/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
பள்ளி ஆய்வில் ஆபீஸர் குவிக்கிறாரு 'அள்ளி' பதிவு போட்ட 'லேடி சேர்மன்', ஆனாரு வில்லி
/
பள்ளி ஆய்வில் ஆபீஸர் குவிக்கிறாரு 'அள்ளி' பதிவு போட்ட 'லேடி சேர்மன்', ஆனாரு வில்லி
பள்ளி ஆய்வில் ஆபீஸர் குவிக்கிறாரு 'அள்ளி' பதிவு போட்ட 'லேடி சேர்மன்', ஆனாரு வில்லி
பள்ளி ஆய்வில் ஆபீஸர் குவிக்கிறாரு 'அள்ளி' பதிவு போட்ட 'லேடி சேர்மன்', ஆனாரு வில்லி
ADDED : அக் 27, 2025 10:19 PM

மழை துாறிக் கொண்டிருந்ததால், மருதமலைக்கு சித்ராவும், மித்ராவும் காரில் புறப்பட்டனர்.
இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு, காரை கிளப்பிய சித்ரா, ''ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, கொடிசியாவுல தடபுடலா பங்சன் நடத்துனாராமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''ஆமாக்கா, பேரனுக்கு காதுகுத்து விழாவை பிரமாண்டமா நடத்தியிருக்காரு. அவிநாசி ரோட்டுல ஆரம்பிச்சு, கொடிசியா வரைக்கும் ரோட்டுல ரெண்டு சைடும், வரிசையா கட்சி கொடி கட்டியிருந்தாங்க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மட்டும் 'கட்-அவுட்' வச்சிருந்தது, கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கு. இது, அவருக்கே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் போலிருக்கு; அதனால, பங்சனுக்கு வராம தவிர்த்திட்டாரு,''
''இதே மாதிரி, அவரோட பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி, சில பேரு போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அதுல, சி.எம்., டெபுடி சி.எம்., போட்டோக்களை சின்னதா போட்டுட்டு, செந்தில்பாலாஜி படத்தை பெருசா பிரிண்ட் பண்ணியிருந்தாங்க. இதெல்லாம் உள்குத்து அரசியலா இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க. இதுசம்பந்தமா அவரது ஆதரவாளர்கள் மூலமா விசாரிச்சிட்டு இருக்காங்க,''
துரோகம் செஞ்சது யாரு ''கார்ப்பரேஷன் ஜோன் சேர்மன் ஒருத்தர், சமூக வலைதளத்துல போட்ட பதிவு சலசலப்பை உருவாக்கியிருக்காமே...''
''அதுவா... கார்ப்பரேஷன் ஆபீசர் செயல்பா டுகளை, லேடி சேர் மன் ஒருத்தரு 'லீக்' பண்ணுனதா தகவல் பரவுச்சு. டென்ஷனான ஆபீசர், சம்பந்தப்பட்ட சேர்மனுக்கே போன் போட்டு விசாரிச்சிருக்காரு. இதுக்கப்புறம் அவரு போட்ட பதிவுல, 'இரண்டு பக்கமும் சேரக்கூடிய மனிதர்களுடன் ஜாக்கிரதையா பழகணும். சில துரோகங்களுக்கு பின்பே புரிகிறது, அவர்கள் நம்மிடம் பழகவில்லை; பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று. வாழ்க்கையில் ஜெயிக்க தந்திர வழிகளும் தேவைப்படுது. யாரையும் பாதிக்காத தந்திரமும் மகத்தான மந்திரமே'ன்னு, பதிவு போட்டிருக்காரு.
இதுல, துரோகம் செஞ்சது யாருன்னு, கவுன்சிலர்ஸ் மத்தியில பேசுபொருளாகி இருக்கு. இந்த விவகாரத்துல, ஆபீசர்கிட்ட 'போட்டுக் கொடுத்தது', ஒரு குழுவின் தலைவரா இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க,''
கவுன்சிலர் கணவர் 'அப்செட்' ''அதெல்லாம் இருக்கட்டும். ஆளும் தரப்பு கூட்டணி கட்சி லேடி கவுன்சிலரோட வீட்டுக்காரரு மன உளைச்சல்ல இருக்காராமே...''
