/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
'பஞ்சமில்லாம' கிடைக்குது 'கஞ்சா'
/
'பஞ்சமில்லாம' கிடைக்குது 'கஞ்சா'
UPDATED : மே 07, 2024 01:59 AM
ADDED : மே 06, 2024 11:17 PM

''அடிக்கிற வெயிலுக்கு வெளியே போற மாதிரியா இருக்கு...'' என, நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடியே, சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
''ஆமா மித்து. ரொம்ப தான் வெக்கையா இருக்கு; பேன் காத்து கூட சூடா தான் வருது; கோடை மழை பெய்யலைன்னா, சமாளிக்கிறது கஷ்டம் தான்,'' என அங்கலாய்த்தாள் சித்ரா.
''மரம் வளர்க்க வேண்டி யதன் முக்கியத்துவத்தை மக்கள் நிறையவே உணர துவங்கிட்டாங்க. இருந்தாலும், நிறைய இடங்கள்ல நல்லா வளர்ந்திருக்கிற மரங்களை வெட்டி தள்றது; மரங்களை 'ஆசிட்' ஊற்றி அழிக்கிறதுன்னு, தொடர்ந்து செய்றாங்க. இப்படி இருந்தா, இயற்கையை எப்படி காப்பாத்த முடியும்,'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.
''வெயில்ல அலையற மக்களோட தாகத்தை தணிக்க அரசியல் கட்சிக் காரங்க தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவங்க, அங்கங்க தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் திறந்து வச்சிருக்கிறதால பரவாயில்ல; மக்கள் தாகம் தணிச்சுக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து. நீ சொல்றது கரெக்ட் தான்; ஆனா, காங்கிரஸ் சார்பில் மாவட்டந்தோறும் நீர் மோர் பந்தல் திறக்கணும்ன்னு, கட்சியோட மாநில தலைமை உத்தரவு போட்டிருக்காம். ஆனா, மாவட்ட நிர்வாகிங்க அதை கண்டுக்கிற மாதிரி தெரியலையாம். யார் நீர் மோர் பந்தல் திறக்கிறதுன்னு, கோஷ்டிகளுக்குள் 'ஈகோ'வாம்,'' என்றாள் சித்ரா.
![]() |
உப்புச்சப்பில்லாத பேச்சு வெளியேறிய மக்கள்
''இந்த சின்ன விஷயத்தையே இவங்களால செய்ய முடியாதப்போ, அப்புறம் எப்படி கட்சி வளருமாம்,'' என்றாள் மித்ரா.
''நான் தோழர் கட்சி சம்மந்தமான விஷயத்தை சொல்றேன்'' என்ற சித்ரா, ''மே தின விழா பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதியில நடந்தது. இதுல பேசின இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், மத்திய அரசை குத்தம் சொல்லி பேசினாரு. ஒவ்வொரு விஷயம் தொடர்பா பேசும் போது, எனக்கு விரிவாக பேச நேரமில்லைன்னு ஒவ்வொரு பிரச்னை குறித்து பேசவும், மக்கள் சலிச்சு போய் எழுந்து போயிட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.
''மக்களை எழுச்சியுற வைக்கிற வகையில பேசற தோழர்கள் இப்ப இல்ல. அதனால, மக்களும் பாதியில எழுந்து போயிடறாங்க போல...'' என்ற மித்ரா, ''பல்லடம் நகராட்சியில புதுசா வணிக வளாகம் கட்டியிருக்காங்க; கட்டின கடைகளை ஏலம் விட்டுட்டாங்க. ஆனா, கட்டட வேலை முழுசா முடியாததால, கடைகளை ஏலம் எடுத்தவங்களுக்கு, இன்னும் கடைங்க ஒதுக்கலையாம். ஆனா, ரெண்டு மாச வாடகையை, வியாபாரிங்க தான் கட்டணும்ன்னு சொல்லிட்டாங்களாம்.
இன்னும் கடையே திறக்கல; அதுக்குள்ள எப்படி வாடகை கட்றதுன்னு, வியாபாரிங்க புலம்பறாங்களாம்,'' என பேச்சை மாற்றினாள்.
''பல்லடம்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. வெயிலுக்கு, ஐஸ் வியாபாரம் பட்டையை கிளப்புதாம். ஆனா, ஐஸ் பெட்டியில வச்சு, கஞ்சா விக்கிறதாவும் புகார் வருது,'' என்றாள் சித்ரா.
கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை
''அய்யய்யோ...என்னக்கா சொல்றீங்க,'' என அதிர்ச்சியானாள் மித்ரா.
