/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
தி.மு.க., - அ.தி.மு.க., 'மல்லுக்கட்டு' போலி மந்திரவாதிக்கு 'பணக்கட்டு'
/
தி.மு.க., - அ.தி.மு.க., 'மல்லுக்கட்டு' போலி மந்திரவாதிக்கு 'பணக்கட்டு'
தி.மு.க., - அ.தி.மு.க., 'மல்லுக்கட்டு' போலி மந்திரவாதிக்கு 'பணக்கட்டு'
தி.மு.க., - அ.தி.மு.க., 'மல்லுக்கட்டு' போலி மந்திரவாதிக்கு 'பணக்கட்டு'
ADDED : பிப் 10, 2025 11:50 PM

தைப்பூசத்துக்கு, முருகன் கோவிலுக்குப் போக, மித்ரா தயாராக வந்தாள். ஆவி பறக்க காபியை, சித்ரா கொடுத்ததும், ருசித்துக்கொண்டே பேசத் துவங்கினாள்.
''திருச்சில பரிகார பூஜை நடத்துறதாச் சொல்லி மோசடி செஞ்ச சென்னையைச் சேர்ந்த போலி மந்திரவாதி ரகுவை அரெஸ்ட் செஞ்சாங்கள்ல.
''கேரளால குட்டிச்சாத்தான்களை வச்சுப் பூஜை செஞ்சு கோடீஸ்வரனாக்கறதாவும், எதிரிகளை ஒழிச்சுக்கட்றதாவும் 'புரூடா' விட்ருக்காரு இந்த ஆசாமி.
''திருப்பூர்ல பலரும், இந்த ஆளை நம்பி லட்சக்கணக்குல ஏமாந்திருக்காங்களாம். அப்புறம்தான் தெரிஞ்சுதாம், நம்மளோட பணக்கட்டை இந்த ஆசாமிக்கு கொடுத்து நம்ம வாழ்க்கைக்கே 'சூன்யம்' வச்சிக்கிட்டோம்னு.
''அந்த ஆசாமியோட 'யூடியூப்' சேனைலையும் இன்னும் முடக்கலையாம்க்கா''
''மித்து... ஜெயிலுக்குப் போயிட்டுவந்தாலும் அந்த ஆளை நம்பி, ஏமாறுறவங்க தொடரத்தான் செய்வாங்கன்னு சொல்லு''
''ஆமாக்கா... திருப்பூர்லயும் இதேமாதிரி சில மோசடி மந்திர வாதிங்க சுத்தீட்டு இருக்காங்களாம். பரிகார பூஜை நடத்துறதா ஆன்லைன் மூலமா பணம் வசூல் பண்ணிட்டு கம்பி நீட்டறதுதான் இவங்களோட வாடிக்கையா இருக்காம்''
மித்ரா ஆதங்கப்பட்டாள்.
ஊராட்சி தணிக்கைஉயர்ந்த லஞ்சம்
''மித்து... மாசத்துக்கு ஒரு ஊராட்சில தணிக்கை நடக்குமாம். தணிக்கை நடக்குறப்பா, 10 ஆயிரம் ரூபா வரைக்கும் 'கப்பம்' கட்டணுமாம். இப்ப தலைவர்களும் இல்லாததுனால, தணிக்கை பண்ற அதிகாரி 40 ஆயிரமா 'ரேட்'டை ஏத்திட்டாராம். மாசம் ஒரு ஊராட்சின்னு இல்லாம, இன்னொரு ஊராட்சியையும் சேத்துக்கிட்டாராம்.
''கொதிச்சுப்போயிருக்கிற செயலர்கள், நேரடியா கலெக்டர்ட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணப்போறாங்களாம். ஊரக 'வளர்ச்சி' நல்லாத்தான் இருக்கு''
''சித்ராக்கா... உள்ளாட்சி அமைப்புகள்ல தலைவர்கள் பதவிக்காலம் இருந்தப்ப, மின் கட்டணம் செலுத்தலைன்னா உடனடியா கேள்வி கேப்பாங்களாம். இப்ப கேக்கறதில்லையாம்.
''வேறு ஏதாவது திட்டம், 'பர்ச்சேஸ்'னா 'பில் பெற்று 'செக்' கொடுத்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். ஆனா மின் கட்டணம் செலுத்துனா யாரு கமிஷன் தரப்போறா. இதனாலதான், இதைக் கண்டுக்கறதில்லையாம்''
''மித்து... நெருப்பெரிச்சல் பகுதில, தனியார் ஒருத்தரு பெரிய மண்டபம் கட்டியிருக்காங்களாம். இது இட்டேரி புறம்போக்கு நிலத்துல இருக்குறது தெரியவந்திருக்கு... கலெக்டர் நடத்திய குறை கேட்பு கூட்டத்தில் புகார் அளித்தும் நோ ரெஸ்பான்ஸ்.
