/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கிலோ கணக்குல தங்கம் 'டீலிங்' பேசுற 'காக்கி' அமைச்சர் தயவுல கான்ட்ராக்டர் அள்ளுறாரு பல கோடி!
/
கிலோ கணக்குல தங்கம் 'டீலிங்' பேசுற 'காக்கி' அமைச்சர் தயவுல கான்ட்ராக்டர் அள்ளுறாரு பல கோடி!
கிலோ கணக்குல தங்கம் 'டீலிங்' பேசுற 'காக்கி' அமைச்சர் தயவுல கான்ட்ராக்டர் அள்ளுறாரு பல கோடி!
கிலோ கணக்குல தங்கம் 'டீலிங்' பேசுற 'காக்கி' அமைச்சர் தயவுல கான்ட்ராக்டர் அள்ளுறாரு பல கோடி!
ADDED : டிச 31, 2024 05:14 AM
பணி நிமித்தமாக, கார்ப்பரேஷன் அலுவலகத்துக்கு வந்த சித்ரா, 'அம்மா' உணவகம் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.
மன்ற கூட்டத்துக்கு வந்திருந்த கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஒவ்வொருவராக, விக்டோரியா ஹாலுக்குள் சென்றனர்.
அவர்களை பார்த்த மித்ரா, ''என்னக்கா... வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை, மார்க்கெட்டா மாத்துறதுக்கு தீர்மானம் கொண்டு வர்றாங்களாமே...'' என, கேட்டாள்.
''அதையேன் கேக்குறே... கார்ப்பரேஷன் கமிஷனரை சில ஆபீசர்ஸ், தவறா வழிநடத்துறதா சொல்றாங்க. மார்க்கெட் யோசனையை கொடுத்தது, இன்ஜினியரிங் செக்சன்ல இருக்கற, ஆறெழுத்து அதிகாரியாம். பக்கத்துல குப்பை கிடங்கு இருக்கறதுனால, மார்க்கெட் வியாபாரிகளும் தயக்கம் காட்டுவாங்கன்னு சொல்றாங்க...''
''ஏன்னா... குப்பையில இருக்கற ஈ காய்கறியிலும், பழங்கள்லயும் உட்காரும்; குப்பை ஈக்கள் உட்கார்ந்த உணவு பொருட்கள், கேரளாவுக்கும் போறதால நோய் தொற்று பரவும்னு சொல்றாங்க. இதையெல்லாம் யோசிக்காம, தீர்மானம் கொண்டு வந்திருக்காங்க. ஆட்சிக்கு கெட்ட பேர் வருமேன்னு, ஆளுங்கட்சி நிர்வாகிங்க நினைக்கிறாங்க...''
கைமாறியது கோடி
''அதெல்லாம் இருக்கட்டும். சினிமா தியேட்டர் சேல்ஸ் டீலிங்குல '2சி' கைமாறி இருக்குதாமே...''
''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். அஞ்சு எழுத்து சினிமா தியேட்டர், சேல்ஸ்க்கு வந்திருக்கு. இந்த ஒரு சப்ஜெக்ட்டுல மட்டும் ஒரு போலீஸ் ஆபீசருக்கு '2சி' கைமாறி இருக்குதாம்...''
போலீசார் வருத்தம்
''அடக்கொடுமையே...'' என்ற மித்ரா, ''துணை கமிஷனர் ஸ்டாலினை எதுக்கு மாத்துனாங்க... அதிரடியா ஏகப்பட்ட நடவடிக்கை எடுத்துட்டு இருந்தாரே... 'கிளீன் சிட்டி'யா மாறிக்கிட்டு இருந்துச்சே...'' என கேட்டாள்.
''ஆமா... ஸ்டேஷன் வருமானத்துக்கு முட்டுக்கட்டை போட்டா, இன்ஸ்.,கள் சும்மா இருப்பாங்களா. மசாஜ் சென்டர்கள்ல ரெய்டு நடத்துனாரு; கஞ்சா, போதைப்பொருள் கும்பலை விரட்டிப் பிடிச்சாரு. வருமானம் குறைஞ்சதுனால, ரொம்ப வருத்தத்துல இருந்த இன்ஸ்.,கள் பலரும், இப்போ, குஷியாகிட்டாங்க... ஆனா, துணை கமிஷனர் ஸ்டாலினுக்கு கீழே வேலை பார்த்த போலீஸ்காரங்க ரொம்ப வருத்தப்படுறாங்களாம்...''
கோல்டு டீலிங்
''அதிருக்கட்டும். தங்கம் மோசடியில ரகசிய 'டீலிங்' நடக்குதாமே...''
