/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
'விடுங்க தோழா... பாத்துக்கலாம்!'
/
'விடுங்க தோழா... பாத்துக்கலாம்!'
ADDED : செப் 23, 2024 11:47 PM
ருத்திகை என்பதால், சித்ராவும், மித்ராவும் வாலிபாளையம் முருகன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்து விட்டு, அருகிலுள்ள பூங்காவினுள் நுழைந்தனர்.
''உயர் அதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாம தடுமாறுகின்றனர் மித்து,'' ஆரம்பித்தாள் சித்ரா.
''யாரக்கா சொல்றீங்க...''
''சிட்டி உயரதிகாரி தினமும் ஸ்டேஷன் நிலவரம், எடுக்கப்பட்ட நடவடிக்கை என அனைத்து 'அப்டேட்'களை கேட்டு வருகிறார். ஆனால், அவரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அதிகாரிகள், கேள்விக்கு பதில் சொல்ல முடியாம தடுமாறுகின்றனர்,''
''இதுமட்டுமல்ல மித்து. டெய்லி ஆபீசுக்கு போகும்போது, ஏதாவது ஒரு ஸ்டேஷன் பகுதியில் ரவுண்ட் அடிக்கிறாராம். இதனால, ஸ்டேஷன் ஆபீசர்ஸ் எப்பவும், 'ஹைஅலர்ட்' ஆக இருக்காங்க,'' முடித்தாள் சித்ரா.
''கரெக்ட்தாங்க்கா. அதிகாரின்னா நெருப்பு மாதிரி இருக்கோணும். இதேபோல, ரூரலிலும் நடந்தா பரவாயில்லை. மாவட்டத்தின் 'மூலை'யில இருக்கிற ஊர் ஸ்டேஷன் லிமிட்டில், சட்டவிரோத செயல்கள் தலைவிரித்து ஆடுகிறதாம்,''
'ஆட்டம் உங்களுதுபணம் எங்களுது'
''குறிப்பா, சிலுக்குவார்ப்பட்டியில் 'வெட்டாட்டம்' நடப்பதுபற்றி தெரிந்து போலீஸ் போயிருக்காங்க. அங்க பறிமுதல் செஞ்ச பணத்தை, தங்களோட 'பாக்கெட்டில்' போட்டுட்டு, சின்ன அமவுன்ட் கணக்கு காட்டிட்டாங்க. இந்தமாதிரி பல பிரச்னைகள் ஸ்டேஷனில் இருக்கு. இப்படி நடக்குதுன்னு, 'ஒற்றர்படை' ஏட்டய்யா, எதையும் கண்டுக்கறதில்லையாம். எஸ்.பி.,க்கும் சொல்றதில்லையாம்...'' என்றாள் மித்ரா.
''இப்படியிருந்தா குற்றம் எப்பிடி குறையும்,'' என்ற சித்ரா, ''காளைக்கு பேர் போன ஊரில், தெற்கு ஒன்றியத்தில் கட்சிக்கு வந்து சில ஆண்டுகளே ஆன, பஞ்சாயத்து முன்னாள் தலைவர், முக்கிய பதவியை பிடிக்க லட்சங்களை வாரி இறைத்துள்ளார்,''
''இப்ப இருக்கற நிர்வாகியை, ஆறு மாசத்துல துாக்கிட்டு, தனக்கு பதவி தருவதாக மாவட்ட கவுன்சிலரின் கணவர் ஒருவர் வாக்குறுதி தந்தார். ஆனால், ரெண்டு வருஷம் ஓடியும் ஒன்னும் நடக்கல. இதுக்காக, ஒரு காரையும் கிப்ட பண்ணியும் ஊஹூம். பணமும் போய், பதவியும் கிடைக்கல புலம்புவதாக அவரது ஆதரவாளர்களிடம் ஒரே 'கசமுசா'ன்னு பேசிக்குறாங்க,'' என்றாள்.
இது வேற மாதிரி...
