/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
ஆளுங்கட்சி செங்கல் சூளைகள் மட்டும் 'ஆட்டுது வாலை': ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் செய்யவில்லை வேலை
/
ஆளுங்கட்சி செங்கல் சூளைகள் மட்டும் 'ஆட்டுது வாலை': ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் செய்யவில்லை வேலை
ஆளுங்கட்சி செங்கல் சூளைகள் மட்டும் 'ஆட்டுது வாலை': ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் செய்யவில்லை வேலை
ஆளுங்கட்சி செங்கல் சூளைகள் மட்டும் 'ஆட்டுது வாலை': ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் செய்யவில்லை வேலை
ADDED : அக் 08, 2024 12:34 AM

பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த சித்ரா, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கினாள்.
அழைத்துச் செல்வதற்காக, பிளாட்பாரம் அருகே மூக்கை பொத்திக் கொண்டு, மித்ரா காத்திருந்தாள்.
அதைப்பார்த்த சித்ரா, ''என்னப்பா... டாய்லெட் துர்நாற்றம் தாங்க முடியலையா,''எனக்கேட்டாள்.
''ஆமாக்கா... ஸ்மார்ட்டி சிட்டியாக்குறோம்னு, ஆயிரம் கோடி ரூபாயை 'காலி' பண்ணிட்டாங்க. ஊருக்கு நடுவுல இருக்கற இந்த பஸ் ஸ்டாண்டுல, இருக்கற கக்கூஸ்களை சீரமைக்கலை; கழிவு தண்ணீ போக வழியில்லை. நாத்தம் தாங்க முடியலை. பஸ்சுக்கு 'வெயிட்' பண்ற பயணிங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த லட்சணத்துல, டில்லியில நடந்த 'ஸ்வட்ச் பாரத்' மீட்டிங்கிற்கு நம்மூர்ல இருந்து ஆபீசர்ஸ் போயி கலந்துக்கிட்டாங்களாம்,''
ஒதுக்கப்படும் மேயர்
''புது மேயரம்மா என்ன செய்றாங்க... செயல்பாடே இல்லாம இருக்காங்களே...''
''ஆமாக்கா... உண்மைதான்! மேயரா பொறுப்பேத்து ரெண்டு மாசமாச்சு. இன்னும் ஆபீசர்ஸ் அறிமுகக் கூட்டம் கூட நடத்தலை. கார்ப்பரேஷன் நடத்துற பங்சனுக்கு மேயரை கூட அழைக்காம, ஆபீசர்ஸ் மட்டும் தனியா நடத்துறதா, கவர்மென்ட் கவனத்துக்கு உளவுத்துறையில இருந்து 'கம்ப்ளைன்ட்' போயிருக்கு''
''அவுங்க தலைமையில நடந்த முதல் மீட்டிங்ல, அ.தி.மு.க., கவுன்சிலரை மூன்று கூட்டத்துக்கு 'சஸ்பெண்ட்' செஞ்சு உத்தரவு போட்டாங்க. ஆனா, 'சஸ்பெண்ட் ஆர்டர்' கொடுக்கவே இல்லையாம். தீர்மானம் நிறைவேத்துனதா பதிவு செஞ்சிருக்காங்க. சட்ட ரீதியா சென்னை ஐகோர்ட்டுல வழக்கு தொடர்ந்து, மன்றத்துல கலந்துக்கறதுக்கு அ.தி.மு.க., தரப்புல, ஆர்டர் வாங்கிட்டாங்க.
இதை கேள்விப்பட்டு, தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'டுல இருக்காங்க,''.
கவுன்சிலர் பையன் 'அட்ராசிட்டி'
இருவரும் பேசிக்கொண்டே, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
சாம்பார் வடை, காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''ஆளுங்கட்சி லேடி கவுன்சிலர் பையன் 'அட்ராசிட்டி' தாங்க முடியலையாமே... போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் குடுத்தும், எப்.ஐ.ஆர்., போடலையாமே...'' என கேட்டாள்.
