/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கலெக்டர் பங்களாவுல 'கிடா வெட்டு' ; கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு இருக்குது 'வேட்டு'
/
கலெக்டர் பங்களாவுல 'கிடா வெட்டு' ; கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு இருக்குது 'வேட்டு'
கலெக்டர் பங்களாவுல 'கிடா வெட்டு' ; கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு இருக்குது 'வேட்டு'
கலெக்டர் பங்களாவுல 'கிடா வெட்டு' ; கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு இருக்குது 'வேட்டு'
ADDED : மார் 31, 2025 11:29 PM

வீட்டு வராண்டாவில் அமர்ந்து மொபைல் போனில் சித்ரா, தனது தோழிக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த மித்ரா, ''என்னக்கா... எப்பவும் இலைக்கட்சி சார்புல இப்தார் விருந்து நடத்துவாங்க... இந்த தடவை நடத்தல போலிருக்கே...'' என ஆரம்பித்தாள்.
போன் இணைப்பை துண்டித்த சித்ரா, ''ஆமாப்பா... விருந்து நடத்துறதுக்கு ஆலோசனை நடந்துட்டு இருந்துருக்கு. திரைமறைவுல என்ன நடந்துச்சோ, கடைசி நேரத்துல கைவிட்டுட்டாங்களாம்...'' என்றாள்.
''அதெல்லாம் ஓகே... 2026 அசெம்ப்ளி எலக்சன்ல நம்ம மாவட்டத்துல, மூனு தொகுதியை தாமரைக்கட்சிக்காரங்க கேக்குறாங்களாமே...''
''யெஸ்... நீ சொல்றது கரெக்ட்டு! எம்.பி., எலக்சன்ல ரெண்டாம் இடத்துக்கு வந்ததுனால, தாமரை கட்சி தரப்புல, மூனு தொகுதி கேக்குறாங்களாம். 'சீட்' கெடைக்காத இலைக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, வாரிய தலைவர் பதவி கொடுக்கலாம்னு நினைக்கிறாங்களாம்,''
''மேட்டுப்பாளையத்துல, 100 வாக்காளருக்கு ஒருத்தருன்னு ஆட்களை நியமிச்சு, பூத் கமிட்டி வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஆளுங்கட்சி தரப்புல கோஷ்டி பூசல் இருக்கறதுனால, 'சீட்' யாருக்கு கொடுக்கறதுன்னு முடிவெடுக்கறதுக்குள்ள, தொகுதி வேலையை கச்சிதமா முடிச்சிடலாம்னு ரத்தத்தின் ரத்தங்கள் 'பிளான்' போட்டுட்டு இருக்காங்க...''
கவுன்சிலர்களுக்கு கரன்சி
''ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு கரன்சி பட்டுவாடா ஆயிடுச்சாமே...''
''அதுவா... கவுன்சிலர்கள் வகிக்கிற பதவிக்கேற்ப, ஒரு லட்சத்துல ஆரம்பிச்சு அஞ்சு லட்சம் ரூபா வரைக்கும் பட்டுவாடா செஞ்சிருக்காங்க. எலக்சன் வரப்போறதுனால, கவனமா நடந்துக்குங்கன்னு 'பொறுப்பானவர்' அறிவுரை சொல்லியிருக்காரு. அப்புறம்... மாவட்டங்களை கூப்பிட்டு, கவுன்சிலர்களையும், பகுதி கழகத்தையும் கண்காணிக்கச் சொல்லி இருக்காரு...''
''அதெல்லாம் சரி... ஆளுங்கட்சி கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சமரசம் ஆகிட்டாங்க போலிருக்கே... கவுன்சில் கூட்டத்துல, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கற மாதிரி செயல்படலையாமே...''
''ஆமாப்பா... கவுன்சில் கூட்டம் நடந்ததுக்கு முந்தைய நாள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்ங்க கூடி பேசியிருக்காங்க. சொத்து வரி உயர்வு தொடர்பா ஏதாச்சும் நடவடிக்கை எடுக்கலைன்னா... சீட்டுல ஒக்கார மாட்டோம்னு மேயர்கிட்ட மனு கொடுத்தாங்க,''.
''சொத்து வரி உயர்வை குறைக்கறதை பத்தியோ, ஒரு சதவீத அபராதத்தை நீக்கறது பத்தியோ எதுவுமே சொல்லலை. ஆறு சதவீத வரி உயர்வை குறைக்கறதுக்கு, அமைச்சருக்கு கடிதம் எழுதி, நேர்ல கொடுக்கப் போறேன்னு சொன்னதும் சமரசமாகிட்டாங்க. இதை கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கேள்விப்பட்டு, 'அப்செட்' ஆகிட்டாங்க.
