/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
சாமியார் தப்பிக்க முனைப்பு எம்.எல்.ஏ. ரொம்ப பொறுப்பு
/
சாமியார் தப்பிக்க முனைப்பு எம்.எல்.ஏ. ரொம்ப பொறுப்பு
சாமியார் தப்பிக்க முனைப்பு எம்.எல்.ஏ. ரொம்ப பொறுப்பு
சாமியார் தப்பிக்க முனைப்பு எம்.எல்.ஏ. ரொம்ப பொறுப்பு
ADDED : அக் 27, 2025 10:22 PM

தி ருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டபிறகு, சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டியில் இல்லத்துக்குப் புறப்பட்டனர்.
''அக்கா... துணை ஜனாதிபதியா பதவியேத்த பின்னாடி முதன்முறையாக சி.பி.ஆர். பிறந்த மண்ணுக்கு வர்றாருக்கா...''
''நம்ம ஊரைச் சேர்ந்த ஒருத்தர், இப்படி ஒரு உச்ச பதவியைப் பெறுவதுங்கறது, பெருமைக்குரிய விஷயம் இல்லையா, மித்து''
''பெரியவங்க, சின்னவங்கன்னு வித்தியாசம் பார்க்காம, எல்லார்ட்டயும் பழகறதுல, அவரு ஒரு ஜென்டில்மேன்க்கா... கார்ப்பரேஷன்ல, கட்சி வித்தியாசம் எல்லாம் பார்க்காம, அவருக்குப் பாராட்டு தெரிவிச்சு தீர்மானமும் நிறைவேத்தியிருக்காங்களே''
''மித்து... நல்ல விஷயம் அது... சி.பி.ஆரை வரவேற்க திருப்பூர் காத்திருக்குது''
பஸ்சின் ஹாரன் சத்தத்தால் சற்று நேரம் பேச்சை நிறுத்தினர்.
விடிவு கிடைக்குமா? ''பழனிசாமி கலெக்டரா இருந்தப்ப, மாவட்டத்துல, தொழிலாளர் நலவாரியக் கண்காணிப்புக்குழுவோட கூட்டம், மாசத்துக்கு ஒருநாள் கரெக்டா நடந்துச்சுக்கா...
''இப்ப சரியா நடக்கறதில்ல... பென்சன் கூட சரியா கிடைக்கறதில்ல... எக்கச்சக்க மனுக்கள் தேங்கியிருக்காம்... பிரச்னைகளும் வெளியே தெரியறதில்ல...
''சரியான இடைவெளியில மாசாமாசம் கூட்டம் நடக்குதாங்கறத கலெக்டர் கண்காணிக்கணும்...
''அப்பத்தான் தொழிலாளர் பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்கும்ன்னு தொழிற்சங்கத்துக்காரங்க சொல்றாங்க''
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...' என்ற பாடல், முன்னால் சென்ற பஸ்சில் ஒலித்தது.
எம்.எல்.ஏ. டபுள் விசிட் ''மித்து... எல்.ஆர்.ஜி. காலேஜ் முன்னாடி, அரசு டவுன் பஸ்கள் நிக்கறதில்ல. மினி பஸ்கள், மாணவிகளோட இலவசப் பயணத்துக்குத் தடையா இருக்குதுன்னு போன வாரம் நாம பேசுனோம்ல...
''உடனே எம்.எல்.ஏ. செல்வராஜ், காலேஜூக்கே போயிட்டாராம். 'எதுன்னாலும் எங்கிட்ட சொல்லுங்க'ன்னு மாணவிகள் கிட்ட சொன்ன எம்.எல்.ஏ., 'டவுன் பஸ்கள் கல்லுாரி வளாகத்துக்குள்ள கண்டிப்பா வரணும்'ன்னு ஆபீசர்ஸ்ட்ட போன் போட்டு சொன்னாராம்.
''இப்ப பஸ் காலேஜூக்கு வருது... பஸ் வர ஆரம்பிச்ச நாலாவது நாள், காலேஜூக்கு மீண்டும்எம்.எல்.ஏ. நேரடியா விசிட் அடிச்சாராம்.
