/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
போலீஸ் 'எடுபிடி' அமோக வசூல் வேட்டை; 'போக்சோ' ஆசாமி சிக்கியும் 'கோட்டை'
/
போலீஸ் 'எடுபிடி' அமோக வசூல் வேட்டை; 'போக்சோ' ஆசாமி சிக்கியும் 'கோட்டை'
போலீஸ் 'எடுபிடி' அமோக வசூல் வேட்டை; 'போக்சோ' ஆசாமி சிக்கியும் 'கோட்டை'
போலீஸ் 'எடுபிடி' அமோக வசூல் வேட்டை; 'போக்சோ' ஆசாமி சிக்கியும் 'கோட்டை'
ADDED : மே 06, 2025 06:32 AM

கத்திரி வெயில் சூட்டைத் தணிக்க 'ஜில்'லென்ற மோரைப் பருகியவாறே பேசினாள் மித்ரா.
''சித்ராக்கா... எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு ஒரு வருஷமா பொறுப்பு முதல்வர் தானே இருந்தாங்க... இப்ப, மேட்டுப்பாளையம் கல்லுாரில பணிபுரிஞ்ச ஸ்ரீகானப்பிரியாவை முதல்வரா நியமிச்சிருக்காங்களாமே''
''மித்து... முதல்வர் நியமிச்சவுடனே ஸ்டூடண்ட்ஸ் சந்தோஷப்பட்டிருக்காங்க... ஆனா, அவங்க இந்த மாசத்தோட ரிடையர்ட் ஆயிடுவாங்கன்னு சொன்னதும் 'பொசுக்'ன்னு ஆயிடுச்சாம்''
இருவரும் மோரைப் பருகி ஆசுவாசமாயினர்.
''மித்து... நீட் தேர்வு நடந்து முடிஞ்சுடுச்சு. நீட் தேர்வு நடத்துறது தொடர்பா கடந்த வாரம் கலெக்டர் தலைமைல ஆலோசனைக்கூட்டம் நடந்துச்சு. சி.இ.ஓ., - டி.இ.ஓ., என கல்வித்துறையினர் கலந்துக்கிட்டாங்க...
''கூட்டத்துல ஆலோசனை நடத்திய விவரத்தை வெளியில சொல்லல... மாணவர்களுக்கான அறிவுரையும் வழங்கப்படல. ஏன் இவ்வளவு கமுக்கமா இருக்கறாங்க... ஒண்ணுமே புரியல''
''இல்லக்கா... மாநில அரசு 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்குது... செய்திக்குறிப்பா கொடுத்தா மேலிடத்துல இருந்து 'பயர்' பண்ணீருவாங்களோன்னு பயம்தான் காரணம்''
''ஓ... இப்படியொரு உள்குத்து இருக்குதோ...''
புன்னகைத்தாள் சித்ரா.
'செல்லாது... செல்லாது'
''மித்து... திருமுருகன்பூண்டி நகராட்சில கழிவுநீர் கால்வாய் துாய்மைப்பணில 25 பேருக்கு மேல வேலை பார்க்குறாங்களாம். ஆனா, சம்பளம் குறைவா தான் கொடுக்குறாங்களாம்.
''சம்பளத்துல அம்பது ரூபா சேர்த்து வாங்கித்தர்றோம்ன்னு நகராட்சித் தலைவர், துணைத்தலைவர் தரப்புல உறுதி கூறியிருக்காங்க... ஆனா, எதுவும் நடக்கலை.
''இதனால, நகராட்சி அலுவலகம் முன்னாடி துாய்மைப்பணியாளர்கள் வேலை பார்க்காம அமர்ந்துட்டாங்களாம்.
''இதுல என்ன கூத்துன்னா, துாய்மைப்பணியைக் கான்டராக்ட் எடுத்த நிறுவனம், மன்ற உறுப்பினர்கள் பலரையும் 'கவனிச்சுடாறாங்க'. இந்த தொகையில இருந்து வேலை செய்றவங்களுக்கு ஒரு தொகையைக் கொடுக்கலாம்னு சிலரு சொல்ல, மத்தவங்க 'செல்லாது... செல்லாது'ன்னுட்டாங்களாம்''
''அவங்க வாங்குறதே கமிஷன்; அதுல போயி பங்கு வைப்பாங்களா?''
அம்பலமாக்கினாள் மித்ரா.
குவார்ட்டர் வேணுமாம்...
''அக்கா... ஊரக வளர்ச்சி முகமை மூலமா சில ஊராட்சிகள்ல நாற்றுப்பண்ணை பராமரிக்கறாங்க.... நுாறு நாள் திட்டத்துல வேலை பார்க்கறவங்க மூலமா இந்தப்பணி நடந்துச்சு.
