/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
காக்கிகளை களையெடுக்க தயாராகிறது 'கரெப்ஷன் லிஸ்ட்'
/
காக்கிகளை களையெடுக்க தயாராகிறது 'கரெப்ஷன் லிஸ்ட்'
ADDED : ஜன 14, 2025 06:48 AM

பணி நிமித்தமாக சிறுவாணி அணைக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் காரில், கோவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
மலையடிவாரத்தில் காரை நிறுத்தி விட்டு, ஹோட்டலுக்குள் சென்ற மித்ரா, மசாலா ரோஸ்ட், பூரி ஆர்டர் கொடுத்தாள்.
''இந்த ஏரியாவுல இருந்துதானே மலையை குடைஞ்சு, லோடு லோடா மண்ணை கடத்திட்டு போயிருக்காங்க...'' என கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா... அதிகாரத்தை கையில வச்சுக்கிட்டு, மண் மாபியா கும்பல் அட்டூழியம் செஞ்சிருக்கு. கோர்ட்டுல வழக்கு போட்டவரு, லாரியில மண் கடத்திட்டு போறத, வீடியோ அழைப்புல ஜட்ஜ்க்கு 'லைவ்'ல காண்பிச்சிருக்காரு. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி, செம்மண்ணை தோண்டி அள்ளுறது; லாரியில கொட்டுறதை நேரடியாவே கோர்ட்டுல இருந்தவங்க பார்த்திருக்காங்க...''
''அதுக்கப்புறம்... மாவட்ட நீதிபதிகளை நேர்ல போயி பார்த்து, ஸ்டேட்மென்ட் கொடுக்கச் சொல்லியிருக்காங்க. அந்த ரிப்போர்ட்டுகளையும், போட்டோக்களையும் பார்த்த ஜட்ஜ்கள், பதறிப் போயிட்டாங்க. ஸ்டேட்மென்ட் ஒரு பகுதியில், யானை புதைக்கப்பட்டு எலும்புக்கூடு இருந்ததையும் சுட்டிக் காட்டியிருக்காங்க. யானை தந்தம் கடத்துற கும்பலின் கைவரிசையா இருக்குமாங்கிற, சந்தேகமும் வன ஆர்வலர்களிடம் இருக்குதாம்...''
''இந்த விவகாரத்துல, போலீஸ் ஆபீசர்ஸ் சரியா ஆக்சன் எடுக்காததால, அவுங்க மேல ஜட்ஜ்கள் அதிருப்தி அடைஞ்சுதான், சிறப்பு புலனாய்வு குழு நியமிச்சிருக்காங்க. இதுவரைக்கும் தப்பு செஞ்ச போலீஸ்காரங்களை 'லிஸ்ட்' எடுத்து, துறை ரீதியா நடவடிக்கை எடுக்க, டி.ஐ.ஜி., ஆர்டர் போட்டிருக்காங்க. இனிமேலாவது ஆக்சன் எடுக்குறாங்களான்னு பார்ப்போம்...''
எப்.ஐ.ஆர்., போடலை
''அதெல்லாம் சரி... கோர்ட்டுல, 14 செங்கல் சூளைகளை பட்டியலிட்டு சொல்லியிருக்காங்க. இதுல, மூனு செங்கல் சூளைக நடத்துறவங்ககிட்ட 'என்கொயரி' செய்யலை; கேஸ் பதியலைன்னு சொல்றாங்களாமே...'' என்றபடி, மசாலா ரோஸ்ட்டை சாப்பிட ஆரம்பித்தாள் சித்ரா.
பூரியை ருசிக்க ஆரம்பித்த மித்ரா, ''ஆமா... அவுங்க தான் மண் மாபியா கும்பலைச் சேர்ந்த 'திமிங்கலங்களாம்'. அவுங்க மேல, பேரூர் போலீஸ்காரங்க இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு பண்ணாம இருக்காங்க. அந்தளவுக்கு 'கவனிப்புல' இருந்திருக்காங்க போலிருக்கு. சட்ட விரோதமா செங்கல் சூளை நடத்துனதுல, ஒருத்தரு ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கற கட்சி கவுன்சிலராம்,'' என்றாள்.
