/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
/
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
ADDED : டிச 09, 2024 11:47 PM

'சித்ராக்கா... துணை மேயரை அ.தி.மு.க., கவுன்சிலரு ராஜினாமா செய்யச் சொன்னாராமே''
''ஆமா மித்து... சொத்து வரி உயர்வைக் கண்டிச்சு, அ.தி.மு.க.,காரங்க உண்ணாவிரதம் இருந்தாங்க...
''அப்போ பேசுன கவுன்சிலர் சேகர், 'இந்தப் பிரச்னைல கம்யூ., கட்சிக்காரங்க இரட்டை வேஷம் போடறாங்கா... தீர்மானம் நிறைவேத்துனப்ப அமைதியா இருந்துட்டு, இப்ப எதிர்ப்பு நாடகமாடறாங்க...
''மக்கள் மீது நிஜமாவே அக்கறை இருந்தா, இ.கம்யூ.,வைச் சேர்ந்த துணை மேயர், தன்னோட பதவியை ராஜினாமா செய்யலாமே... நிர்வாகத்துக்கு ஆதரவை வாபஸ் வாங்குறதா சொல்லலாமே...' அப்படீன்னு போட்டுத் தாக்குனாராம்''
''ஏன் இப்படிக் குறி வச்சுப் பேசுனாராம்க்கா...''
''மித்து... மாநகராட்சி கூட்டத்துல அ.தி.மு.க.,காரங்க என்ன பேசுனாலும், கம்யூ., கட்சிக்காரங்கதான் முட்டுக்கொடுத்துப் பேசுறாங்களாம்... அ.தி.மு.க., காரங்கல பேசவே விடறதில்லையாம்... இந்தக் கடுப்புலதான் கவுன்சிலர் சேகர் அப்படிப் பேசிட்டாருன்னு சொல்றாங்க''
''அக்கா... இதெல்லாம் அரசியல்ல சகஜம். இப்படியெல்லாம் ராஜினாமா பண்ற காலம் மலையேறிப்போச்சு...''
''மித்து... மாநிலத்துல கம்யூ., கட்சி துணைமேயர் பொறுப்பு வகிக்கிறது, இந்த ஒரே மாநகராட்சிலதான். அதை விட்ற முடியுமா, என்ன...''
இருவரும் கலகலத்தனர்.
''சித்ராக்கா... சொத்து வரி உயர்வு, வணிக வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,க்கெதிரா அனைத்து வணிகர் சங்கப் பேரவை ஆலோசனை நடத்துனாங்கள்ல... என்ன நடந்துச்சு...''
''மித்து... தொழில் அமைப்பு நிர்வாகிங்க, காலவரையற்ற போராட்டம் நடத்தணும்னு ஆவேசமா பேசுனாங்களாம்.
''இப்ப... கருப்புக்கொடி ஏத்துற போராட்டம்... 18ல் ஒருநாள் கடையடைப்புன்னு அறிவிச்சுட்டாங்க...''
''சித்ராக்கா... அ.தி.மு.க.,காரங்க வீட்லயும் மூணு நாள் கருப்புக்கொடி ஏத்தணும்னு சொல்லி, போராட்டத்துக்கு ஆதரவா மாநகர மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை வெளியிட்டிருக்காரே...''
''ஆமாமா... போராட்டத்தை ஆரம்பிச்சு வச்சதே அ.தி.மு.க.,தானே''
''சரிக்கா... த.மா.கா., உண்ணாவிரதப் போராட்டம் அறிவிச்சிருந்தாங்க... ஏன் திடீர்னு தள்ளிவச்சிட்டாங்க...''
''மாநகராட்சி 'தல' தான், 'ஆப்' பண்ணீட்டாருன்னு சொல்றாங்க''
''சித்ராக்கா... தே.மு.தி.க., நடத்துன ஆர்ப்பாட்டத்துல, முதல்வர், முன்னாள் முதல்வரையெல்லாம் ஒருமைல வேலம்பாளையம் செயலாளர் பேசுனாராமா... ஒருமைல பேசுனா கெத்துன்னு நெனச்சுக்கிறாங்க போல...''
