிப்பு வெளியிட்டிருக்காங்க. தெற்கு தொகுதியில 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வா பா.ஜ., இருக்கு; இதுக்கு முன்னாடி அ.தி.மு.க., இருந்துச்சு. இப்போ, அறிவிப்பு வெளியிட்டு, தொகுதி ஓட்டுகளை தி.மு.க., பக்கம் மடை மாத்துறதுக்கு பக்காவா 'பிளான்' போட்டு இறங்கியிருக்காங்க. வெளிநாட்டுல இருந்து அண்ணாமலை திரும்பி வந்ததுக்கு அப்புறம்தான் அரசியல் களம் சூடுபிடிக்கும்னு சொல்றாங்க,''
''அப்புறம் இன்னொரு விஷயமும் நடந்துச்சு. செம்மொழி பூங்கா கட்டுற இடத்துக்கு போயிருக்காரு. வழக்கம்போல கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ், ஒரு வீடியோ போட்டுக் காண்பிச்சிருக்காங்க. பூங்காவுக்குள்ள நுழைஞ்சதும், முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுத்துல 'செம்மொழி பூங்கா'ன்னு பெயர் பலகை வைக்கப் போறதா காட்டியிருக்காங்க. கருணாநிதி அறிவிச்ச திட்டம்; அவரோட எழுத்துல வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் சி.எம்., பூரிப்படைஞ்சிட்டாராம்...''
கரன்சி குளியல்
''தீபாவளி பண்டிகையை வச்சு... கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் லட்சக்கணக்குல கரன்சியை அள்ளிக் குவிச்சிட்டாங்களாமே...''
''அந்தக் கூத்தை ஏன் கேக்குறே... கார்ப்பரேஷன் கமிஷனர் எங்கே போனாலும் கூடவே போற ரெண்டெழுத்து ஆபீசர், ஒவ்வொரு டிபார்ட்மென்ட் ஆபீசருக்கும் போன் பண்ணி, தீபாவளி பணம் கேட்டிருக்காரு. உதவி கமிஷனர்கள், பொறியியல் பிரிவு, சுகாதாரப் பிரிவு, நகரமைப்பு பிரிவுன்னு ஒரு செக்சனையும் விட்டு வைக்கலை. ஒவ்வொருத்தரிடமும் அஞ்சாயிரம், பத்தாயிரம்னு வாங்கியிருக்காரு. ரொக்கமா கொடுக்காதவங்களுக்கு... தனது மனைவியோட 'கூகுள் பே' நம்பர் அனுப்பி, பணம் வசூலிச்சிருக்காரு.
கிட்டத்தட்ட நாலு லட்ச ரூபாய் வரைக்கும் வசூலிச்சிருக்காராம்; போதாக்குறைக்கு செக்சன் ஊழியர்களுக்கு வந்த டிரஸ்களையும் சுருட்டிட்டு போயிட்டதா சொல்றாங்க...''
''அக்கா... இது, கார்ப்பரேஷன் மெயின் ஆபீசுல நடந்த விவகாரம்னு நெனைக்கிறேன். இதே மாதிரி... ஜோன்ல ஒரு விவகாரம் நடந்துச்சு. தினக்கூலிக்கு வேலை பார்க்கற ஊழியர்களுக்கு பண்டிகைக்கு பணம் கொடுக்கறதுக்காக, பில் கலெக்டர்களிடம் நான்கெழுத்து லேடி ஆபீசர் பணம் வசூலிச்சிருக்காங்க; கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் ரூபாய் வசூலாகியிருக்கு. ஊழியர்களுக்கு சொற்பத்தொகை கொடுத்துட்டு, மிச்சத் தொகையை அமுக் கிட்டாங்களாம். இதெல்லாம் கார்ப்பரேஷன் கமிஷனர் கவனத்துக்கு போறதே இல்லையாம்...''
காமக்கொடூரனுக்கு உதை
''கார்ப்பரேஷன் ஆபீசுல இருக்கற ஒரு ஊழியர், டியூசனுக்கு போன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வசமா சிக்கிட்டாராமே...''
