தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ த.வெ.க. – தி.மு.க. – அ.தி.மு.க. ‘கூட்டணி’

த.வெ.க. – தி.மு.க. – அ.தி.மு.க. ‘கூட்டணி’

த.வெ.க. – தி.மு.க. – அ.தி.மு.க. ‘கூட்டணி’


ADDED : ஆக 17, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 05:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரா, காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். மித்ரா, கையில் பையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

‘‘அக்கா... விஜய் முதல்வராகி நுாறு நாள் ஆனதைக் கொண்டாடும் விதமா, த.வெ.க. பொதுக்கூட்டம் யூனியன் மில் ரோட்டுல நடந்துச்சு. 500 மீட்டர் துாரம் ரோட்டையே அடைச்சிட்டாங்க...’’

‘‘ரோடு முழுக்க மூடிட்டா, அது பெரும் தப்பில்லயா மித்து’’

‘‘அதுதான்க்கா... மாற்று ஏற்பாடும் பெருசா செய்யலையாம். மூணு மணி நேரம் மக்கள் தவிச்சிருக்காங்க. கடைசில அந்த வார்டு தி.மு.க.வினர் வந்து போலீஸ்கிட்ட வாக்குவாதம் பண்ணின பிறகுதான் பேரிகார்டை மாத்தி, கார் போக வர வழிவிட்டிருக்காங்க...

‘‘அக்கா... அவிநாசில இன்னொரு அரசியல் கூட்டணிக்கான வேலை ரொம்ப சூடா நடக்குதாம்...’’

‘‘புதிர் போடுறியா, மித்து?’’

‘‘ஆட்சி மாறினாலும் சில தி.மு.க.வினருக்கு பார் மேல இருக்குற ஆசை மட்டும் மாறலையாம். அதனால, தனியார் பார்கள், ‘11 டூ 11’ பார்கள், டாஸ்மாக் பார்கள்னு வர்றதையெல்லாம் த.வெ.க. நிர்வாகிகளோட சேர்ந்து எடுத்து நடத்துறதுக்கு பேச்சு நடக்குதாம்...’’

‘‘அடடா... அரசியல் கூட்டணி வேற... பார் கூட்டணி வேற...’’

‘‘இதுல இன்னொரு பியூட்டி, ஒரு அ.தி.மு.க. பிரமுகர்தான் தி.மு.க. – த.வெ.க. ரெண்டு தரப்பையும் இணைச்சு விட்டாராம். ஒவ்வொருத்தருக்கும் மெகா டீலிங் பேசி, பார் யாருக்கு, எங்கேன்னு டெண்டர் வர்றதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டாங்களாம்னு பேசிக்கிறாங்க...’’

இருவரிடமும் புன்முறுவல்.

‘‘‘அக்கா... இன்னொரு பக்கம் அரசு கார்லயும் ஒரு வித்தியாசமான கணக்கு ஓடுதாம்...’’

‘‘என்ன கணக்கு மித்து?’’

‘‘கமலமான அந்த அமைச்சருக்கு, வருவாய்த்துறை சார்புல அரசு கார் கொடுத்திருக்காங்க. ஆனா, அந்தக் காரை ஓட்டுறது வேளாண்துறையில வேலை பார்க்கிற டிரைவராம்...’’

‘‘அடடா... கார் வருவாய்த்துறையோடது... டிரைவர் வேளாண்துறையோடது... அமைச்சரோ இன்னொரு துறைக்கு... மூணு துறையும் எப்படி சேர்ந்துச்சு’’

‘‘அதுதான்க்கா... அவரு முந்தைய ஆட்சில கயலான அமைச்சருக்குக் கார் ஓட்டினவராம். ஆட்சி மாறினாலும் அமைச்சரோட கார் டிரைவர்னு சொல்லிக்கிட்டு அதே வேலையை கெட்டியா பிடிச்சுக்கிட்டாராம்...

‘‘அக்கா... விஜய் கட்சில மாஜி எம்.எல்.ஏ. தாராபுரம் சத்தியபாமாவுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்திருக்காங்கல்ல... அதுக்குப் பின்னாடியும் ஒரு பெரிய கதை ஓடுதாம்...

