/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
'அதிகாரி' ஆன டிரைவர்; அடங்காத லஞ்சக் கயவர்!
/
'அதிகாரி' ஆன டிரைவர்; அடங்காத லஞ்சக் கயவர்!
UPDATED : ஆக 12, 2024 11:18 PM
ADDED : ஆக 12, 2024 11:17 PM

''ஆரவாரமே இல்லாம, திருப்பூர்ல பா.ஜ., மாநில நிர்வாகிகள் கூட்டம், நடந்து முடிச்சிருச்சே, மித்து...''
ஆரவாரத்தோடு துவங்கினாள் சித்ரா.
''ஆமாங்க்கா... முன்னதா, தேசியக்கொடி பேரணி, அண்ணாமலை தலைமைல நடக்கிறதா இருந்துச்சு... அதுக்குத்தான் 'பெர்மிஷன்' மறுத்துட்டாங்க...
''சிட்டிக்குள்ள அது நடந்திருந்தா எல்லா நிர்வாகிங்களும் பேரணில கலந்து, 'மாஸ்' காட்டியிருப்பாங்க...''
''மித்து... நீ சொல்றது கரெக்ட். கணக்கம்பாளையத்துல நிர்வாகிகள் கூட்டம் நடந்துச்சு... சட்டசபைத் தேர்தல்ல பா.ஜ.,வோட வியூகத்தை, அண்ணாமலை முழுமையா பேசியிருக்காரு...
''லோக்சபா தேர்தலைக் காட்டிலும் இன்னும் பலமா, சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கிறதுதான் திட்டம். அதை சிம்பிளா 'திருப்பூர் பிரகடனம்'னு ஆரவாரம் இல்லாம, மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்காங்க...''
''சொல்வதைக் காட்டிலும் செயல்தான் இனி ஜாஸ்தியா இருக்கும்னு பா.ஜ.,காரங்க சொல்றாங்கக்கா...''
''எக்ஸேக்ட்லி...''
போலீஸ் கமிஷனர் அதிரடி
''மித்து... புதுசா வந்த போலீஸ் கமிஷனரோட அதிரடில, கறைபடிஞ்ச போலீஸ்காரங்க கலக்கத்துல இருக்காங்க...''
''சித்ராக்கா... ரவுண்ட்ஸ் போறப்ப, வாக்கிடாக்கிலயே நேரடியாக அட்வைஸ் பண்றாராம்.
''திருட்டு நடந்ததுக்கப்புறம் திருடனைப் பிடிக்கிறது பெரிய விஷயமில்லை... திருட்டே நடக்காம தடுக்கிறதுதான் போலீசோட கடமை.
''அவங்கவங்களுக்கு ஒதுக்கின ஏரியால கரெக்டா ரவுண்ட்ஸ் போங்க... நான் ரவுண்ட்ஸ் வர்றப்ப, யாராவது 'ஓபி' அடிக்கிறது தெரிஞ்சுதுன்னா... பார்த்துக்குங்கன்னு ஸ்டிரிக்ட்டா சொல்றாராம்''
''மித்து... கார்ல வந்த வாலிபரை மடக்கி, 7 ஆயிரம் பணம், பீர் பாட்டில்னு லஞ்சமா வாங்குன எஸ்.எஸ்.ஐ., - ஆயுதப்படை போலீஸ்காரரை கமிஷனர் அதிரடியா 'சஸ்பெண்ட்' செஞ்சுட்டாரு... கார்ல இருந்த விலை உயர்ந்த இயர் பேடை போலீசே, வாலிபருக்குத் தெரியாம லவட்டியிருக்காரு... என்ன கொடுமைடா சாமீ...''
''சித்ராக்கா... தப்பு செஞ்சது தெரிஞ்சதும் உடனே கமிஷனர் நடவடிக்கை எடுத்தது சிறப்பு... ஆனாலும், கமிஷனருக்கே தெரியாம என்னென்ன 'தில்லாலங்கடி' வேலை பார்க்கலாம்னு 'பிளான்' பண்றதுலயே கறைபடிஞ்ச போலீஸ்காரங்க பலரும் வேலை பார்த்துட்டிருக்காங்களாம்...''
