மாஜிக்கு பதவியால் கடுப்பு:தாசில்தாரிடம் கார் பறிப்பு
மாஜிக்கு பதவியால் கடுப்பு:தாசில்தாரிடம் கார் பறிப்பு
UPDATED : ஆக 10, 2026 04:56 PM
ADDED : ஆக 10, 2026 04:51 PM

மாலை நேரம்.. அம்மன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, பிரகாரத்தைச் சுற்றி மெதுவாக நடந்தாள் சித்ரா. கையில் பூக்கூடையோடு வந்த மித்ரா, சித்ராவைப் பார்த்ததும் புன்னகைத்தபடி பேச்சை ஆரம்பித்தாள்.
''அக்கா... விஜய் கட்சில முன்னாள் எம்.எல்.ஏ., சத்தியபாமாவுக்கு திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துட்டாங்களே...
''அதே பதவியை முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கமும் எதிர்பார்த்தாரு... கிடைக்காததால அப்செட்ல இருக்காராம்...''
''ஆமா மித்து... ஒருத்தருக்குப் பதவி கிடைச்சா, இன்னொருத்தரை 'கூல்' பண்ற வேலையையும் சேர்த்து கட்சித்தலைமை பார்க்க வேண்டியிருக்கு...''
''அதுமட்டுமில்லக்கா... திருப்பூர் கிழக்கு மாவட்டத்தை ரெண்டா பிரிச்சதால, மாவட்ட செயலாளரோட ஆதிக்கம் கொஞ்சம் குறையும்னு கட்சிக்குள்ளயே 'டாக்' ஓடுதாம்...''
''மித்து... ஆக மொத்தம் சத்தியபாமாவா செயலாளரா போட்டதில எதிர்த்தரப்பு கடுப்புல இருக்குன்னு சொல்ல வர்ற... மாவட்டத்தை பிரிக்கிறது ஈஸி... ஆனா, மனசுல விழுந்த விரிசலை ஒட்ட வைக்கிறது கஷ்டம்...''
பிளக்கிறார் 'தோழர்'
''அக்கா... ஆளுங்கட்சியோட கூட்டணில இருந்தாலும், திருப்பூரைச் சேர்ந்த 'தோழர்' கட்சியோட வி.ஐ.பி. மக்கள் பிரதிநிதி மட்டும் சமூக வலைதளத்துல ஆளுங்கட்சியினரோட நடவடிக்கைகளைப் பொளந்து கட்றாரே.
''பட்ஜெட் வாசிப்பைப் பார்த்துட்டு, 'முதல்வரே... நிதியமைச்சரிடம் இருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்'ன்னு பதிவு போட்ருக்காரு... பட்ஜெட்டையும் 'இலவு காத்த கிளி'ன்னு கலாய்ச்சிருக்காரு... இதைப் பார்த்த உள்ளூர் ஆளுங்கட்சிக்காரங்கதான் புகைஞ்சிட்டு இருக்காங்களாம்...''
''மித்து... மேடைல கூட்டணி இருக்கலாம்... கமென்ட் செக் ஷன்ல ஒவ்வொருத்தரும் தனிக்கட்சிதான்...''
''அக்கா... திருப்பூருக்கு அமைச்சர் மதன் ராஜா வர்ற வழில, கேமராவுக்கு கொஞ்சம் அதிக நேரம் ஒதுக்கிட்டாராமே...''
''அட... என்னாச்சு'
''பூண்டி பக்கம் ஆய்வு முடிச்சுட்டு வந்தவரை, கட்சிக்காரங்க போட்டோ, வீடியோவுக்காக நிறுத்தீட்டாங்களாம்... அதனால மாவட்ட தொழில் மைய நிகழ்ச்சிக்கு வர கொஞ்சம் தாமதமாச்சாம்... காத்திருந்தவங்க, 'அமைச்சர் வரும் முன்னே கேமராதான் மொதல்ல வருமோ'ன்னு நக்கலடிச்சாங்களாம்...''
''மித்து... பிளாஷ் அடிக்குற கேமராவைவிட, நேரம் காட்ற கடிகாரம்தான் ரொம்ப நேர்மையானதுன்னு அமைச்சருக்குத் தெரியணும்''
''அக்கா... திருப்பூர் மாநகர் அ.தி.மு.க.வுல மாவட்ட செயலாளர் பதவியால சலசலப்பு இன்னும் ஓடிக்கிட்டே இருக்காமே...''
''அரசியல்ல பதவின்னா... சலசலப்பும் இலவச இணைப்புதானே மித்து...''