''ஆமான்டி மித்து, கஞ்சா வியாபாரம் நிறைய இடங்கள்ல பட்டையை கிளப்புதாம். இப்படி தான் கொஞ்ச நாள் முன்னாடி திருப்பூரைச் சேர்ந்த குணால் குமாருங்கற ஒருத்தரு கஞ்சா வித்ததா சொல்லி, அன்னுார் போலீஸ்காரங்க அவரை அரெஸ்ட் பண்ணி, கோவை சென்ட்ரல் ஜெயில்ல வச்சாங்க,''
''அந்த நபரை பார்த்துட்டு வர்றதுக்காக அவிநாசிக்கு பக்கத்துல இருக்கற தெக்கலுார்ல காமராஜ் நகரை சேர்ந்த சவுரப் குமார்ங்கறவரு, ஜெயிலுக்கு போயிருக்காரு. அவரை சிறை போலீசார் பார்வையாளர் ரூம்ல வச்சு வழக்கமா செய்ற பரிசோதனை செய்தப்போ, அவர்கிட்டேயும் கஞ்சா இருந்திருக்கு. அவரையும் அரெஸ்ட் பண்ணி, ஜெயில்ல தள்ளிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''இப்படியே போனா நிலைமை என்னவாகும்ன்னு தெரியலையே....'' என 'உச்' கொட்டினாள் மித்ரா.
''சிட்டிக்குள்ள, கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்கணும்ன்னு, பெரிய ஆபீசர் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்காராம்; ஒரு பக்கம், கஞ்சா, குட்கா பறிமுதல் பண்ணி, 'கேஸ்' போட்டுட்டு இருக்காங்களாம்.
ஆனா, சிட்டியோட 'மத்தி'யில இருக்கற ஸ்டேஷன்ல சில போலீஸ்காரங்களே, கடைகள்ல குட்கா விக்க சொல்லி, 'கல்லா' கட்றாங்களாம். இதப்பத்தி அந்த ஸ்டேஷன் ஆபீசர், கவனிச்சார்ன்னா பரவாயில்ல'' என்றாள் சித்ரா.
''ஊத்துக்குளி தாலுகாவுல, எந்த வேலைக்கு போனலும், காசு இல்லாம காரியம் நடக்கிறது இல்லையாம். இதுசம்மந்தமா, கலெக்டரோட கவனத்துக்கு புகார் போயும் கூட, எந்த மாற்றமும் இல்லைன்னு, அந்த ஊர்ல இருக்கற மக்கள் புலம்பறாங்க,'' என்றாள் மித்ரா.
''லஞ்சம் இல்லாம எந்த வேலை தான் நடக்குது,'' என ஆதங்கப்பட்ட சித்ரா, 'ரேஷன்கடையில வேல செய்றவங்களும் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க மித்து'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''ரேஷன் கடைகள்ல அப்பப்போ, சம்மந்தப்பட்ட துறை ஆபீசர்ஸ் ஆய்வுக்கு போவாங்களாம்; ரெக்கார்டுல இருக்க இருப்பை விட, கடையில இருக்க இருப்பு குறைவா இருந்துச்சுன்னா, அந்த ரேஷன் கடைக்காரங்களுக்கு அபராதம் போடுவாங்களாம். அரிசி, கோதுமை அளவு குறைவா இருந்துச்சுனா, கிலோவுக்கு, 25 ரூபாயா இருந்த அபராத தொகை, 45 ரூபாயாக்கிட்டாங்களாம். சர்க்கரைக்கு, 50 ரூபாய், பாமாயில் பாக்கெட்டுக்கு, 130 ரூபாய்ன்னு அபராதம் போடறாங்களாம்,''
''இதனால, ரேஷன் கடைக்காரங்க அப்செட் ஆகிட்டாங்களாம். ரேஷன் பொருட்கள் லாரியில வர்றப்போவே குறைச்சலா தான் வருது; லாரிகள்ல இருந்து கடைகளுக்கு இறக்குற பொருட்களை எடை போட்டு சரிபார்க்கிறதை விட்டு, எங்கள மட்டும் ரவுண்டு கட்றாங்களேன்னு, ரேஷன் கடைக்காரங்க புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.
''அனுப்பர்பாளையத்துல வாரச்சந்தை இருக்கு; இதுவரைக்கும் அ.தி.மு.க., காரங்க தான், அதை குத்தகை எடுத்து, சந்தைல, கடை போடறவங்ககிட்ட இருந்து, சுங்கம் வசூல் பண்ணிட்டு இருந்தாங்களாம். இப்போ, தி.மு.க., காரங்க கைக்கு சுங்க கட்டணம் வசூலிக்கிற உரிமை மாறிடுச்சாம்,''
''சந்தைக்கு வர்ற வியாபாரிங்ககிட்ட மட்டும் தான், சுங்கம் வசூல் பண்ணணும்ன்னு விதிமுறை இருக்கு. ஆனா, சந்தை கூடுற நாளில், வேலம்பாளையம் பஸ் ஸ்டாப் பக்கம் இருக்கற மர நிழல்ல உட்கார்ந்து, வியாபாரம் பண்ற வியாபாரிங்க கிட்டேயும், சுங்கம் வசூல் பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.
