sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

ஆடியோ வெளியிட்டு மிரட்டும் லேடி... அடக்கி வாசிக்கறதுல ஆபீசர்ஸ் பலே 'கில்லாடி'

/

ஆடியோ வெளியிட்டு மிரட்டும் லேடி... அடக்கி வாசிக்கறதுல ஆபீசர்ஸ் பலே 'கில்லாடி'

ஆடியோ வெளியிட்டு மிரட்டும் லேடி... அடக்கி வாசிக்கறதுல ஆபீசர்ஸ் பலே 'கில்லாடி'

ஆடியோ வெளியிட்டு மிரட்டும் லேடி... அடக்கி வாசிக்கறதுல ஆபீசர்ஸ் பலே 'கில்லாடி'


ADDED : ஜூலை 08, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அக்கா, போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து பக்கமும் பணம் பயங்கரமா பாயுது,'' என்று வந்ததுமே ஆரம்பித்தாள் மித்ரா.

''சிட்டியை விட்டு ஒதுக்கப்புறமா உள்ள மங்கலகரமான ஸ்டேஷனில் போட்டிபோட்டு கொண்டு மாமூல் வாங்குறாங்களாம். 'டாஸ்மாக்' ஆரம்பித்து, ஸ்டேஷனுக்கு வரக்கூடிய வில்லங்கமான பெட்டிஷன்களை விசாரிப்பது என, ஒவ்வொன்றுக்கும் பணம் தானாம்,.யார் அதிகமா வாங்குறது என்று, போட்டியே நடக்குதுன்னா பாத்துக்கோங்க''

''இது மட்டுமின்றி, பல கேஸ்களில் 'அட்ஜஸ்ட்மென்ட்' வேலையும் நடக்குதாம். சமீபத்தில், யார் யார் எவ்வளவு வாங்குறாங்கனு, லஞ்ச பட்டியலை சிலர், பெரிய ஆபீசர் கவனத்துக்கு கொண்டு போயிட்டாங்க. இத விசாரிக்க ஒருவரை, பெரிய ஆபீசர் நியமிச்சாரு. ஆனால, அந்த 'குளுகுளு' ஆபீசர் பெட்டிஷனை போட்டு அதுமேல உட்காந்துட்டாரு. இப்படி அன்பிட்டாக இருக்கும், அந்த அதிகாரி, நமக்கென்னன்னு இருக்காரு. இது விஷயத்தில பெரிய ஆபீசர் சாட்டைய சுழற்றினா பரவாயில்ல...'' மூச்சிரைக்க சொன்னாள் சித்ரா.

''அக்கா நீங்க போலீஸ் லஞ்ச பட்டியலை வாசிக்கிறீங்க. ஆர்.டி.ஓ., ஆபீஸ் பத்தி நான் சொல்றேன் கேளுங்க,'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.

''அக்கா, நார்த் ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு உட்பட்ட நார்த், சவுத், அவிநாசின்னு எல்லா ஆபீஸ்களிலும் கட்டுக்கடங்காத லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதாம். சில டிரைவிங் ஸ்கூல் மற்றும் தனி நபர்களை நியமிச்சும், தினமும் புல்லா கல்லா கட்றாங்க. குறிப்பாக, இன்ஸ்.,கள் மேல மாறிமாறி பெட்டிஷன் பறக்குதாம். இத கவனிக்க வேண்டிய அத்துறை பெரிய ஆபீசர் மவுனமாக இருக்காரு,''

''பணமில்லாமல் அங்க எந்த வேலையும் நடப்பதில்லை. இதனால, டிரைவிங் ஸ்கூல் லேடி ஒருத்தரு, அதிகாரிகளை மிரட்டுற தொனியில ஆடியோ வெளியிட்டு சவால் விட்டிருக்காங்க. பணத்தை வாங்கிட்டு, தப்பு பண்ணுங்கன்னு பகிரங்கமாக மிரட்டுற அந்தம்மா மேல, 'வெங்கி' ஆபீசர், எந்த ஆக் ஷனும் எடுக்காம 'மிக்ஸர்' சாப்பிட்டு இருக்கிறார் போல. போற போக்கை பாத்தா, லஞ்சத்தை அங்கீகரிச்சு, இந்த வேலைக்கு இவ்ளோ பணமும்னு பட்டியல் வச்சாலும் வைப்பாங்க போல...'' என வெளுத்து வாங்கினாள் மித்ரா.