''வடக்கு தொகுதியைச் சேர்ந்த வேல்குமார் சாமிநாதனுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துட்டாங்க... இதனால தெற்கு தொகுதியைச் சேர்ந்த லோகு தரப்பு ஆதங்கத்துல இருக்காம். 'பல்லடம், திருப்பூர் தெற்கை தனி மாவட்டமா பிரிச்சாத்தான் சமநிலை வரும்'ன்னு பேசிக்கிறாங்களாம்...''
''மித்து... அரசியல்ல எல்லாருக்கும் பதவி கிடைக்குமா... அதுக்கும் ஒரு 'லக்' வேணும்''
கார்கே படம்?
''அக்கா... திருப்பூர் மாநகர் காங்கிரஸ் ஆபீஸ்ல அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே படமே இல்லையாம். கூட்டத்துல கட்சிக்காரங்க கேள்வி எழுப்புனப்ப, 'சீக்கிரம் வச்சிடலாம்'ன்னு நிர்வாகிகள் சமாதானம் பேசுனாங்களாம்...''
''மித்து... வீட்டுத் தலைவரோட போட்டோ இல்லாத ஹால்ல... விருந்தாளிதான் மொதல்ல கேள்வி கேப்பாரு...''
''அக்கா... பொல்லிக்காளிபாளையம், அக்கணம்பாளையம் பகுதில வீடு கட்றப்ப துண்டிச்ச இலவச மின் இணைப்பை திருப்பிக் கேட்கறவங்களுக்கு, சிலருக்கு உடனே கொடுத்துட்டாங்களாம்... இன்னும் சிலர்ட்ட, 'புதுசா விண்ணப்பம் போடுங்க'ன்னு சொல்லீருக்காங்களாம்... 'கவனிச்சா' வெளிச்சம் சீக்கிரம் வந்துருது... நாங்க இன்னும் இருட்டுலதான் இருக்கோம்னு பலரும் புலம்புறாங்களாம்...''
கோவிலில் இருந்து வெளியே வந்த மித்ராவும், சித்ராவும் தெருமுனை டீக்கடைக்குச் சென்றனர்; டீ வர தாமதமானது; ஆனால் மித்ராவிடம் இருந்து செய்திகள் மட்டும் சூடாக வந்துகொண்டே இருந்தன.
அச்சம் இல்லை
''அக்கா... திருப்பூர் மாநகராட்சில ரெண்டு பேரை கைது பண்ணியும், சில டேபிள்ல மட்டும் பழைய ஸ்பீடே ஓடுதாமே...''
''ஏன் மித்து... இன்னும் கோப்புகளுக்கு நடக்க மனசு வரலையா...?'
''அதுதான்க்கா... சில கோப்புகளுக்கு 'கவனிப்பு' இருந்தா எக்ஸ்பிரஸ்... இல்லேன்னா மேஜைல துாசி படிஞ்சு கிடக்குதுன்னு கான்ட்ராக்டர்ஸ் புலம்புறாங்களாம்...''
''மித்து... கோப்புக்குச் சக்கரம் இல்ல... ஆனா சிலருக்கு மட்டும் 'கிரீஸ்' போட்டாதான் ஓடுதோ என்னவோ...!''
''அக்கா... தாசில்தாருக்கு வந்த புதுக்காரு, அவரை விட்டு பறந்துருச்சாம்...''
''ஏன்... காருக்கு புரமோஷனா?'
''பல்லடம் 'சமூக' தாசில்தாருக்கு வந்த புது பொலிரோவை, மேலதிகாரி எடுத்துட்டு, பழைய காரை அவர்ட்ட கொடுத்துட்டாராம்னு வருவாய்த்துறைல 'டாக்' ஓடுது...''
''மித்து... காரு புதுசா இருந்தா போதாது... யாருக்காக ஓடுதுன்னு லாக்புக் சொன்னாத்தான் கணக்கு சரியா இருக்கும்...''
கலெக்டர் கேள்வி
''அக்கா... அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்ஸ்க்கு கலெக்டர் ஒரு கேள்வியாலே டென்ஷன் கொடுத்துட்டாராமே...''
''என்ன கேட்டாரு மித்து...?'
''டாக்டர் குடியிருப்புல யாரெல்லாம் தங்குறீங்கன்னு கேட்டதுக்கு, ஆளுக்கொரு பதில் வந்துச்சாம்... 'அடுத்த ஆய்வுல பார்க்கிறேன்...'ன்னு சொல்லிட்டுப் போனதால, வெளியே தங்குறவங்க கொஞ்சம் கலக்கத்துல இருக்காங்களாம்...''