பணம் கேட்டு மிரட்டும் ஊழியர்
''மித்து, கார்ப்பரேஷனில், குடிநீர் சப்ளை பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களில் ஒரு சிலர், வீட்டு உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என நச்சரித்து வாங்குகின்றனர். இதில், ஒரு சிலரோ, மிரட்டியே பணம் பறிக்கின்றனராம்,''
''பணம் தராவிட்டால் சப்ளை நாட்களை மாற்றுவது, நேரத்தை குறைப்பது என்று தேவையற்ற வகையில் தொல்லையும் தருகின்றனராம். இந்த பிரச்னையால் தான், அணைக்காடு பகுதியில் பொதுக்குழாயில், தண்ணீர் வந்து ஒரு மாசமாச்சு என பெண்கள் புலம்புகின்றனர்,'' என்றாள் சித்ரா.
''அக்கா, இதேமாதிரி, துாய்மைப் பணியாளர்களும் சில பகுதிகளில் கட்டாயப்படுத்தி பணம் கேட்பது வழக்கமாக உள்ளது. பணம் தராத வீடுகளில் குப்பைகளை வாங்காமல் செல்வதும் வாடிக்கையாக உள்ளதாகவும் புகார் உள்ளது. இப்டித்தான், போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில், கேட்ட பணம் தரவில்லை என்று, ஆட்டோவில் லோடு செய்யப்பட்ட கழிவுகளை மீண்டும் கோவில் வளாகத்திலேேய கொட்டிச் சென்றதும் நடந்தது,'' என்றாள்.
கடைசி நாளில் வந்த ஓலை
''அக்கா, இதுவும் கார்ப்பரேஷன் மேட்டர் தான். அந்த ஆபீசில் முக்கிய பதவியில் இருந்த அதிகாரி ஒருவர் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு முன் டியூட்டி பார்த்த ஊரில், கட்டட அனுமதிக்கு 'மாமூல்' வாங்கியது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது,''
''அது மட்டுமின்றி அவர் மீது '17பி' மெமோவும் இரண்டு நிலுவையில் உள்ளதாம். சக அலுவலர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டது மற்றும் ஒரு தணிக்கை தடை ஆகிய இரு மெமோக்கள் முடிவுக்கு வராமல் உள்ளது. ஓய்வு பெறும் முன்னர் அவையெல்லாம் சரியாயிடும் நினைச்சார். ஆனால், கடைசி நேரத்தில் சஸ்பெண்ட் ஆர்டர் தான் வந்தது,'' மித்ரா சொன்னாள்.
''தீதும் நன்றும், பிறர் தர வாரா...'' என்ற சித்ரா, ''குழாய் பதிப்புக்கு, ரோடு போடும் பணிக்கு குழி தோண்டும் போது ஏதாவது பைப் சேதமானால் அதை பணி செய்யும் கான்ட்ராக்டர் தான் பொறுப்பேற்று சரி செய்து தர வேண்டும் தெரியுமா?''
''ஆமாங்க்கா.. தெரியும்!''
''ஆனால், இப்போதெல்லம், நகரப்பகுதியில் பணி செய்யும் சப் கான்ட்ராக்டர்கள் இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. தங்கள் இஷ்டம் போல் குழி தோண்டுவது, குழாய் சேதமானால் கண்டு கொள்ளாமல் போவதுமாக உள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் பொருட்களை தனது செலவில் வாங்கிக் கொடுத்தாலும் கூட சரி செய்வதில்லையம். ஒரு சிலர் அதற்கும் தனியாக கூலி பேசித் தான் சரி செய்து தருகிறார்களாம்,'' புகார் வசித்தாள் சித்ரா.
''கார்ப்பரேஷன் இவ்வளவு நடந்தாலும், மேயர் எதையும் கண்டுகொள்ளவதில்லை என்ற கம்ப்ளைன்டும் உள்ளது. அவர், சாட்டையை எடுத்து சுத்தினால் தான் எல்லாம் சரியாகும். இல்லாட்டி சிக்கல் தான்...'' என்ற மித்ரா, ''சரிங்க்கா, நான் கெளம்பறேன்...'' என்று கூறி விடைபெற்றாள்.