''ஆமாக்கா... உண்மைதான்! அந்த விவகாரத்துல எப்படி நடவடிக்கை எடுக்கறதுன்னு தெரியாம... போலீஸ் ஆபீசர்ஸ் ஆழ்ந்த யோசனையில இருக்காங்க...''
''என்ன நடந்துச்சுன்னு... கொஞ்சம் விளக்கமா சொல்லேன்...''
''அதுவா... கவுண்டம்பாளையத்துல வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இருக்கு. கார்ப்பரேஷன்ல ஸ்கில்டு லேபரா இருக்கற ஒருத்தரு, ஐம்பது வயசு இருக்கும்னு சொல்றாங்க. குடியிருப்புல டியூசனுக்கு போற சிறுமிகளிடம் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செஞ்சுட்டு இருக்காராம். அரசு ஊழியர்களது ரெண்டு பொன்னுங்க இதுக்கு முன்னாடி பாதிக்கப்பட்டு இருக்காங்க; வெளியே சொன்னா அசிங்கமாகிடும்னு மறைச்சிட்டாங்களாம். இப்போ, இன்னொரு சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போயி, பாலியல் வன்மம் செஞ்சிருக்காரு,''
''இந்த விவகாரம் ஸ்டேஷனுக்கு போனதும், அவரை 'என்கொயரி'க்கு அழைச்சுட்டு போயி, போலீஸ் ஸ்டைலில் அடி, உதை கொடுத்து, துவைச்சு எடுத்துட்டாங்க. குடும்பத்தைச் சேர்ந்தவங்க மன்னிப்பு கேட்டதும் விட்டுட்டாங்க. இருந்தாலும், போலீஸ் கமிஷனர் காதுக்கும் பிரச்னையை கொண்டு போயிருக்காங்க.
இதுக்கு முன்னாடி கமிஷனரா இருந்த சைலேந்திர பாபு எடுத்த அதிரடி ஆக்சனை தான், இப்போ போலீஸ்காரங்க நினைச்சு பார்க்குறாங்க. குழந்தைகள சீண்டுற காமக்கொடூரனை சமூகத்துல விட்டு வைக்கக் கூடாது; அவன் மேல எந்த விதத்துல நடவடிக்கை எடுக்கலாம்னு போலீஸ் தரப்புல யோசிச்சிட்டு இருக்காங்க,''
''கொஞ்ச நாளாவே... கார்ப்பரேஷன்ல வெளிப்படையாவே லஞ்சம் வாங்குறது... ஒழுங்கீனமா செயல்படுறதுன்னு ஏகப்பட்ட குற்றச்சாட்டு வெளிப்படையா வருது; கார்ப்பரேஷன் கமிஷனரும் 'ஸ்ட்ராங்க்'கா நடவடிக்கை எடுக்கணும்னு நேர்மையான ஊழியர்கள் எதிர்பார்க்குறாங்க...''
கடுகடுத்த மினிஸ்டர்
''கள ஆய்வுக்கு வந்த மினிஸ்டர், 'ரோட்டை ஒழுங்கா போடுங்கப்பா'ன்னு கடுகடுத்தாராமே...''
''ஆமாக்கா... உண்மைதான்! கருமத்தம்பட்டியில கூட்டுறவு தொழிற்பேட்டையில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செஞ்சாரு. கார்ல ஒரு ரவுண்டு தொழிற்பேட்டையை சுற்றி பார்த்தாரு. திரும்ப அவர், 'ரோட்டை நல்லா போடுங்கப்பா... கான்ட்ராக்டர் யாரு...ன்னு' கேட்டாரு.
''அதிகாரி ஒருத்தரு வந்து, 'ஒரு லேயர் தான் போட்டிருக்கு; அடுத்த லேயர் போட்டா சரியாகிடும்'னு முட்டுக் கொடுத்திருக்காரு. ஒரு மனசா ஏத்துக்கிட்ட அமைச்சர், அங்கிருந்து கெளம்பினார். அதனால, கான்ட்ராக்டரும், ஆபீசர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்காங்க,''
மசாஜ் பார்லர்
அருகாமையில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்த இருவரும், ரவா ரோஸ்ட், சாம்பார் இட்லி ஆர்டர் கொடுத்தனர்.