''அக்கா... ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் பாலம் திறப்பு விழாவுல, பாலத்தைவிட மேடையைச் சுத்தித்தான் கூட்டம் அதிகம்க்கா.
''மூணு திரை வச்சும், 'கொஞ்சம் நகருங்க...'ன்னு மைக்ல அலற அலறச் சொன்னாலும், நகரலையாம்.
''அதிகாரிகளோ பந்தலுக்கு வெளியே நின்னுக்கிட்டே நிகழ்ச்சியைப் பார்த்தாங்களாம்...''
''மித்து... பாலம் திறந்த நாளே, 'டிராபிக் ஜாம்' வந்துடுச்சோ!''
நகை 'கணக்கு'
''அக்கா... 'தாரா' ஸ்டேஷன்ல, 35 பவுன் நகை திருட்டு கேஸ் இன்னும் முடியலையாமே...''
''ஏன் மித்து... அதுல 18, 19 வயசான ரெண்டு பசங்கள கைது பண்ணிட்டாங்களே...?'
''ஆமாக்கா... ஆனா, நகையை வித்த இடம் கோயமுத்துாராம். அங்க போய் மிரட்டி போலீஸ் விசாரிச்சப்போ போட்டோ, வீடியோ எடுத்துட்டாங்களாம். அவங்க 'வாய்ஸ்' உள்ளவுங்களாம்.
''போலீஸ் பயந்து போய்த் திரும்பீட்டாங்களாம். அப்புறம் ஒரு பையனோட அப்பாட்ட இருந்து, அவங்களோட சொந்த நகை 35 பவுனையும் வாங்கி கணக்கு காமிச்சிட்டாங்களாம்
''இந்த கேஸ்ல வேற சிலருக்கும் தொடர்பு இருக்கும். ஆனா முதல் அத்தியாயத்தோட கதைய போலீஸ் முடிச்சிட்டாங்க போல தெரியுது''
''அக்கா... ஆன்லைன் மோசடி வழக்குல சிக்கினவங்களுக்கு, கட்சி 'ஆன்லைன் சப்போர்ட்' தரலையாமே...''
''ஏன் மித்து...?'
''பல கட்சில சுத்தீட்டு, இப்போ விஜய் கட்சில இணைஞ்ச தாராபுரத்தைச் சேர்ந்த ரெண்டு பேரை கைது ஆன உடனே கட்சியிலிருந்தும் நீக்கீட்டாங்களாம்
''நம்மள காப்பாத்துவாங்க'ன்னு நினைச்சவங்களுக்கு, ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டாங்க''
''மித்து... சட்டம் கதவைத் தட்றப்ப... கட்சிக் கதவு பல தடவை தானாவே மூடிடும்...''
எஸ்.பி.க்கு சபாஷ்
''அக்கா... 'ஊத்து' ஸ்டேஷன்ல இன்னும் இடமாற்ற பட்டியல் முடியல போல...''
''ஏன் மித்து... இன்னும் யாரையாவது துாக்கிட்டாங்களா...?'
''ஆமாக்கா... போன வாரம் எட்டு பேரை ஆயுதப்படைக்கு அனுப்பினாங்களே... இப்போ அதோட இன்னும் பத்து பேரையும் அனுப்பிட்டாராமே எஸ்.பி. சிருஷ்டி சிங்... கஞ்சா விவகாரத்துலயும் எஸ்.பி அதிரடி காட்டுறதுக்கு பொதுமக்கள் 'சபாஷ்' சொல்லிக்கிட்டிருக்காங்களாம்...''
''மித்து... குற்றங்களுக்கு 'நோ என்ட்ரி' போர்டு வச்சா சரிதான்...''
''டீ ஆறிப்போயிரும்க்கா... ஆனா நியூஸ் மட்டும் சூடாத்தான் வரும்...''
டீயைக் குடித்து முடித்துவிட்டு மித்ரா சிரிப்புடன் கூற, அவளுடன் சேர்ந்து சித்ராவும் நடையைக் கட்டினாள்.
கார்ட்டூன் படத்துடன் ----------------------- ''சித்ராக்கா...மாநகராட்சில சில கோப்புகளுக்கு 'கவனிப்பு' இருந்தா எக்ஸ்பிரஸ் வேகத்தில பண்றாங்க. இல்லேன்னா மேஜைல துாசி படிஞ்சு கிடக்குதுன்னு கான்ட்ராக்டர்ஸ் புலம்புறாங்களாம்...'' ''மித்து... கோப்புக்குச் சக்கரம் இல்ல... ஆனா சிலருக்கு மட்டும் 'கிரீஸ்' போட்டாதான் ஓடுதோ என்னவோ...!''