''அதுவா... வெள்ளலுார்ல 'ஸ்லம் போர்டு' அடுக்குமாடி குடியிருப்பு இருக்கு. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கி, குடியிருப்புதாரர்கள்கிட்ட மாதாந்திரம் கட்டணம் வசூலிச்சு, 'மெயின்டனன்ஸ்' செய்றதுக்கு, ஆர்டர் போட்டாங்க. அதன்படி, சங்கம் ஏற்படுத்தி, 'மெயின்டனன்ஸ்' வேலை நடந்துட்டு இருந்துச்சு...''
''இப்போ, ஆளுங்கட்சியை சேர்ந்த லேடி கவுன்சிலரோட பையன், குடியிருப்புவாசிகள்கிட்ட கட்டணம் வசூலிக்கிறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு முட்டுக்கட்டை போட்டுட்டாராம். அப்புறம், மோட்டார் ரூமுக்கு பூட்டு போட்டு, 'லாக்' பண்ணி, குழப்பத்தை ஏற்படுத்துனாராம்.
ஜனங்களை திசை திருப்பி விட்டு, மோட்டார் ரூம் பூட்டை உடைச்சிருக்காங்க. ரெண்டு இடத்துல மோட்டார் பம்ப் புகைஞ்சு போச்சாம். தமிழக அரசுக்கு ரெண்டு லட்ச ரூபா இழப்பு ஏற்பட்டிருக்கு. இது சம்பந்தமா, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்திருக்காங்க. ஆளுங்கட்சியை சேர்ந்தவங்கங்கிறதுனால, எந்த நடவடிக்கையும் எடுக்காம வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்களாம்,''
கூட்டணி கொள்ளை
''இதே மாதிரி, செங்கல் சூளை விவகாரத்துலயும் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்...''
''அப்படியா... என்ன நடந்துச்சு... நீதிபதிகள் தலைமையிலான குழு நேரடியா ஆய்வு செஞ்சதே...''
''ஆமாக்கா... நீதிபதிகள் ஆய்வுக்கு வரப்போறாங்கன்னு தெரிஞ்சதும், பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்துருக்காங்களாம். மொத்தம், 14 செங்கல் சூளைகள் 'இல்லீகலா' செயல்பட்டதா, ஐகோர்ட்டுல வழக்கு பதிவாகியிருக்கு.
இதுல, ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டப்பட்டவங்க நடத்துற செங்கல் சூளைகள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்; எப்.ஐ.ஆர்., பதிவு செய்யலை; கைது நடவடிக்கையும் பாயலை. ஆளுங்கட்சி பிரமுகர் அடிக்கடி கலெக்டர் ஆபீசுக்கு வந்து, ஆபீசர்களை சந்திச்சிட்டு போறாராம்.
''அடுத்த கட்டமா ஐகோர்ட்டுல நடக்குற 'என்கொயரி'யில, கனிமக்கொள்ளைக்கு உடந்தையா இருந்த ஆபீசர்ஸ் மேல துறை ரீதியா நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டா, மேற்குத்தொடர்ச்சி மலை தப்பிக்கும்; இல்லேன்னா... ஆளுங்கட்சிக்காரங்களும், ஆபீசர்ஸ்சும் கூட்டணி சேர்ந்து, மலையை காலி பண்ணிடுவாங்கன்னு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொந்தளிக்கிறாங்க,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் மித்ரா.
கதர்ச்சட்டை கோஷ்டி
''கதர்க்கட்சிக்காரங்க ரெண்டு கோஷ்டியா, காந்தி ஜெயந்தி விழா கொண்டாடுனாங்களாமே...''
''ஆமாக்கா... கதர்க்கட்சியில கோஷ்டிக்கு பஞ்சமே இல்லைன்னு சொல்லலாம். மாவட்ட தலைவர் தலைமையில ஒரு கோஷ்டி, ஊர்வலம் நடத்தியிருக்கு; கார்ப்பரேஷன் கவுன்சிலர்கள் தலைமையில இன்னொரு கோஷ்டி, தனியா ஊர்வலம் நடத்தியிருக்கு.