''அக்கா, ராயபுரத்தில, முறையா பெர்மிஷன் வாங்கி, கார்ப்பரேஷனுக்கு வாடகை செலுத்தி, 'இண்ட்கோ நிறுவனத்தின்' டீக்கடை ஒருத்தர் வச்சிருக்காங்க. இந்த கடைக்கு பக்கத்திலேயே சிலர், எந்த அனுமதியும் இன்றி கடைகள் வச்சதோடு, பலருக்கும் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். அதோடில்லாம, இது குறித்து யார்கிட்டயும் 'மூச்' விடக்கூடாதுன்னு மிரட்டிருக்காங்க...''
''ஆக்கிரமிப்பு செஞ்சவங்களுக்கு சப்போர்ட்டா, 'பால'மான கார்ப்பரேஷன் வி.ஐ.பி., அங்க போய், கடை வச்சிருக்கிறது பூராவும் எங்க கட்சிக்காரங்க. எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. உங்களுக்கு என்ன ஆகுதோ அத மட்டும் பார்த்துக்கோங்க,'ன்னு செல்லமா 'வார்ன்' பண்ணிட்டு போனாராம்...''
''மாசா மாசம், 9 ஆயிரம் ரூவா வாடகை கட்டும் வியாபாரிக்கு இல்லாத பாதுகாப்பு, எந்த அனுமதியும், வாடகையும் தராத ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு உள்ளது. இதுதான் அவங்க 'சித்தாந்தமா','ன்னு விவரம் தெரிந்தவர்கள் ஆதங்கப்பட்டனராம்...''
''அடக்கொடுமையே...,'' என்ற சித்ரா, ''அதே ஏரியாவில், ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்துல உள்ள வழியை மூடக்கூடாதுன்னு, அப்பகுதி பொதுமக்களை துாண்டி போராட்டம் நடத்த வச்சாராம், அதே வி.ஐ.பி.,'' என்றாள்.
கூட்டிக்கழிச்சு பாருகணக்குப் புரியும்
''அதிலென்ன லாபம்'' மித்ரா கேட்டாள்.
''சொல்றேன் கேளு மித்து, அந்த வழியை கடந்து சென்றால், அதே ஏரியாவில் அவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. சரியான தடம் இல்லாததால், அப்ரூவல் வாங்க முடியாமல், 'சைட்' விக்க முடியலையாம். இப்ப ரயில்வே அந்த வழிய அடைச்சிட்டங்கான்னா, ஏரியாவுக்கு போகக் கூட வழியில்லை,''
''இத கேள்விப்பட்ட வி.ஐ.பி., கட்சியின் டில்லி பிரதிநிதி, ''விடுங்க தோழா... ரயில்வே ஆபீசர்கிட்ட நான் பேசிக்கிறேன்னு ஆறுதல் சொன்னாராம். இத கேள்விப்பட்ட சூரிய கட்சிக்காரங்களுக்கு அதிர்ச்சியாயிடுச்சாம்...'' விளக்கினாள் சித்ரா.
பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடப்பதை பார்த்த மித்ரா, ''அக்கா. இவுங்க அக்கறையோடு பசுமையை வளர்க்கிறாங்க. ஆனால், சிட்டியில ஏகப்பட்ட இடங்கள்ல வளர்ந்த மரங்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டி வீழ்த்துவது அதிகமாகி விட்டது,''
''குறிப்பா, மங்கலத்தில மின்வாரிய ஊழியர்கள், பராமரிப்பு பணிங்கிற பேரில், மரக்கிளைகளை முறிப்பதால், மரங்கள் முழுமையாக சேதம் ஆகின்றன. பராமரிப்பு பணியில் பொக்லைன் யூஸ் பண்ணி மரத்தை தொட வேண்டாமுன்னு பசுமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்,'' என்றாள்.