வெளிநடப்பு செய்ய வேண்டாம்... மன்றத்துக்குள்ள இருந்துக்கிட்டே, சொத்து வரி உயர்வை குறைக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கற அளவுக்கு, கவுன்சிலர்களுக்கு ஆளுமை இல்லாமப் போச்சே. நம்ம கவுன்சிலர்களே கவுந்துட்டாங்களேன்னு, கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிங்க சிலபேரு கவலைப்பட்டுட்டு இருக்காங்க...''
கிழியப் போகுது 'சீட்'
''சிலபேரோட 'சீட்' கிழியப் போகுதாமே...''
''ஆமாப்பா... கார்ப்பரேஷன்ல ஒத்துவராத ஆபீசர்ஸ் யார் யாருன்னு பெரிய லிஸ்ட்டே எடுத்துருக்காங்களாம். பட்ஜெட் கூட்டம் முடியட்டும்னு, கவர்மென்ட் தரப்புல சொல்லி இருந்தாங்களாம். அதனால, ஆபீசர்ஸ் டிரான்ஸ்பர்ஸ் விரைவில் வரும்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.
நம்மூரை பொறுத்தவரைக்கும் ஆபீசர்ஸ் வட்டாரத்துல இலைக்கட்சி ஆதரவாளர்கள் அதிகமா இருக்காங்கன்னு, ஆளுங்கட்சி தரப்புக்கு தகவல் போயிருக்கு.
உதாரணத்துக்கு, சிறுவாணி விவகாரத்துல குடிநீர் வாரியம் நடந்துக்கிட்டதை சொல்லலாம். அதனால, களையெடுப்பு தீவிரமா நடக்கும்னு சொல்றாங்க. ஏ.ஆர்.ஓ., - ஏ.இ., - ஏ.இ.இ., - இ.இ., - ஏ.டி.பி.ஓ., - எஸ்.ஐ., - எஸ்.ஓ.,ன்னு, ஒரு செக்சன் விடாம துாக்கியடிக்கப் போறதா பேசிக்கிறாங்க...''
ஆண் நாயும், பெண் நாயும்
''தெருநாய் பிரச்னை சம்பந்தமா... கவுன்சில்ல அப்படி என்ன நடந்துச்சு... கவுன்சிலர்கள் பலரும் ஏதேதோ பேசிக்கிறாங்களே...''
''அதுவா... தெருநாய் தொந்தரவு சம்பந்தமா, சில கவுன்சிலர்கள் பேச ஆரம்பிச்சதும், ஜோனல் சேர்மன் ஒருத்தர் எழுந்திரிச்சு, ஆண் நாய்களை எல்லாம் மூன்றெழுத்து ஊர்ல விட்டுடலாம்... பெண் நாய்களை எல்லாம் அங்கே இருந்து, நம்மூருக்கு எடுத்துட்டு வந்துடலாம்னு, யோசனை சொன்னாரு.
அதைக்கேட்டு, ஒட்டுமொத்த கவுன்சிலே ஆடிப்போயிருச்சு. ஆபீசர்ஸ் அத்தனை பேரும் அதிர்ந்து போயிட்டாங்க. மூன்றெழுத்து ஊர் பெயரை, வாய் தவறி சொன்னாங்களா... உள்குத்து ஏதாச்சும் இருக்குதான்னு, கவுன்சிலர்ஸ் வட்டாரத்துல பேச்சு ஓடிட்டு இருக்குது...''
கிடாவெட்டு பூஜை
''கலெக்டர் கேம்ப் ஆபீசுல, கிடாவெட்டு நடக்கப் போகுதாமே...''
''அதுவா... ரேஸ்கோர்ஸ்ல கலெக்டர் பங்களா இருக்குது. பின்பக்கத்துல வடக்கு திசையில கிழக்கு பார்த்து, கருப்பண்ணசாமி கோவில் இருக்கு. புதுசா வர்ற கலெக்டர்கள், கிடா வெட்டி, பூஜை நடத்துறது வழக்கம்.
முந்தைய கலெக்டர்கிட்ட இதைப்பத்தி சொன்னப்போ, அவர் கண்டுக்கலை. நம்ம மாவட்டத்துல கனிம வள பிரச்னை விஸ்வரூபம் எடுத்தப்போ, கிடா வெட்டி பூஜை நடத்துங்கன்னு பங்களாவுல இருந்தவங்க, 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க; அதையும் கேட்கலை.