''அதுவா... நகை பட்டறை அதிகமா இருக்கற ஏரியாவுல இருந்து, தங்கக்கட்டி கை மாத்துற பஞ்சாயத்து, ஸ்டேஷன் வரைக்கும் வருதாம். இதை போலீஸ்காரங்க 'பக்கா'வா பயன்படுத்திக்கிறாங்களாம். நகை வியாபாரத்துல இருக்கற, திரைமறைவு ரகசியங்களை தெரிஞ்சுக்கிட்டு, 'டீல்' பேசுறாங்களாம்,''
''இப்போ, ஒரு வழக்கு 'என்கொயரி'யில் இருக்கு. அதுல, 'ஒரு கிலோ, முன்னுாறு கிராம் தங்கத்தை கொடுத்துடுங்க; கேஸ் இல்லாம பார்த்துக்குறோம்; கம்ப்ளைன்ட் கொடுத்தவங்கள போலீஸ் பார்த்துக்கிடும்'னு சொல்லி, 'டீல்' நடந்துட்டு இருக்குதாம். ரூரல்ல டூட்டி பார்த்துட்டு இப்போ சிட்டி லிமிட்டுக்குள்ள வந்திருக்கிற இன்ஸ்., ஒருத்தரு, இந்த 'டீலிங்'குல முக்கியப் புள்ளியாம். மார்க்கெட் முழுக்க இதே பேச்சா இருக்கு,''
முடிவு கான்ட்ராக்டர் கையில்
'அம்மா' உணவகத்துக்குள் சென்ற மித்ரா, இரண்டு டீ வாங்கினாள்.
டீயை உறிஞ்சிய சித்ரா, ''கார்ப்பரேஷன் கோப்புகள், கரூர்க்காரர் ஆபீசுக்கு போயிட்டு வருதாமே... உண்மையா...'' என, கேட்டாள்.
''அப்படித்தான் சொல்றாங்க. எட்டெழுத்து கான்ட்ராக்டர் ஒருத்தரை பொறுப்பாளரா நியமிச்சிருக்காங்களாம். அவரு, மத்த கான்ட்ராக்டர்களுக்கு வேலையை பிரிச்சுக் கொடுக்கச் சொல்லி, மேலிடத்துல இருந்து உத்தரவாம். கட்சி பாகுபாடு பார்க்காம, சுமுகமாக பிரிச்சுக் கொடுத்துட்டு இருந்தாங்க,''
''இன்னொரு எட்டெழுத்து கான்ட்ராக்டரும், ஆளுங்கட்சியை சேர்ந்த சின்ன, சின்ன கான்ட்ராக்டர்களும் சேர்ந்து, 'ஒர்க்'குகளை அவுங்களே எடுத்துக்கிறாங்களாம். ஒரு கான்ட்ராக்டர் மட்டும் அஞ்சு கம்பெனி பெயர்ல, 'ஒர்க்' எடுக்குறாராம்.
மாமன்ற கூட்டத்துல வச்சிருக்கிற தீர்மானத்துல, உள்ள 'ஒர்க்'குகளையும், தொகையையும் கூட்டிப்பார்த்தா, பல கோடி ரூபாய் வரும்னு சொல்றாங்க... மேலிடத்துக்கே தெரியாம கான்ட்ராக்டர்கள் ராஜாங்கம் நடத்துறதா பேசிக்கிறாங்க...''
'கவனிச்சா' பட்டா
இருவரும் உணவகத்தில் இருந்து வெளியே வந்தனர். கார்ப்பரேஷன் ஜீப் அருகே நின்றிருந்த இருவர், பட்டா வாங்குவதற்கு தாலுகா ஆபீசுக்கு அலைய விடுவதாக பேசிக் கொண்டிருந்தனர்.
அதைக்கேட்ட மித்ரா, ''அக்கா... விண்ணப்பிச்ச, 15 நாள்ல பட்டா மாறுதல் கொடுப்போம்னு கலெக்டரும், டி.ஆர்.ஓ.,வும் கூட்டத்துல பேசுறாங்க; கீழுள்ள அதிகாரிகளுக்கும் 'அட்வைஸ்' பண்றாங்க. ஆனா, 'கவனிப்பு' செய்யலைன்னா, பட்டா மாறுதல் செஞ்சு கொடுக்கறதில்லை.
அதனால, கோவை வடக்கு, அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாவுல பட்டா கேட்டு விண்ணப்பிக்கிறவங்க எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கு. ஏதாச்சும் ஒரு காரணத்தைச் சொல்லி, தள்ளுபடி செய்றாங்களாம்.
மீண்டும் 'அப்ளை' செஞ்சா, 'நொண்டிச்சாக்கு' சொல்லி, நிராகரிக்கிறாங்க. சம்பந்தப்பட்ட ஆபீசர்களை நேர்ல பார்த்து, 'கவனிக்க' வேண்டியதை கவனிச்சா மட்டும்தான், பட்டா மாறுதல் கெடைக்குதாம்... கலெக்டரும், டி. ஆர்.ஓ.,வும் 'மீட்டிங்'ல சொல்றது, நடைமுறையில சாத்தியமில்லாம இருக்குதாம்,''
போலீசார் புலம்பல்
''பஸ் டிரைவர்கள் செய்ற 'அட்ரா சிட்டி'யை சகிக்க முடியாம, 'டிராபிக்' போலீஸ்காரங்க அல்லாடுறாங்களாமே...''