''கரெக்ட் மித்து,'' என்ற சித்ரா, ''போன வாரம், டி.ஆர்.டி.ஏ., ஆபீசிலுள்ள ஒருத்தர், பஞ்சாயத்துகளுக்கே போய் 'ஆடிட்' பண்றான்னு பேசினோமில்ல. இத தெரிஞ்சுகிட்ட மாவட்ட ஆபீசர் டென்ஷன் ஆகி, 'உங்க வேலையை மட்டும் பாருங்க... வெளியே போய் எதுக்கு ஆடிட் பண்றீங்கன்னு,' செம டோஸ் விட்டுட்டாராம்,'' என்றாள்.
''அக்கா, அலகுமலையில கோவில் நிலத்துக்கு, என்.ஓ.சி., கொடுத்ததால், பெரிய சர்ச்சை ஆயிடுச்சு. சம்பந்தப்பட்ட இந்த மேட்டரில், ஒரு பெரிய்யய... 'அமவுன்ட்' கைமாறிடுச்சாம். இதனால, சட்டுப்புட்டுன்னு நிலத்தை வித்துட்டாங்களாம்...''
''அப்பதானே கொடுத்த காசை வசூல் பண்ண முடியும். மித்து, துணை முதல்வர் அறிவிப்பு வருதோ இல்லையோ, மேயர் ஆபீசில், அவரோட படத்தை இப்பவே வச்சுட்டாராம்,'' சித்ரா சொன்னதும், ''எதுக்கு வம்புன்னு நினைச்சு வச்சுட்டார் போல...'' மித்ரா சிரித்தாள்.
விளையாட்டில் 'விளையாட்டு'
''அக்கா, நார்த் ஜோனில், போட்டி முழுமையாக முடியும் முன், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வாங்கிய பள்ளி குறித்து அறிவிச்சுட்டாங்களாம். அந்த லிஸ்டை பத்திரிகை ஆபீஸ்களுக்கும் அனுப்பிட்டாங்க. மறுநாள் வேறு ஒரு போட்டி தனியே நடக்க, 'இவங்க அதுக்குள்ள வரமாட்டாங்கன்னு' சமாளித்து விட்டனராம்,''
''விளையாட்டிலும் இப்படியா...'' கேட்ட சித்ரா, ''பல்லடம் முனிசிபாலிட்டி பெண் கவுன்சிலரும், அவரது ஹஸ்பென்டும், அஞ்சாவது முறையா கட்சி மாறிட்டாங்க தெரியுமா...'' என்றாள்.
''என்னக்கா... சொல்றீங்க'' ஆச்சரியமாக கேட்டாள் மித்து.
''ஆமான்டி மித்து.எலக் ஷனில் பா.ஜ.,வில் நின்னு ஜெயிச்ச கையோடு, மாவட்ட துணை தலைவரானார். கொஞ்ச நாள் கழிச்சு, தம்பதி சகிதமாக, காங்., கட்சிக்கு தாவினாங்க. சில நாள் கழிச்சி, மறுபடியும் பா.ஜ.,வில். இப்ப மறுபடியும் காங்கிரசாம்...'' என்று மேலும் சொன்ன சித்ராவிடம், ''ஈஸ்வரா... எனக்கு தலையே சுத்துது. மேற்கொண்டு சொல்லாதீங்க...'' என சத்தம்போட்டு சிரித்தாள் மித்ரா.
''இன்னும் ஒரு முக்கியமான மேட்டர் பாக்கி இருக்கு...'' என பீடிகை போட்ட சித்ரா, ''சூலுாரில் ஏர்போர்ட்டுக்காக லேண்ட் எடுக்கிற விஷயத்துல, மரங்களுக்கும் சேர்த்துதான் வேல்யூ போடறாங்க. இதுல, பல்லடம் ரெவின்யூ ஆபீசர்ஸ், மரமே இல்லாதவங்களுக்கும், மா, பலா, வாழைன்னு இஷ்டத்துக்கு கணக்குல சேத்திட்டாங்ளாம். அதுக் காக 'சம்திங்' வாங்கிட்டு, ஜோரா வேல செய்றாங்களாம்...'' என்றதும், ''அக்கா... மழை வர்ற மாதிரி இருக்கு. கிளம்பலாம்...'' என்றதும், ''ஓகே.,'' என்று எழுந்தாள் சித்ரா.