/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
பொங்கல் விழாவில் 'பொங்கிய' அரசியல்!
/
பொங்கல் விழாவில் 'பொங்கிய' அரசியல்!
ADDED : ஜன 13, 2026 10:38 AM

''ஹா ய்... சித்ராக்கா. பொங்கல் பரிசு வாங்கியாச்சா...?'' என கேட்டவாறே, சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
''ம்ம்... வாங்கிட்டேன் மித்து. ரேஷன் கடைகள்ல, அந்தந்த பகுதி ஆளுங்கட்சி பொறுப்பாளர்கள் நின்னுக்கிட்டு, ரேஷன் கடை ஊழியர்கிட்ட இருந்து, பணத்தை வாங்கி, அவங்க கையால தான் கொடுத்தாங்க. 'இது... சி.எம். தர்ற பொங்கல் பரிசு, வர்ற எலக்ஷன்ல மறுந்துடாதீங்க...'ன்னு, ஓட்டு கேட்காத குறையா, பொங்கல் பணத்தை கொடுத்தாங்கன்னா பார்த்துக்கோயேன்...'' என்றாள் சித்ரா.
''நீங்க சொல்றத பார்த்தா, 'எலக்ஷன்' வரும் பின்னே; பொங்கல் பரிசு பணம் வரும் முன்னேங்கற மாதிரில்ல இருக்கு. எலக்ஷனுக்கு ஓட்டுப் போடறதுக்கு, 200, 500 தர்றதுக்கு முன்னாடி, 'அட்வான்ஸா' மூவாயிரம் ரூபாய் கொடுத்த மாதிரியில்ல சொல்றீங்க...'' சிரித்தாள் மித்ரா.
திடீர் 'ஞானோதயம்' ''இதுல, ஒரு விஷயம் என்னென்னா மித்து... சர்க்கரை கார்டு இருந்தால், பொங்கல் பரிசு தொகுப்பு கிடையாது. இது தெரியாம, நிறைய பேரு, ஏமாந்து திரும்பி போனாங்க. அதோட, பல வயசானவங்களோட விரல் ரேகை, 'பயோ மெட்ரிக்'ல விழாததால, அவங்களும் ஏமாந்து போயி இருக்காங்க,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.
'ஆமாங்க்கா... நீங்க சொல்றது 'கரெக்ட்' தான். ரெண்டு நாள் முன்னாடி, மதியம், 3:00 மணி வாக்கில, நம்ம எம்.பி. கலெக்டருக்கு ஒரு 'லெட்டர்' அனுப்பினாரு. அதுல, வயசான பலருக்கு, விரல் ரேகை விழாததால பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியல. நடவடிக்கை எடுங்க,'ன்னு சொல்லியிருக்காரு. இன்னும் ஒரு, 3 மணி நேரம் கழிச்சு, இன்னொரு 'லெட்டர்ல,' 'சர்க்கரை கார்டு இருக்கிறவங்களுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கோணும்னு, சொல்லியிருக்காரு'' என்றாள் மித்ரா.
''போன அ.தி.மு.க. ஆட்சியிலயே இந்த மாதிரி பிரச்னை கிளம்ப, சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டா மாத்தறதுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. அவரும் தொடர்ந்து எம்.பி.யாத்தானே இருக்காரு... இத்தன நாள் விட்டுட்டு, இப்ப தான், இந்த பிரச்னை தெரிய வருது போலன்னு, பப்ளிக் பேசிக் கிறாங்க...'' என்றாள் சித்ரா.
''அட... இப்பவாச்சும் ஞாபகம் வந்துச்சேன்னு சந்தோஷப்படுங்க்கா. ஆதார் 'அப்டேட்' பண்ணாத்தான் விரல் ரேகை சரியா விழும். 'ஆதார்' அப்பேட் பண்றது இப்பெல்லாம் பெரிய வேலையாகிடுச்சு. எந்த 'சென்டருக்கு' போனாலும் மக்கள் கூட்டம் தவிக்கிறாங்க; அலைமோதுறாங்க. அங்கங்க சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செஞ்சு, ஆதார் 'அப்டேட்' வேலையை எளிமையாக்க எம்.பி.ங்கற முறையில அவரு ஏற்பாடு செய்யலாம்ல...'' ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் மித்ரா.
ஆபீசர்களுக்கு 'சபாஷ்' “மித்து, நாம போன வாரம் பேசின நிறைய விஷயங்களை, கவனிச்ச, சம்பந்தப்பட்ட துறை ஆபீசர்ங்க, அதிரடியா 'ஆக்ஷன்' எடுத்திருக்காங்க மித்து; அவங்களுக்கு முதல்ல ஒரு சபாஷ் சொல்லணும்...'' பேச்சை மாற்றினாள் சித்ரா.
''ஓ...வெரி குட். அப்படி என்ன 'ஆக்ஷன்' எடுத்தாங்க...'' ஆர்வமானாள், மித்ரா.