‘‘தனித்தொகுதியில நிறுத்தப்பட்ட தனக்கு அ.தி.மு.க.வுல உரிய மரியாதை தரல... மனசாட்சிக்கு விரோதமா முடிவெடுக்க வற்புறுத்தினாங்க... அதனாலதான் பதவியை ராஜினாமா செய்தேன்னு சத்தியபாமா நிர்வாகிகள் கூட்டத்துல சொல்லியிருக்காராம்...’’

‘‘அதுக்கப்புறம் பணத்துக்காக பதவியை விட்டுட்டார்னு தன்மேல குற்றச்சாட்டு வந்ததையும் சொல்லியிருக்காராமே?’’

‘‘ஆமாக்கா... தாராபுரம் மக்களுக்கு நல்லது செய்யணும்னுதான் விஜய் கட்சியில சேர்ந்தேன்னும், நடந்த எல்லாத்தையும் முதல்வர் விஜய்கிட்ட நேரடியா சொல்லிட்டேன்னும் பேசியிருக்காராம்’’

தனக்குத் தெரிந்ததை மித்ரா பகிர்ந்தாள்.

அ.தி.மு.க. சுவாரசியம்

‘‘அக்கா... அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துலயும் ஒரு சின்ன சுவாரசியம் நடந்திருக்காம்...’’

‘‘ஆர்ப்பாட்டம்னா சத்தம் இருக்கும்... அதுல என்ன புதுசு?’’

‘‘புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி பேச ஆரம்பிச்சாராம். ஒவ்வொரு தொகுதி, ஒன்றியம், பேரூராட்சி, கட்சி, சார்பு அணி நிர்வாகிகள்னு எல்லாரோட பேரையும் ஒவ்வொண்ணா சொல்லி ஏழு நிமிஷம் பேசிட்டாராம்...’’

‘‘ஏழு நிமிஷமா... ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவங்க பெயர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஆர்ப்பாட்டமே முடிஞ்சிருக்குமே’’

‘‘அதனாலதான் மாஜி அமைச்சர் கோகுல இந்திராவே, ‘அண்ணா... சீக்கிரம் பேசி முடியுங்க’ன்னு சொல்ற அளவுக்கு போயிருச்சாம்.

‘‘சித்ராக்கா... முன்னாள் தி.மு.க. அமைச்சர் சாமிநாதனும் இப்போ கொஞ்சம் களத்துல இறங்கிட்டாராம்...’’

‘‘எப்படி?’’

‘‘காங்கயம், சென்னிமலை பக்கத்துல முந்தைய ஆட்சியில நிதி ஒதுக்கி தொடங்கப்பட்ட வேலைகளை கட்சி நிர்வாகிகளோட போய் அடிக்கடி பார்த்துட்டு வர்றாராம். அதையெல்லாம் சமூக வலைதளத்துலயும் போட்றாராம். கட்சி வாட்ஸ்ஆப் குழுக்கள்லயும் பகிர்றாங்களாம்...’’

‘‘பழைய ஆட்சில தொடங்கின வேலைன்னாலும்... பழைய அமைச்சர் இப்பவும் பார்வையிடுறாரே’’

‘‘கட்சியும், நிர்வாகிகளும் இன்னும் ஆக்டிவா இருக்காங்கன்னு காட்டுறதுக்காகத்தான் இந்த ஐடியான்னு பேசிக்கிறாங்க. கட்சி தலைமை சொல்லியிருக்கலாம்னும் ஒரு பேச்சு இருக்கு...’’

‘‘மித்து... வேலை எப்போ தொடங்குச்சுன்னு மக்கள் மறந்தாலும் பரவால்ல... யார் போய் பார்த்தாங்கன்னு மட்டும் நினைவுல இருக்கணும்கறது, அரசியல் கணக்கு’’

‘குறைந்த’ சுதந்திரம்

‘‘அக்கா... சுதந்திர தின விழாவுல சிலருக்கு ‘சுதந்திரம்’ கொஞ்சம் குறைஞ்சிடுச்சாம்...’’

‘‘என்ன நடந்துச்சு மித்து?’’