''ஆமாக்கா, அந்தக் கொடுமையைக் கேட்டீங்கன்னா... சிரிப்பீங்க. அவுங்க வார்டுல 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்துறதுக்கு, இடம் ஏற்பாடு செஞ்சு தாங்கன்னு ஆபீசர்ஸ் தரப்புல சொல்லியிருக்காங்க. ஆர்வக்கோளாறா... கல்யாண மண்டபத்துல நடத்த ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்காரு. கேம்ப் நடந்து ஒரு மாசத்துக்கு மேலாச்சு; வாடகை கொடுக்கலை,''
''மண்டபத்துக்காரங்க, கவுன்சிலர் வீட்டுக்காருக்கு போன் மேல போன் போட்டு, வாடகை கேட்டு நச்சரிக்கிறாங்க. கார்ப்பரேஷன் அலுவலர்கள்கிட்ட சொன்னா, 'மண்டபம் வாடகை கொடுக்கறதுக்கு எந்த ஆப்சனும் இல்லை'ன்னு கூலா சொல்லிட்டு நகர்ந்துட்டாங்களாம். இதென்னடா வம்பாப் போச்சு... கேம்ப் நடத்த மண்டபம் பிடிச்சுக் கொடுத்தா, நம்மளையே சோதிச்சுப் பார்க்குறாங்களேன்னு, கவுன்சிலர் வீட்டுக்காரரு 'அப்செட்'டுல இருக்காரு,'' என்றாள் மித்ரா.
விழுந்தது டோஸ் ''அது கிடக்கட்டும், மகளிர் உரிமைத் தொகை அப்ளிகேசன் பரிசீலனை செய்றது சம்பந்தமா, டோஸ் விழுந்துச்சுன்னு சொன்னாங்களே... உண்மையா...'' என, கிளறினாள்.
''ஆமா, மித்து! இப்போ வாங்கியிருக்கிற அப்ளிகேஷன்களை, 'என்கொயரி' செஞ்சு, டிசம்பர் செகண்ட் வீக்குல இருந்து உரிமைத் தொகை கொடுக்கறதுக்கு, பிளான் போட்டிருக்காங்க. இதுவரைக்கும் வந்த அப்ளிகேஷன் நிலவரங்களை கலெக்ட்டரேட் ஆபீசர் இன்ஸ்பெக்சன் செஞ்சாரு. கார்ப்பரேஷன் தரப்புல 50 சதவீத அப்ளிகேசனுக்கு, அப்ரூவல் கொடுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி ஆகிட்டாங்களாம்.
'வீடு வீடா போயி கரெக்டா ஆய்வு செஞ்சீங்களா... 20 சதவீதம் தானே பரிந்துரை செஞ்சிருக்கணும். 50 சதவீதம் எப்படி வந்துச்சுன்னு, லெப்ட் அண்டு ரைட் வாங்கியிருக்காங்க. அதனால, நம்ம டிஸ்ட்ரிக்ட்டுல எத்தனை பேருக்கு உரிமைத் தொகை கெடைக்கும்னு தெரியலை. ஏகப்பட்ட அப்ளிகேஷனை ரிஜக்ட் பண்றதுக்கு வாய்ப்பிருக்குன்னு பேசிக்கிறாங்க,'' என்றபடி, வடவள்ளி அருகே பேக்கரி முன், காரை நிறுத்தினாள் சித்ரா.
ஆபீசரின் கலெக்சன் ''அதெல்லாம் சரி... எஜுகேசன் ஆபீசர் ஒருத்தரு, ஸ்கூல்களுக்கு இன்ஸ்பெக்சன் போறப்போ இஷ்டத்துக்கு கலெக்சன் பண்றாராமே....'' என்றபடி, கடைக்குள் சென்ற மித்ரா, இரண்டு காபி ஆர்டர் கொடுத்தாள்.
''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். கவர்மென்ட் எய்டடு ஸ்கூல்களுக்கு போறப்போ, ஆவணங்கள்ல கையெழுத்து போடுறதுக்கு, ஐயாயிரத்துல இருந்து பத்தாயிரம் வரைக்கும் வாங்குறதா ஹெட் மாஸ்டர்ஸ் சொல்றாங்க. அவர் கூட வர்ற, அஞ்செழுத்து ஊழியரோட 'அட்ராசிட்டி' தாங்க முடியலையாம். டீசல் செலவுக்குன்னு ஆயிரம் ரூபா, தனியா 'கப்பம்' கட்டணும்னு கறாரா சொல்றாராம். சூலுார் யூனியன்ல ரெண்டு ஸ்கூல், அன்னுார் யூனியன்ல ரெண்டு ஸ்கூல்ல தலா பத்தாயிரம் ரூபா வரை, கலெக்சன் பண்ணியிருக்காங்க,''
''இதே மாதிரி, மேட்டுப்பாளையம், ராமநாதபுரம் ஏரியாவுல இருக்கற ஸ்கூல்ல காலியா இருந்த டீச்சர்ஸ் போஸ்ட்டிங்கை நிரப்புனதுக்கு, அப்ரூவல் கொடுக்கறதுக்கு ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கியிருக்காங்களாம். இதுக்கெல்லாம் மூளையா செயல்பட்டது அஞ்செழுத்து ஊழியருன்னு ஸ்கூல் தரப்புல சொல்றாங்க,'' என்ற சித்ரா, டேபிளுக்கு வந்த காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள்.
மாறவே இல்லை ''நம்மூர்ல பி.டி.ஓ. உத்தரவுக்கு மரியாதையே இல்லாமப் போச்சுன்னு, கலெக்ட்ரேட்டுல பேசிக்கிறாங்களே... என்னாவாம்...''
