/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
'ஆக்டிங்' டிரைவரின் ராத்திரி 'அட்ராசிட்டி'; ஆபீசர்ஸ் வேடிக்கை பார்க்கிறாங்க 'கை தட்டி'
/
'ஆக்டிங்' டிரைவரின் ராத்திரி 'அட்ராசிட்டி'; ஆபீசர்ஸ் வேடிக்கை பார்க்கிறாங்க 'கை தட்டி'
'ஆக்டிங்' டிரைவரின் ராத்திரி 'அட்ராசிட்டி'; ஆபீசர்ஸ் வேடிக்கை பார்க்கிறாங்க 'கை தட்டி'
'ஆக்டிங்' டிரைவரின் ராத்திரி 'அட்ராசிட்டி'; ஆபீசர்ஸ் வேடிக்கை பார்க்கிறாங்க 'கை தட்டி'
ADDED : ஜூலை 14, 2025 11:46 PM

''என்னக்கா, மே மாசம் மாதிரி வெயில் மண்டைய பொளக்குது...'' என்றவாறு நெற்றியில் படர்ந்த வியர்வையை துடைத்த படியே, சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்த மித்ரா, சோபாவில் அமர்ந்து, நியூஸ்பேப்பரை புரட்டினாள்.
''திருப்பூர்ல மாற்றுத்திறனாளிகளுக்கு டூவீலர் வழங்கும் திட்டத்துல முறைகேடு புகார் தொடர்பா, சென்னையில இருந்து 'ஸ்பெஷல் ஆபீசர்ஸ் டீம்' வந்து விசாரணை பண்ணாங்கள்ல. அப்போ அங்க வந்த ஒரு நடுத்தர வயசு பெண், ''என்னோட கோரிக்கையை தீர்த்து வைக்கிறதா சொல்லி, உங்க ஆபீஸ்ல வேல செய்ற ஒருத்தரு, என்கிட்ட போன் நம்பர் வாங்கினார். டெய்லி நைட் டைமில, என்னை போன்ல கூப்பிட்டு, தேவையில்லாத விஷயங்கள் பேசுறாரு; ரொம்ப 'டார்ச்சரா' இருக்கு'ன்னு சொல்லி, அழுதுருக்காங்க,''
''ஷாக்'கான ஆபீசர்ஸ், 'யாரு அந்த ஸ்டாப்'ன்னு விசாரிக்க சொன்னப்போ, திருப்பூர் நார்த் தாலுகா ஆபீஸ்ல, வேல பார்க்குற 'ஆக்டிங் டிரைவர்'ன்னு தெரிஞ்சிருக்கு. ரெகுலர் டிரைவருங்க லீவு எடுக்கறப்போ, இவர வச்சுத்தான் வண்டியை ஓட்டிக்குவாங்களாம். அதுமட்டுமில்லாம, ரெவின்யூ டிபார்ட்மென்ட் சம்மந்தமா, பல்வேறு ஆவணங்களை வாங்கறதுக்காக ஆபீசுக்கு வந்துட்டு போறவங்ககிட்ட இருந்து, கமிஷன் வசூல் பண்ணித்தர்ற புரோக்கராவும் அவர் இருக்காராம்,''
''வெள்ளை சட்டை சகிதமா, கலெக்டர் ஆபீஸ்ல வாரந்தோறும் நடக்குற குறைகேட்பு கூட்டத்துக்கு போய், அப்பாவியா, ஆதரவில்லாம தெரியற லேடீஸ்கிட்ட போன் நம்பர் வாங்கி, இந்த மாதிரி தேவையில்லாத தொந்தரவு கொடுக்கிறதா தெரிய வந்திருக்கு,'' விஷயத்தை போட்டுடைத்தாள் சித்ரா.
''அடக்கொடுமையே...'' என அங்காலய்த்த படியே மித்ரா, 'டிவி'யை 'ஆன்' செய்ய, 'தீயா வேலை செய்யணும் குமாரு' சினிமா பாடல் ஒளிபரப்பானது.
சேவக்கட்டு... கஞ்சா!
