'ஆன் தி ஸ்பாட்' 54 லட்சம் வசூல் அப்பீலுக்கு போக...
'ஆன் தி ஸ்பாட்' 54 லட்சம் வசூல் அப்பீலுக்கு போக...
ADDED : ஜூன் 23, 2026 07:35 AM

கு டிநீர் கட்டணம் செலுத்த மாநகராட்சி ஆபீசுக்கு வந்த சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு நடந்தனர்.
''கார்ப்பரேஷன்ல கல்லா கட்ன அசிஸ்டென்ட் கமிஷனரை வேற ஊருக்கு துாக்கிட்டாங்களாமே..'' என்றார் மித்ரா.
''முன்ன மாதிரி இல்ல; ஆட்சி மாறியாச்சு, இனிமே நேர்மையா இருங்க..ன்னு அமைச்சர்கள் வந்து கூட்டம் நடத்தி சொல்லிட்டு போறாங்க. ஆனாலும் அசராம சில அதிகாரிகள், 'நாங்க இப்படித்தான் இருப்போம்'னு வாங்கி வாங்கி உள்ள போட்டா, விடுவாங்களா? தேர்தல் சமயத்துல பக்கத்து மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர்ல போன உதவி கமிஷனர், திரும்பவும்இங்கயே வந்துட்டாங்க. அவங்க மேல ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் போயிருக்கு. இப்ப, சென்னை பக்கத்து மாவட்ட மாநகராட்சிக்கு மாத்திட்டாங்க'' என்றார் சித்ரா.
''54 பேர் அப்பாயின்மென்டை ஐகோர்ட் ரத்து செஞ்சதுதான் இப்ப டாப்பிக்கா ஓடுது போல...'' என்று மித்ரா எடுத்து கொடுத்தார்.
''ஓடாதா பின்ன? 2021ல் அ.தி.மு.க. ஆட்சியில் ராத்திரியோட ராத்திரியா அடிச்சு குடுத்த அப்பாயின்மென்ட் ஆர்டர் ஆச்சே. 54 இளநிலை உதவியாளர்கள் பல லட்சங்கள லஞ்சமா குடுத்து தான் வேலைல சேந்தாங்கனு ஐகோர்ட் சொல்லிருச்சு..”
மித்ரா குறுக்கிட்டார். ''இதுக்கு முன்னால ஒரு கேஸ்ல, குரூப் 1 ஆபீசர்ஸ் நியமனத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து பண்ணுச்சு, ஆனா, அவங்க யாருக்கும் பாதிப்பு வரலையே..?”
சித்ரா குறும்பாக சிரித்தார். “அதிகார வர்க்கம்ங்றது ரொம்ப ரொம்ப பவர்புல், மித்து. தற்காப்பு கலையில அவங்கள அடிச்சுக்க முடியாது. இப்பவும் ஆல்மோஸ்ட் அதுதான் நடக்கும்னு சொல்றாங்க..”
“என்னக்கா இது, அநியாயமா இருக்கு..”
“சிஸ்டம் அப்படி, சிஸ்டர்... நம்ம ஆட்கள் 54 பேரும் வடவள்ளியில் ஒரு இடத்துல கூடி பேசிருக்காங்க. சுப்ரீம் கோர்ட் போறதா ஏற்கனவே முடிவு எடுத்திருக்காங்க. அங்க ஆஜராக போர பவர்புல் லாயரை நானே ஏற்பாடு செஞ்சு தரேன். பெரிய தொகை அட்வான்ஸ் குடுக்கணும், அத மட்டும் ரெடி பண்ணுங்க..னு மாஜி அமைச்சர் சொல்லிருக்காராம். அதனால, முதல் கட்டமா தலா ஒரு லட்சம் வீதம், 54 லட்சம் ஆன் தி ஸ்பாட் கலெக்ட் செஞ்சிருக்காங்களாம்..”
விழிகள் விரிய கேட்டு கொண்டிருந்த மித்ரா, “எக்ஸ் மினிஸ்டருக்கு தங்கமான மனசு, இல்லக்கா..?” என்றார்.