''மித்து, நீ சொல்றது நுாத்துக்கு நுாறு உண்மை தான். ஆனா, யாரு பூனைக்கு மணி கட்டுவாங்கன்னு தெரியல'' என்று ஆதங்கப்பட்டு, ''எலக் ஷனுக்கு இன்னும் 11 மாசம் இருக்குது. அதுக்குள்ள தேர்தல் களம் சூடு பிடிச்சுடுச்சு பார்த்தியா...'' என்றாள் சித்ரா.

''ஆமாங்க்கா இந்த தடவ போட்டி கடுமையா இருக்கும் போல. அ.தி.மு.க.,வில இப்பவே பிரசாரத்தை துவக்கிட்டாங்க. திருப்பூரை பொறுத்தவரை திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம் தொகுதிகள்ல ஏற்கனவே, அ.தி.மு.க., கை ஓங்கியிருக்கு. மாவட்ட பொறுப்பு வகிக்கிற பொள்ளாச்சிக்காரரு, 'இந்த முறை, விட்ட தொகுதிகளையும் பிடிச்சாகணும்; ஓட்டு அறுவடைக்கு என்னவெல்லாம் செய்யணும்'ன்னு, யோசனை சொல்லி, நிர்வாகிகளுக்கு நிறைய 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காராம். போன தடவை, சவுத் தொகுதியில கூட, சிறுபான்மை மக்களின் ஓட்டுகள் கை நழுவி போனதால தான், அ.தி.மு.க., தோத்திருச்சு. அந்த குறையை இந்த தடவை சரி பண்ணனும்னு சொல்லி இருக்காங்களாம்...''

''திருப்பூர்ல, தி.மு.க.,வோட 'வீக்னஸ்' தெரிஞ்சுக்கிட்டு தான், அந்த கட்சியோட தலைமை, ரெண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர்ன்னு பதவி போட்டு, களப்பணியில கூடுதல் கவனம் செலுத்த சொல்லியிருக்காங்க,'' பதில் சொன்னாள் சித்ரா.

இப்படியுமா விசுவாசம்!


''தி.மு.க.,ன்னு சொன்னதும் தான் எனக்கொரு மேட்டர் ஞாபகத்துக்கு வருதுங்க்கா...'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.

''தி.மு.க.,வுல மாவட்டங்களை பிரிச்சாங்கள்ல, அப்போ மாநகர மாவட்ட தி.மு.க.,வுல அவைத் தலைவரா இருந்த 'கோல்டுகிங்', மாநகர வடக்கு மாவட்ட பொறுப்புக்கு வந்துட்டாராம். ஆனா அவரு, தெற்கு மாவட்ட வி.ஐ.பி.,க்கு 'செல்வ'மானவருக்கு, செல்லமானவராம். இதனால, அவருக்கு தான் 'எலக்ஷன்' சமயத்துல வேல செய்வேன்னு, அடம் பிடிக்கிறாராம்,'' என்றாள்.

''வடக்குல அவருக்கு பொறுப்பு இருக்கே... அத என்ன செய்வாராம்? கோஷ்டி பிரச்னை எங்க கொண்டு போய் விடுமோ...'' சந்தேகம் கிளப்பினாள் சித்ரா.

அடுத்த 'வலை'


''மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை 'சுத்தம்' பண்ற வேலை நடந்துக்கிட்டு இருக்குல்ல...,'' என அடுத்த மேட்டருக்கு தாவி, ''அந்த துறை மூலமா, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் தர்றதுல நடந்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்துக்கு வந்துச்சுல்ல. இது சம்மந்தமா சென்னையில இருந்து வந்த பெரிய ஆபீசர்ங்க விசாரணை செஞ்சுட்டு போனாங்க. இப்போ, மாவட்ட ஆபீசரை, ராணிப்பேட்டைக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க''

''இதுல இன்னொரு மேட்டரும் இருக்கு மித்து. 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்ட ஆபீசருக்கு அடுத்த நிலையில இருக்கற ஒருத்தர், 12 வருஷமா அதே ஆபீஸ்ல தான் இருக்காராம். இப்போ அவர் மேலயும் விசாரணை வலையை விரிச்சிருக்காங்களாம்...'' என்றாள் சித்ரா.