''அக்கா, அவிநாசியை சுத்தி இருக்கற வில்லேஜ் பக்கம், ஏகப்பட்ட இடத்துல, பெரிய அமவுன்ட் வச்சு சேவக்கட்டு நடக்குதாமே...'' பேச்சை மாற்றிய மித்ரா. ''கூடவே கஞ்சா சமாசாரம் கூட இருக்காம். சேவலுக்கு சண்டை பயிற்சி கொடுத்து, அத சண்டைக்கு உசுப்பி விடறவங்கள ஜாக்கின்னு சொல்லுவாங்கள்ல. இதுல என்ன ஒரு கொடுமைன்னா, ஸ்கூல் படிக்கிற சின்ன பசங்களுக்கெல்லாம், ஜாக்கி டிரெயின்ங் கொடுக்கிறாங்களாம். இந்த மேட்டர் பூராவும் 'நைட் டைம்'ல நடக்குதாம்...'' என்றாள்.
''இதெல்லாம் போலீசுக்கு தெரியுமா...,'' கேட்ட சித்ராவுக்கு, ''அதெல்லாம் நல்லாத்தெரியும். அவங்களுக்கு தெரியாம, அவிநாசி சப்-டிவிஷனில் எதுவும் நடக்காதுங்க்கா,'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன், 31வது வார்டு, டி.எஸ்.ஆர்.லே., அவுட் பக்கம், கொஞ்ச நாளைக்கு முன்னாடி, எம்.பி., தொகுதி நிதி, 5.5 லட்சம் ரூபாய் செலவுல 'ஐமாஸ்' விளக்கு பொருத் தினாங்க. அந்த வீதியில் ஏற்கனவே, நிறைய 'ஸ்ட்ரீட் லைட்' நல்லாத்தான் இருக்குதாம். அப் படியிருக்கறப்போ 'எதுக்காக இவ்வளவு செலவு செஞ்சு இங்க லைட் போடறீங்க; இதுக்கு பதிலா, பக்கத்து வீதியில போட்டிருக்கலாம். அங்க தான், இருட்ல மூழ்கியிருக்கு,''
''லைட்' போடற ஏரியாவுல தான், எம்.பி.,யோட பிரதர் குடியிருக்கறாராம். போதாக்குறைக்கு தோழர்கள் அதிகமுள்ள வார்டாம். பக்கத்து வீதியில டாஸ்மாக் பார் இருக்காம்; அங்க லைட் போடக்கூடாதுன்னு, அவங்க ஆட்சேபனை பண்றாங்களாம்...'' என்றாள் மித்ரா.
''ஏனாம்...?'' வெகுளியாய் சித்ரா கேட்க, ''வெளிச்சம் இருந்தா, 24 மணி நேரமும் சரக்கு ஓட்ட முடியாதுல்ல. அதுதான்,'' கிசுகிசுத்த மித்ரா, ''திருப்பூர் நகர சூரிய கட்சியில கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டுடுச்சாம். நகர பொறுப்புல இருக்கிறவர பதவியில இருந்து நீக்கணும்; இல்லைன்னா, நாங்க கட்சியை விட்டு போறோம்ன்னு சொல்லி, ஒரு தரப்பு 'நோட்டீஸ்' அச்சடிச்சு ஓட்டி, பரபரப்பை கிளப்பி விட்டிருக்காங்களாம்...'' என அரசியல் மேட்டருக்கு தாவினாள்.
மடை மாற்ற முயற்சி
''அடுத்த வாரம், திருப்பூருக்கு சி.எம்., வரப்போறாருல்ல. அதுக்குள்ள இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுவாங்க'' என்ற சித்ரா, ''சி.எம்.,விசிட்ல, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா மட்டும் தான் நடக்குதாம். மத்த எல்லா நிகழ்ச்சியும் உடுமலையில தான் நடக்குதாம். வர்ற எலக்ஷன்ல, காங்கயம் தொகுதியில இருந்து உடுமலை தொகுதிக்கு, சேதி சொல்ற துறையை கவனிக்கிற மினிஸ்டரு, 'ஷிப்ட்' ஆகப்போறாருன்னு, ஒரு பேச்சு அடிபடுது,'' என்றாள்.
