/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
அதிரடி கமிஷனர் 'துாக்கியடிப்பு': 'வசூல்' ஆபீசர்ஸ் 'துள்ளிக்குதிப்பு'
/
அதிரடி கமிஷனர் 'துாக்கியடிப்பு': 'வசூல்' ஆபீசர்ஸ் 'துள்ளிக்குதிப்பு'
அதிரடி கமிஷனர் 'துாக்கியடிப்பு': 'வசூல்' ஆபீசர்ஸ் 'துள்ளிக்குதிப்பு'
அதிரடி கமிஷனர் 'துாக்கியடிப்பு': 'வசூல்' ஆபீசர்ஸ் 'துள்ளிக்குதிப்பு'
ADDED : டிச 31, 2024 05:30 AM

''ேஹப்பி நியூ இயர், சித்ராக்கா''
மகிழ்ச்சிபொங்க, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
''மித்து... உனக்கும் வாழ்த்துகள்... அதகளமாத் துவங்குது போல, ஆங்கிலப் புத்தாண்டு''
''ஆமாக்கா ஆமா... திருப்பூர் போலீஸ் கமிஷனரையும், மாவட்ட எஸ்.பி.,யையும் திடீர்னு மாத்தீட்டாங்களே... அப்படியே 'ஷாக்' ஆயிட்டேன்''
''மித்து. ஆறே மாசத்துக்குள்ள போலீஸ் கமிஷனரை ஏன் மாத்துனாங்கன்னே புரியல''
''ஆமாக்கா... டெடிகேட்டட் போலீஸ், ஆபரேஷன் ஜீரோ க்ரைம்னு சிறந்த திட்டங்களைச் செயல்படுத்தினாங்க...
''கைநீட்ற போலீசு மேல தயங்காம ஏக்ஷன் எடுத்தாங்க... டிராபிக்ல அக்கறையோட செயல்பட்டாங்க...''
''அது மட்டுமில்ல மித்து... பார்காரங்க விதிமுறையை மீற முடியல... சட்டவிரோத மது விற்பனையைக் கட்டுப்படுத்தினாங்க...''
''ஆமாக்கா... இது போதாதா... இவங்கள டிரான்ஸ்பர் பண்றதுக்கு... பார்காரங்க, மாமூல் 'வசூல்' போலீஸ் அதிகாரிங்க, போலீஸ்காரங்க... ஏன்... அரசியல்வாதிங்க பலரும் இவங்களை மாத்துனதால உற்சாகத்துல துள்ளிக்குதிக்கிறாங்களாம்''
''ஏன் மித்து... வழக்கம்போல், மீண்டும் வசூலை ஆரம்பிச்சுடலாம்னா... ஆனா, புதுசா வர்ற கமிஷனர் ராஜேந்திரனும் செம ஸ்ட்ரிக்ட்னு தெரியாமதான் இப்படித் துள்றாங்களாம். இதேபாணியை புது கமிஷனரும் பின்பற்றுனார்னா திருப்பூர் மக்களுக்கு நல்லா இருக்கும்''
''ஆமாக்கா... மாவட்ட எஸ்.பி.,யை மாத்துனதுக்கு பல்லடத்தில மூனு பேர் கொலை சம்பவம் தான் காரணமாமே...''
''இருக்கலாம் மித்து. இதுல இன்னும் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாததற்கு போலீஸ் சுதந்திரமாச் செயல்பட முடியலைங்கிறது காரணம்ங்கறாங்க...''
''சித்ராக்கா... புதுசா வர்ற எஸ்.பி., திருப்பூர் மாநகரத் துணை கமிஷனரா இருக்கிறவர்தான்... எப்படிச் செயல்படப் போறாருன்னு பார்க்கத்தானே போறோம்''
ஸ்டைலாகச் சொன்னாள் மித்ரா.
வில்லங்கத்தில் சிக்கிய 'இலை' கட்சி 'மாஜி'
''சித்ராக்கா... சமீபத்துல டூம்லைட்ல நடந்த கத்திக்குத்து வழக்குல, 'இலை' கட்சி மாஜி எம்.எல்.ஏ., பேர சேர்த்திருக்காங்க... இந்த சம்பவத்துக்குத் துாண்டுகோலா இருந்தாருங்கறதுதான் கேஸ். இதுல ஏதும் அரசியல் இருக்குமோ...''
''மித்து... அரசியல் எல்லாம் இல்லை... எல்லாம் பைனான்ஸ் மேட்டராம். போலீஸ் விசாரிச்சப்ப, எதிர்த்தரப்பும், மாஜி எம்.எல்.ஏ., தரப்பும் ஒன்னாதான் கல்லா கட்டி வந்திருக்கிறது தெரிஞ்சுதாம்.