''எப்படியோ, 'டிபார்ட்மென்ட்' சுத்தமான போதும்; மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில விளையாடக்கூடாதுல்ல. அவங்களுக்கு முறையா கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் தடைபடக்கூடாது'' என, தனது சமூக அக்கறையை காண்பித்தாள் மித்ரா.

'களங்கம்' தீருமா?


''அதே மாதிரி, சிட்டி போலீஸ்லேயும் 'சுத்தம்' செய்ற வேலையை, பெரிய ஆபீசர் செஞ்சுட்டு வர்றாராம். நிறைய 'டாஸ்மாக்' பார்கள்ல, 24 மணி நேரமும் சரக்கு வித்திட்டு இருப்பாங்கள்ல. ஆனா, இப்பெல்லம், 10 மணிக்கு மேல, 'பார்' திறந்திருந்தா, நடவடிக்கை எடுக்கணும்னு, சிட்டி ஆபிசர் 'ஸ்டிரிக்டா' சொல்லிட்டாராம். அதையும் மீறி திறந்திருந்தா, சம்மந்தப்பட்ட எல்லைக்குள்ள இருக்கற போலீஸ் ஸ்டேஷன் ஆபீசர்க்கு, விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பிடராறாம். அதே மாதிரி 'நைட்' சமயத்துல, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு திடீர் 'விசிட்' போறாராம்,''

''இதனால போலீஸ்காரங்க எந்நேரமும் 'அலர்ட்டா' இருக்க வேண்டியிருக்காம்'' என்றாள் சித்ரா.

''இதே மாதிரி, பல்லடம் பக்கமும் கொஞ்சம் கவனம் காட்டினாங்கன்னா பரவாயில்ல. ஆறுமுத்தாம்பாளையம் வில்லேஜ்ல இருக்கற ஒரு கிளப்புல சூதாட்டம் நடந்ததா சொல்லி, பல்லடம் போலீஸ்காரங்க, சிலரை 'அரெஸ்ட்' பண்ணாங்க. ஆனா, இதுல ஒரு முக்கிய புள்ளியை விட்டுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''முக்கியப் புள்ளின்னு சொல்லிட்ட... அப்புறம் எப்படி, நடவடிக்கை எடுப்பாங்க...'' என சிரித்த சித்ரா, ''தனிப்படைகளை கலைக்கணும்ன்னு, டி.ஜி.பி., சொன்னாருல்ல. ஆனா, நம்ம ஊர்ல இனி தனிப்படைகளை கலைச்ச மாதிரி தெரியல. நுண்ணறிவு பிரிவு, உளவுப்பிரிவுன்னு, ஏகப்பட்ட ஒற்றர் படை பிரிவுகள் இருக்கு, இதுல கூட, கொஞ்சம் பேரு சின்சியரா இல்லைன்னு, டிபார்ட்மென்ட்டுக்குள்ளயே பேசிக்கிறாங்க. சரியான தகவலை, சரியான நேரத்துல, பெரிய ஆபீசர்ங்க காதுக்கு கொண்டு போய் சேர்க்காததால தான், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளைன்னு நிறைய நடக்குதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள்.

''கன்ட்ரோல் ரூமை கவனிக்கிற பெரிய ஆபீசர், தனக்கு கீழே வேலை பார்க்குறவங்களுக்கு அதிகமா டார்ச்சர் தர்றாராம். 'வேலையே வேண்டாம் சாமி, விட்டா போதும்'ன்னு, ஒன்னு ரெண்டு பேரு வி.ஆர்.எஸ்.,ல போறதுக்கு கூட ரெடியாகிட்டாங்கன்னா பார்த்துக்கோயேன்,'' என்றாள் சித்ரா.

'பணம்' புரளும் ஆபீஸ்


''பத்திரப்பதிவு துறைல, லஞ்சம் கரைபுரண்டு ஓடுதாமே...'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''அது எப்பவும் நடக்கிறது தானேக்கா...,'' சிரித்தாள் மித்ரா.