''இருக்கலாம்... '' என்ற சித்ரா தொடர்ந்தாள், ''கழிவு, சாய தண்ணீர் கலக்கிறதால மாசுபட்டு கிடக்கிற நொய்யல் நதியை சுத்தம் செஞ்சு, மீட்டெடுக்கணும்ங்கற கோரிக்கையை முன்வைச்சு, உண்ணாவிரதம் இருக்க போலீஸ்கிட்ட அனுமதி வாங்கினாங்க நொய்யல் நதிநீர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவங்க. இதுக்கு, விவசாய சங்கங்களை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவிச்சாங்க. போலீசும், அனுமதி கொடுத்துடுச்சு. நொய்யல் கரையோரம் பந்தல், சேர் எல்லாம் போட்டு, அதுக்கான ஏற்பாடுகளை சங்கத்துக்காரங்க பக்காவா செஞ்சாங்க,''
''திடீர்ன்னு 'நைட்' ஒரு மணிக்கு, 'உண்ணாவிரதம் நடத்த அனுமதியில்லை'ன்னு போலீஸ்காரங்க சொல்லியிருக்காங்க. அதோட, பந்தல், சேர் எல்லாத்தையும் எடுத்துட்டு போக சொல்லியிருக்காங்க. இருந்தாலும், மறுநாள் விவசாயிங்க போராட்டம் நடத்தி முடிச்சுட்டாங்க,''
''வெரிகுட்...'' என்ற மித்ரா, '' பாறைக்குழியில குப்பை கொட்றதுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்றது தொடர்பா, கார்ப்பரேஷன் ஆபீசில, நெருப்பெரிச்சல் பகுதி மக்களை வச்சு, 'மீட்டிங்' நடத்தியிருக்காங்க. 'பிரஸ்'காரங்க உள்ளே போய் போட்டோ, வீடியோ எடுத்துட்டு இருந்தாங்களாம்,''
''அப்ப, குறுக்கிட்ட மேயர், 'பிளீஸ் பிரஸ் காரங்க வெளியே போயிடுங்க; மீட்டிங் முடிஞ்சு வெவரம் சொல்றோம்' ன்னு சொல்லியிருக்காரு. சில மீடியாக்காரங்க, மேயர்கிட்ட வாக்குவாதம் பண்ணி, சத்தம் போட்டிருக்காங்க. கூட்டம் முடிஞ்சதும், 'வழக்கம் போல்' கவர் வாங்கும் போது, சத்தம் போட்டத்துக்கு கூடுதலா, 200 ரூபாயை சேர்த்து வாங்கிட்டு போயிட்டாங்களாம்,'' என சிரித்தாள் மித்ரா.
''வெளங்கிடும்...'' என 'உச்' கொட்டிய சித்ரா, வேறு மேட்டருக்கு தாவினாள்.
சாமி வரம் கொடுத்தும்...
''மித்து, அவிநாசி டூ மேட்டுப்பாளையம் வரைக்கும், 'போர்வே' ரோடு போடறாங்க. அதுல, நம்பியாம்பாளையத்தில, கல்வெர்ட் கட்டறப்ப, அத்திக்கடவு அவிநாசி திட்ட பைப் உடைஞ்சிருச்சு. இதனால, ஒரு மாசமா சுத்துவட்டாரத்திலுள்ள, 64 குளங்களுக்கு தண்ணீர் போகல. இந்த ரோடு வேலையில பைப் டேமேஜ் ஆகும்ங்கிறதால, முன்கூட்டியே ைஹவேஸ்காரங்க, அத்திக்கடவு அவிநாசி திட்ட துறைக்கு, எஸ்டிமேட் போட்டு அந்த அமவுன்டுக்கு 'செக்' கொடுத்திட்டாங்களாம். ஆனா, பைப் டேமேஜ் சரி பண்ணாம, அத்திக்கடவு திட்ட இன்ஜினியர்ஸ் 'சாக்கு போக்கு' சொல்லிட்டு இருக்காங்க...'' சித்ரா பொரிந்து தள்ளினாள்.
''சாமி வரம் கொடுத்தும், பூசாரி வரம் கொடுக்காத கதையாட்டம் இருக்கு...'' என்ற மித்ரா, ''அதே அவிநாசிக்கு வந்த கார்ப்பரேஷனோட, சின்ன விஐபி மகனுக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் இருக்குது. அங்கிருந்த ஹாஸ்டல்ல, 22 வயது வாலிபர் சூசைட் பண்ணிட்டாரு. ஆனா, மேனேஜ்மென்ட் அவரோட பேரன்ட்டுக்கு விஷயமே சொல்லலையாம். கூட வேல செய்யறவங்க சொல்லித்தான், இறந்த வாலிபரோட பேரன்ட்ஸ் பதறியடிச்சுட்டு வந்து, 'தங்களோட மகன் இறப்புல மர்மம் இருக்குதுன்னு' புகார் கொடுத்திருக்காங்க. சேவூர் போலீஸ், அந்தளவுக்கு மில்காரங்க மேல 'விசுவாசம்' காட்டுறது ஏன்னு தெரியல. அதேமாதிரி 'தோழர்களும்' இந்த விஷயத்தை கண்டுக்காம விட்டுட்டாங்க...'' என்றாள்.
