/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
டிரான்ஸ்பருக்கு பிறகும் கோவையிலேயே ரெண்டு பேரு 'டேரா' ; ஐகோர்ட் உத்தரவிட்டும் ஜாலியா திரியுறாங்க மூனு பேரு 'ஜோரா'
/
டிரான்ஸ்பருக்கு பிறகும் கோவையிலேயே ரெண்டு பேரு 'டேரா' ; ஐகோர்ட் உத்தரவிட்டும் ஜாலியா திரியுறாங்க மூனு பேரு 'ஜோரா'
டிரான்ஸ்பருக்கு பிறகும் கோவையிலேயே ரெண்டு பேரு 'டேரா' ; ஐகோர்ட் உத்தரவிட்டும் ஜாலியா திரியுறாங்க மூனு பேரு 'ஜோரா'
டிரான்ஸ்பருக்கு பிறகும் கோவையிலேயே ரெண்டு பேரு 'டேரா' ; ஐகோர்ட் உத்தரவிட்டும் ஜாலியா திரியுறாங்க மூனு பேரு 'ஜோரா'
ADDED : டிச 09, 2024 11:22 PM

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா... சட்ட விரோத செங்கல் சூளைகள் விவகாரத்துல, 'கவர்மென்ட் ஆபீசர்ஸ்' வசமா சிக்கிட்டாங்க போலிருக்கே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''ஆமா, மித்து! மாவட்ட நீதிபதிகள் ரெண்டு நாள் கள ஆய்வு செஞ்சு, 'ரிப்போர்ட்' தாக்கல் செஞ்சதுல, நம்மூர்ல இயற்கை வளம் கொள்ளை போனதையும், இல்லீகலா செங்கல் சூளை நடத்துனதையும், ஐகோர்ட் நீதிபதிகள் தெள்ளத்தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க. இருந்தாலும், கவர்மென்ட் சைடுல நடவடிக்கை கடுமையாக எடுக்கலைங்கிறதுனால, அதிருப்தியில இருக்காங்க,''
''ஐகோர்ட் உத்தரவிட்டும் கூட, இன்னும் மூனு சேம்பர் மேல எப்.ஐ.ஆர்., போடலையாம். ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகி, கூட்டணியில இருக்கற காங்கிரஸ் கட்சி பிரமுகர் மேல, வழக்கு பதியலையாம்.
இந்த விவகாரத்துல, மண் கொள்ளை அடிச்ச ஏரியாவுல, 'டிரோன்' வீடியோ எடுத்து, கோர்ட்டுல சமர்ப்பிக்க, உத்தரவு போட்டுருக்காங்க. இந்த விஷயத்துல, மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்னு, இயற்கை ஆர்வலர்கள் நினைக்கிறாங்க...''
இன்ஸ்., கிடைச்சிட்டாரு
''அதெல்லாம் இருக்கட்டும்... எஸ்.பி., - இன்ஸ்., பதவிக்கு ஒருத்தர் கிடைச்சிட்டாராமே...''
''ஆமாப்பா...'' என்றபடி, காபியை உறிஞ்சிய சித்ரா, ''ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்., போஸ்டிங், மூனு மாசத்துக்கு மேல காலியா இருக்கு; அஞ்சு இன்ஸ்.,களை தேர்வு செஞ்சு 'கவர்மென்ட்' பார்வைக்கு அனுப்புனாங்க; அதை நிராகரிச்சிட்டாங்களாம். மலை மாதிரி கரன்சி கொட்டுற 'பசை'யான பதவிங்கிறதுனால, நேர்மையான ஆபீசரை நியமிக்கணும்னு, 'வெயிட்' பண்ணுனாங்களாம்.
இப்போ, திருப்பூர்ல எஸ்.பி.சி.ஐ.டி., இன்ஸ்., காளிதாஸ் பேரை முன்மொழிஞ்சிருக்காங்க. இவரு நேர்மையானவருன்னு, போலீஸ் வட்டாரத்துல சொல்றாங்க. இவரை நியமிச்சாங்கன்னா, நம்ம மாவட்டத்துல ஏகப்பட்ட மாற்றம் வரும்னு பேசிக்கிறாங்க,''
கமிஷனர் ஆபீசுல 'டீலிங்'
''ஆனா... கமிஷனர் ஆபீசுல இருந்துக்கிட்டே, கட்டப்பஞ்சாயத்து 'டீல்' பேசுறாங்களாமே...''
''அதுவா... சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீசுல, மாநகர குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் செயல்படுது. மோசடி சம்பந்தமா, ஏகப்பட்ட கேஸ் வருது. யார் மேல கம்ப்ளைன்ட் வருதோ, அவுங்களை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு, 'டீல்' பேசுறாங்க.
ஆபீசுல கமிஷனர் இருந்தாலும் கூட, பக்காவா 'டீல்' நடக்குது. கேஸ் சம்பந்தமா விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டுல ஆஜராக வேண்டிய எஸ்.ஐ.,களை அனுப்புறதில்லை; அதுக்கு பதிலா, ஸ்பெஷல் எஸ்.ஐ.,க்களை அனுப்புறாங்களாம்.