மேஜைக்கு வந்த சாம்பார் இட்லியை சாப்பிட ஆரம்பித்த மித்ரா, ''போலீஸ் மேட்டர் எதுவுமே சொல்லலையே...'' என, கேட்டாள்.
''நம்மூர் போலீஸ்காரங்களை பத்தி பேச ஆரம்பிச்சா... விடியற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்கலாம்; துாங்குறவன எழுப்பலாம்; துாங்கற மாதிரி நடிக்கறவனை எப்படி எழுப்புறதுன்னு போலீசை பத்தி சொல்றாங்க...''
''ஏன்க்கா... அப்படியென்ன நடந்து போச்சு...''
''பெரியநாயக்கன்பாளையம் ஏரியாவுல 'மசாஜ் பார்லர்'ங்கிற பெயரில பலான மேட்டர் நடக்குதாம். போலீஸ்காரங்களுக்கு பல 'ரூட்'டுல பொதுமக்கள் தரப்புல இருந்து கம்ப்ளைன்ட் போயிருக்கு. இதுநாள் வரைக்கும் போலீஸ்காரங்க அசைஞ்சு கொடுக்கலையாம். கொலை, கொள்ளைன்னு பிரச்னை பெருசா நடக்குறதுக்கு முன்னாடி, போலீஸ்காரங்க ஆக்சன் எடுக்கணும்னு சமூக ஆர்வலர்கள் விரும்புறாங்க...''
''இதே மாதிரி, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதுக்கே பொதுமக்கள் பயப்படுறாங்களாமே...''
''அது, வேற கதை மித்து! பாஸ்போர்ட்டுக்கு யாராச்சும் அப்ளை செஞ்சா, லோக்கல் ஸ்டேஷன்ல இருந்து 'என்கொயரி' செஞ்சு, 'ரிப்போர்ட்' கொடுக்கணும். கரன்சியை வெட்டுனா, நல்ல விதமா 'ரிப்போர்ட்' கொடுக்குறாங்களாம்; இல்லேன்னா... கெடப்புல போட்டுடுறாங்க...''
''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நாலு வயசு பையனோடு ஒரு லேடி, ஸ்டேஷனுக்கு வந்திருக்காங்க; மாமூல் விவகாரத்தை சொல்லியிருக்காங்க; பணம் எடுத்துட்டு வரலைன்னு சொன்னதுக்கு, பையனை நாங்க பார்த்துக்குறோம்; நீங்க வீட்டுக்கு போயி எடுத்துட்டு வாங்கன்னு அனுப்பி வச்சிருக்காங்க. அந்த லேடியும் வீட்டுக்கு போயி, பணம் எடுத்துட்டு வந்து, கொடுத்திருக்காங்க. அந்தளவுக்கு போத்தனுார் ஸ்டேஷன் மோசமா போயிட்டு இருக்குதாம்...'' என்றபடி, ரவா ரோஸ்ட் சாப்பிட ஆரம்பித்தாள் சித்ரா.
பில் கொடுத்து விட்டு, வெளியே வந்த மித்ரா, ''ஸ்கூல் லெவல்ல போட்டி நடத்துனதுல கசமுசா ஆகிடுச்சாமே,'' என, 'ரூட்'டை மாற்றினாள்.
''அதுவா, எஜூகேசன் டிபார்ட்மென்ட் சார்புல டேக்வோண்டா போட்டி நடந்துச்சு; வழக்கமா அந்தந்த அசோசியேசனை சேர்ந்தவங்கள நடுவரா போடுவாங்க. இந்த தடவை அங்கீகரிக்கப்பட்ட அசோசியேசனை சேர்ந்தவங்களை கூப்பிட்டு, ஆளுங்கட்சி 'மாவட்டம்' பரிந்துரை செஞ்ச அசோசியேசன்ல இருந்து நடுவர்களை அழைச்சுட்டு வந்து போட்டி நடத்துனாங்களாம். இப்படி இருந்தா... தேசிய அளவிலான போட்டியில எப்படி ஜெயிக்கிறதுன்னு விளையாட்டுத்துறையை சேர்ந்தவங்க புலம்புறாங்க...'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
காய்கறி பையுடன், பின்இருக்கையில் அமர்ந்தாள் மித்ரா.