இதேமாதிரி, அன்னுார் வட்டாரத்துலயும் தனித்தனியா நடத்தியிருக்காங்க. கதர்ச்சட்டை கட்சியில தலைவருங்கதான் அதிகமா இருக்காங்க; தொண்டர்கள் கம்மியா இருக்காங்க. அதுல, ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு விழா நடத்துனா, நல்லா இருக்குமான்னு நிர்வாகிங்க புலம்புறாங்க,''
ஓட்டல் பில் கொடுத்துவிட்டு, இருவரும் வெளியே வந்தனர். ஹெல்மெட் அணிந்துகொண்டு, ஸ்கூட்டரை சித்ரா இயக்கினாள்.
மாமூல் வந்தாகணும்!
பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, சிக்னலில் நின்று கொண்டிருந்த போலீசாரை பார்த்ததும், ''போலீஸ் மேட்டர் எதுவும் இல்லையாக்கா...'' '' என, கேட்டாள்.
''என்னப்பா... மித்து, இப்படி கேட்டுட்டே... ஒவ்வொரு ஸ்டேஷனா விசாரிச்சா... டன் கணக்குல கம்ப்ளைன்ட் வரும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மதுக்கூட (பார்) உரிமையாளர்களை வரவழைச்சு போலீஸ்காரங்க, 'மீட்டிங்' நடத்தியிருக்காங்க; மேட்டுப்பாளையம் ஏரியாவைச் சேர்ந்தவங்க கலந்துக்கிட்டாங்க,''
''ஒவ்வொருத்தர்கிட்டயும் கருத்து கேட்ட போலீஸ்காரங்க, இனி மாசந்தவறாம மாமூல் கொடுத்தாகணும்னு கறாரா சொல்லியிருக்காங்க. அந்தளவுக்கு சேல்ஸ் இல்லீங்கன்னு 'பார்' உரிமையாளர்கள் சொல்லியும், போலீஸ் தரப்புல கேட்கலையாம்.
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது; மாசா மாசம் கொடுத்தாகணும்னு கண்டிசனா சொல்லிட்டாங்களாம். மாமூல் கொடுக்கலைன்னா ஏதாச்சும் கேஸ் போட்டு, ஸ்டேஷனுக்கு இழுத்தடிப்பாங்களோன்னு பயப்படுறாங்க; கொடுக்க ஆரம்பிச்சா... மாசா மாசம் கேட்பாங்களேன்னு புலம்பிட்டு இருக்காங்க,''
போலீசை காணலை
''சிட்டி போலீஸ் என்ன செய்யுது... அதிரடி ஆக்சன் எதுவும் காணலையே... நைட் ரோந்து போறதையே விட்டுட்டாங்களா... ''
''ஆமா மித்து... நீ சொல்ற மாதிரி, எனக்கும் சந்தேகம் வருது. நைட் ரோந்து போலீஸ்காரங்கள கண்காணிக்கறதுக்கு ஒரு ரோந்து டீம் போடணும் போலிருக்கு.
ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு பின்னாடி இருக்கற காமதேனு நகர்ல, மென் அண்டு விமன் ஹாஸ்டல் இருக்கு. நைட் நேரத்துல 'சரக்கு' அடிச்சிட்டு மது பாட்டில்களை, வீட்டு வாசல்ல வீசிட்டு போறாங்களாம்,''
''ஸ்பீடா பைக் ஓட்டுறது; ஸ்பீக்கர்ல அதிக சத்தம் வச்சு கத்துறதுன்னு அநாகரீகமா செயல்படுறாங்களாம். குடியிருப்புவாசிகளுக்கு தொந்தரவா இருக்குது. கஞ்சா புழக்கமும் இருக்கறதுனால ரோந்து போலீஸ்காரங்க, டெய்லி வரணும்னு அந்த ஏரியா பப்ளிக் விரும்புறாங்க,''
''தடை செய்யப்பட்ட குட்கா சேல்ஸ், சூப்பரா நடக்குதாமே...''