''இப்போ... கோர்ட்டுல அதிரடி ஆர்டர் போட்டிருக்கறதுனால இனி தப்பிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். எஸ்.பி., கார்த்திகேயன் என்ன செய்றாருன்னு பார்ப்போம்...''
போலீஸ்காரங்க துாக்கியடிப்பு
''அக்கா... அதே பேரூர் ஸ்டேஷன்ல போலீஸ்காரங்க ஜாதி ரீதியா பிரிஞ்சிருக்காங்கன்னு போன வாரம் பேசியிருந்தோமே. எஸ்.பி., உளவுத்துறை மூலமா 'என்கொயரி' செஞ்சிருக்காரு; உண்மைன்னு தெரிஞ்சதும் ஆறு போலீஸ்காரங்களை, வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு துாக்கியடிச்சிட்டாரு. இதுல, மூனு பேரு, அரசியல் அழுத்தம் கொடுத்து, 'டிரான்ஸ்பர்' ஆர்டரை 'கேன்சல்' பண்றதுக்கு, 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்க...''
''அடுத்த கட்டமா, 'டிஸ்ட்ரிக்ட்' முழுக்க இருக்கற ஸ்டேஷன் போலீஸ்காரங்கள பத்தி விசாரிச்சு, 'கரெப்ஷன் லிஸ்ட்' தயாரிச்சுட்டு இருக்காங்களாம். அவுங்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாத்துறதுக்கு, 'பிளான்' வச்சிருக்காங்களாம்,'' என்ற மித்ரா, காபி ஆர்டர் செய்தாள்.
மதுபானத்துக்கு ஆபர்
''ஆளுங்கட்சியை சேர்ந்த லேடி கவுன்சிலரோட வீட்டுக்காரர் ஒருத்தர், எப்.எல்., 2 லைசென்ஸ் வாங்கிட்டு, 'பார்' நடத்துறாராமே...''
''நீங்க சொல்றது உண்மைதான்! அவர் நடத்துற 'பார்'ல, சரக்குகளுக்கு 'ஆபர்' கொடுக்குறாராம். அதை பெருமையா விளம்பரப்படுத்தி, சமூக வலைதளத்துல போட்டிருக்காரு. ஆளுங்கட்சியில இருந்துக்கிட்டு இதை 'பப்ளிசிட்டி' செஞ்சா, நல்லாவா இருக்கும்னு கட்சிக்குள்ள இருந்து 'கமென்ட்' வந்துருக்கு; ஒடனே, அந்த பதிவுகளை நீக்கிட்டாராம்...''
''ரெண்டு மாசம் வாடகை கொடுக்காத விவகாரத்துல ஒரு வீட்டுக்கு போயி, மிரட்டிட்டு வந்திருக்காராம். தை மாசம் வீட்டை காலி பண்ணுறப்போ, மொத்தமா 'செட்டில்' பண்றோம்னு குடியிருக்கறவங்க சொல்லியிருக்காங்க; அதை கேட்காம, 'சவுண்டு' விட்டுட்டு போயிருக்காங்க. 'ஹெல்ப்' கேட்டு போலீசுக்கு போன் போட்டிருக்காங்க; உதவி கெடைக்கலை. கலெக்டர் ஆபீஸ்லயும் 'பெட்டிஷன்' கொடுத்திருக்காங்க. இப்போ, வீடு புகுந்து மிரட்டுற வீடியோவை, ஆளுங்கட்சியை சேர்ந்தவங்களே சமூக வலைதளத்துல பரப்பிட்டு இருக்காங்க...''
