/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
ஆடுகளை குதறும் நாய்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லையா? ஆளுங்கட்சி நிர்வாகியாக மாறிய 'ஏட்டய்யா'
/
ஆடுகளை குதறும் நாய்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லையா? ஆளுங்கட்சி நிர்வாகியாக மாறிய 'ஏட்டய்யா'
ஆடுகளை குதறும் நாய்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லையா? ஆளுங்கட்சி நிர்வாகியாக மாறிய 'ஏட்டய்யா'
ஆடுகளை குதறும் நாய்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லையா? ஆளுங்கட்சி நிர்வாகியாக மாறிய 'ஏட்டய்யா'
ADDED : ஜன 14, 2025 06:42 AM

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு பொருட்கள் வாங்க, கடைவீதிக்கு சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் ஒரு இறைச்சிக் கடையை பார்த்த மித்ரா, ''ஏங்க்கா... ஒவ்வொரு வருஷமும் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி போன்ற குறிப்பிட்ட சில நாட்கள்ல, கறிக்கடைகள், மதுக்கடைகளை திறக்க கூடாதுன்னு, மாவட்ட நிர்வாகம் உத்தரவு போடும். ஆனால், நிறைய இடங்கள்ல, இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, அவை திறந்து தான் இருக்கும்,''
''குறிப்பா, கிராமப்புறங்கள்ல இருக்கற கறிக்கடைக்காரங்க எந்த தயக்கமும் இல்லாம கடையை திறந்து விக்கிறாங்க. அதேமாதிரி, பல 'பார்'களில், சரக்கு தாராளமா விக்கிறாங்க. இந்த வருஷமும் திருவள்ளுவர் தினத்தன்று கறிக்கடைகள் திறந்து தான் இருக்கும். இதையெல்லாம் ஆபீசர்ஸ் கண்டுக்குவாங்களான்னு பார்ப்போம்,'' என்றாள்.
''ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில் சொத்துக்களை மீட்கும் பணி, கடந்த ஆறு மாதமாக சுணக்கமாகிவிட்டது. வருவாய்த்துறையில் இருந்து சென்ற தாசில்தார்களுக்கும் ஓய்வு மாதிரிதான். ஏன் நிலம் மீட்பு பணி தாமதமாக இருக்குதுன்னு, கோவில் வட்டாரத்துல கேட்டப்ப, ஆக்கிரமிப்பாளருங்க ஆளும்கட்சி வட்டாரத்துக்குள்ள இருந்தா, ஒத்துழைப்பு கிடைப்பதில்லை,''
''நிலம் மீட்பு பணிக்கு ஆளுங்கட்சி செல்வாக்குள்ள நபர்களா இருந்தா போலீஸ் பாதுகாப்பு கிடைக்கறதில்லை; இதனால் தான், பெண் அலுவலர்கள் இருக்கும் பகுதியில் நிலம் மீட்பு பணியில் தாமதம் ஆகிறது,'' என்ற சித்ரா, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''சிவன் சொத்து குல நாசம்னு நல்லா தெரிஞ்சும்கூட, கோவில் நிலத்தை அபகரிச்சு வச்சுருக்கிறவங்களை என்னன்னு சொல்றது...'' ஆதங்கப்பட்ட மித்ரா, ''கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில், மாசம், 1,200 ரூபாய் பென்சன் வாங்கனும்னா, மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களாக இருக்க கூடாதாம். இதனால், மகளிர் உரிமை தொகை வர்றத ரத்து செய்யலாம்னு போய் கேட்டா, தாலுகா ஆபீஸ்ல ஒண்ணும்செய்ய முடியாதுனு திருப்பி அனுப்றாங்களாம். ஒரு சில அதிகாரிகள், 'நீங்க தி.மு.க., ஆபீஸ்ல போய் பாருங்க... அவங்கதான் செய்ய முடியும்'னு அனுப்பி வைக்கறாங்களாம். அப்படின்னா, பயனாளிகளை எப்படி தேர்வு செஞ்சிருப்பாங்கனு, மக்கள் கண்டபடி திட்டிட்டு இருக்காங்க. உரிமைத்தொகை வேண்டாம்னு சொல்றவங்கள நீக்கிட்டு, விடுபட்ட பயனாளிகளுக்கு கொடுக்க அதிகாரிங்க ஏதாச்சும் செய்யலாம்னு மக்கள் எதிர்பார்க்கறாங்க,'' சித்ரா சொன்னதும், ''அது சரிதானுங்களே...'' என ஆமோதித்தாள் மித்ரா.
