/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
எலியால் இலவச வேட்டி - சேலைகள் காலி; 'மரியாதையின்றி' மக்கள் பிரதிநிதிகளுக்கு மனவலி
/
எலியால் இலவச வேட்டி - சேலைகள் காலி; 'மரியாதையின்றி' மக்கள் பிரதிநிதிகளுக்கு மனவலி
எலியால் இலவச வேட்டி - சேலைகள் காலி; 'மரியாதையின்றி' மக்கள் பிரதிநிதிகளுக்கு மனவலி
எலியால் இலவச வேட்டி - சேலைகள் காலி; 'மரியாதையின்றி' மக்கள் பிரதிநிதிகளுக்கு மனவலி
ADDED : பிப் 04, 2025 01:03 AM

வராண்டாவில் அமர்ந்து நாளிதழ்களை, புரட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.
''என்னப்பா... சென்ட்ரல் கவர்மென்ட் பட்ஜெட்டுல, பைனான்ஸ் மினிஸ்டர் பட்டாசு கெளப்பிட்டாங்க போலிருக்கே...''
''ஆமாக்கா... மாசம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குறவங்களுக்கு, வருமான வரி கெடையாதுன்னு அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க. மாச சம்பளத்துக்காரங்க 'வெரி ஹேப்பி'. அதேமாதிரி, நம்மூர் இண்டஸ்ட்ரிகாரங்களும் ஆஹா... ஓஹோன்னு புகழ்றாங்க. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவங்க மட்டும் குறை சொல்லணுமேன்னு, ஏதாச்சும் சொல்றாங்க...''
மரியாதை இல்லை
''கவர்மென்ட் சார்புல நடக்கற ஆய்வு கூட்டங்கள்ல, ஆளுங்கட்சி 'மாவட்டத்துக்கு' கொடுக்குற மரியாதையை, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கொடுக்கறதில்லையாமே...''
''அதுவா... ஹைவேஸ் மினிஸ்டர் வேலு, திருமண நிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்காக, நம்மூருக்கு வந்திருந்தாரு. அரசு முறை பயணமா காட்டுறதுக்காக... காந்திபுரத்துல நுாலகம் கட்டுமான பணியை பார்வையிட்டாரு. அவரை சந்திக்கிறதுக்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவங்களும், கார்ப்பரேஷன் கவுன்சிலர்களும் வந்திருந்தாங்க...''
''மினிஸ்டர் ஆய்வு செஞ்ச இடங்களுக்கு, கட்சி நிர்வாகிகள் கூடவே போனாங்க. அவுங்களோட மேயர், மண்டல தலைவர், கவுன்சிலரும் போறதுக்கு முயற்சி பண்ணாங்க. அதைப்பார்த்த கட்சி நிர்வாகிங்க, 'நீங்க எதுக்கு வர்றீங்க... இங்கேயே நில்லுங்க'ன்னு சொல்லி அதட்டியிருக்காங்க.
அதனால, ஆய்வு முடிஞ்சு மினிஸ்டர் வர்ற வரைக்கும், கால் கடுக்க அந்த மூனு பேரும் கூடாரத்துலேயே நின்னுக்கிட்டு இருந்தாங்க. கார்ப்பரேஷன் ஆபீசர் போயி சொன்னதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் இருக்கையில உட்கார்ந்திருக்காங்க...''
''அதெல்லாம் ஓகே... மூன்றெழுத்து ஊர் பெயரை கேட்டதும், மினிஸ்டர் டென்ஷன் ஆயிட்டாராமே..''
''அதுவா... கட்டுமானம் நடக்குற இடத்துல செயல்படுற ஆய்வகத்துக்கு போயி, சோதனை செஞ்சாரு. கட்டுமானப் பொருள் எங்கிருந்து வாங்குறீங்கன்னு கேள்வி கேட்டுருக்காரு. அதுக்கு, மூன்றெழுத்து ஊர் பெயரை சொன்னதும், டென்ஷனான மினிஸ்டர், 'ஏன்... அதெல்லாம் இந்த ஊருல கெடைக்காதா...'ன்னு கேட்டாரு. ரிப்போர்ட்டர்ஸ், போட்டோகிராபர்ஸ் நின்னுக்கிட்டு இருக்கறதை பார்த்ததும், அவுங்களை வெளியேத்திட்டாங்க,''
இன்னும் விருது தரலை
பேசிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்த மித்ரா, ''கலெக்டருக்கு இன்னும் விருது கொடுக்கலையாமே... ஏனாம்...'' என கேட்டாள்.
''எலக்சன் கமிஷன்ல இருந்து, சிறந்த தேர்தல் அதிகாரின்னு கலெக்டருக்கு விருது கொடுத்துட்டாங்க; கவர்னர் மாளிகையில நடந்த பங்சன்ல, கவர்னர் கையால விருது வாங்கிட்டாரு. இதுக்கு முன்னாடியே, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை செஞ்ச பிரிவுல, கலெக்டருக்கு தமிழக அரசு விருது அறிவிச்சது,''
''கலெக்டர்கள் மாநாடு நடத்துற சமயத்துல விருது வழங்கி, கவுரவிப்போம்னு அரசாணையில குறிப்பிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம் கலெக்டர்கள் மாநாடு நடத்தவே இல்லை; விருதும் தராம இருக்காங்க...''
இன்ஸ்.,களுக்கு 'வார்னிங்'
மித்ரா, ''சிட்டி லிமிட்டுக்குள்ள இருக்கற மசாஜ் சென்டர்கள்ல, விபச்சாரம் நடக்குதாமே...'' என, கொக்கி போட்டாள்.