அதிகார மமதையில்பழிவாங்கலாமா?
''அக்கா... பாண்டியன் நகர் மின்வாரிய அலுவலகத்துக்கு அருகே, ரிசர்வ் சைட்ல இருந்த, மரங்கைளை வெட்டிட்டாங்கன்னு சொல்லியிருந்தோம்ல... அரசு இடத்தில தான் மரத்தை வெட்டியிருக்கிறாங்கங்கறது தெரிஞ்சதால, வருவாய்த்துறை 3,300 ரூபா அபராதம் விதிச்சுருக்கு... ஆனா யார் கட்டுவாங்கங்கறதுதான் இப்பக் கேள்விக்குறிக்கா''
''மித்து... தெக்கலுார்ல ஒருத்தர் வீட்டை ஒட்டி கூடுதலா ஒரு அறை கட்டினாராம். விதிமுறை மீறல்னு சொல்லி வீட்டு இணைப்பை, முன்னறிவிப்பு இல்லாம தற்காலிக இணைப்பா மாத்திட்டாராம், மின் வாரிய அதிகாரி.
''வசூல் பண்ற எதிர்பார்ப்புல இப்படிப் பண்ணியிருக்காரு. வீட்டு உரிமையாளர் உயரதிகாரிங்களுக்குப் புகார் கொடுத்தாராம். விசாரிச்சதுல அதிகாரியோட துஷ்பிரயோகம் அம்பலமாச்சு... அதிகார மமதைல அப்பாவிகள் மீது ஆபீசர்ஸ் பழிவாங்குற அநியாயம் எப்பத்தான் நிக்குமோ!'
சித்ரா கவலைப்பட்டாள்.
''சித்ராக்கா... கோல்டன் நகர்ல ரெண்டு கோஷ்டி தாக்கிட்டிருக்காங்க... சிலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கு... உடனே வாங்கன்னு அழைப்பு வந்துச்சாம். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல இருந்து பதறியடிச்சு 108 ஆம்புலன்ஸ் கிளம்பிப்போச்சாம்.
''அழைச்ச எண்ணுக்கு தொடர்பு கொண்டப்ப 'புல் ரிங்' போய் 'கட்' ஆச்சாம். மறுமுறை தொடர்பு கொண்டப்ப 'சுவிட்ச் ஆப்'னு வந்துச்சாம். ஆம்புலன்ஸ் டிரைவர் விசாரிச்சப்ப, அப்படியொரு சம்பவமே நடக்கலைன்னு தெரியவந்துச்சாம்.
''இப்படியெல்லாமா, ஆம்புலன்ஸ்காரங்கள அலைக்கழிக்கவைப்பாங்க''
''மித்து... அவிநாசி யூனியன் ஆபீஸ்ல கண்காணிப்பு கேமரா இணைப்பு துண்டிச்சுக்கிடக்குது. இதனால, ராத்திரில தான் 'வசூல்' வேலையெல்லாம் நடக்குதாம்''
''சித்ராக்கா... பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப்ல, சாலையோரம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை துாள் கிளப்புது தெரியுமா? குறுக்குச்சந்து, மறைவான இடங்கள்ல கஞ்சா பொட்டலமும் விக்கிறாங்க.
மித்ரா வேதனைப்பட்டாள்.
''மித்து... தாராபுரம் ரோடு வழியாக நகர்ல நுழையுற இடத்துல செக்போஸ்ட் இருக்கு... இங்க டூட்டில இருக்கிற குட்டி அதிகாரி தலைமைல இருக்குற போலீஸ்காரங்க, பழநி போன்ற இடங்கள்ல இருந்து விற்பதற்காக ஏத்திட்டு வர்ற கொய்யா, பைனாப்பிள்னு கிலோ கணக்குல பழங்களைப் பிடுங்கிட்டுத்தான் விடுறாங்களாம்.
''சிட்டி அதிகாரிக்கு இந்த மாதிரி விஷயத்தைக் கொண்டுபோனா மீட்டிங் நடக்குறப்ப வெளுத்து வாங்கிடறாராம். ஆனா, பல விஷயம், அதிகாரிக்குத் தெரியாம நடந்துக்கிட்டேதான் இருக்குது''
ஒப்பந்த நிறுவனத்தினர்மதிக்காதது ஏன்?
''சித்ராக்கா... திருப்பூர் மாநகராட்சில ஒரு தனியார் நிறுவனம்தான் அதிகப்படியா ரோடு, சாக்கடைக்கால்வாய் பணியெல்லாம் செய்றாங்களாம்.