ஆடுகளை நாய்கள்கொல்வது தெரியலையா
வழியில் ஆடுகள் கூட்டமாக போவதை பார்த்த மித்ரா, ''காட்டுப்பன்றி என்பது வனவிலங்கு. அதனால், விவசாயிகளுக்கு பாதிப்பு என்று கூறியதால், வனத்துறையினர் சுட்டு கொல்லலாம் என்று அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தெருநாய்களை கட்டுப்படுத்த தவறியதால், ஆடு வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறிவிட்டது. இருப்பினும், அதற்கு நிவாரணம் கொடுக்கவோ? வனத்துறை மூலமாக கட்டுப்படுத்தவோ, தமிழக அரசு எந்த அறிவிப்பும் செய்யாதது, விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி. தாசில்தார், 45 நாளில் தீர்வு கிடைக்கும்னு எழுத்துப்பூர்வமா கொடுத்தும், சரியான நடவடிக்கை இல்லைனு, விவசாயிகள் ரொம்ப 'அப்செட்' ஆகிட்டாங்க..''
''இருக்காதா பின்ன...'' சொன்ன சித்ரா, ''ரொம்ப நாள் எதிர்பார்த்த மாதிரி, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கும் அறிவிப்பு, பட்ஜெட்ல வெளியாக வாய்ப்பிருக்கு. அதற்கு பின்னராவது, திருப்பூரை சேர்ந்தவங்க மாவட்ட செயலாளர் ஆகமுடியுமா?னு, அ.தி.மு.க.,வுல் இப்பவே பேச்சு எழுந்துள்ளது. கட்சிரீதியாமூன்று மாவட்டம் இருந்தும், உடுமலை, மடத்துக்குளத்தை சேர்ந்தவங்களே மாவட்ட செயலாளராக இருக்காங்க. தொடர் தோல்வியை மாத்தி காண்பிக்க, இனியாவது திருப்பூரை சேர்ந்தவங்களை மாவட்ட செயலாளராநியமிக்கலாமேன்னு, கட்சிக்குள்ள சில நிர்வாகிகள் சத்தமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. பல்லடம் தொகுதியை மீண்டும் மாநகர் மாவட்டத்துல இணைக்கும் வரை, ரொம்ப சிரமம்ங்கிற புலம்பலும் உண்டு,'' என்றாள்.
''புதிய ஆபீசர், தனக்கு கீழ் இருக்கிற ஒவ்வொருத்தரின்நடவடிக்கையும் கண்காணித்து வர்றாருங்க்கா...'' என போலீஸ் மேட்டரை ஆரம்பித்த மித்ரா, ''சிட்டி போலீசில், கடந்த வாரம் புதிய ஆபீசர் வந்து பொறுப்பேற்றதும், பத்திரிகையாளர்களை சந்திச்சாரு. அதில, ரெண்டு பேர், அதிமேதாவித்தனமா, கேள்வி கேட்டாங்க. ஆனாலும், சிரிச்சிட்டே பதில் சொன்னாரு. சிட்டியை வலம் வந்து சுத்திப்பார்த்திட்டு, தனக்கு கீழ் பணியாற்றும் ஒவ்வொருத்தரும் எப்படி பட்டவங்க என, கண்காணிக்றாராம். இதனால, பொங்கலுக்கு பின் தன்பாணியிலான அதிரடி ஆட்டத்தை துவங்கிடுவாருன்னு, போலீஸ்காரங்களே பேசிக்கிறாங்க...'' என்றாள்.
