தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ ‘ஆட்டம்’ போடும் அதிகாரி... ‘கப்பம்’ கேட்டு ‘ஒப்பாரி’

‘ஆட்டம்’ போடும் அதிகாரி... ‘கப்பம்’ கேட்டு ‘ஒப்பாரி’

‘ஆட்டம்’ போடும் அதிகாரி... ‘கப்பம்’ கேட்டு ‘ஒப்பாரி’

1


ADDED : ஜூலை 27, 2026 03:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 03:32 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘‘ஆடி காத்துல அம்மி பறக்குதோ இல்லையோ, போலீசோட மானம் பறக்குது...’’ என பீடிகை போட்டவாறு சித்ரா ஆரம்பித்தாள்.

‘‘என்னக்கா, சொல்றீங்க,’’ ஆர்வமாக கேட்டாள் மித்ரா.

‘‘மித்து, பத்து நாளைக்கு முன்னாடி, சவுத் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த, வழக்கு தொடர்பான பத்து டூவீலர்களை, ஸ்டேஷனில் வலம் வந்த எப்.ஓ.பி. என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரும், அவரது ரெண்டு பிரண்டும் திருடிச் சென்றுள்ளனர். இந்த விஷயம் தெரிந்தும், கமிஷனர் கவனத்துக்கு கொண்டு செல்லாமல், மூடி மறைத்து, டூவீலர்களை மீட்டு, திருடிய ஆசாமியை விட்டு விட்டனர். இந்த மேட்டர் கமிஷனர் காதுக்கு சென்றதும், என்கொயரி போட சொல்லியிருக்காங்க,’’

‘‘இது விஷயத்தில், டூவீலர்களை திருடியவர்கள் அப்பாவிகள் என ‘சர்டிபிகேட்’டே கொடுத்துள்ள போலீசார், ஏதோ ஒரு கேஸ் போட்டு முடிக்கும் வேலைகளை ‘சட்புட்’னு செய்யறாங்களாம். இதே விஷயத்தை ஸ்டேஷனில் வேறு யாராவது செய்து இருந்தால், இந்நேரம் நடவடிக்கை வேறு மாதிரி இருந்து இருக்கும்,’’ என்றாள் சித்ரா.

‘‘அக்கா, நீங்க சொல்லறது சரி தான். அது மட்டுமல்லாமல், போலீசார் தங்கள் செய்த தவறை புரிஞ்சுக்காம, இன்னும் கூட தவறு தான் செய்கின்றனர். குறிப்பாக, இந்த விஷயம் எப்படி வெளியே போச்சு என்று, தவறு செய்த போலீஸ்காரங்க ரகசியமாக விசாரிக்கிறாங்க. இது மட்டுமல்ல, சில ஒற்றர் படை போலீஸ்காரங்க ஸ்டேஷனில் நடக்கும் விஷயங்களை கமிஷனர் காதுக்கு கொண்டு போகாம, ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு விசுவாசம் காட்டுறாங்களாம்,’’ விளக்கினாள் சித்ரா.

பகிரங்க ஆதரவு

–––––––––––––––––––

‘‘போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கவர்மென்ட் காலேஜ் பிரின்ஸ்பால் இருப்பதை பார்த்து, ஒற்றர்படை போலீசார் ஆடிப்போயிட்டாங்களாம்...’’ என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

‘‘என்ன மித்து சொல்ற,’’

‘‘ஆமாங்க்கா. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கவர்மென்ட் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் சிலரை, தோழர்களின் அமைப்பு ஒன்னு துாண்டியூட்டு, போராட்டம் செஞ்சாங்க. சம்பந்தப்பட்ட காலேஜ் கேம்பஸிலேயே, கட்சி கொடியுடன், குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவங்க, போராட்டம் செய்தனர். இதப்பார்த்து மத்தங்க அதிர்ச்சி ஆயிட்டாங்க. அதுமட்டுமல்ல, இத தெரிஞ்சுகிட்ட ஒற்றர்படை போலீசார், ‘பிரின்ஸிபால்’கிட்ட கேட்டதற்கு, ‘இது பதிவு செய்யப்பட்ட அமைப்பு தான். அதனால, போராட்டம் நடத்த பெர்மிஷன் கொடுத்தேன்,’ என கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லியிருக்காரு,’’

‘‘ஆக மொத்தத்தில் ஊசி இடம் கொடுக்காமல், நுால் நுழையாது என்பது போல காலேஜ் பிரின்ஸிபாலே போராட்டத்துக்கு ஆதரவா இருந்ததால் தான், போராட்டம் நடந்தது உறுதியானதால், சம்பந்தப்பட்டவரின் ‘கிருஷ்ண கானம்’ குறித்து மேலிடத்துக்கு ரிப்போர்ட் போட்டுட்டாங்க,’’ என்றாள் மித்ரா.