'டிரான்ஸ்பர்' ஆர்டர் வந்தபிறகுதான் மனசு மாறி, கிடாவெட்டி, எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறி இருக்காரு. இந்த சம்பவத்தை, புது கலெக்டர்கிட்ட பங்களா ஊழியர்ங்க சொல்லி இருக்காங்க. அதனால, சீக்கிரமே கிடா வெட்டு பூஜை நடக்கும்னு நம்புறாங்க...''
அடாவடி எஸ்.ஐ.,
''அதிருக்கட்டும்... முன்னாள் டி.ஜி.பி., பெயர்களை சொல்லி, லேடி எஸ்.ஐ., ஒருத்தரு அடாவடி பண்ணிட்டு இருக்காராமே...'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள் மித்ரா.
''ஆமாப்பா... கமிஷனர் ஆபீஸ் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,யை தானே சொல்றே... இன்ஸ்., - டி.எஸ்.பி.,ன்னு யாரு பேச்சையும் கேக்கறதில்லை. செக்சன்ல வேலை பார்க்கற, சக போலீஸ்காரங்களையும் மதிக்கறதில்லை. யாராவது ஏதாச்சும் சொன்னா, முன்னாள் டி.ஜி.பி.,கள் ரெண்டு பேரை சொல்லி மிரட்டுறாங்களாம். ஒருத்தரை 'அப்பா'ன்னும், இன்னொருத்தரை 'அண்ணன்'ன்னும் சொல்றாங்களாம். எதுக்கு வம்புன்னு செக்சன்ல இருக்கறவங்களே, அந்த எஸ்.ஐ.,கிட்ட பேசுறதை விட்டுட்டாங்களாம்...''
போஸ்டரால் பரபரப்பு
''பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துல, 'யார் தியாகி'ன்னு போஸ்டர் ஒட்டுனதுனால... போலீஸ்காரங்க விசுவாசத்தை காட்டுனாங்களாமே''
''அதுவா... இலைக்கட்சியை சேர்ந்தவங்க, நடுராத்திரில ஏரியா முழுக்க 'யார் தியாகி' போஸ்டர் ஒட்டுனாங்க. அதைப்பார்த்த போலீஸ்காரங்க பதறிட்டாங்க. ஆளுங்கட்சி தரப்புக்கு தகவல் சொல்லிட்டாங்க.
உடன்பிறப்புகள் வந்து போஸ்டர்களை கிழிச்சு... தீ வைச்சு எரிச்சிட்டாங்க. ரத்தத்தின் ரத்தங்கள் மேல வழக்கு பதிவு செஞ்சா, வில்லங்கத்தை நாமே விலைக்கு வாங்குனது மாதிரியாகிடும்னு யோசிச்ச போலீஸ்காரங்க, போஸ்டரை ஒட்டுன கூலித்தொழிலாளி மேல வழக்கு பதிவு செஞ்சு, விசுவாசத்தை காட்டியிருக்காங்க,''
பார்க்கிங் ஊழல்
''அதெல்லாம் சரி... கார்ப்பரேஷன் பார்க்கிங் ஸ்டாண்ட்டுல ஊழல் நடக்குதாமே...''
''மித்து, அதெல்லாம் ஆபீசர்களுக்கும் நல்லாவே தெரியும். கலெக்சன்ல பெரும் பங்கு ஆபீசர்களுக்கு போகுது. அதனால, கண்டுக்காம இருக்காங்க. ஜி.எச்.,க்கு முன்னாடி, வாகனங்கள் நிறுத்துறதுனால போக்குவரத்து நெருக்கடி ஏற்படுறத தீர்க்கறதுக்கு, வாலாங்குள கரையில பார்க்கிங் ஏரியா உருவாக்குனாங்க.
ரசீது கொடுக்கறவரு, புத்தகத்துல இருந்து வரிசையா கிழிச்சு கொடுக்கறதில்லை. பேன்ட் பாக்கெட்டுக்குள்ள வச்சிருக்கிற ரசீதை கொடுக்குறாரு. ரசீது நம்பரு வரிசையா இருக்கறதில்லை; வெவ்வேறா இருக்குது; தேதியும் இருக்கறதில்லை.
வண்டி எடுக்க வர்றவங்கள்ட்ட, ரசீதை திருப்பி வாங்கிட்டு, அதையே அடுத்த வண்டிக்காரங்ககிட்ட கொடுக்குறாரு. கார்ப்பரேஷனுக்கு கணக்கு காட்டாம, ஆபீசர்ஸ் லெவல்ல கல்லா கட்டுறாங்க,'' என்றபடி, நகர்வலத்துக்கு புறப்பட்டாள் சித்ரா.