''முன்விரோதத்துல மாஜி எம்.எல்.ஏ.,வை மாட்டிவிட்ருக்காங்க... ஆனா, துாண்டுதலுக்கான ஆதாரம் எதுவும் இல்லையாம். சீக்கிரமே கேஸ்ல இருந்து வெளில வந்துருவாருன்னு சொல்றாங்க''
''எதிர்த்தரப்பு பைனான்ஸ் காரங்க மேலயும் இப்ப கேஸ் போட்ருக்காங்க... வில்லங்கமா போகுதாம் இந்த மேட்டரு''
ஆச்சர்யமானாள் மித்து.
மாணவி அம்பலமாக்கிய பாலியல் அத்துமீறல்
''சித்ராக்கா... பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமை தொடர்பா பள்ளிகள்ல இப்ப போலீஸ்தரப்புல விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வர்றாங்க... பல்லடத்துல ஒரு பள்ளில விழிப்புணர்வு ஏற்படுத்துனப்ப, 16 வயசு மாணவி ஒருத்தர், ஆறு மாசத்துக்கு முன்னாடி தன்கிட்ட அத்துமீறின நபர் குறித்து ஆசிரியர்களிடம் சொல்லியிருக்காரு.
''அவரு யூனியன் ஆபீஸ்ல வேலைபார்க்குற டிரைவர்னு தெரிஞ்சுது... மாணவியோட அப்பாவுக்கு அவர் பிரன்ட்தானாம்...
''டிரைவரோட ஒய்ப் அதே ஆபீஸ்லதான் ஆபீசரா இருக்காங்களாம். இப்ப டிரைவரை, போலீஸ் சத்தமே இல்லாம உள்ளே தள்ளீட்டாங்க''
''எல்லாம் கலி முத்திப்போச்சு''
கவலையைப் பகிர்ந்தாள் சித்ரா.
யார் அந்த 'சார்'கள்; உடையாத ரகசியம்
''மித்து... போயம்பாளையத்தில பைக்கில போன ஒருத்தர் மீது, தி.மு.க., கொடி கட்டிய கார் அதிவேகமா மோதிட்டு நிக்காமப் போயிருச்சு...
''காரை வேகத்தடை அருகே சிலர் விரட்டிப்பிடிச்சு நிப்பாட்டுனாங்களாம். அதில இருந்த அஞ்சு பேரும் செம போதையாம்.
''காரில் வந்தவங்க பார் உரிமையாளர்கள். கேஸ், கோர்ட்னு போனா வேலைக்கு ஆகாது... அப்படீன்னு காயமடைஞ்சவருக்கு போலீஸ்காரங்க 'அட்வைஸ்' கொடுத்தாங்களாம்.
''ஆனா சமூக வலைதளத்துல பரவுனதால வேற வழியில்லாம 'ரசீது' மட்டும் போலீஸ் போட்டுக் கொடுத்திருக்காங்க... ஆனா அந்த 'சார்'கள் யாருன்னுதான் தெரியல''
சித்ரா சிரித்தாள்.
''சித்ராக்கா... கோடிக்கணக்கில் கையாடல் செய்துட்டார்னு திருப்பூர் பக்கத்துல இருக்கிற சர்வோதய சங்கத்தோட அலுவலர் 'குமாரர்' மேல பொருளாதார குற்றப் பிரிவுல, நிர்வாகம் புகார் கொடுத்துச்சாம்.
''விசாரணைக்கு ஆவணங்களோட 'குமாரர்' போயிருக்கார். ஆனா, நிர்வாகத்தரப்புல ஒருத்தரும் வரலையாம்.
''அப்புறம், அவிநாசிபாளையம் போலீஸ்லயும் நிர்வாகம் புகார் கொடுத்திருக்கு...
''குமாரரை விசாரணைக்கு அழைச்சப்ப, ஏற்கனவே நிர்வாகத்தரப்பு விசாரணைக்கு வராத விவரம் தெரிஞ்சிருக்கு.
''இன்ஸ்பெக்டர், நிர்வாகத்தரப்புல புகார் கொடுத்தவரை லெப்ட்-ரைட் வாங்கீட்டாராம்''
''அப்படிப்போடு''
கலகலத்தாள் சித்ரா.