''குடிபோதையில டூவீலர் ஓட்டிட்டு போய், ஊத்துக்குளி போலீஸ்கிட்ட சிக்கினவருக்கு சிபாரிசு பண்ண போன ஒரு போலீஸ்காரர், டென்ஷன்ல, ஸ்டேஷன்ல இருந்த 'கவர்ன்மென்ட் லேப் டாப்' டை உடைச்சு, 'அட்ராசிட்டி' பண்ணார்ன்னு பேசினோம்ல. அவரை மாவட்ட ஆபீசர், 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாராம்,''
''அதே மாதிரி, வி.ஐ.பி. 'பந்தோபஸ்த் டியூட்டி'க்காக, செங்கப்பள்ளி ரோட்ல 'டியூட்டி' பார்த்துட்டு இருந்த, காங்கயம் ஸ்டேஷன்ல வேல பார்க்குற ஒரு போலீஸ்காரருக்கும், ஊத்துக்குளி ஸ்டேஷன் போலீஸ்காரர் ஒருத்தருக்கும் வாக்குவாதம் வர, காங்கயம் போலீஸ்காரர், அவரை தள்ளி விட்டுட்டார்னு பேசினோம்ல; அவரையும், 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம்..,'' என்றாள் சித்ரா.
''அதேபோல, காங்கயம் சப்-டிவிஷன்ல இருக்கற ஒரு ஸ்டேஷன்ல வேல பார்த்துட்டு இருந்த லேடி போலீசை, பல்லடம் பக்கம் மாத்திட்டாங்க. அவரு என்னடான்னா, 'என் 'டிரான்ஸ்பர்'க்கு காரணமான ஒவ்வொருத்தரையும் சும்மா விடமாட்டேன்'ன்னு சபதம் போட்டிருக்காங்களாம்...'' சிரித்தாள் மித்ரா.
''அப்ப எந்தளவுக்கு செல்வாக்கா இருந்திருப்பாங்கன்னு பாரு மித்து,'' பதிலுக்கு சிரித்தாள் சித்ரா.
''சிட்டி நார்த் போலீசில் ஒரு ஆபீசரோட 'டார்ச்சர்' தாங்காம சிலரு, 'டிரான்ஸ்பர்'ல போறதுக்கு இருந்தாங்களாம். அந்த ஆபீசரையும் 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம். இதனால, அந்த டிபார்ட்மென்ட் போலீஸ்காரங்க நிம்மதி பெருமூச்சு விட்டிருக்காங்க. அதேபோல, மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல்ல, நோயாளிகளுக்கு தர்ற சாம்பார், தண்ணி மாதிரி இருக்கு; கூட்டு பொறியலும் சரியா தர்றது இல்லைன்னு பேசினோம்ல. இத கவனிச்ச பெரிய ஆபீசர், தினமும் நோயாளிகளுக்கு தர்ற உணவுல, ஒரு 'பிளேட்' என் டேபிளுக்கு வந்தாகணும். நான் 'ஓகே' சொன்னாத்தான், நோயாளிகளுக்கு கொடுக்கணும்ன்னு, சொல்லிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.
''சபாஷ் மித்து. இந்த மாதிரி, ஒவ்வொரு ஆபீசர்களும் ஆக்ஷன் எடுத்தா, நிறைய விஷயங்களை சரி பண்ணலாம்....'' என்றாள் சித்ரா.
இ.பி. ஆபீசர்கள் 'ஷாக்' ''பாண்டியன் நகர்ல, 15 வீடுகளை கொண்ட ஒரு 'அபார்ட்மென்ட்' இருக்கு. ஆனா, அந்த கட்டடத்துக்கு 'டிடிசிபி. அப்ரூவல்' வாங்கவே இல்லையாம். 'அப்ரூவல்' இல்லாத கட்டடங்களுக்கு, தற்காலிகமா கூட 'இ.பி. கனெக்ஷன்' கொடுக்க முடியாதுங்றது சட்டம். ஆனா, 2022 லேயே லைன் வாங்கி, 2023ல் கட்டடத்தை கட்டி முடிச்சிட்டாங்களாம். இந்த விதிமீறல், இப்ப தான், வெளிச்சத்துக்கு வர, சம்பந்த ப்பட்ட இ.பி.ஆபீசரை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்களாம். அவருக்கு மேல இருக்கற பெரிய ஆபீசர்ஸ் மேல, 'ஆக்ஷன்' எடுக்காம இருக்க, 'பேச்சு வார்த்தை' நடக்குதாம்...'' விஷயத்தை போட்டுடைத்தாள் மித்ரா.