''மித்து... சிட்டில, குற்றப்பிரிவுல போலீஸ் எண்ணிக்கை குறைவா இருக்காங்க... டைரக்ட் எஸ்.ஐ., கூட இல்லை... வாரவிடுப்பு விவகாரத்துல, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தப்பா தான் கணக்கு காட்றாங்களாம்... இதையெல்லாம் ஆய்வு செஞ்சு கமிஷனர் சரியா நடவடிக்கை எடுக்கணும்''
''ம்ம்ம்... இப்பத்தான வந்திருக்காங்க... அதெல்லாம் நிச்சயம் பண்ணுவாங்க''
மித்ராவிடம் நம்பிக்கை.
'லெப்ட் ரைட்' வாங்கணும்
''சித்ராக்கா... ரேஷன் கடைகள்ல 'மனோகர'மான டிரைவர்தான் ஆய்வு செய்றாராம். உணவுப்பொருள் இருப்பை ஆய்வு செஞ்சு, குறைபாடு இருந்தா 'பைன்' போடுறதே இவர்தானாம்.
''பிரிக்கப்படாத மூட்டைகளையும் கூட துாக்கிவச்சு, எடை போடச் சொல்றாராம். எல்லாம் சரியா இருந்தாலும், 'பைன்' போடுவேன்னு மிரட்டுறாராம்''
''மித்து... இதுக்கு இன்சார்ஜ் ஆன பறக்கும்படை அதிகாரி என்னதான் பண்றாரு?''
''சித்ராக்கா... 'சந்திரன்' போல பளிச்சிட வேண்டிய அவரு ஜீப்ல வந்திறங்கி, கடைல ஒரு ஓரமா சேரைப் போட்டு அமர்ந்திருவாராம். டிரைவர் மிரட்டுற மிரட்டுல, தனக்குக் கிடைக்க வேண்டியது தானா கிடைச்சுடும்னு நினைக்கிறாரோ என்னவோ''
''மித்து... கலெக்டர் 'லெப்ட் ரைட்' வாங்குனாருன்னா எல்லாம் சரியாயிடும்''
கலகலத்தாள் சித்ரா.
''மித்து... மத்திய பட்ஜெட்ல தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததைக் கண்டிச்சு, திருப்பூர்ல 'மறுமலர்ச்சி' கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துச்சுல்ல...
''தங்களை முன்னிலைப்படுத்த ஒவ்வொரு நிர்வாகியும், முன்னேறி வர, குமரன் நினைவிடம் முன் நடக்க வேண்டிய ஆர்ப்பாட்டம், ஈவெரா - அண்ணா சிலை அருகே வந்துடுச்சாம்.
''ஆர்ப்பாட்டம் துவங்கிய பின்னாடி, சிறப்பு விருந்தினர் பேச முடியாத படி தள்ளுமுள்ளு தொடர்ந்துச்சாம்''
''சித்ராக்கா... இத்தனைக்கும் பெரிய கூட்டத்தையும் திரட்டலையாம்.
''வேன்ல பெண்களை அழைச்சுட்டு வந்திருக்காங்க... அவங்க என்னடான்னா வந்தவுடனே ஓரமா போய் அமர்ந்துட்டாங்களாம்''
''எதுக்குத்தான் இப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணனுமோ, மித்து''
சித்ரா நொந்துகொண்டாள்.
''சித்ராக்கா... ஒரு கட்சியோட தொழிற்சங்கத்துக்காரங்க, குற்றவியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்துனாங்க''
''ரயில்வே ஸ்டேஷன் பகுதில தடுப்புக்கம்பில ஒரு குச்சியில் தேசியக் கொடியைக் கட்டி சுதந்திர தினம் கொண்டாடுறதா சொன்னாங்களாம். தேசிய கொடியைப் பாதிக்குச்சி வரைக்கும் ஏத்தியிருந்தாங்களாம்.
''தேசிய கொடிக்கு தர வேண்டிய மரியாதையைக் கூட தரலையேன்னு, இன்னொரு தொழிற்சங்க நிர்வாகி அதைச் சரியாக கட்டுனாராம்''
''மித்து... தலையில அடிச்சிக்க வேண்டியதுதான்''
ஆதங்கப்பட்டாள், சித்ரா.