''அதையேன் கேக்குறே... கலெக்டர் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கற பெட்டிக்கடைகள், கோர்ட்டுக்கு பக்கத்துல இருக்கற பெட்டிக் கடைகள்ல, தடை செய்யப்பட்ட குட்கா சேல்ஸ் பட்டைய கெளப்புதாம்; நைட் 9:00 மணியில இருந்து, 11:00 மணி வரை, வாங்க வர்றவங்கள்ட்ட மூனு மடங்கு ஜாஸ்தியா காசு வாங்குறாங்களாம். இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் போலீஸ்காரங்க கண்டுக்காம விட்டுடுறாங்களாம்,''
''இதே மாதிரி, கலெக்டர் ஆபீசுக்குள்ள பழைய பில்டிங் வளாகத்துல கேரள லாட்டரி சேல்ஸ் பண்றாங்களாம். வடக்கு தாலுகா அலுவலகத்துல உதவியாளரா இருக்கற ஒருத்தருதான் லாட்டரி சேல்ஸ் பண்றாராம். இவருக்கு தடாகம் ஏரியாவுல உள்ள, வி.ஏ.ஓ., ஆபீஸ் உதவியாளர் ஒருத்தரு, ஆனைகட்டியில இருந்து லாட்டரிகளை, ரெண்டு நாளைக்கு ஒரு தடவை வாங்கிக் கொடுக்குறாராம்,''
தயாராகுது டிரான்ஸ்பர் ஆர்டர்
''லஞ்சம் வாங்கி வசமா சிக்குன பத்திரப்பதிவு ஆபீசர் மேல, துறை ரீதியான இன்னும் நடவடிக்கை எடுக்கலையே... ஏனாம்...''
''அந்த ஆபீசர், லஞ்சம் வாங்குறதுக்காக மட்டும் ஒரு ஊழியரை வேலைக்கு வச்சிருந்திருக்காரு; அதை கலெக்ட் பண்ணி, அக்கவுன்ட்டுல கிரெடிட் பண்றதுக்கு, ஒரு டிரைவரை வேலைக்கு வச்சிருக்காராம். இதெல்லாம்... லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செஞ்சிருக்கிற கேஸ்ல தெள்ளத்தெளிவா சொல்லியிருக்காங்க,''
''ஆனா, பத்திரப்பதிவு துறை முக்கியப் புள்ளியோட சொந்தக்காரர்னு சொல்லிட்டு, 'கல்லா' கட்டுறாராம். விஜிலென்ஸ் தரப்புல கேஸ் பைல் பண்ணி, எட்டு மாசமாச்சு; என்கொயரி பண்ணாம கெடப்புல போட்டுட்டாங்க.
இந்த விஷயம் இப்போதான், 'முக்கியப்புள்ளி'யின் கவனத்துக்கு போயிருக்கு. சம்பந்தப்பட்ட ஆபீசரை துாக்கச் சொல்லிட்டாராம். அதனால, அவருக்கு 'டிரான்ஸ்பர்' ஆர்டர் கட்டாயம் வரும்னு, பத்திரப்பதிவு ஆபீசுல பேசிக்கிறாங்க,''
உட்கார தடை
''அதெல்லாம் இருக்கட்டும். நீங்க, டெபுடி சி.எம்., நடிச்ச 'மாமன்னன்' சினிமா பார்த்திருக்கீங்களா... அவரோட அப்பாவா நடிச்ச, வடிவேலுவை சீட்ல உக்காரச் சொல்லி, உரிமைக்குரல் எழுப்புவாரு... ''
''ஆமா.. அதுக்கு என்ன...''
''அதே மாதிரி, நம்மூரு ஜி.எச்.,ல நடக்குது. ஜி.எச்.,ல ஒரு ஆர்.எம்.ஓ., மூனு ஏ.ஆர்.எம்.ஓ., இருக்காங்க. இவுங்களுக்கு ஜி.எச்., வளாகத்துல ஆபீஸ் செயல்படுது. ஹாஸ்பிட்டல்ல வசதி குறைவா இருந்தாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ, இவுங்களை நேர்ல பார்த்துச் சொல்லலாம்.
அப்படி யாராச்சும் நோயாளிகளோ அல்லது உறவினர்களோ வந்தா, கால்கடுக்க நிக்க வச்சு பேசுறாங்க. காலியா இருக்கற சீட்ல யாராச்சும் உக்காந்தா, எந்திரிச்சு நிக்க வைக்கிறாங்க,''
''அடக்கொடுமையே...,'' என்றவாறு, மொபைலில் மெசேஜ் பார்க்க ஆரம்பித்தாள் சித்ரா.