''அது என்னமோ கரெக்ட் தான் மித்து. இதுல, என்னென்னா, 50 லட்சம் ரூபாய்க்கு மேல மதிப்பு இருக்கற சொத்துகளை பத்திரப்பதிவு செய்யணும்னா, மதுரைல இருக்கற ஆபீஸ்ல இருந்து அனுமதி வாங்கணுமாம். அவங்க தான், அந்த சொத்துக்கு எவ்வளவு 'ஸ்டாம்ப் டியூட்டி' போடணும்ன்னு 'அமவுன்ட்' நிர்ணயம் செய்வாங்களாம். ஆனா, அனுமதி வர்றதுக்கு ரொம்ப 'லேட்' பண்றாங்களாம். ஆனா, அங்கிருக்கிறஆபீசர்களை 'கவனிச்சா' மட்டும் சீக்ரம் வேலை நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.

''பணம் பாதாளம் வரை பாயும்னு சொல்றது உண்மை தான்...'' என்ற சித்ரா, ''சேதி சொல்ற துறை சார்பில், பிரஸ், டிவி ரிப்போர்ட்டர்களுக்கு தமிழக அரசு முத்திரை பதிச்ச 'ஸ்டிக்கர்' கொடுப்பாங்களாம். ஆனா, மக்கள் மத்தியில பிரபலமான பத்திரிக்கை, டிவி-யில் வேல பார்க்கிறவங்களுக்கு, தர்றது இல்லை. சென்னையில இருந்து 'ஸ்டிக்கர்' வரலைன்னு சொல்லிடறாங்களாம். ஆனா, கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, கல்லா கட்றதையே தொழிலா வச்சிருக்கற 'பிரஸ்'காரங்களுக்கு ஸ்டிக்கர் கொடுத்திட்டாங்க...,'' என தொடர்ந்தாள்.

''இதுல, இன்னொரு சீக்ரெட்டும் இருக்கு. சேதி சொல்ற துறைல இருக்கற பெரிய ஆபீசர் முதற்கொண்டு அங்கு இருக்கற ஒவ்வொருத்தரும் என்னென்ன தில்லாலங்கடி வேலை செய்றாங்க. ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும், 'பிரஸ்'க்காரங்க பேரை சொல்லி எவ்வளவு காசு வாங்குறாங்க, அதை யார், யாருக்கு எவ்வளவு பிரிச்சு கொடுக்கிறாங்கிற, எல்லா விஷயத்தையும், இவங்க தெளிவா தெரிஞ்சு வைச்சிருப்பாங்களாம்,''

''சேதி சொல்ற துறை மூலமா அவங்க கேட்டது கிடைக்கலைன்னா, தெரிஞ்சு வைச்சிருக்க ரகசியத்தை, வெளிய கசிய விட்டு, பிரபலமான மீடியாவுல கூட செய்தியா வர வச்சுடுவாங்களாம். இதுக்கு பயந்து தான், அவங்களுக்கு சேதி சொல்ற ஆபீஸ்ல 'முதல் மரியாதை'ன்னு பேசிக்கிறாங்க'' என, ரகசியம் உடைத்தாள் சித்ரா.

''எலெக்ஷன்' நெருங்கிடுச்சுல்ல... அந்த செக்ஷன்லேயும் களையெடுப்பு இருக்க வாய்ப்பு இருக்குன்னு ஒரு 'டாக்' ஓடுது...'' என்றாள் மித்ரா.

'நோட்டீஸ்' போதுமா?


''பைபாஸ் ரோட்டில சர்வீஸ் பஸ்கள் சில, செங்கப்பள்ளிக்கு வராமல் 'டிமிக்கி' கொடுத்திட்டு இருந்தாங்க. இதனால, பஸ்களை பலமுறை சிறைபிடிச்சு, பல கட்ட போராட்டத்தில், மக்கள் ஈடுபட்டனர். உடனே, 'ஐ வாஷ்' ஆய்வு நடத்திட்டு டிரான்ஸ்போர்ட் அதிகாரிகள் போயிட்டாங்க. மறுபடியும் ஒரு தனியார் பஸ் செங்கப்பள்ளிக்கு வராமல் போனது. இதனை பிடித்த அதிகாரிகள் அபராதம் விதிக்காமல், நோட்டீஸ் மட்டும் கொடுத்திட்டு எச்சரிச்சு அனுப்பிட்டாங்க. இவ்வளவு நாள் போராடி, கடைசியில இப்படி பண்ணிட்டாங்களேன்னு மக்கள் நொந்துட்டாங்களாம்...''