‘‘ஒன்னும் சொல்ற மாதிரியில்ல,’’ என்ற ஆதங்கப்பட்ட சித்ரா, ‘‘தாராபுரம் முனிசிபாலிட்டி ஏரியாவில், குடிநீர் சப்ளை என பல ஒர்க் முடங்கிடுச்சாம். கமிஷனரும் இல்லாததால, பல பணிகள் நடப்பதேயில்லை. சூரிய கட்சியில் ‘பாப்பு’லர் சேர்மனாக உள்ளவருக்கு, எல்லா விஷயமும் தெரிந்தும், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த பிரச்னைகளால், ஆளும்கட்சி மீது மக்கள் மத்தியில், அதிருப்தி ஏற்பட்டு போராடட்டும் என்ற நோக்கில் உள்ளார். சோஷியல் மீடியாவில, குடிநீர் பிரச்னை பத்தி, எதிர்கட்சியினர் போஸ்ட் போடறாங்க. முனிசிபாலிட்டில பொறுப்பில் உள்ள சேர்மன், ஆபீசர்ஸ் என எல்லாரும் கவர்மென்ட்டுக்கு எதிராக ‘நல்லா’ வேலை செய்யறாங்க...’’ என்றாள்.

புத்திசாலி ‘தோழர்’

––––––––––––––––––––

‘‘எல்லாத்தையும் ஒற்றர் படை போலீஸ் நோட் பண்ணிட்டு, மேல தகவல் அனுப்பிட்டு இருக்காங்க,’’ சொன்ன மித்ரா,‘‘ எந்த ஆட்சி நடந்தாலும், தோழர் கட்சி விஐபி, சூரிய கட்சி தலைமைக்கு நெருக்கமாக இருப்பார். அதனால் தான், சி.எம். விஜயின் ஒவ்வொரு நகர்வுகளையும், சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்ப கூட சி.எம். ஆபீஸ் புதுப்பிப்பு பணி தொடர்பாக கூட, ‘தேவையில்லாத செலவுக்கு குதிரை வேகம் காட்டுவது ஏன்? என, காரசாரமாக ‘பேஸ்புக்’ பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்,‘‘

‘‘மத்த கட்சியினர் அமைதியாக இருந்தால் கூட, ‘தோழர்’கள் தான் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருவதாகவும், இதேபோல, கடந்த ஆட்சியில் ஏன் செய்யவில்லை என என, நெட்டிசன்ஸ், கேள்வி மேல் கேள்வி கேட்டு, கலாய்த்து வருகின்றனர்,’’ என கூடுதலாக சொன்னாள்.

‘‘மித்து, திருப்பூரில் பிரின்டிங் பேக்டரிகளுக்கு அடிக்கடி ‘சீல்’ வைக்கிறாங்க. கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு இல்லாத பேக்டரிகளுக்கு மின் இணைப்பையும் துண்டிச்சிடறாங்க. இதனால, சுத்திகரிப்பு கட்டமைப்பு போட்டுறலாம்னு ‘பெர்மிஷன்’ கேட்கப்போனா, சில ஆபீசர்ஸ், மூனு லட்சம் ரூவா வரை ‘கப்பம்’ கட்டோணும்னு போன ஆட்சியில கறாராக சொல்லியிருக்காங்க. இதுல என்ன கொடுமைன்னா, அந்த யூனிட் போடறதுக்கே மூனு லட்சம் தான் ஆகுமாம். இப்ப ஆட்சி மாறிவிட்டதால, ‘லஞ்சம்’ இல்லாமல், சுத்திகரிப்பு கட்டமைக்கு பெர்மிஷன் கொடுத்தால், ஆர்.ஓ., பிளான்ட் அமைக்க தயாராக இருப்பதாக, சம்பந்தப்பட்ட துறை மினிஸ்டரை சந்தித்து. பிரின்டிங் சங்கத்தினர் பேசி வருகின்றனராம்,’’

நடுங்கும் ‘விஐபி’