பில் கொடுத்து விட்டு, ஹோட்டலை விட்டு இருவரும் வெளியே வந்தனர். காரில் ஏறியதும் 'சீட் பெல்ட்' அணிந்து கொண்ட சித்ரா, ''எஸ்.பி., ஆபீசுல காலியா இருந்த இன்ஸ்., போஸ்ட்டிங்கை நிரப்பிட்டாங்க போலிருக்கே...'' என கேட்டாள்.
''அதுவா... 'பசை'யுள்ள பதவிங்கிறதுனால 'டிமாண்ட்' ஜாஸ்தியா இருந்துச்சு; அஞ்சு பேரை 'ரெகமண்ட்' பண்ணி அனுப்புனாங்க. ஆனா, மேலிடத்துல நிராகரிச்சிட்டாங்க. திருப்பூர்ல எஸ்.பி.சி.ஐ.டி., இன்ஸ்., கடந்த கால 'ரெக்கார்டு'களை பார்த்து, அவரையே நியமிச்சிருக்காங்க. இனிமே எஸ்.பி., காதுக்கு உண்மையான 'ரிப்போர்ட்' போகும்னு ஸ்டேஷன் போலீஸ்காரங்க நம்புறாங்க,''
பீப் பிரியாணி விவகாரம்
பேசிக்கொண்டே கோவை நோக்கி, காரை செலுத்திய சித்ரா, ''பீப் பிரியாணி கடை விவகாரத்துல அரசியல் புகுந்துருச்சாமே... '' என, சப்ஜெக்ட் மாறினாள்.
''அதுவா... பீப் பிரியாணி கடை போடக்கூடாதுன்னு யாரும் சொல்லலை. கோவிலுக்கு பக்கத்துல போடாதீங்க; கொஞ்சம் தள்ளிப் போடுங்கன்னு சொல்லியிருக்காங்க. ஊர் தலைவர் தலைமையில கம்யூ., கட்சி கவுன்சிலர், பா.ஜ., நிர்வாகி, ஊர்க்காரங்க எல்லோரும் ஒன்னா சேர்ந்து தான் போயி சொல்லியிருக்காங்க.
இதுல, பா.ஜ., நிர்வாகி மேல தப்பு இருக்கற மாதிரி வீடியோ வெளியிட்டதுனால பிரச்னை வேற மாதிரி போயிடுச்சு. என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம, கம்யூ., கட்சி மாவட்ட நிர்வாகிகளும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அதனால, ஊர் ஜனங்க ஒன்னா சேர்ந்து, சாலை மறியல் போராட்டம் நடத்தியிருக்காங்க. கம்யூ., கட்சிக்காரங்க எப்பவும் மக்கள் பக்கம் நிப்பாங்க; இந்த விஷயத்துல மக்களுக்கு எதிரா நின்னது, அந்த ஏரியாக்காரங்களுக்கு பிடிக்கலையாம்,''
செயலர்கள் புலம்பல்
''ஆளுங்கட்சிக்காரங்க அழுத்தம் தாங்க முடியாம, ஊராட்சி செயலர்கள் ஓட்டம் பிடிக்கிறாங்களாமே...'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''ஆமாக்கா... ஊரக உள்ளாட்சிகள்ல பதவிக்காலம் முடிஞ்சிருச்சு. இருந்தாலும், எஸ்.எஸ்.குளம், அன்னுார் ஒன்றியத்துல இருக்கற சில ஊராட்சிகள்ல ஆளுங்கட்சி பிரமுகர்ங்க, விதிமுறைகளை மீறி சில வேலைகளை செய்யச் சொல்லி, ஊராட்சி செயலர்களை நிர்பந்திக்கிறாங்களாம். ஊராட்சி தலைவர்கள் இருந்தவரைக்கும், அவுங்களே சமாளிச்சிட்டாங்க. இப்போ, ஆளுங்கட்சிக்காரங்க மத்தியில நாங்க சிக்கிட்டு தவிக்கிறோம்னு புலம்புறாங்க...''