'டீல்' முடிஞ்சா, அதுக்கு தகுந்தபடி, கேசோட போக்கையே மாத்திடுவாங்களாம். கமிஷனர் ஆபீசுக்குள்ளேயே வரவழைச்சு 'டீல்' பேசுறதுனால, லட்சக்கணக்குல கரன்சியை அள்ளிக் கொடுக்குறாங்களாம்; யார், யாருக்கு பங்கு போகுதோன்னு காக்கிச்சட்டைக்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''
போலீசிடமே லஞ்சம்
''போலீஸ்கிட்டயே லஞ்சம் வாங்குன கூத்து தெரியுமா,'' என்ற மித்ரா, ''சிட்டி போலீசுல வேலை பார்க்குற, ஒரு மூன்றெழுத்து போலீஸ்காரர் ஒருத்தரு, மதுக்கரை ஏரியாவுல வசிக்கிறாரு. பட்டா மாறுதல் கேட்டு, மதுக்கரை தாலுகா ஆபீசுல விண்ணப்பம் செஞ்சிருக்காரு.
ஆபீசர் டிரைவர் ஒருத்தரு, 'அஞ்சாயிரம் ரூபா கொடுத்தால் காரியம் நடக்கும்'னு சொல்லியிருக்காரு. அதை நம்பி, அஞ்சாயிரம் ரூபாயை போலீஸ்காரர் குடுத்துட்டாரு; லஞ்சப்பணம் கை மாறி, 10 நாளுக்கு மேலாகிடுச்சாம்; இதுவரைக்கும் பட்டா மாறுதல் ஆர்டர் கொடுக்கலையாம். லஞ்சப்பணம் ஆபீசர் கைக்கு இன்னும் போயி சேரலையா அல்லது, ஆபீசருக்கே தெரியாம, டிரைவர் வசூலிச்சு சுருட்டிட்டாரான்னு தெரியலையேன்னு போலீஸ்காரரு புலம்புறாரு...''
ஆசிரியர்கள் அதிருப்தி
காபியை குடித்து முடித்த சித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும். பார்ட் டைம் டீச்சர்ஸ் கொந்தளிப்புல இருக்கறதா கேள்விப்பட்டேனே...''
''அதையேன் கேக்குறீங்க... தி.மு.க., ஆட்சிக்கு வந்தா... பார்ட் டைம் டீச்சர்சை நிரந்தரம் செய்வோம்னு, வாக்குறுதியில சொல்லி இருந்தாங்களாம். ஆட்சிக்கு வந்து மூன்றரை வருஷமாகியும் இவுங்களை கண்டுக்கலை. மாசம், 12 ஆயிரத்து, 500 ரூபாய் சம்பளம்; இந்த வருஷத்துல, 11 மாசம் முடிஞ்சிருச்சு. இத்தனை மாச சம்பளத்தையும் பிய்ச்சு... பிய்ச்சு... தனித்தனியா தர்றாங்களாம். இதுநாள் வரைக்கும், தி.மு.க.,வுக்கு ஓட்டு வங்கியா இருந்தவங்க, இப்போ, அவுங்களுக்கு எதிரா கொந்தளிக்கிறாங்க...''
''கவர்மென்ட் போடுற ஆர்டரை, கார்ப்பரேஷன்ல மதிக்கறதே இல்லையாமே...''
''ஆமாக்கா... துணை கமிஷனரா இருக்கற சிவக்குமாரை, மதுரைக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சு அரசாணை வந்திருக்கு; இதே மாதிரி, தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமியை, உடுமலை நகராட்சிக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சு ஆர்டர் வந்து ரொம்ப நாளாச்சு.
இந்த ரெண்டு உத்தரவையும், இன்னும் செயல்படுத்தாம நிறுத்தி வச்சிருக்காங்க. இதே மாதிரி, லஞ்சம் வாங்குன குற்றச்சாட்டுல சிக்குன இன்ஜி., செக்சன் ஊழியர் மேல... துறை ரீதியா எந்த நடவடிக்கையும் எடுக்காம, வேற ஊருக்கு 'பாதுகாப்பா' அனுப்பி வச்சிருக்காங்க...''
கடைக்கு மூவாயிரம்
''லஞ்சம்னு சொன்னதும் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது,'' என்ற சித்ரா, ''அன்னுார் ஏரியாவுல இருக்கற ரேஷன் கடைக்காரங்கள்ட்ட... ஆபீசர்ஸ் தரப்புல இருந்து மாசந்தவறாம ஒவ்வொரு கடைக்கும் மூவாயிரம் ரூபா 'கப்பம்' வாங்குறாங்களாம். ஆனா, முறைகேடு செஞ்சு, கடைக்காரங்க மாட்டிக்கிட்டா... ஆபீசர்ஸ் தரப்புல காப்பாத்துறது இல்லையாம்; இருந்தாலும், ஒவ்வொரு மாசமும் 'கப்பம்' கட்டச் சொல்லி, 'டார்ச்சர்' செய்றாங்களாம். ரேஷன் கடை ஊழியர்கள் என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க...'' என்றாள்.