‘‘வருவாய்த்துறை சார்பில நடந்த விழாவுல 250 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்திருக்காங்க. அதோட அலுவலர்கள், ஊழியர்களுக்குன்னு தனியா ஒரு விழாவும் நடத்தி பாராட்டு சான்றிதழ் கொடுத்திருக்காங்க...

‘‘250 பேரையும் ஒன்றரை மணி நேரம் கால்கடுக்க நின்னுதான் சான்றிதழ் வாங்கியிருக்காங்க. தனியார் பள்ளி பிள்ளைகள் நல்லா பயிற்சி எடுத்துட்டு வந்திருந்தாங்களாம். ஆனா, பாடலை பாதியில நிறுத்தி, ஆட்டத்தையும் பாதியில நிறுத்தி அனுப்பிட்டாங்களாம்...’’

‘‘பாவம் பிள்ளைங்க... விழாவுக்காக பயிற்சி எடுத்து வந்து, விழாவையே முழுசா பண்ண முடியாம போயிருக்கே!’’

‘‘அதுகுறித்து ஆசிரியர்கள் கேட்டப்போ, ‘சத்தம் போடாதீங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம். வெயில் அதிகமா இருந்ததால ஒரு பள்ளியோட நிகழ்ச்சியையே கடைசில ரத்து பண்ணிட்டாங்களாம்...’’

‘‘மித்து... குழந்தைங்க சத்தம் போட்டா திட்டலாம்... ஆனா அவங்க மனசுக்குள்ள இருந்த ஏக்கத்துக்கு என்ன பதில்?’’

‘‘அக்கா... கேட்ல போலீஸ் கெடுபிடியும் அதிகமா இருந்ததால பொதுமக்கள் வருகை ரொம்பக் குறைஞ்சிருச்சாம். சின்ன பசங்க வந்தாலும் துரத்திட்டாங்களாம். டூவீலர்களை 500 மீட்டர் முன்னாடியே நிறுத்திட்டாங்களாம்...

‘‘போலீஸ்காரங்ககிட்டயும் ஒரு மனசை நெகிழ வைக்கிற செய்தி இருக்கு...’’

‘‘அட... அதையும் சொல்லு’’

‘‘அவிநாசிபாளையத்துல நைட் ரோந்துல இருந்த ரெண்டு போலீசார் பைக்ல வந்தப்ப விபத்துல சிக்கீட்டாங்க. இதில ஒருத்தர் சீரியஸ் கண்டிஷன்ல இருந்தாராம். கையில காசு இல்லாத நிலைல, சக போலீஸ்காரங்க எல்லாரும் சேர்ந்து எட்டு லட்சம் ரூபாய் திரட்டி கொடுத்து, அவரைக் காப்பாத்தியிருக்காங்க...’’

‘‘யூனிபார்முக்கு உள்ளேயும் ஒரு நல்ல மனசு இருக்கு மித்து... அது வெளிச்சத்துக்கு வரணும்னு அவசியமில்லை. ஒருத்தரோட உசுரைக் காப்பாத்தினதே பெரிய விஷயம்.

‘‘குன்னத்துார் ஸ்டேஷன்ல கான்ஸ்டபிளா வேலை பார்க்குற ஒருத்தரு, அவிநாசி போலீஸ் குவார்ட்டர்ஸ்ல குடும்பத்தோட தங்கியிருக்காராம். அவரோட பதினெட்டு வயசு கூட நிரம்பாத பையன், குடும்பத்தோட சொந்த ஸ்விப்ட் காரை தினமும் ஓட்டிக்கிட்டு போறதை பொதுமக்கள் பலமுறை பார்த்திருக்காங்களாம்...’’

‘‘பொதுமக்கள் போலீஸ்கிட்ட பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லையாம். சுதந்திர தினத்தன்னைக்கு மங்கலம் ரோட்டுல அந்தப் பையன் அவங்க அம்மாவை பக்கத்துல உட்கார வச்சுட்டு படுவேகமா காரை ஓட்டிட்டு வந்திருக்காராம்...’’