'கறை' படிந்த கரங்கள்? ''சிபாரிசுன்னு சொல்லவும் தான், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது மித்து. ஈரோடு டிஸ்ட்ரிக்ட் புளியம்பட்டி பத்திர பதிவுல இருந்த ஒரு லேடி ஆபீசரை, திருப்பூருக்கு மாத்திட்டாங்க. 'டாக்குமென்ட்' இல்லாம, நிலத்தை பதிவு பண்ணதா, அவங்க மேல 'கம்ப்ளைன்ட்' இருக்கு; அது சம்பந்தமா, பெரிய ஆபீசர் லெவல்ல, 'என்கொயரி' நடந்துக்கிட்டு இருக்காம். இந்த சூழ்நிலையில, எப்படி அவரை திருப்பூருக்கு மாத்தலாம்ன்னு, 'பப்ளிக்' கேள்வி கேட்கிறாங்க...'' என்றாள் சித்ரா.
''நியாயம் தானே சித்ராக்கா...'' ஆமோதித்தாள் மித்ரா. ''கோவில்ல கல்யாணம் பண்றப்போ, 'இதுதான் முதல் கல்யாணம்'ங்கறதை உறுதிப்படுத்தும் விதமா, விஏஓ. ஆபீஸ்ல இருந்து, என்.ஓ.சி. வாங்கணுமாம். போயம்பாளையத்தை சேர்ந்த ஒருத்தரு அதுக்காக விண்ணப்பிச்சிருக்காரு. ரெண்டாயிரம் ரூபா கொடுத்தீங்கன்னா வாங்கிக்கலாம்ன்னு, அந்த ஆபீஸ்ல இருக்கறவங்க கேட்கிறாங்கன்னு புலம்பிட்டு இருக்காராம்...'' என்றாள் மித்ரா.
அப்பட்டமான விதிமீறல் ''தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில, 2.10 கோடி ரூபாய் மதிப்புல, அறிவுசார் மையம் அமைக்க, போன வாரம் பூமி பூஜை போட்டாங்க. இதுல ஒரு கூத்துன்னா, ஸ்கூல் ப்ளே கிரவுண்ட்ல, எந்தவொரு கட்டுமானப்பணியும் செய்ய தடை இருக்கு. இது சம்பந்தமா, ஐகோர்ட்ல சிலரு 'பெட்டிஷன்' போட்டிருக்காங்களாம். அதோட விசாரணை வர்ற, 29ம் தேதி நடக்குதாம். அதுக்குள்ள, அவசர அவசரமா பூமி பூஜை போட்டிருக்காங்கன்னா பாரேன்...''
''அதேபோல, முத்தணம் பாளையத்துல பூமிதான இயக்கத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் இருக்கு. அதுல ஏறத்தாழ, 10 ஏக்கர் நிலம், எந்த பயன் பாடும் இல்லாம ரொம்ப வருஷமா சும்மா இருக்காம். அங்க தான், போலீஸ்காரங்க 'ட்ரைனிங்' எடுத்துட்டு இருக்காங்க, இப்ப என்னடான்னா... அங்க 'பில்டிங்' கட்ட 'ட்ரை' பண்றாங்களாம்...'' அங்கலாய்த்தாள் சித்ரா.
கழுதை தேய்ந்து... ''இப்படி சட்டத்தை மீறி தான், எதுவும் செய்யணுமா...? ஏன் தான் இப்படி பண்றாங்கன்னு தெரியல...'' ஆதங்கப்பட்ட மித்ரா, ''ஒவ்வொரு வருஷமும் திருப்பூர் கார்ப்ரேஷனோட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து, நொய்யல் ஆத்தங்கரையில, மூனு நாளைக்கு பொங்கல் விழா நடத்துவாங்களல்ல...'' மூச்சுவிட்டாள் மித்ரா.
''ஆமா மித்து... இந்த வருஷம் ஏற்பாடெல்லாம் எப்படி?''
''பொங்கல் விழாவுல கை கோர்க்கிற அமைப்புகள் மத்தியில, ஏதோ கருத்து வேறுபாடு வந்துடுச்சாம். அதனால, இந்த தடவ வேறவேற இடங்கள்ல தனித்தனியா பொங்கல் விழா நடத்தறதுன்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்...'' தெளிவுப்படுத்தினாள் மித்ரா.
''கழுதை தேஞ்சு, கட்டெறும்பான கதைன்னு சொல்லு மித்து. ஒற்றுமையை வெளிப்படுத்தறது தான், தமிழர் திருவிழாவின் ஒரு அம்சம். இதுல கூட ஒற்றுமையா இருக்க முடியலைன்னா, இவங்கெல்லாம் வேற எதுல ஒன்னா இருக்க போறாங்கன்னு தெரியல...'' சலித்துக் கொண்டாள் சித்ரா.
''அப்ப பொங்கல் பண்டிகையிலும் அரசியல் பூந்திடுச்சுன்னு சொல்லு...'' என்ற சித்ராவிடம், ''இனி...எலக்ஷன் காலம் தானே. இந்த மாதிரி நிறைய 'கூத்து'களை பார்க்கலாம்...'' என சொல்லிய படியே கிளம்பினாள் மித்ரா.