''அரசியல்வாதிகள் கிட்டதான் 'மரியாதை'ன்னா என்னன்னு பாடம் கத்துக்கணும், மித்து. 'துாற்றுதல் ஒழி'ன்னு பாரதியார் சொல்லியிருக்காரு... எப்ப இவங்க கேக்கப்போறாங்க...''
கோபமாகச் சொன்னாள் சித்ரா.
அ.ம.மு.க., நிகழ்ச்சியில் அஜீத் ரசிகர்கள்
''மித்து... திருப்பூர்ல அ.ம.மு.க., சார்பில மராத்தான் போட்டி நடந்துச்சுல்ல... அதுல பொதுச்செயலாளர் தினகரன் பேசுனப்ப, மாணவர்கள் ஒருதரப்பினர், 'கடவுள் அஜீத்தே'ன்னு குரல் எழுப்பியிருக்காங்க...''
''ஆமாமா... கேள்விப்பட்டேங்க்கா''
''ஒரு நிமிஷம் திகைச்சுப்போயிட்டாராம் தினகரன். ஆனா, கண்டுக்காம பேச்சைத் தொடர்ந்தாராம்''
''அந்த மாணவர்கள் அஜீத் ரசிகர்கள் போல''
நகைத்தவாறே சொன்னாள் மித்து.
எகிறிய தாசில்தார் அமைதியானார்
''மித்து... பட்டுக்கோட்டையார் நகர் பகுதி மக்கள், பட்டா கேட்டு, இ.கம்யூ., சார்பில், பல ஆண்டா போராட்டம் நடத்திட்டு வர்றாங்க...
''கடந்த வாரம் ஆர்ப்பாட்டம், மறியல்னு நடந்தப்ப அங்க தாசில்தார் வந்திருக்காரு... 'வாராவாரம் இதேவேலைதானா'ன்னு பெண்களைப் பார்த்து எகிறினாராம்.
''ஆத்திரமடைஞ்ச பெண்கள் வாக்குவாதம் பண்ணியிருக்காங்க... நிலைமை விபரீதம் ஆயிரும்னு தெரிஞ்சதும் அமைதியா யிட்டாராம் தாசில்தார்''
''அதிகாரிங்க எந்த இடத்தில எப்படிப் பேசணும்னு கத்துக்கிட்டாலே பிரச்னைகளைத் தவிர்த்திடலாம். இல்லையாக்கா. போராட்டம் நடத்தறதால ஏற்படற விளைவுங்களை தாசில்தார் சாதுர்யமா எடுத்துச்சொல்லியிருக்கலாம். ஆனா அவரு கேட்ட தொனி கொடுமையானதுதான். கொடுமையை எதிர்த்து பெண்கள் நின்னுட்டாங்கன்னு சொல்லு''
ஆமோதித்தாள் சித்ரா.
''சித்ராக்கா... திருப்பூர் வடக்கு தாலுகா ஆபீஸ்ல 'புரோக்கர்'களுக்கு ராஜ மரியாதை கிடைக்குதாம். இ-சேவை மையத்தில பக்கவாட்டுக்கதவு வழியா போனா, ஒரு நிமிஷத்துல வேலையை முடிச்சுட்டுப் போயிடறாங்க...
''வரிசைல நிக்கிற மக்கள், தட்டிக்கேட்க முடியாம, கால்கடுக்க நிற்கிறாங்க... 'கொடுமையை எதிர்த்து நில்'னு முண்டாசுக்கவிஞன் பாரதி சொல்றாரு... மக்கள் துணிஞ்சுட்டாங்கன்னா, தாலுகா ஆபீசுக்குத்தான் கெட்ட பேரு... தாசில்தார் இதைக் கவனிச்சார்னா பரவால்ல''
மித்ரா ஆதங்கப்பட்டாள்.