––––––––––––––––––

‘‘ம்..ம்.. நல்ல முடிவு கெடைக்கட்டும். அக்கா, பல்லடத்துல, வாடகை வீட்டுல மூட்டை மூட்டையா குட்கா பறிமுதல் செஞ்சாங்க. விசாரிச்சப்ப அந்த வீடு ரிஜிஸ்டர் ஆபீஸ் ஆபீசர் ஒருவருக்கு சொந்தமானதாம். குட்கா விக்கிறது ஹவுஸ் ஓனருக்கும் தெரியும்னு அரெஸ்ட் ஆன நபர் சொல்ல, அந்த அதிகாரி ஷாக் ஆகிட்டாரு. எப்படியோ பல்லடம் போலீஸ் தயவு காட்ட கேஸ் குளோஸ் ஆகிடுச்சாம். இதுமட்டுமில்லாம, அந்த ஆபீசரோட ஒய்ப் கவர்மெண்ட் ஸ்கூல் ஹெச்எம் வேறயாம்,’’ என்றாள் மித்ரா.

அதற்குள் போன் வரவே, ‘‘ஓ.கே. சித்தப்பா, வெங்கடேஷ் மாமா வந்ததும் இதப்பத்தி டீட்டெய்லா பேசுவோம்,’’ எனப்பேசிய சித்ரா, ‘‘மக்கள் பெட்டிஷன் குடுக்கப் போனா, ‘குமாரமான’ அந்த பல்லடம் விஐபி நிற்க, மாவட்ட நிர்வாகிதான் உக்காந்துட்டு பெட்டிஷன் வாங்கறாரு. அவர் இல்லாதப்ப மட்டும்தான் விஐபி தன்னோட சீட்ல உட்காருவாறாம் என்று கூற, ‘‘ஒரு நிர்வாகியை பாத்து நடுங்குற விஐபியை இங்க தான் பார்க்க முடியும். அதில்லாம இது ‘அமைதிப்படை’ கதையாட்டம் இருக்கு,’’ என்ற மித்ரா, ‘‘பக்கத்து வீட்டு சங்கர்கூட இதப்பத்தி சொல்லிட்டு இருந்தாரு...’’ என்றாள்.

ஓ.பி. இன்ஜினியர்

–––––––––––––––––

‘‘லிங்கேஸ்வரர் ஊர் முனிசிபாலிட்டி இன்ஜினியர் எந்த ஒரு வேலையும் நேரில் சென்று ஆய்வு செய்வதில்லையாம். டெண்டர் விடுவதோடு சரி. அதற்கான ‘கமிஷனையும்’ கரெக்டா வாங்குற அக்கறையை கொஞ்சமாவது, டியூட்டியில காட்டினால் பரவாயில்லைன்னு மக்களே சொல்றாங்க. ‘கமிஷன்’ கொடுக்காட்டி, அதுஇதுன்னு சொல்லி வாங்கிடுவாராம். இதுபோதாதுன்னு, கவுன்சிலர்கள் கேட்ட வேலையை செஞ்சு கொடுக்காம, இழுத்தடிக்கிறாராம். பொறுத்துப்பார்த்த ஒரு கவுன்சிலர், ஹையர் அபிஷியல்ஸ்க்கு பெட்டிஷன் போட்டுட்டார்,’’ மித்ரா சொல்லி முடிக்கவும், அவ்வழியே சென்ற நபரை பார்த்து, ‘‘சுப்பிரமணி அங்கிள், நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்,’’ என்றாள்.

‘‘கை கொள்ளாத அளவுக்கு சேலரி, அதிகாரின்னு பேரு, கவர்மென்ட் ஜீப்... இப்படி எல்லா வசதிகளையும் அனுபவிச்சிட்டு, எப்படித்தான் இப்படி ஓ.பி. அடிக்கிறாங்கன்னு தெரியலடி. மித்து, அதே ஊரில, அதே ஆபீசில ஆதார் மையம் இருக்கு. அதுல வேல பார்க்குறவங்க, மக்களிடம் கடுஞ்சொற்களால் பேசறாங்களாம். வயசானவங்கன்னு கொஞ்சம் கூட யோசிக்காம, ‘போய்ட்டு நாளைக்கு வா...’ன்னு ஒருமையில பேசி துரத்தி அடிக்கறாங்களாம். இத எல்லாம் யார் சரி பண்ணுவாங்கன்னு தெரில,’’ என புலம்பிய சித்ரா, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us