''இதுல வேலை பார்க்கறவங்களுக்கு சம்பளம் ஒழுங்கா வர்றதில்ல... இதனால நாற்றுப்பண்ணை பராமரிப்பு முடங்கிடுச்சாம்.
''வேறு வழியில்லாம, யார், யாரையோ எல்லாம் கூட்டிட்டு வந்து பராமரிக்க வைக்கிறாங்களாம். இதுல சிலரு 200, 300 ரூபாயோட குவார்ட்டர் பாட்டிலும் கேக்குறாங்களாம்''
''மித்து... மரம் வளர்ச்சியா... மது மலர்ச்சியா''
'ரைமிங்' உடன் சொன்னாள் சித்ரா.
தப்பிய போக்சோ ஆசாமி
''மித்து... திருப்பூர் மாநகர போலீஸ்ல பலருக்கும் சம்பளப் பட்டுவாடா இன்னும் நடக்கலையாம். வீட்டுக்கடன் உள்ளிட்ட தவணை செலுத்துறவங்க, வெளியில வட்டிக்கு வாங்கிப் படாதபாடு படறாங்களாம்''
''அக்கா... திருப்பூர் தெற்கு ஸ்டேஷன்ல அதிகாரில துவங்கி போலீஸ்காரங்க வரைக்கும், பலரும் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருக்காங்களாம். மொபைல்போன்ல பொதுமக்கள் அழைப்பை ஏத்துக்கறது இல்லையாம்.
''அதேபோல ஸ்டேஷன் லிமிட்ல நடக்குற விஷயங்களை முறையா கமிஷனர்ட்ட கொண்டு போறதில்ல. பாதியை விழுங்கிட்டுத்தான் சொல்றாங்களாம்''
''மித்து... போக்சோ வழக்குல தொடர்புடைய ஒடிசா ஆசாமியைப் பிடிக்க, திருப்பூருக்கு ஒடிசா போலீஸ் வந்திருந்தாங்க...
''அந்த ஆசாமியை அரெஸ்ட் செஞ்சதுக்கப்புறம், டிக்கெட் முன்பதிவு செய்ய எஸ்.ஐ., சென்றுவிட ஒரேயொரு பெண் போலீஸ் மட்டும்தான் காவலுக்கு இருந்திருக்காங்க.
''அந்த ஆளு, பெண் போலீசைத் தள்ளிவிட்டுட்டு தப்பிச்சுட்டானாம்... இதுதொடர்பா உள்ளூர் ஸ்டேஷன்ல புகார் கொடுத்த பின்னாடி, ஒடிசா போலீஸ் கிளம்பிட்டாங்க...
''ஒடிசா ஆசாமி, சாவகாசமாக ரயில் ஏறி தப்பிச்சது தெரியவந்திருக்கு''
''அக்கா... குற்றவாளிகளைக் கைது செய்றதே கஷ்டம். இதுல தப்பவிடலாமா... உள்ளூர் போலீஸ்காரங்களும் உதவியிருக்கலாமே''
மித்ரா சரியாகத்தான் சொன்னாள்.
சடங்காக கூட்டம்
''வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காலேஜ் ரோட்டுல இருக்கிற செக்போஸ்ட்ல போலீஸ்காரங்க வாகனத்தணிக்கைக்கு எடுபிடியா ஒருத்தரை வச்சிருக்காங்க அக்கா...
''அந்த எடுபிடியோ போலீஸ் மாதிரி நடந்துக்கிறாராம். மிரட்டி, போலீஸ்காரங்களுக்கு வசூல் பண்ணித்தர்றதே அந்த எடுபிடிதான். எடுபிடியும் பணத்தை 'லபக்'கிடறாராம். கமிஷனர் நடவடிக்கை எடுப்பார்ன்னு நம்பலாம்''
''சித்ராக்கா... கலெக்டர் தலைமைல மாதாமாதம் சாலை பாதுகாப்புக்கூட்டம் நடக்குது.
''வருவாய், போலீஸ், நெடுஞ்சாலை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கலந்துக்கிறாங்க.
''ஒரு கூட்டத்துல தெரிவிக்கிற புகார், குறைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குன்னு அடுத்த கூட்டத்தில விளக்கமா சொல்லணும். ஆனா, இந்த நடைமுறை பின்பற்றப்படுறதே இல்ல.
''புகார் மீது நடவடிக்கை இல்லைன்னு சொன்னா, உரிய அதிகாரி, 'அதைப் பார்க்கிறேன்'னு சொல்லி 'சிம்பிளா' முடிச்சுடுறாராம். 'ஏன் நடவடிக்கை எடுக்கலே'ன்னு கேட்குறதும் இல்லையாம்.