சித்ராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “எங்கிட்டயே கிண்டலா.. ஆர்டர் வாங்கினதுல 39 பேர் அந்த எக்ஸ் தொகுதிய சேந்தவங்கன்னு உனக்கு நல்லாவே தெரியும். அது தவிர, இந்த கேஸ் சீரியசா போச்சுன்னா, அவரும் வசமா மாட்டிக்குவார். அதுதான் அக்கரைக்கு முக்கிய காரணம். டெல்லி வக்கீல்கள் பலரையும் அவருக்கு நல்ல பழக்கம்..”
”போலீஸ்லாம் அப்செட்ல இருக்காங்களாமே..?” என அடுத்த டாப்பிக் மாற்றினார் மித்ரா.
''எல்லா போலீசும்னு சொல்ல முடியாது. வெறும் 90 பர்சன்ட் அப்படி இருக்கலாம். ஏன்னா, டாஸ்மாக் கடைகளும் பார்களும் தான் அவங்களுக்கு வருமான ஊற்று. பகல் 12 மணிக்கு முன்னாடியும், ராத்திரி 10 மணிக்கு பின்னாடியும் சரக்கு விலை டபுளா ஏத்தி வித்ததால, இவங்களுக்கு பாக்கெட் நிரம்புச்சு. இப்பவும் அவங்க வாங்க தயார். ஆனா, கடை ஊழியர்களும், பார் நடத்துறவங்களும் கொடுக்கறதுக்கு தயார் இல்லையாம். அதனால, அப்செட்ல இருக்காங்க..”
”வருமானம் திடீர்னு நின்னுட்டா கஷ்டம் தானே..?”
“சிரிக்காம ஜோக் அடிக்கிற, பாராட்டுக்கள் மித்து. நேர்மையா உழைச்சு சம்பாதிக்ற வருமானம் நின்னு போனாதான் கஷ்டம். லஞ்ச வருமானம் எந்த நிமிஷமும் நின்னுடும்னு தெரியாதாக்கும்..?”
“ரெண்டு ஆட்சிலயும் தொடர்ச்சியா ரெண்டு வருமானம் வந்துகிட்டு இருந்ததுல, அந்த உண்மை மறந்திருக்கும். 60 வருச பழக்கம்ல்ல..”
''ஆளுங்கட்சி எம்மெல்லேக்கள், மா.செ.க்கள் யாரும் எந்த ரெக்கமண்டேசனுக்கும் வரது இல்லையாம். அதனால கட்ட பஞ்சாயத்து செஞ்சு நாலு காசு பாக்கவும் வழி இல்லைனு ஏங்கிகிட்டு இருக்காங்க..”
“ரெண்டு கட்சில இருந்தும் திராவிட மணிகள் கூட்டம் கூட்டமா வந்து சேந்துகிட்டு இருக்காங்க. நிலைமை போலீசுக்கு சாதகமா மாறதுக்கும் வாய்ப்பு இருக்கு..” என்றார் மித்ரா.
''நர்ஸ்கள் வருத்தப்பட்டு புலம்புறாங்களாமே,அது என்ன கதை?''
''மாநகராட்சியின் 32 நகர்நல மையங்களில் 3 மடங்கு நர்ஸ் பற்றாக்குறையாம். இந்த சூழ்நிலைல, தினசரி ஒவ்வொரு அறிவிப்புக்கும் ஆன்லைனில் மீட்டிங் நடத்துறாங்களாம். அலுவலக ரீதியாக மட்டும் இல்லாம, லீவு வேணும்னு கேக்றது மாதிரியான பெர்சனல் மேட்டருக்கும் மாநகராட்சி சுகாதார பிரிவுக்கு நேர்ல போய்தான் கேக்கணுமாம். ஆஸ்பிடல்ஸ்ல நோயாளிகள் சிகிச்சை நேரம் முடிஞ்ச பிறகு தான் போக முடியும். அங்க போயும் 3 மணி நேரம் காக்க வைக்றதும், அலட்சியமா பதில் சொல்றதுமா இருக்காங்களாம். அதான் நர்ஸ்கள் புலம்புறாங்க'' என்றார் மித்ரா.
''மேட்டுப்பாளையம் நகராட்சில ஏதோ மல்லுக்கட்டு நடக்குதாமே, கேள்விப்பட்டியா..?”