''அக்கா, இருக்காதா பின்ன. இந்த துறை மட்டுமல்ல... எல்லா துறையிலும் இப்படித்தான் நிலைமை,'' என்ற மித்ரா, ''பொங்கலுாருக்கு பக்கத்துல, கள்ளிப்பாளையம் கிராமத்தில, எலவந்தி கிராமப்புற செவிலியர் குடியிருப்புடன் துணை சுகாதார மையம் உள்ளது. அடுக்கடுக்கான புகார்களால், பணியாற்றியவர் பல்லடத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். ஆனாலும், அவர் குவாட்டர்ைஸ காலி செய்யாமல், செல்லப்பிராணிகள், செடிகள் வளர்ப்பு என அருகில் கூட யாரும் போக முடியாத நிலை உள்ளது. வீட்டைக் காலி செய்யாமல் உள்ளதால், சிகிச்சைக்கு வருவோருக்கு நடுரோட்டில் வைத்துத் தான் சிகிச்சை அளிக்கும் நிலையே உள்ளதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்...'' சொன்னாள்.

''எலக் ஷனை மனசில வச்சுட்டு, ஆளுங்கட்சியில பல வேல பண்றாங்க. அதில ஒன்ணு, இலவச வீடு கட்டும் திட்டம் மும்முரமாக நடக்குது. அவிநாசி பக்கத்தில உள்ள சேவூரில், புறம்போக்கு இடம், பொது வழித்தடத்தில் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஓ.கே., பண்ணிட்டாங்க. இந்த விஷயத்துல, மக்கள் உஷாரா இல்லாட்டி, நாளைக்கு அத இடிங்கன்னு சொல்வாங்க பாரேன்...'' சிரித்தாள் சித்ரா.

புது ஏசி... புது டேபிள்


''அக்கா.. அதே அவிநாசி மேட்டர் ஒன்னு சொல்றேன். சிறப்பு எஸ்.எஸ்.ஐ.,யா உள்ள ஒரு லேடி, பெட்டிஷன் கொடுக்க வருபவர்களை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல் அலைக்கழிக்க வைக்கிறாராம். எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி பைசல் பண்ணிக்கோங்கன்னு அனுப்பிடு விடுகிறார்ன்னு போலீஸ்காரங்களே சொல்றாங்க. அதிலும், குறிப்பாக, மனுதாரரையே குற்றவாளி போல பாவிச்சு திட்டுவாராம். அதனால, 'பழ'மான லேடி இருந்தா யாரும் பெட்டிஷன் தர்றதில்லையாம்...''

''எத்தன பிரச்னை வந்தாலும், இந்த போலீஸ்காரங்களை மட்டும் மாத்தவே முடியாதுடி,'' என ஆவேசப்பட்ட சித்ரா, ''அதே ஊர்ல முனிசிபாலிட்டிக்கு அதிகாரிய வந்துள்ளவர், வந்தவுடனே தன்னோட ரூமுக்கு புது ஏசி, புது டேபிள், புது சேர்னு இஷ்டத்துக்கு மக்கள் வரிப்பணத்துல சும்மா பூந்து வெளையாடுகிறார். இது கூட பரவால்ல. அவர் பொறுப்பேற்றதற்கு அப்புறம், பிறப்பு இறப்பு பதிவு செய்யறதில்லைன்னு கவுன்சிலர்கள் புகார் வாசிக்கிறாங்களாம்,''

''இப்படி அக்கறை காட்டுற திருப்பதி பெருமாள் பேர் கொண்ட அந்த புது ஆபீசர், மற்ற வேலைகளுக்கு ஆபீசிர் நியமிக்க எந்த ஸ்டெப்புமே இதுவரைக்கும் எடுக்கலை. இதனால, இறப்பு சான்று வாங்க முடியாம, பலரும் இன்சூரன்ஸ், வழக்குக்கு போக முடியாம மக்கள் பலரும் தவிக்கின்றனர்.

ஆனால், ஆபீசர் வழக்கம் போல, போட்டோவுக்கு போஸ் கொடுக்கற வேலய மட்டும் கரெக்டா பண்ணிட்டு இருக்காருன்னு, கவுன்சிலர்கள் குமுறல் இப்ப அதிகமாக கேட்குது,'' என்ற சித்ரா, மித்ராவுக்கு சுடச்சுட டிகிரி காபியும், ஆனியன் பக்கோடாவும் கொடுத்தாள். மித்ரா சாப்பிட ஆரம்பித்தாள்.






      Dinamalar
      Follow us