ஏமாற்று வித்தை
''மித்து... மாநகராட்சி நடுநிலைப்பள்ளில இருந்து பேசுறோம். அறுநுாறு ரூபா 'ஜிபே' பண்ணுங்க...உங்க பையன், பொண்ணை ஸ்காலர்ஷிப் லிஸ்ட்ல சேத்துவிடறோம்னு, சமீபத்துல பெற்றோருக்கு ஒரு ஆசாமி போன் பண்ணியிருக்கான்...
''ஸ்கூல் ெஹச்.எம்.,ட்ட எல்லோரும் போய்க்கேட்ருக்காங்க...
''மொதல்லா போலீஸ்ட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணுங்க... நாங்க எதுக்காக இப்படியெல்லாம் கேக்கப்போறாம்னு ெஹச்.எம்., சொல்லியிருக்காங்க''
''சித்ராக்கா... எப்படியெல்லாம் ஏமாத்துலாம்னு 'ரூம்' போட்டு யோசிக்கிறாங்க பாருங்க''
நகைத்தாள், மித்ரா.
மக்கள் பணம் ஏப்பம்
''மாநகராட்சி ரெண்டாவது மண்டலத்துக்குட்பட்ட அதிகாரிங்க, போயம்பாளையத்தில ஒரு மண்டபத்தைப் பிடிச்சு, ஊழியருங்க, தெரிஞ்சவங்களுக்குன்னு கிடா வெட்டு விருந்து வச்சிருக்காங்க.... இதுக்கெல்லாம் எங்க இருந்து காசு வருதுன்னு கேட்டா கமுக்கமா சிரிக்கிறாங்களாம்''
''மித்து... மக்கள் பணத்தை ஏப்பம் விட்டுத்தான் பழகிட்டாங்களே... பல்லடத்துல இல்லீகல் டாக்குமென்ட்ஸ் வச்சு பட்டா மாறுதல் செஞ்சுட்டு பணி மாறுதலாகிப் போயிட்டாரு ஒரு ரெவின்யூ அதிகாரி. அந்த அதிகாரியை பருவாயைச் சேர்ந்த அப்பாவி விவசாயி தேடிட்டே இருக்காரு...
''கலெக்டர் வரைக்கும் கான்டாக்ட் இருக்கு. பட்டா மாறுதலை கேன்சல் பண்ணித்தர்றேன்னு புரோக்கர் ஒருத்தர் சொன்னதைக் கேட்டு, அந்த விவசாயி லட்சம் ரூபாயை இழந்துட்டாரு... அதுவும் அந்த அதிகாரி போட்ட பிளான்தானாம்... எல்லாத்தையும் அந்த 'சுப்ரமணிய' கடவுள்தான் பார்த்துக்கணும்''
''சித்ராக்கா... 'அக்ரப்புத்துார்' மின்வாரிய அலுவலகத்துல பெயர் மாற்றம் செய்ய 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை லஞ்சமா வாங்குறாங்க... 'பல லட்சம் ரூபா கொடுத்து வீடு வாங்குறீங்க... எங்களுக்குக் கொடுத்தா குறைஞ்சா போய்டுவீங்க'ன்னு இதை நியாயப்படுத்துறாங்களாம். புதிய இணைப்பு, சிறு தொழில் இணைப்புக்குன்னு இவங்க ஒரு லஞ்ச டேரிப் வச்சிருக்காங்களாம். இங்க இருக்கிற ஆபீசர் மட்டும் ஒரு மாசத்துக்கு பல லட்சம் கல்லா கட்டுறாராம்''
''மித்து... லஞ்சக் கயவர்களுக்கு மக்கள்தான் 'ஷாக்' ட்ரீட்மென்ட் கொடுக்கணும்...''
''ஒரே நிமிஷம்ங்க்கா... உங்களுக்கு 'ஷாக்' கொடுக்கணும்னு உருளைக்கிழங்கு போண்டா போட்டு வச்சிருக்கேன்... சுடச்சுட மசாலா டீயோட சாப்பிட்டா சூப்பரா இருக்கும்''
சித்ராவின் சிரிப்புச்சத்தத்துடன், மித்ராவும் இணைந்தாள்.