தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ கமிஷன் கேட்டு 'மாஜி' அடம்... தோழர்கள் காட்டும் 'விளம்பர' படம்!

 கமிஷன் கேட்டு 'மாஜி' அடம்... தோழர்கள் காட்டும் 'விளம்பர' படம்!

 கமிஷன் கேட்டு 'மாஜி' அடம்... தோழர்கள் காட்டும் 'விளம்பர' படம்!


ADDED : ஜூலை 21, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

''எப்படியோ, ஸ்பெயின் ஜெயிச்சுட்டாங்க...'' என்றவாறே சித்ரா வீட்டுக்கு வந்தாள் மித்ரா.

''ஆமாம் மித்து. செம மேட்ச்...'' என்ற சித்ரா, ''நாம போன வாரம் பேசிய மேட்டரில், போலீஸ் ஸ்டேஷன்களில் ரொம்ப வருஷமாக நங்கூரம் போட்டிருந்தவங்களை கூண்டடோட டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. மூணு வருஷமா ஒரே ஸ்டேஷன்ல இருந்துட்டு, 'டிரான்ஸ்பர் ஆர்டர்' வந்தும் கிளம்பாம இருந்தவங்கள, அவங்க இடத்துக்கு போகச் சொல்லி பெரிய ஆபீசர் ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டுட்டாரு,''

''இதேமாதிரி, பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டு ஆபீசர்ஸ், சாய ஆலைகளுக்கு லைசென்ஸ் புதுப்பிச்சு கொடுக்க எக்கச்சக்கமாக லஞ்சம் கேக்குறாங்கன்னு, மினிஸ்டர் வரைக்கும் புகார் சொன்னாங்கல்ல. இப்ப, அந்த ஆபீசர்ஸ், பறக்கும் படைன்னு எல்லாரையும் கூண்டோட 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க,'' கூடுதல் தகவல் சொன்னாள்.

''நல்ல விஷயம்தானுங்களே. நொச்சிபாளையம், வேலம்பாளையம், குன்னத்துாரில் இருக்கற 'டாஸ்மாக் பார்'கள்ல ஆளுங்கட்சி புள்ளிகளோட தயவால, சட்ட விரோத விற்பனை ஜோரா நடக்குதாம். அப்புறம், பல்லடம் ஏ.பி. நகர்ல, ஒரு கல்யாண மண்டபத்துக்கு பக்கத்துலயே கஞ்சா, குட்கா சேல்ஸ் அமோகமா நடக்குதாம். அல்லாளபுரம் ரோட்ல இருக்கற ஒரு வீட்டுல கஞ்சா சேல்ஸ் நல்லா நடக்குதாம். ஏற்கனவே ஜெயிலுக்கு போயி, ஜாமின்ல வந்த ஆசாமி தான் மீண்டும் இந்த வேலய பார்க்குறாராம். இதயெல்லாம் போலீஸ் கவனிச்சு ஆக் ஷன் எடுத்தா நல்லா இருக்கும்,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.

காட்சி மாறல... ''அவிநாசிக்கு பக்கத்துல இருக்கற பேமஸான மாரியம்மன் கோவில் திருப்பணிக்குன்னு வசூலிக்கிற பணத்துக்கு, தனியார் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை பேரில் தான் ரசீது தர்றாங்களாம். இது எந்த ஊர் நியாயம்னு பக்தர்கள் கேள்வி கேட்கிறாங்க மித்து,''

''அதே மாதிரி தாங்க்கா. நம்ம மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல்ல, காயத்துக்கு கட்டுப் போட போனவர்கிட்ட, 300 ரூபா பணம் வாங்கிட்டாங்க. பணம் கொடுத்தவரு, பணத்தை 'ஜி-பே' பண்ணிட்டு, ஆதாரத்தோட 'சி.எம். செல்லுக்கும்' ஆன்லைன்ல புகாரைத் தட்டிவிட்டுட்டாரு. இத தெரிஞ்சுகிட்ட லஞ்சம் வாங்கிய ஆசாமி, என்ன தான் சி.எம். செல்லுக்கு கம்ப்ளைன்ட் பண்ணாலும் எங்கள ஒன்னும் செய்ய முடியாதுன்னு சவால் விட்டுருக்காரு, கான்ட்ராக்ட் எடுத்திருக்கற தனியார் கம்பெனி மேனேஜர். லஞ்சம் வாங்காதீங்கன்னு, சி.எம். என்ன தான் சொன்னாலும், இன்னும் பலர் திருந்தல போல...'' ஆவேசமானாள் சித்ரா.

''கடந்த ஆட்சியில, டாஸ்மாக் பார்ல நடக்கிற இல்லீகல் சேல் வருமானத்துல, டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களும், புரோக்கர்களும் வசூல் வேட்டை நடத்தினாங்க. ஆட்சி மாறுனதும், அவங்களோட ரூட்டை ரேஷன் அரிசி பக்கம் திருப்பிட்டாங்களாம். ரேஷன் அரிசியை வாங்கி விக்கற ஆட்களை 'குறி' வச்சு கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம். இல்லைன்னா, அவங்களோட 'அண்ட் கோ' போட்டுக்கறாங்களாம். குறிப்பா, தாராபுரம் ஏரியாவுல, இந்த மாதிரி நெறைய நடக்குது,'' மித்ரா விவரித்தாள்.

