UPDATED : ஜூன் 30, 2026 09:33 AM
ADDED : ஜூன் 29, 2026 11:10 PM

ஒரு மாறுதலுக்கு சித்ராவும், மித்ராவும் அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஜாகிங் சென்றனர்.
அண்ணாமலை போஸ்டரை பார்த்த சித்ரா, ''அமைப்பு துவங்கி ஒரு மாசத்துக்கு மேலாச்சு. அண்ணாமலை சத்தமே காணோமே'' என்றார்.
அதற்கு மித்ரா, ''உண்மைதான். பா.ஜ.,வுல இருக்கும்போது அடிக்கடி பிரஸ்சை மீட் பண்ணிட்டு இருந்தாரு. இப்ப அப்டியில்லை. அவரோட தலைமையில முக்கிய நிர்வாகிங்க ஆலோசனை கூட்டம் ஆனைகட்டியில ஒரு பண்ணை வீட்டுல நடந்துச்சு. ஸ்டேட் லெவல்ல ஒரு சிலபேருதான் கலந்துக்கிட்டாங்க'' என்றார்.
''உள்ளாட்சி தேர்தல்ல கலந்துக்கறத பத்தி பேசிருப்பாங்க''
''கரெக்ட். அதுல போட்டியிட வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்காங்களாம். அவரோட இயக்கத்துல சேர்றவங்க வேகம் இப்ப குறைஞ்சதுதான் காரணமாம். கட்சிய ஸ்ட்ராங் ஆக்குன பெறகு அடுத்த வருஷம் போட்டி போடலாம்னு நிர்வாகிங்க ஐடியா குடுத்ருக்காங்க''
''அப்ப இந்த வாட்டி த.வெ.க.காரங்களுக்கு வேட்டைதான்''
''யாரு லஞ்சம் வாங்குனாலும் நடவடிக்கை எடுப்போம்னு சொல்றாங்க. ஆனா அன்னூர் சப் ரிஜிஸ்டிரார் ஆபீசுல வழக்கம்போல வசூல் வேட்டை நடக்குதுன்னு ஜனங்க புலம்பறாங்க''
''மினிஸ்டர்சே லஞ்சம் குடுக்றாங்க; கேள்விப்பட்டியா?''
''அட, இது எங்கே?''
''நம்மூரு மினிஸ்டர்ஸ் ரெண்டு பேரும், அவங்க கலந்துக்கற நிகழ்ச்சிகள், பிரஸ்மீட்டுக்கு வர்ற பத்திரிகைக்காரங்களுக்கு வாரி வழங்கறாங்க. அவங்க மட்டுமில்ல, அ.தி.மு.க.வுல இருந்து முதல்ல தாவுன சீனியர் மினிஸ்டரும், ஏர்போர்ட்ல ரிப்போர்ட்டர்சுக்கு கரன்சிய பறக்க விடுறாரு''
''பணமா வாங்குனாதானே லஞ்சம்னு, நம்ம டிரஷரில வேற மாதிரி லஞ்சம் வாங்கறாங்க''
''எப்டி?''
''சிறப்பு தொகுப்பூதிய ஸ்டாப்க்கு சம்பளத்தை ரிலீஸ் பண்ண, ஏ4 ஷீட் பேப்பர் கட்டு வாங்கி குடுக்கணும். மாற்றுத்திறனாளிகள் நல ஆபீசுலயும் இது நடக்குது. ஏற்கனவே நொந்து போய் வர்றவங்ககிட்ட மனசாட்சியே இல்லாம வசூல போடுறாங்க. கலெக்டருக்கு இதெல்லாம் தெரியுமான்னு தெரியல''
''போன வாரம் மாநகராட்சி மேற்கு மண்டல ஆபீசுக்கு எதிரே இருக்கற ஜெராக்ஸ் கடையில லஞ்சப்பணத்தை குடுத்தா வரிவிதிப்புக்கான டோக்கன் கிடைக்கும்னு பேசினோமே''
''ஆமா...என்னாச்சு''
''கார்ப்பரேஷன் மேற்கு மண்டல உதவி கமிஷனர், 14 பில் கலெக்டர்களையும் கூப்பிட்டு, 'இந்தா பாருங்க...கவர்மென்ட் மாறிடுச்சு. எல்லாரும் கவனமா இருங்க. லஞ்சம் கிஞ்சம்னு ரிஸ்க்குல மாட்டுனா ஒன்னும் பண்ண முடியாது. எல்லா எடத்துலயும் மானிட்டர் பண்றாங்க. தினமலர்ல நியூஸ் போட்டுட்டாங்க. அதனால எப்ப வேணாலும் ரெய்டு வர சான்ஸ் இருக்கு. உஷாரா இருங்க'ன்னு அலர்ட் பண்ணியிருக்காரு''.
''எல்லா எடத்துலயும் மானிட்டர் பண்றாங்கன்னு சொல்லும்போதுதான் ஞாபகத்துக்கு வருது. கார்ப்பரேஷன் ஆபீசுல சிசிடிவி கேமரா பதிவுகள ஆபீசர்ஸ் எதேச்சையா பார்த்துருக்காங்க. அதுல இன்டெர்நெட் கேபிள் ஒயர் சரி பண்ற கான்டிராக்ட் லேபர் அங்க இருக்கற பைல்ஸ் திருடுறது, லேடி ஸ்டாப் போட்டோ, வீடியோலாம் எடுத்து பிரெண்ட்சுக்கு அனுப்புறதெல்லாம் ரிக்கார்ட் ஆயிருக்கு. பார்த்து ஷாக் ஆயிட்டாங்களாம்''
''இதை கேளுங்க...பிரைவேட் ஸ்கூலுக்கு அங்கீகாரம் வாங்கவும், புதுப்பிக்கவும் ஒரு பைசா குடுக்க வேண்டாம்னு அமைச்சர் ராஜ்மோகன் சொல்றாரு. அது மேல்மட்ட லஞ்சம். கீழ்மட்டத்துல இன்னும் கரன்சி அழ வேண்டியிருக்குன்னு சுந்தராபுரத்துல ஒரு பிரைவேட் நர்சரி ஸ்கூல்காரங்க குமுறிகிட்டு இருக்காங்க''
''கீழ்மட்ட லஞ்சமா?''
''ஆமா, கார்ப்பரேஷன், பயர் போர்ஸ், ெஹல்த் டிபார்ட்மென்ட், தாசில்தார், ஆர்.டி.ஓ., ...இப்டி ஒவ்வொரு டிபார்ட்மென்டுலயும் சர்ட்டிபிகேட் வாங்க பணம் குடுக்க வேண்டியிருக்குன்னு சொல்றாங்க. இ-சேவை மையம், டிரைவிங் ஸ்கூல்காரங்கதான் புரோக்கர் வேல பாக்கறங்களாம். இவங்கள பிடிச்சா போதும்''
''புரோக்கர்களுக்கு இப்ப நேரம் சரியில்ல போல'' என்று சிரித்தபடி சித்ரா கூற, இருவரும் கீழே உட்கார்ந்து ஷூ லேசை தளர்த்தினர்.