''அங்க இன்ஜினியர் ஒருத்தருக்கும் டாப் போஸ்ட்ல உள்ள மேடத்துக்கும் இடைல பனிப்போர் நடக்குதாம். இன்ஜினியருக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சப்போர்ட் இருக்கு. அத வச்சு அதிகாரிக்கு நெருக்கடி கொடுக் றாராம்.
வார்டுகள்ல த.வெ. க.காரங்க தொல்லை ஜாஸ்தியா இருக்குனு சொல்லி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி ஆபீஸ்ல தர்ணா செஞ்சாங்க. அதோட பின்னணில இன்ஜினியர் இருக்கார்னு எல்லாருக்கும் தெரியுமாம். அதிகாரி ஓப்பனா மோத தயங்குறார். இன்ஜினியர் அதனால அடுத்தடுத்த பிளான் போட்டுகிட்டு இருக்காராம். கோட்டைல பெரிய அதிகாரியோட ஆசி தனக்கு இருக்ரதா சொல்லி, 'நானா லேடியானு பாத்துருவோம்'னு சவால் விடுறாராம்''
''இன்னொரு பெண் அதிகாரி விசயம் சொல்றேன் கேளு. சூலூர் தாலுகால ஒரு வி.ஏ.ஓ. அம்மணி ஜனங்கள அலையவிடுறதுல கில்லாடியாம். பட்டா மாறுதல் கேட்டு ஆன்லைன்ல வர்ற விண்ணப்பங்களை வரிசையா நிராகரிச்சுட்டு இருக்காராம். நேர்ல போய் கவனிச்சா மட்டும் பைல் மூவ் ஆகுதாம். வர்ற விண்ணப்பங்களில் 5 சதவீதம் வரை தான் நிராகரிக்கலாம்னு ரூல் இருந்தும் தைரியமா செய்றாங்க. இவர் தள்ளுபடி செஞ்ச மனுக்களை யாராவது ஒரு அதிகாரி வந்து ஆய்வு செய்ய மாட்டாரானு மக்கள் ஏங்குறாங்க'' என்றார் சித்ரா.
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த மித்ரா,''வரி விதிப்பு செய்றதுக்கு பேன்ஸி ஸ்டோர்ல டோக்கன் கொடுக்கிறாங்கனு கேள்விப்பட்டேன். ஒண்ணும் புரியல..'' என்றார்.
''அது உன் காதுக்கு வந்திருச்சா.. மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்துல வீட்டு வரி, காலியிட வரி விதிக்க, கட்டடங்களுக்கு வர்த்தக வரியை குறைக்க அப்ளை பண்றாங்க.
பில் கலெக்டர் ஆய்வு முடிச்சுட்டு, ஆபீசுக்கு எதிர்ல உள்ள ஒரு கடைக்கு போக சொல்லுவார். போய் இவ்வளவு தொகை கொடுக்க சொல்லுவார். கடைல இருக்கிறவர் அந்த தொகைய வாங்கிகிட்டு, ஒரு கலர் டோக்கனை கொடுப்பார். அவர் சொல்ற தேதில பில் கலெக்டரை பாத்து டோக்கன குடுத்தா வேலை முடியும், வரி குறையும். அங்க வேலை செய்ற 20 பில் கலெக்டர்ஸ்ல 14 பேர் இதே சிஸ்டத்தை பாலோ செய்றாங்க.
ஊருக்கே தெரிஞ்ச விஷயம் ஊழல் தடுப்பு போலீசுக்கு மட்டும் தெரியாதது எப்படினு சொல்லேன், பாப்போம்'' என்று விக்ரமாதித்தன் கதையில் வருவது போல் சித்ரா புதிர் போட்டார்.
''லஞ்சம் கொடுப்பவருக்கும் லாபம், வாங்குறவருக்கும் லாபம். ரெண்டு பேரோட கொடுக்கல் வாங்கல்ல மூணாவது ஆள் தலையிடலாமோ..?” என்று மித்ரா கேட்க, இருவரும் வாய்விட்டு சிரித்தனர். வண்டி வேகம் பிடித்தது.