''அதுவா... எனக்கும் இன்பர்மேஷன் வந்துச்சு. நீ சொல்றது உண்மைதான்! டெபுடி கமிஷனர் தலைமையில செயல்படுற தனிப்படை, விபச்சாரத்துல ஈடுபடுறவங்களை, 'அரெஸ்ட்' பண்ணிட்டு வர்றாங்க.
ஆனா, ஸ்டேஷன்ல இருக்கற போலீஸ்காரங்க கரன்சி வாங்கிட்டு விட்டுடுறாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிட்ரா பகுதியில லாட்ஜ்ல செயல்பட்ட மசாஜ் சென்டர்ல, மூனு போலீஸ்காரங்க வசூல் வேட்டை செஞ்சிருக்காங்க. இந்த விஷயம் மேலிடத்துக்கு போனதும், மூனு பேரையும் கட்டுப்பாட்டு அறைக்கு மாத்திட்டாங்க,''
''இனிமே, டெபுடி கமிஷனர் தலைமையில செயல்படுற தனிப்படை, விபச்சார கும்பலை பிடிச்சா... எந்த ஸ்டேஷன் லிமிட்டுல வருதோ... அந்த இன்ஸ்., மேல 'டிபார்ட்மென்ட் ஆக்சன்' இருக்கும்னு 'வார்னிங்' பண்ணியிருக்காங்களாம்... அதனால, இன்ஸ்.,கள் மத்தியில கலக்கம் ஏற்பட்டிருக்கு; பல இன்ஸ்.,கள் 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு, வேற ஊருக்கு போயிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம்...''
உதவி கமிஷனர் 'சப்போர்ட்'
''டிராபிக் போலீஸ் உதவி கமிஷனர் கொடுக்கற சப்போர்ட்டுல, பிரைவேட் பஸ் ஓனர்ஸ் கரன்சியை அள்ளுறாங்களாமே...''
காபி கோப்பையை எடுத்து உறிஞ்சிய சித்ரா, ''அதுவா... ரயில்வே ஸ்டேஷன் ஏரியாவுல, ரெண்டு பிரைவேட் பஸ்கள் 'பர்மிட்' இல்லாம ஓடியிருக்கு. போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர், அந்த பஸ்சை நிறுத்தி விசாரிச்சிருக்காரு; பஸ் டிரைவர், கண்டக்டர் கொஞ்சம் கூட பயப்படாம, பந்தாவா பேசியிருக்காங்க. கடுப்பான போலீஸ்காரர், போலீஸ் ஸ்டைல்ல ஒரு பிடி பிடிச்சுட்டு, பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திட்டாரு; பைன் போடுறதுக்கு ஏற்பாடு செஞ்சதும், பஸ் ஓனருக்கு தகவல் போயிருக்கு...''
''கொஞ்ச நேரத்துல... உதவி கமிஷனரிடம் இருந்து போலீஸ்காரருக்கு போன்ல அழைப்பு வந்திருக்கு. தனக்கு தெரிஞ்சவரின் பஸ்; கண்டுக்காம விடுங்கன்னு சொல்லியிருக்காரு. 'அப்செட்'டான போலீஸ்காரரு, கெளம்பி வந்துட்டாரு,'' என்றாள்.
எலிக்கு இரையான சேலை
பேசிக்கொண்டே நகர்வலத்துக்கு புறப்பட்ட மித்ரா, ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.
பின் இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''தைப்பொங்கலுக்கு கவர்மென்ட் அலாட்மென்ட் கொடுக்கற சேலையை, ரேஷன் கார்டுகாரங்களுக்கு ஒழுக்கமா கொடுக்கறதில்லையாமே...'' என கேட்டாள்.
''ஆமாக்கா... நீங்க சொல்றது கரெக்டு தான்! இலவச வேட்டி, சேலையை ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுக்காரங்க சப்ளை செய்வாங்க. பண்டிகைக்கு முன்னாடி கொடுக்கறதில்லை. ரேஷன் கடையில இருக்கற கார்டுகள்ல, பாதிக்கு சப்ளை செய்றாங்க.
அதுவும் மக்களுக்கு போயி சேர்றதில்லை; மூனு லட்சம் வேட்டி, சேலை குடோன்ல தேங்கிக் கெடக்குதாம். போன வருஷம் மட்டும் ரெண்டு லட்சம் வேட்டி, சேலையை கொடுக்காம ஸ்டாக் வச்சிருந்தாங்க; எலி தின்னது போக இன்னும் மீதி இருக்குதாம். இதை என்ன செய்றதுன்னு தெரியாம, ஆபீசர்ஸ் திருதிருன்னு முழிச்சிட்டு இருக்காங்க...''
புரபசர் மேல புகார்
''அதிருக்கட்டும்... கவர்மென்ட் காலேஜ் புரபசர் மேல, பாலியல் புகார் சொல்றாங்களே...'' என, கடைசி சப்ஜெக்ட்டுக்கு சென்றாள் சித்ரா.
''அதுவா... தொண்டாமுத்துார் காலேஜ்ல இருக்கற பேராசிரியர் மேல கம்ப்ளைன்ட் சொல்லி, பேராசிரியைகள் போராட்டம் நடத்துனாங்க. அந்த பேராசிரியர், ஏற்கனவே வேலை பார்த்த காலேஜிலும், ஏதோ கம்ப்ளைன்ட்டுல டிரான்ஸ்பராகி வந்திருக்காரு.
இந்த காலேஜிலும் பிரச்னை வந்திருக்கு. உயர் கல்வித்துறை 'லேடி', புகாருக்குள்ளான பேராசிரியருக்கு சப்போர்ட்டா இருக்காராம்.
அதனால, வேறொரு ஆபீசர் 'என்கொயரி' செய்றாராம்; சமூக நலத்துறை விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு போட்டிருக்காம்,'' என்றபடி, கலெக்டர் ஆபீஸ் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.