வீதியில் சண்டை போட்டடுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ்
கடைவீதி பார்க்கிங் வண்டியை நிறுத்தி, இருவரும் பொருள் வாங்க சென்றனர். அப்போது, ''பணத்துக்காக டுபாக்கூர் நிருபர்கள் அடிச்சுக்கிட்டாங்க... தெரியுமா, மித்து,'' கேட்டாள் சித்ரா.
''இல்லீங்க்கா...''
''சிட்டியில ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பல இடங்களில் டுபாக்கூர்ஸ் சிலர், வியாபாரிகளை மிரட்டி நடக்கும் பணம் பறிப்பது ஜாஸ்தியாயிடுச்சு. சமீபத்தில், வேறு ஒருவரின் பெயரில், 'டாஸ்மாக்' மதுக்கடையில வசூல் செஞ்சிட்டாருன்னு தெரிஞ்சு, இன்னொரு குரூப் அங்க போனப்ப, ரெண்டு குரூப்ஸ் மத்தியில சண்டை வந்து, ஆளாளுக்கு அடிச்சுகிட்டாங்க. தகவல் தெரிஞ்சு போன, போலீஸ்காரங்க சமாதனப்படுத்தியிருக்காங்க. இப்ப, ரெண்டு தரப்பிலும், மாத்தி மாத்தி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்களாம்...''
''கலெக்டரும், கமிஷனரும் தான் இந்த டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களுக்கு ஒரு எண்ட் கார்டு போடணுங்க்கா,'' சீரியஸாக சொன்ன மித்ரா, ''காங்கயத்துல, கிராமங்களை இணைக்க கூடிய ரோடுகளில் எஸ்.ஐ., தலைமையிலான போலீஸ் சிலர், வண்டிகளை புடிச்சு, வசூல் பட்டைய கிளப்புறாங்க. டிரைவர்களிடம், 5 ஆயிரம் ரூபாய் வரை டிமாண்ட் பண்ணி, பணம் இல்லாட்டி, 'ஜிபே' செஞ்சிடுன்னு சொல்றாங்களாம்,''
''இதுல கொடுமை என்னன்னா, அந்த நம்பர், அப்பகுதியில் வசிக்கும் தி.மு.க.,வோட முக்கிய பிரமுகரின் நம்பர் என்பது தெரிஞ்சு, பணம் அனுப்பியவர்களில் அப்படியே 'ஷாக்' ஆயிட்டாங்களாம். இப்படி ரெசீப்ட் கொடுக்காம, கவர்மென்ட்டுக்கு, வருவாய் இழப்பு ஏற்படுத்தி, தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பும் ஆட்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மத்தவங்க திருந்துவாங்க...'' என்றாள்.
ஆளுங்கட்சி நிர்வாகியாகமாறிய ஏட்டய்யா...
ஒரு கடை சுவற்றில், 'அமைச்சரே வருக...' என்ற போஸ்டரை பார்த்த, மித்ரா, ''அதே சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, ஊதியூர், காங்கயம் என ரெண்டு ஸ்டேஷன்களையும் சேர்த்து ஒற்றர் படையில் பணியாற்றும் ஏட்டு ஒருவர், உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முக்கிய புள்ளிகளின் மனங்கோணாமல் நடந்து கொள்கிறார். குறிப்பாக, அப்பகுதி வி.வி.ஐ.பி.,க்கு, இவர் காட்டும் விசுவாசத்துக்கு எல்லையே இல்லையாம்,''
''அவர் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னைகளிலும், அவருக்கு சப்போர்ட்டாகவே, மேலிடத்துக்கு தகவல் அளிப்பார். ஒரு கட்டத்தில், டென்ஷனான, அதிகாரி ஒருவர், ''ஆளும்கட்சிக்கு பி.ஏ.,வாக மறிட்டீங்களா...'' என கடிந்து கொண்டதும் நடந்தது. இப்படியாக, ரெண்டு ஸ்டேஷன் பகுதியில் நடக்கும் விஷயங்களை, யாரையும் பகைத்து கொள்ளக்கூடாது என்ற பாணியில், பல விஷயங்களை மூடி மறைத்து விடுவதால், அதுபோன்றவற்றை, ஆபீசர்களே விசாரிக்கின்றனர். இதனால், சில போலீசாரின் அடாவடி வசூல், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல தகவல்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறதாம்...'' என்றாள் மித்ரா.