கை 'சுத்தம்' காணாமப் போச்சு
''மித்து... போலீஸ் கமிஷனர் மேடம் ஸ்டேஷனுக்கு வரக்கூடிய மக்களை அலைக்கழிக்கக்கூடாது; போலீஸ் அதிகாரிங்க கை 'சுத்தமா' இருக்கணும்னு நினைக்கிறாங்க... ஆனா, அதிகாரிங்க பலரும் அப்படியிருக்கிறதில்ல. சில ஸ்டேஷன்களுக்கு பெண் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டிருக்காங்க...
''ஆனா மது விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இவங்களும் துணை போறாங்களாம். மேடத்துக்குத் தெரியாதுன்னு அவங்க இதைச் செஞ்சிட்டிருக்காங்களாம்... ஆனா, அவங்களுக்குத் தகவல் போயிட்டுத்தான் இருக்கு...''
''சித்ராக்கா... நீங்க சொல்றது சரிதான். மாநகர மதுவிலக்குல பண மழை பொழியுது... மதுவிலக்கு ஸ்டேஷன் அதிகாரி மீது கோபத்துல இருக்காங்களாம். ரெய்டுக்குப் போறதில்ல... கணக்குக்கு ஒண்ணு, ரெண்டு வழக்கு போடுறாங்க... எப்ப நடவடிக்கை பாயும்னுதான் தெரியல''
''மித்து... கண்டிப்பா நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பலாம். சிட்டி போலீசோட மங்கலம் ஸ்டேஷன் இணைஞ்சுருச்சு...
''ஆனா கமிஷனர் மேடம் அதிரடியா செயல்படுவாங்கன்னு தெரியாம பழைய நினைப்புலதான் இன்னும் அங்க இருக்கறவங்க வேலை செஞ்சிட்டிருக்காங்களாம்...
''கொஞ்ச நாள் விட்டுத்தான் பிடிப்பாங்கன்னு நினைக்கிறேன்''
சித்ரா கணித்தாள்.
கண்டக்டர் பாடு திண்டாட்டம்
''சித்ராக்கா... அரசு டவுன் பஸ்சில பெண்களுக்கு இலவசப்பயணம்தான் என்றாலும், டிக்கெட் கொடுத்துடுவாங்க... பல்லடம் பக்கத்துல, பஸ்ல டிக்கெட் வாங்காம பயணிச்ச ஒரு பெண்ணுக்கு 200 ரூபாய் அபராதத்தை டிக்கெட் பரிசோதகர் விதிச்சார். ஆனா, அதுக்கு ரசீது வழங்கல... சமூக வலைதளங்கள்ல இது வைரலானதும் ரசீது வழங்கீட்டாங்க...''
''மித்து... நீ என்ன சொல்ல வர்றே''
''சம்பந்தப்பட்ட கண்டக்டருக்கு 'செம டோஸ்' விழுந்துச்சாம். இதனால், திருப்பூர்ல பணிபுரிய கண்டக்டர்கள் உஷாரா இருக்காங்களாம். பெண் பயணிகள் ஏறினவுடனே 'இந்தாம்மா... டிக்கெட்டை பிடிம்மா'ன்னு கொடுத்துடுறாங்களாம்...
''ஆனாலும் சில பெண்கள், கண்டக்டர் கண்ணுக்கு அகப்படாம ஏறிடறாங்களாம். டிக்கெட்டும் கேக்கறது இல்லையாம். இலவச டிக்கெட்தானே... டிக்கெட் எதுக்கு எடுக்கணும்னு சொல்லி சண்டை போடுறாங்களாம்''
''கஷ்டம்தான் மித்து... கண்டக்டர் பாடு''
கவலைப்பட்டாள் சித்ரா.
''மித்து... சொத்து வரி உயர்வைக் கண்டிச்சு கட்சித் தலைமையைக் கேட்டு போராட்டம் நடத்தப்போறதா விஜய் கட்சிக்காரங்க சொன்னதா ஞாபகம்''
''ஆமாக்கா... ஆனா, ஒண்ணும் அறிவிப்பு வரல... எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்தறது என்னோட பாணியில்லன்னு விஜய் சொல்லியிருப்பாரோ''
''இருக்கலாம்... இருக்கலாம்''
தலையசைத்தாள் சித்ரா. மித்ராவிடம் புன்னகை அரும்பியது.