''மித்து, சூலுார் வட்டாரத்துல அரசூர், கணியூருன்னு சில ஊராட்சி செயலர்களை 'டிரான்ஸ்பர்' செஞ்சு பி.டி.ஓ. உத்தரவு போட்டிருக்காரு. அவுங்க புது ஊராட்சிக்கு போகாம இன்னமும் பழைய இடத்துலேயே, ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. ஆளுங்கட்சி செல்வாக்குல டிரான்ஸ்பர் ஆர்டரையே நிறுத்தி வச்சிருக்காங்கன்னு பேசிக்கிறாங்க,'' என்ற சித்ரா, ''நம்மூர்ல போலீஸ் கமிஷனர் பெயரையே லேடி இன்ஸ். ஒருத்தரு தப்பா பயன்படுத்தி மாட்டிக்கிட்டாராமே...'' என சப்ஜெக்ட் மாறினாள்.
சிக்கிய லேடி இன்ஸ். ''ஆமாக்கா, உண்மைதான்! கொஞ்ச நாளைக்கு முன்னாடி கவுண்டம்பாளையம் ஏரியாவுல புட் பால் மேட்ச் நடந்துச்சு. ரெண்டு தரப்பும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டாங்க. அதுல, ஒருத்தருக்கு காயம் பலமா பட்டதனால, போலீஸ்ல கம்ப்ளைன்ட் ஆச்சு. என்கொயரியில வாலிபரை அடிச்சவருக்கும், ஆளும்கட்சிக்கும் நெருக்கம் இருக்கறது தெரிஞ்சதும், இந்த சம்பவத்தை லேடி இன்ஸ். மூடி மறைக்க பார்த்திருக்காங்க,''
''எப்படியோ 'லீக்'காகி, ரிப்போர்ட்டர்ஸ் விசாரிச்சப்போ, 'வெளியே சொல்லக் கூடாதுன்னு கமிஷனர் சொல்லியிருக்கிறாரு'ன்னு, ஆபீசர் மேல பழி போட்டுட்டு, எஸ்கேப் ஆகிட்டாரு. ரிப்போர்ட்டர்ஸ், கமிஷனரை கான்டாக்ட் பண்ணி விசாரிக்க, 'அப்படி ஏதும் சொல்லலையே...' என்ற அவர், தன்னோட பேரை தப்பா பயன்படுத்தி இருக்கறது சம்பந்தமா, என்கொயரி செய்றதுக்கு தனிக்குழு ஏற்படுத்தியிருக்காரு. அந்த லேடி இன்ஸ். மேல, ஆக்சன் பாயுமான்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க,''
வெளியே போகுது முட்டை ''அதெல்லாம் இருக்கட்டும். தொண்டாமுத்துார்ல இருக்கற அங்கன்வாடிகள்ல திருட்டுத்தனம் நடக்குறதா சொல்றாங்களே...'' என்ற சித்ரா, பேக்கரி கேஷியரிடம் பணம் கொடுத்து விட்டு, காரை கிளப்பினாள்.
''யெஸ். நீங்க கேட்கறது கரெக்ட்டுதான்! அந்த வட்டாரத்துல 60 அங்கன்வாடி இருக்குது. பெரும்பாலான மையங்கள்ல முட்டையையும், சத்து மாவையும் குழந்தைகளுக்கு கொடுக்காம, வித்துடுறதா பப்ளிக் சொல்றாங்க. இதே மாதிரி, தனியார் தொண்டு நிறுவனம் ஸ்பான்சரா கொடுக்கற பொருட்களையும் வித்திடுறாங்களாம்.
கண்காணிக்க வேண்டிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆபீசர்ஸ், கண்டும் காணாம இருக்கறதா பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா, ''ஜி.எச்.ல இருக்கற கான்ட்ராக்ட் ஸ்டாப்களுக்கு, ஏகப்பட்ட பிரச்னை இருக்கு. ஜி.எச். நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லையாமே...'' என, 'ரூட்' மாறினாள்.
''ஆமா, மித்து! கான்ட்ராக்ட் ஸ்டாப்களா 510 பேரு ஒர்க் பண்றாங்க. அவுங்களுக்கு பி.எப். பணம் பிடிக்கிறாங்க. ஆனா, எவ்ளோ தொகை சேர்ந்திருக்குன்னு அவுங்களுக்கே தெரியறதில்லை. அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியறதில்லை. பி.எப். பதிவு எண் கூட பலருக்கும் தெரியறதில்லை. ஜி.எச். நிர்வாகம் தலையிட்டு, பி.எப். பிரச்னையை தீர்த்து வைக்கணும்னு, கான்ட்ராக்ட் ஸ்டாப்ஸ் எதிர்பார்க்குறாங்க,'' என்ற சித்ரா, மருதமலை நோக்கி, காரை ஓட்ட ஆரம்பித்தாள்.