‘‘ஏற்கனவே இரண்டு தடவை பொதுமக்கள் பிடிச்சு எச்சரிக்கை பண்ணியிருக்காங்களாமே?’’

‘‘ஆமாக்கா... மறுபடியும் ஒருத்தர் காரை துரத்திப் பிடிச்சுக் கேட்டப்போ, அந்தப் பையனோட அம்மா ஏதேதோ காரணம் சொல்லியிருக்காங்க. அதனாலதான், ‘பொதுமக்களுக்கு ஒரு சட்டம்... போலீஸ்காரங்களுக்கு ஒரு சட்டமா?’ன்னு கேட்கிறாங்க...’’

ஆதங்கப்பட்டாள் மித்ரா.

குட்கா அமோகம்

‘‘நல்லுார் ஈஸ்வரன் கோவில் பக்கத்துல நெடுஞ்சாலைத்துறை காலியிடத்துல குடில் மாதிரி போட்டு சிலர் பீடா வியாபாரம் பண்றாங்களாம்...’’

‘‘பீடா விக்கிறதுல என்ன பிரச்னை?’’

‘‘பீடாவைவிட குட்காதான் காலைல இருந்து அதிகமா விக்குதாம். வடமாநிலத்தைச் சேர்ந்தவங்கதான் நிறைய வாங்குறாங்களாம். கஞ்சாவும் விக்கிறதா பேசிக்கிறாங்க. அதுவும் போலீஸ் ஆதரவோட நடக்குதுன்னு சொல்றாங்க...’’

‘‘அக்கா... மத்திய பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பெருந்தொழுவுக்கு நொச்சிபாளையம், அல்லாளபுரம் வழியா போக வேண்டிய மினி பஸ், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துட்டு சின்னக்கரை, அருள்புரம் வழியா போயிருக்காம்...’’

‘‘டிக்கெட் ஒரு வழி... பஸ் இன்னொரு வழியா?’’

‘‘அதனால பயணிகள் டிரைவர், கண்டக்டர்கிட்ட தகராறு பண்ணி பஸ்சை நிறுத்திட்டாங்க. பல்லடம் போலீசார் வந்து சமாதானம் பண்ணியிருக்காங்க. ஆனா, இவ்வளவு நடந்தும் வட்டார போக்குவரத்துத்துறை சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டருக்கு எச்சரிக்கையோ, அபராதமோ விதிக்கலையாம்...

‘ஆட்கொண்ட’ அதிகாரம்

‘‘அக்கா... கலெக்டர் அலுவலகத்துக்கு பக்கத்துல இருக்குற அரசு அலுவலர் குடியிருப்புலயும் ஒரு கணக்கு பேசப்படுதாம்...’’

‘‘என்ன கணக்கு?’’

‘‘அங்க பதவிக்கேத்த மாதிரி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருக்காம். ஆனா, துணை கலெக்டர் அந்தஸ்துக்கு இருக்குற குடியிருப்புல சில தாசில்தார் அந்தஸ்துல இருக்குற அலுவலர்கள் வசிக்கிறாங்களாம்...’’

‘‘அவங்களுக்கு எப்படி அந்த வீடு கிடைச்சுது?’’

‘‘கலெக்டர் அலுவலகத்துல முக்கியமான பிரிவுகள்ல வேலை பார்க்கிறவங்கன்னு சொல்லி, தங்களோட அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் குடியிருப்புகளை வாங்கிட்டதாக பேச்சு ஓடுது...’’

‘‘மித்து... அரசு வீடுன்னா விதிப்படி யாருக்கு கிடைக்கணுமோ அவங்களுக்குத்தான் கிடைக்கணும். அதிகாரம் இருக்கிறதால இடம் மாறக்கூடாது’’

‘‘ஆமாக்கா... அரசு குடியிருப்புல ‘யார் தங்கணும்’ன்னு விதி முடிவு செய்யணும்... ‘யாருக்கு செல்வாக்கு’ன்னு முடிவு செய்யக்கூடாது’’

காய்கறிகளை நறுக்கி முடித்தாள் சித்ரா; மித்ராவுக்கு டீ போட சமையலறைக்குள் நுழைந்தாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us