சிதம்பர ரகசியம்
''டாஸ்மாக் 'பார்' கள்ல சாராய ஆறு ஓடுதாமே...''
''அதையேன் கேக்குறீங்க. மத்தியானம், 12 மணிக்குதான் கடையை திறக்கணும்ங்கிறது ரூல்ஸ். ஆனா, காலையில ஆறு மணிக்கே 'பார்'கள்ல சேல்ஸ் பட்டைய கெளப்புது; மதுவிலக்கு போலீஸ்ன்னு, ஒரு பிரிவு செயல்படுதான்னு சந்தேகப்படுற அளவுக்கு நெலமை மோசமாயிடுச்சு... கோவில்பாளையம் ஏரியாவுல அஞ்சு மதுக்கடை இருக்கு. அங்க 'பார்' நடத்துறவுங்க, கவர்மென்ட்டுக்கு 'அமவுன்ட்' கட்டுறாங்களான்னே சந்தேகமா இருக்குதாம்,''
''இதுல இன்னொரு பிரச்னையும் ஓடிட்டு இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 'பார்'கள்ல கலெக்சன் பண்ற குரூப்பை சேர்ந்த ஒருத்தரை, பார் உரிமையாளர்கள்ல் ஒரு குரூப் வீடு புகுந்து 'வெளுவெளு'ன்னு வெளுத்துட்டாங்க.
போலீஸ்காரங்க 'என்கொயரி' செஞ்சு, ரெண்டு பேரை கைது செஞ்சு ஜெயில்ல போட்டாங்க. இதை அடிதடி கேஸ்ன்னு கடந்து போயிடலாம். ஆனா, கேன்ல மதுபானம் கொண்டு வந்து பாட்டில்ல அடைச்சு விக்கிறாங்கன்னு, ஒருத்தரு குற்றம் சுமத்துனாரு.
நம்மூர்ல போலி சரக்கு ஊடுருவிட்டு இருக்குதோன்னு சந்தேகம் வருது. மதுவிலக்கு போலீஸ்காரங்க 'ஆக்டிவ்'வா செயல்பட்டா நல்லா இருக்கும்னு, நேர்மையான போலீஸ் ஆபீசர்ஸ் நெனைக்கிறாங்க,''
ஆளுங்கட்சியால் தவிப்பு
''ஆளுங்கட்சியை சேர்ந்தவரின் விடாப்பிடியால, மழைநீர் வடிகால் கட்ட முடியாம தவிக்கிறாங்களாமே...''
''ஆமாப்பா... சூலுார் பேரூராட்சியில தான் இந்த கூத்து நடக்குது. எஸ்.கே.கே., வீதியில, 20 அடி துாரத்துக்கு வடிகால் கட்ட முடியலை. தன்னுடைய வீட்டுக்கு முன்னாடி கட்டக்கூடாதுன்னு, உரிமையாளர் ஒத்தக்கால்ல நிக்கிறாராம்; ஆளுங்கட்சியை சேர்ந்தவரு.
அவரை பேரூராட்சி தலைவர், ஒன்றிய செயலாளர், மூத்த நிர்வாகிகள்னு பலரும் சமாதானம் செஞ்சிருக்காங்க; அதுக்கும் மசியலை. ஒரு மாசமா அந்த ஏரியாவுல கழிவு நீர் தேங்கி நிக்குது. பொதுமக்களை சமாளிக்க முடியலை; ஆளுங்கட்சிக்காரரையும் சமாளிக்க முடியாம பேரூராட்சிக்காரங்க திணறிட்டு இருக்காங்க...'' என்றபடி, சுந்தராபுரத்தை நோக்கி, காரை செலுத்தினாள் சித்ரா.
கையில் வைத்திருந்த நாளிதழை படிக்க ஆரம்பித்தாள் மித்ரா.