'கப்சிப்' ஆன 'தோழர்' எம்.பி.,
''மித்து... எம்.பி., தலைமையில் இயங்குறதுதான் திஷா கமிட்டி... மூனு மாசத்துக்கு ஒருதடவை கூடும். மத்திய அரசு திட்டப்பணிகளுடைய முன்னேற்றங்களைப் பத்தி விவாதிப்பாங்க...
''திருப்பூர்ல இந்தக் கூட்டத்தை அமைச்சரே வந்து நடத்திடறாரு...
''ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி, குடிநீர், பாதாளச்சாக்கடை, நுாறு நாள் திட்டம்னு 'தோழர்' எம்.பி., ஏகப்பட்ட குறைபாடுகளை முன்வைப்பாரு.
''இந்த முறை நடந்த திஷா கூட்டத்துல எம்.பி., 'கப்சிப்'னு இருந்துட்டாராம்''
''பேசுனாலும் பயனில்லன்னு நெனச்சாரா... இல்ல... தேவையில்லாம பேசி எதுக்குப் பொல்லாப்புன்னு அமைதியாயிட்டாரான்னு தெரியலையே மித்து''
''சித்ராக்கா... காரணம் இருக்கும்... ஆனா, உங்களுக்குத் தெரியல''
நகைத்தாள் மித்ரா.
''அக்கா... மாநகராட்சி பகுதில சேகரமாகிற குப்பைகள், கிராமத்துல பாறைக்குழில கொட்டுறாங்க... சுற்றுச்சூழல் பாதிக்கப்படுறதா, விவசாய சங்க நிர்வாகி உண்ணாவிரதம் இருந்தாரு...
''பசுமைத்தீர்ப்பாயத்துல இவரு வழக்கு தொடர்ந்ததுல, குப்பைகளை அகற்றி மாவட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிக்கணும்னு உத்தரவு வெளியாகியிருக்கு...
''ஆனா மாநகராட்சி தொடர்ந்து இங்கேதான் குப்பையைக் கொட்டிட்டு வருது.
''இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தாலும், தங்கள்கிட்டயும் கலந்து பேசி முடிவெடுக்கலன்னுட்டு விவசாய சங்க நிர்வாகிக்கு ஆதரவா பொதுமக்கள்அதிகளவுல களத்துல இறங்குல.
''சொந்தக்காரங்க, விவசாய சங்க நிர்வாகிங்க எல்லாம் சேர்ந்து அவரோட உண்ணாவிரதத்தை முடிச்சு வச்சுட்டாங்களாம். இப்போ காத்திருப்பு போராட்டமா இதை மாத்திட்டாங்களாம்''
''சொல்றது சரிதான் மித்து... குப்பை கொட்டுற இடம் கிடைக்காம சிக்கல்ல மாநகராட்சி தவிக்குது. அதேசமயம், குப்பை கொட்டுற இடத்துல, விதிமுறைப்படி, சரியா செய்றாங்களாங்கறதும் முக்கியம்தானே''
தலையசைத்தாள் மித்ரா.
'கடமை'யுணர்வு இதுதானா?
''மித்து... தாராபுரம் யூனியன்ஸ் ஆபீஸ்ல புதுசா பொறுப்பேத்த அதிகாரி, மக்கள் பிரதிநிதி, ஆளும்கட்சி நிர்வாகிகளைப் பொருட்படுத்தல... முறைகேடுகளைக் கண்டறிஞ்சு நடவடிக்கை எடுத்தாராம். பதவிக்காலம் முடியுறதுக்கு முன்னாடி ஏதாவது தேத்தலாம்னு பாத்தா முடியல. விடுவாங்களா பின்னே... மாவட்ட நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து, வேற ஊருக்கு மாத்தீட்டாங்களாம்...''
''சித்ராக்காக... அதிகாரிகளோட 'கடமையுணர்வு'க்கு அளவே இல்லையே''
''மித்து... சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தின் கீழ், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகம் உள்ளது. மின் நிறுத்த அறிவிப்பு வெளியிடும் போதெல்லாம், இன்னமும் அரசு மருத்துவமனைன்னே தான் மின் வாரிய அறிக்கைல குறிப்பிடறாங்க... நாலு வருஷமாகியும் இன்னும் 'அப்டேட்' ஆகாமத்தான் மின் வாரியம் இருக்குது''
''சித்ராக்கா... இதெல்லாம் ஒரு மேட்டரா... மின் வாரியம் இத விட பெரிய 'ஷாக்'கெல்லாம் கொடுத்து நீங்க பார்த்ததில்லையா...''
வெயில் கொளுத்தத் துவங்கியதால், 'ஜில்'லென ஆரஞ்ச் ஜூஸ் தயாரானது.