''இப்பதான் புது ஆபீசர் வந்துட்டாரு. அவர் இந்த விஷயத்தை பார்த்துப்பாருன்னு நினைக்கிறேன் மித்து,'' என்ற சித்ரா, ''பா.ஜ., உட்கட்சிஎலக் ஷனில் நடந்த கூத்து தெரியுமா?'' என கேள்வி எழுப்பினாள்.
''தெரியாது...'' என்ற மித்ராவிடம், ''மண்டல பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில, வீரபாண்டி மண்டல தலைவருக்கான தேர்தலில், முக்கிய நிர்வாகிகளின் ஆதரவோடு, ஒரு பெண் போட்டியிட்டார். அதில், 14 ஓட்டு வாங்கி, அப்பெண் வெற்றி பெற்றார். ஆனால், மாவட்ட தலைமையோ, வேறு ஒரு நபரை தலைவராக அறிவித்துவிட்டதாம். இதனால், அப்பகுதி மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த 10 தலைவர் பதவிக்கான தேர்தலிலும் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளதாக, சீனியர்கள் புலம்புகின்றனராம்...'' என்றாள் சித்ரா.
''சேர்ந்தே இருப்பது தேசிய கட்சிகளும், கோஷ்டிகளும்,'' என சிரித்த மித்ரா, ''ஜி.எச்.,சில், 65 வயதை கடந்த சிலர் வேலை பாக்கறாங்க. அதுபோன்றவர்கள் வேலையை விட்டு செல்லும் போது, அவர்களுக்கு சேர வேண்டிய இ.எஸ்.ஐ., - பி.எப்., தொகை முழுமையாக சேர்வதில்லை. எல்லாம் 'சரியா' போயிருச்சுனு, 'கணக்கு' காட்றாங்களாம். இப்படித்தான், சுகாதார ஊழியராக பணியாற்றிய ஒரு மூதாட்டி, பணியை விட்டு செல்லும்போது, மற்ற ஊழியர்களிடம், 'இத்தன நாள் வேலை செஞ்சு ஒன்னும் கெடைக்கலே...' என கண்ணீர் விட்டு கதறியதோடு, 'கஷ்டப்பட்டு, நான் சம்பாதிச்ச காசை, சாப்பிடறவங்களுக்கு நோய் தான் வரும்னு,' ஆபீசுக்கு வெளியே நின்னு சாபமிட்டுட்டு போயிட்டாங்களாம். அவரை பார்த்து பரிதாப்பட்ட மற்ற ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினாங்களாம். ஜி.எச்.,-ல் நடக்கும் இந்த பிரச்னைக்காக பல போராட்டம் நடத்தியும், கலெக்டர்கண்டுக்கவே இல்லையாம்...'' ஆதங்கப்பட்டாள்.
பொங்கல் வைக்க தேவையான பொருட்களை வாங்கி புறப்பட்ட போது, அவ்வழியே வந்த சித்ராவின் தோழி, 'பொங்கல் நல்வாழ்த்துகள்' என்று சொல்லவே, இருவரும் கோரஸாக,''பொங்கலோ பொங்கல்...'' என சொல்லி கிளம்பினர்.