''இந்த நிறுவனம் 'பெரிய' அமைச்சரோட நேரடிச் செல்வாக்கு இருக்கிறதால, கவுன்சிலர்கள், அதிகாரிகளை மதிக்கிறதே இல்லை. இஷ்டம்போல் வந்து பணி மேற்கொள்றதுனால, குடிநீர் குழாய் எங்க இருக்குன்னு தெரியாம உடைச்சிடறாங்களாம். குடிநீர் பிரச்னையால வார்டு மக்கள் தவிக்கிறாங்க.
''கவுன்சிலர்கள் கேட்டா, உங்களுக்குப் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லைங்கறாங்களாம். அதிகாரிங்களும் ரொம்பவே பயப்படறாங்களாம்''
''ரெண்டாவது மண்டலக்கூட்டத்துல கவுன்சிலருங்க ஆதங்கத்தை வெளிப்படுத்தினாங்க... என்ன நடக்கும்னு பாப்போம்''
''சித்ராக்கா... தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கிறதுக்காக கலெக்டர் ஆபீசுக்கு வந்த 'செல்வ'மான எம்.எல்.ஏ., எல்லார்ட்டயும் யதார்த்தமா பேசிட்டிருந்தாராம்.
''பக்கத்துல நின்னுட்டிருந்த ஒருத்தர் பாக்கெட்டில் ஸ்மார்ட் போன் வச்சிருந்தார். எம்.எல்.ஏ.,வோட 'அபிமானி' ஒருத்தரு, அவரு ரகசியமா எம்.எல்.ஏ.,வை படம் பிடிச்சதா நினைச்சு ஸ்மார்ட் போனை வாங்கி, கேலரி உள்பட எல்லாத்தையும் செக் பண்ணிப்பார்த்திருக்காரு. ஒன்னும் இல்லேன்னு தெரிஞ்சதும், போனை திருப்பிக்கொடுத்திருக்காரு. அவரோ, 'போன் பண்ணோனும்னா பண்ணீட்டு கொடுங்கண்ணா'ன்னு அசால்டா சொல்லிட்டாராம்''
கலகலத்தாள் மித்ரா.
பேனர் விவகாரம் விழா தாமதம்
''மித்து... நீர்நிலையெல்லாம் ஆக்கிரமிக்கக்கூடாதுன்னு கோர்ட் ஆர்டர் இருக்கு. ஆனா, பல்லடம் நகராட்சி ஓடையில, நில அளவை, பொதுப்பணித்துறை சம்பந்தப்பட்ட சில ஆபீசருங்களே வீடு கட்டி ஜம்முன்னு இருக்காங்களாம்.
''அவிநாசி மடத்துப்பாளையத்துல பகுதி நேர ரேஷன் கடை திறந்தாங்க... ரெண்டாவது வார்டான இங்கே அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கவிதாதான் கவுன்சிலர். அவிநாசி நகர அ.தி.மு.க., சார்பில பிளக்ஸ் பேனர் வச்சிருந்தாங்க...
''திறப்பு விழாவுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜை அழைச்சிருந்தாங்க... அ.தி.மு.க., பேனரை பார்த்து எம்.எல்.ஏ., கடுப்பாயிடுவாரோன்னு நெனச்ச தி.மு.க.,காரங்க, தங்களோட கொடிகளைக் கட்டி அ.தி.மு.க., பேனர்களை மறைச்சதோட, ஏட்டிக்குப் போட்டியா தி.மு.க.,வும் பேனர் வச்சிருக்காங்க.
''கடைசில ரெண்டுதரப்பும் பேனர்களை அகற்றம் சம்மதம் தெரிவிச்சாங்க... காலை 9:00 மணிக்கு நடக்க வேண்டிய விழா மதியம் 1:00 மணிக்குத்தான் நடந்துச்சு... எம்.எல்.ஏ., வரலை... பேரூராட்சித்தலைவர் தான் திறந்துவச்சாங்க''
''இவ்ளோ நடந்திருக்கா பேனர் பஞ்சாயத்து''
ஆச்சர்யப்பட்டாள் சித்ரா.
''திருமுருகன்பூண்டி நகராட்சில திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்ட இணை திட்டமா 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான விழா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க... நகராட்சி 25வது வார்டு கவுன்சிலர் பாரதியும், தி.மு.க., வார்டு செயலாளர் சிவஞானமும் தங்களோட பேரை, பேனரில் போடாமல் புறக்கணிச்சதா நகராட்சி தலைவர் மற்றும் பிற கவுன்சிலர்களோட வாக்குவாதம் செஞ்சிருக்காங்க... பாரதி நகரில் நடைபெறும் விழாவிற்கு, பாரதி நகர்னு குறிப்பிடலேன்னு சண்டை போட்ருக்காங்க...''
''சமாதானம் செய்றதுக்கு பெரும்பாடாகிப் போச்சாம்''
கோவிலுக்குப் புறப்பட்டனர், சித்ராவும், மித்ராவும்.