''இதனால வெறும் சடங்காதான் கூட்டம் முடியுதமாம்''
மித்ரா வருத்தத்துடன் கூறினாள்.
அது எந்த 'சக்தி?'
''மித்து...நெருப்பெரிச்சல் பகுதில அரசு இடத்தை ஆக்கிரமிச்சு மண்டபம் கட்டி தனி நபர் வருமானம் பார்த்துட்டு வந்தாராம்.
''ஆதாரத்தோட புகார் கொடுத்தும் மாசக்கணக்கில் நடவடிக்கை இல்லை.
''குறைகேட்புக் கூட்டத்தின்போது தொடர்ந்து வலியுறுத்தியதால, இப்ப அந்த இடத்துல அரசு நிலம்ன்னு போர்டு வச்சிருக்காங்க...
''ஆக்கிரமிப்பை அகற்ற விடாத 'சக்தி' எதுங்கற கேள்விக்குத்தான் பதில் இல்லை''
போலீசே ஆக்கிரமிக்கலாமா?
''சித்ராக்கா, மங்கலம் நால்ரோட்ல கண்காணிப்பு பணிக்காக சிறிய ெஷட் மாதிரி போலீசார் போட்ருந்தாங்க... இப்ப அதையே கான்கிரீட் கட்டடம் மாதிரி பெரிசா கட்றாங்க. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிற இடத்துல, போலீசே, இந்த மாதிரி இடத்தை ஆக்கிரமிக்கலாமான்னு பொதுமக்கள் கேட்குறாங்க''
''அதிகாரிகள் பொதுமக்களோட கருத்தை மதிப்பாங்கன்னு நெனைக்கிறேன் மித்து...''
நம்பினாள் சித்ரா.
தி.மு.க., - அ.தி.மு.க., உற்சாகம்
''அக்கா... சென்னைல நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்துல பங்கேற்றுவிட்டு திரும்பிய திருப்பூரைச் சேர்ந்த செயலர்கள் சுறுசுறுப்பா வேலையைத் துவங்கீட்டாங்களாம். தேர்தல்ல மனு தாக்கல் செஞ்ச மாதிரி 'பீலிங்'கோட இருக்காங்களாம்''
''கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்ன்னு எல்லாத்து கிட்டயும் இப்பவே வேலை வாங்கி, ரெடியா இருந்தாதான், தேர்தலை எளிதா எதிர்கொள்ள முடியும்ன்னு நினைக்கிறாங்க
''மித்து... திருப்பூர்ல அ.தி.மு.க.,வினரும் உற்சாகத்தோட தான் இருக்காங்களாம். மே தினப் பொதுக்கூட்டத்துல தேங்காய் உடைச்சு மேடையின் இருபுறமும் வச்சிருந்தாங்க. எலுமிச்சம்பழத்தை அறுத்து வீசிய பின், மேடை அமைச்சிருக்காங்க... பொதுக்கூட்டத்துக்கு வந்த பெண்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள சேலை கொடுத்தாங்களாம்... இதை பெண்கள் எதிர்பார்க்கலையாம். ஏற்கனவே 300 ரூபாய் கொடுத்துத்தான் அழைச்சுட்டும் வந்திருக்காங்க...''
''பெண்கள் மகிழ்ச்சியாயிட்டதால, ஓட்டெல்லாம் கிடைச்சுரும்னு சந்தோஷப்படறாங்களோ...''
''மித்து... கத்திரி வெயில்ல இன்னொரு டம்ளர் 'ஜில்'ன்னு மோர் குடிச்சா தான் எனக்கும், உனக்கும் சந்தோஷம்''
மோரை இருவரும் பருகத் துவங்கினர்.
''துாய்மைப்பணியைக் கான்டராக்ட் எடுத்த நிறுவனம், மன்ற உறுப்பினர்கள் பலரையும் 'கவனிச்சுடாறாங்க'. இந்த தொகையில இருந்து வேலை செய்றவங்களுக்கு ஒரு தொகையைக் கொடுக்கலாம்னு சிலரு சொல்ல, மத்தவங்க 'செல்லாது... செல்லாது'ன்னுட்டாங்களாம்''
''அ.தி.மு.க., பொதுக்கூட்டத்துக்கு வந்த பெண்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள சேலை கொடுத்தாங்களாம்... இதை பெண்கள் எதிர்பார்க்கலையாம். ஏற்கனவே 300 ரூபாய் கொடுத்துத்தான் அழைச்சுட்டும் வந்திருக்காங்க...''