''ஆமாக்கா... உண்மைதான்! அவுங்க இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுறாங்க; சிக்னலை மதிக்கறதே இல்லை. ரெட் சிக்னல் விழுந்தாலும், போயிக்கிட்டே இருக்காங்க. பஸ் ஸ்டாப்புல நிறுத்துறதில்லை. நடுரோட்டுல நிறுத்தி, பயணிகளை இறக்கி விடுறாங்க. மொபைல் போன் பேசிட்டு, பஸ் ஓட்டிட்டு போறாங்க. டூவீலர்ல போறவங்க மேல கேஸ் போடுறாங்க; அபராதம் வசூலிக்கிறாங்க. ஆனா, பஸ் டிரைவர்கள் மேல எந்த நடவடிக்கையும், போலீஸ்காரங்களால எடுக்க முடியறதில்லையாம்,''
'தண்ணீ' காட்டும் ஆசாமி
''பாலியல் தொழில்ல பலே கில்லாடியான ஆசாமி, ஜாமின்ல வெளியே வந்து போலீஸ்காரங்களுக்கு குடைச்சல் கொடுக்குறாராமே...''
''அந்தக் கொடுமையை ஏன் கேக்குறே... முழுசா கேட்டா சிரிச்சிடுவே. இன்டர்நேசனல் லெவல்ல நெட்ஒர்க் வச்சுக்கிட்டு, வெளிநாட்டுல இருந்தும், வெளிமாநிலங்கள்ல இருந்தும், லேடீசை அழைச்சிட்டு வந்து, ஹோட்டல், ஸ்பா, மசாஜ் சென்டர்கள்ல, ஒருத்தன் பாலியல் தொழில் செஞ்சிட்டு இருந்திருக்கான். அவனை போலீஸ்காரங்க 'அரெஸ்ட்' பண்ணுனாங்க. வழக்கம்போல தப்பி ஓடும்போது, ரெண்டு கால்லயும் அடிபட்டு 'மாவுக்கட்டு' போட்டிருக்காங்க... இதையே காரணமா காண்பிச்சு, ஜாமின் வாங்கிட்டான்,''
''வெளியே வந்ததும், மறுபடியும் தொழிலை ஆரம்பிச்சிட்டான். வேவு பார்த்த போலீஸ்காரங்க, 'அரெஸ்ட்' செஞ்சு, கோர்ட்டுல நிறுத்துனாங்க. ஆனா, கால்ல அடிபட்டு இருக்கறதை காரணமா சொல்லி, மறுபடியும் ஜாமின்ல வெளியே வந்து, ஹாயா தொழிலை ஆரம்பிச்சிட்டானாம். இனிமே அவன் மேல எந்த 'ரூட்'டுல கேஸ் போடுறதுன்னு, யோசிச்சிட்டு இருக்காங்களாம்...''
தடபுடல் விருந்து
விக்டோரியா ஹாலுக்கு அருகே கவுன்சிலர்களுக்கு, மதிய உணவு வந்திறங்கியது. அதைப்பார்த்த மித்ரா, ''தடபுடலா விருந்து நடந்துச்சாமே...'' என, ''சப்ஜெக்ட்' மாறினாள்.
''அதுவா... ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடியப் போகுது. சூலுார் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்புல, நன்றி தெரிவிக்குற கூட்டம் நடத்தியிருக்காங்க. வார்டு, ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி சேர்மன், ஒன்றிய, ஊராட்சி அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள்னு பலரும் கலந்துக்கிட்டாங்க...''
''அதுல... பதவி காலம் மன நிறைவா இருந்ததா, பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் சொல்லியிருக்காங்க. ஆனா, சில ஊராட்சிகளை சேர்ந்தவங்களோ, கடைசி தலைவராகி விடுவோமோன்னு அச்சத்துல இருந்திருக்காங்க.
ஏன்னா... கார்ப்பரேஷன், முனிசிபாலிட்டி, டவுன் பஞ்சாயத்தோட சில ஊராட்சிகளை சேர்க்குறதுக்கு, 'டிஸ்கஷன்' போயிட்டு இருக்கு. சில ஊராட்சிகளை பேரூராட்சியா தரம் உயர்த்தப் போறாங்க. அப்படி செஞ்சா, ஏகப்பட்ட ஊராட்சி காணாமப் போயிடும்; பதவி கெடைக்காதேன்னு வருத்தத்துல இருக்காங்க...''
''அப்படியா...'' என்றபடி மித்ரா, விக்டோரியா ஹாலுக்குள் நுழைந்தாள்.
அவளை பின்தொடர்ந்து சென்ற சித்ரா, மன்ற நடவடிக்கையை குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.