''கலெக்டர் ஆபீசுக்கு கம்ப்ளைன்ட் வந்ததும், உடனடியா கள ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு போட்டிருக்காராமே...''
''ஆமா, மித்து! தடாகம் ரோட்டுல செயல்படுற பிரைவேட் மனநல காப்பகத்துல நைட் நேரத்துல அலறல் சத்தம் கேக்குது; அடிச்சு துன்புறுத்துறாங்கன்னு அந்த ஏரியாவை சேர்ந்தவங்க, 'கம்ப்ளைன்ட்' பண்ணியிருக்காங்க. அவுங்ககிட்ட கலெக்டர் விசாரிச்சிருக்காரு.
சமூக நல அலுவலரை கூப்பிட்டு, உடனடியா கள ஆய்வுக்கு போகச் சொல்லி உத்தரவு போட்டிருக்காரு. எந்தவொரு நிலையிலும் முதியோருக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாதுன்னு, 'ஸ்ட்ரிக்ட்'டா சொல்லியிருக்காராம்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆய்வு செஞ்ச கலெக்டர், ஆறு இடங்கள்ல முதியோர் மறுவாழ்வு மையங்களை மூடி 'சீல்' வச்சிருக்காரு; அங்கிருந்த முதியோர்களை அரசு காப்பகத்துல சேர்த்திருக்காரு. அதனால, தடாகம் ரோட்டை சேர்ந்தவங்க, நம்பிக்கையோட திரும்பிப் போயிருக்காங்க...''
கிளப்புகளுக்கு 'சீல்'
''ஏன்க்கா... நம்மூர்ல ரெண்டு எப்.எல்., கிளப்புகளை மூடி, 'சீல்' வச்சிட்டாங்களாமே... உண்மைதானா...''
''உண்மைதாம்ப்பா... இந்த மாதிரி கிளப், சிட்டிக்குள்ள ஏகப்பட்ட இடங்கள்ல ஆரம்பிச்சிருக்காங்க; லைசென்ஸ் வாங்குறதுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுக்கணுமாம். இந்த கிளப்புல, 'டாஸ்மாக்' கடையில விக்கிற சரக்குகளை விக்கக் கூடாதுங்கிறது முக்கியமான கண்டிஷன். ஆனா, ஏகப்பட்ட கடையில 'டாஸ்மாக்' சரக்கு சேல்ஸ் ஆகுதாம். இதையெல்லாம் ஆபீசர்ஸ் ஆய்வு செஞ்சு, நடவடிக்கை எடுத்தா தேவலைன்னு, 'டாஸ்மாக்' எம்ப்ளாயிஸ் சொல்றாங்க...''
சவால் விட்ட 'மலை'
''அண்ணாமலை வந்திருந்தாரே... ஏதாச்சும் அதிரடியா பேசுனாரா...''
''ஆமாப்பா... நம்மூரு பொறுப்பு மினிஸ்டரான செந்தில்பாலாஜியை ஒரு பிடி பிடிச்சிட்டாரு. அதானி விவகாரத்துல புள்ளிவிபரங்களை அள்ளி வீசுனாரு. முடிஞ்சா என் மேல கேஸ் போடுங்கன்னு, சவால் விட்டிருக்காரு... என்ன செய்றாங்கன்னு 'வெயிட்' பண்ணி பார்க்கலாம்''
''அதிருக்கட்டும். பல கோடி ரூபா மதிப்புக்கு சொந்தமா வீடு வாங்கியிருக்கிறதா, சமூக வலைதளத்துல ஒரு வீடியோ வலம் வருதே...''
''அதைப்பத்தி, அண்ணாமலைகிட்ட ரிப்போர்ட்டர்ஸ் நேருக்கு நேராவே கேள்வி கேட்டுட்டாங்க. அதைக்கேட்டு சிரிச்ச அவரு, வெட்கத்தை விட்டு, இவ்ளோ நாளா, மாமனார் வீட்டுல தங்கியிருந்ததாவும், கட்சிக்காரங்களை சந்திக்க முடியலைங்கிறதுனால, வாடகை வீடுக்கு குடி போயிருக்கறதாவும் பதில் சொல்லியிருக்காரு; உளவுத்துறை போலீஸ்காரங்களும் 'என்கொயரி' நடத்தி, கவர்மென்ட்டுக்கு, இதையே 'ரிப்போர்ட்'டா கொடுத்திருக்காங்க,'' என்றபடி, மொபைல் போனை நோண்ட ஆரம்பித்தாள் சித்ரா.
நகர் வலத்துக்கு புறப்பட தயாரானாள் மித்ரா.