''மித்து, ஆட்சி மாறினதும், கலெக்டரும் மாறிட்டார் போல. மாசத்துக்கு ஒரு தடவ நடக்குற விவசாயிகள் மீட்டிங், இனி ரெண்டு தடவ நடத்தோணும்னு ஆர்டர் போட்டுட்டார். போன வார கூட்டத்துல, 'விவசாயிங்க மனுக்கள் மேல ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறீங்க? வாங்குற சம்பளத்துக்குப் பொறுப்பா வேலை பார்க்க வேண்டாமா? ஆட்சி மாறிடுச்சு, எல்லா பக்கமும் விஜிலென்ஸ் ரெய்டு நடக்குது, பார்த்து நடந்துக்கோங்க'ன்னு ஆபீசர்களை 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிட்டாராம்,''

''அக்கா, விவசாயிகள் சம்பந்தமா எங்கிட்டயும் ஒரு மேட்டர் இருக்கு. கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யணும்னு சொல்லி, தோழர்கள் அவிநாசியில கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போறாங்களாம். அவங்க ஆளுங்கட்சி கூட்டணியில தானே இருக்காங்க? நேர்ல பேசி கோரிக்கையை நிறைவேத்தி தராம, விளம்பரத்துக்காக இப்டி போராட்டம் நடத்தலாமான்னு, விவசாயிகளே சொல்றாங்களாம்...'' என்றாள் மித்ரா.

'அம்பது கோடி அப்பு' ''எண்ணெய் குழாய் பதிப்பு சம்பந்தமா நடந்த மீட்டிங்ல, ஒரு ஆபீசர், 'ஏற்கனவே முப்பது வருஷத்துக்கு முன்னாடி குழாய் பதிச்சாச்சு. இப்போ அங்கதானே மறுபடியும் இன்னொரு குழாய் பதிக்கிறோம். இதுக்காக அரசாங்கம் நுாறு சதவீதம் இழப்பீடு தர்றாங்க. எப்படியும் ஐம்பது கோடி ரூபாய் வரைக்கும் கை நிறையப் பணம் கிடைக்கும். அதனால, வர்ற வாய்ப்பை விட்டுடாதீங்க'ன்னு ஆசை காட்டிப் பேசியிருக்காரு,''

''ஆனா, அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச விவசாயிகள், 'முதல் தடவ குழாய் பதிச்சப்பவே ஏகப்பட்ட பிரச்னை. இந்த தடவ குழாய் போடுறப்ப, ஒரு குறிப்பிட்ட துாரத்துக்கு ரோடு வழியாவே கொண்டு போயிட்டா காலத்துக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. அப்படி இல்லன்னா, உயரழுத்த மின்பாதை போற நிலத்தடிக்குள்ள குழாயை பதிச்சா எல்லாருக்கும் சவுகரியமா இருக்கும்'னு கறாரா சொல்லிட்டாங்களாம் மித்து,'' விளக்கினாள் சித்ரா.

''சித்ராக்கா, லாஸ்ட் சண்டே, கருமாரம்பாளையம் ஸ்கூல்ல, கலை இலக்கிய விழா நடந்துச்சு. அதுல, பரதநாட்டிய போட்டியில, 150 பேருக்கும் மேல ஆடுனாங்க. ஆனா, பாரம்பரிய நாட்டுப்புற கலைகள் போட்டிக்கோ வெறும் 7, 8 பேர் தான். சரி, வந்தவங்களாவது ஒழுங்கா ஆடுனாங்களான்னு பார்த்தா, வெறும் 'குத்தாட்டம்' தான் போட்டாங்க. அத விட கொடுமை, நடுவர்களும் ஆதரிச்சு ஊக்குவிச்சதுதான்''

''கவர்ன்மென்ட் ஸ்கூல் பசங்களோட திறமைகள வெளியே கொண்டு வர, அரசாங்கம் செலவு பண்ணி இந்த மாதிரி நிகழ்ச்சிகள நடத்துது. ஆனா, அதயும் உருப்படியில்லாம நடத்தினா, கவர்மென்ட் ஸ்கூல் தரம் எப்படி உயரும்?'' வேதனையுடன் சொன்னாள் மித்ரா.

கமிஷன் வேணும் ''மித்து அவிநாசி மாஜி விஐபியோட வசூல் வேட்டை தொடருது தெரியுமா?''

''அவரு தான் இப்ப போஸ்டிங்கிலும் இல்லை. கட்சியிலும் இல்லையே...''

''அது கரெக்ட்தான்டி. ஆனா, அசெம்பிளி எலக் ஷனுக்கு முன்னாடி தொகுதியில அன்னுார், அவிநாசி ஆகிய ஏரியாவில சில பணிகளுக்கு பண்ட் ஒதுக்கியிருக்காரு. அப்பவே, 12 பர்சென்ட் கமிஷன் எடுத்துட்டு தான் கொடுத்தாராம். இப்ப என்னடான்னா, கான்ட்ராக்டர்களிடம் அதுக்கான கமிஷன் வாங்கித்தர சொல்லி, கட்சி நிர்வாகிகள்கிட்ட துாது விட்டிருக்காராம்,''

''இத கேள்விப்பட்ட இலை கட்சி பிரமுகர்கள், 'அவரே இப்ப கட்சியில இல்ல. மகனும் மினிஸ்டர் ஆயிட்டாரு. இப்ப திடீர்னு கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் வாங்கித்தாங்கன்னா, எங்க போய் வாங்கித்தர்றது?'ன்னு கொதிச்சுப் போய்ட்டாங்களாம்,'' என்று சித்ரா கூறவும், ''அக்கா ... நான் ராசிபுரம் வரைக்கும் போயிட்டு வர்றேன்,'' என்று கூறி புறப்பட்டாள் மித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us