''ஏற்கனவே, ரிதன்யா கேஸ் மக்கள் மத்தியில இன்னும் நெருப்பாட்டம் இருக்குது. அதுக்குள்ள அதே சேவூர்ல அடுத்து ஒன்னா...'' என்ற சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊர்ல, டிராபிக் அதிகாரி, வந்த பின்னாடி, 'டிராபிக் ஜாம்' பிரச்னைக்கு எந்த தீர்வும் செய்யல. ஆனா, டாஸ்மாக் கடைகளில் இருந்து 50 மீட்டர் துாரத்தில, டிராபிக் போலீஸ்காரர்களை நிறுத்தி வசூலிப்பது, லோடு வண்டிகளை நிறுத்தி மாமூல் வாங்குவது, 'வெகிக்கிள் செக்கப்' என்ற பேரில், திருப்பூர் ரோடு, கைகாட்டிப்புதுார், மாட்டாஸ்பத்திரி ஸ்டாப், சேவூர் ரோடு, சிந்தாமணி பஸ் ஸ்டாப் என பல இடங்களில, 'பீக் ஹவர்ஸில்' போற வர்றவங்களை நிறுத்தி 'டார்ச்சர்' செய்து, கறார் வசூல் செய்றாராம். குறிப்பா, நார்த்இன்டியன் லேபர்கிட்ட, எந்த செக்கப்பும் பண்ணாம ரூவாய வாங்கிட்டு அனுப்பிடறாருன்னு, மக்கள் புலம்பித் தள்றாங்க மித்து,'' என விளக்கினாள்.
'அலற' வைத்த மைக்!
''ஆமாங்க்கா, நானும் தான் கேள்விப்பட்டேன்,'' சொன்ன மித்ரா, ''நல்லுார் போலீஸ் டிவிஷனை கவனிக்கிற உதவி ஆபீசர் ஒருத்தரு, மைக்கில, ஸ்டேஷன் இன்ஸ்.,ஐ கூப்பிட்டு, 'எனக்கு எதிராக ஆபீசர்களையெல்லாம் திரட்டறீங்களா...'ன்னு, கேட்டிருக்காரு, டிவிஷன் முழுக்க இருக்கற மைக்ல இது கேட்க, உடனே பெரிய ஆபீசர் குறுக்கிட்டு, 'ஓபன் மைக்'கல இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது. எதுவும் பிரச்னைன்னா, நேர்ல கூப்பிட்டு கேளுங்கன்னு, 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு. ரெண்டு பேருக்கும் இடையில என்ன பஞ்சாயத்துன்னு தெரியல...'' என்றாள்.
''மித்து, கொஞ்ச நாள் முன்னாடி, மதுவிலக்குப் பிரிவுல வேலை பார்த்துட்டு இருந்த, ஒரு சின்ன ஆபீசரை, கமிஷனர் ஆபீசில இருக்கற ஒற்றர் படைக்கு மாத்திட்டாங்க. அவர் என்னடான்னா, அவருக்கான வேலையை பார்க்காம, 'டாஸ்மாக்' பார்களில், கல்லா கட்டறதுலேயே குறியா இருந்திருக்காரு. இது, பெரிய ஆபீசர் கவனத்துக்கு போக, 'இப்படியெல்லாம் செய்யாதீங்க'ன்னு, சும்மா 'வார்ன்' பண்ணி விட்டுட்டாங்களாம்...'' சித்ரா கூறினாள்.
''அக்கா, அவரை போலவே, தாராபுரம் போலீஸ்காரரு ஒருத்தரு, வாகன தணிக்கைங்கற பேர்ல நல்லா கல்லா கட்றாராம். நேரடியா காசு வாங்கினா, மாட்டிக்குவோம்ன்னு பயந்து, அவரோட சொந்தக்காரங்களோட ஜிபே நம்பர்க்கு அனுப்பி சொல்லிடுவாராம்,'' என்றாள்.
''எல்லாம் டிஜிட்டல் மயம்...'' என சிரித்த சித்ரா, ''மித்து, பிரியாணி பண்ணியிருக்கேன். சாப்பிட்டு போ...'' என, சொல்லி சமையலறைக்குள் நுழைந்தாள்.