''கரெக்டா பஸ் வரலேன்னா சொல்லுங்க... நான் பார்த்துக்கறேன்னு மீண்டும் ஒருமுறை மாணவிகள்கிட்ட சொன்னாராம்''
''மாணவிகள் ேஹப்பி ஆயிருப்பாங்களேக்கா...''
''ஆமாமா... எம்.எல்.ஏ.வைப் பாராட்டலாம். அதேசமயம், பஸ் ஸ்டாண்ட்ல, மாணவிகளை ஏத்தறதுக்கு சில பஸ்கள்ல முரண்டு பிடிக்கிறாங்களாம். அங்கேயும் எம்.எல்.ஏ. விசிட் அடிச்சு உண்மையைத் தெரிஞ்சுக்கிறது நல்லது''
வேகத்தடை மீது ஏறி இறங்கியது, ஸ்கூட்டி.
மினி பஸ்கள் டிமிக்கி ''அக்கா... இங்க இருக்கிற டவுன் பஸ்களை, தீபாவளியையொட்டி வேற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களா அனுப்பி வச்சாங்களாம்.
''வழக்கமா, கலெக்ஷனுக்காக டவுன் பஸ்களோட போட்டி போடுற மினி பஸ்கள் பலவும், இந்த நேரத்தில இயங்காம டிமிக்கி கொடுத்துருச்சாம்.
''பயணிகள் கூட்டம் குறைவா இருந்ததுனால, வட்டாரப் போக்குவரத்துதுறை அனுமதி இல்லாம, திடீர்ன்னு 'ட்ரிப்' கட் பண்ணீட்டாங்களாம்.
''பயணிகள்தான் பரிதவிச்சுப்போயிட்டாங்களாம். ஆர்.டி.ஓ. ஆபீஸ்காரங்க வழக்கம்போல கண்டுக்கலையாம்''
நெரிசலால், வாகனத்தை மெல்ல இயக்கத் துவங்கினாள் மித்ரா.
மங்களம் பாடிட்டாங்களோ! ''மித்து... மங்கலத்துல எம்.எல்.ஏ. பண்ட்ல, கால்வாய் கட்டிக்கொடுங்கன்னு எம்.எல்.ஏ. ஆனந்தன்ட்ட மக்கள் முறையிட்டாங்களாம்.
''பஞ்சாயத்துல சொல்லி, மதிப்பீட்டோட லெட்டர் வாங்கிட்டு வாங்கன்னு எம்.எல்.ஏ. சொன்னாராம்.
''யூனியன் ஆபீஸ், பஞ்சாயத்து ஆபீசுல ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சொல்லியும் இன்னும் லெட்டரும் ரெடி பண்ணிக் கொடுக்கலையாம்.
''ஒரு வேளை எம்.எல்.ஏ. பண்ட்ல வேலை செய்யாதீங்கன்னு, பொறியாளர் பிரிவுக்கு, ஆளும்கட்சியில இருந்து ஆர்டர் போட்டு, இந்த ஸ்கீமுக்கு மங்களம் பாடிட்டாங்களோன்னு மக்கள் சந்தேகப்படறாங்களாம்''
மீண்டும் வாகனத்தின் வேகத்தைக் கூட்டினாள் மித்ரா.
உயரதிகாரியின் 'பிரஷர்' ''அக்கா... சிட்டி போலீஸ்ல ஒரே ஸ்டேஷன்ல மூனு வருஷத்தைக் கடந்தும் வேலை பார்க்கிற போலீசார் டிரான்ஸ்பர் ஆகாம இருக்காங்க... சிலர் கட்டப்பஞ்சாயத்து வேலைகள்ல 'துாள்' கெளப்புறாங்களாம்''
''மித்து... திருப்பூர் மையப்பகுதி போலீஸ் ஸ்டேஷன்ல, நில மோசடி தொடர்பா ஈரோடு மாவட்டத்துல மடம் நடத்துற சாமியார் மீது, பல கட்ட போராட்டத்துக்குப் பின்னாடி போலீசார் வழக்கு பதிஞ்சாங்களாம். இந்த மோசடி நடந்து அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சாம்.
''இப்ப இந்த வழக்கை சத்தம் இல்லாம, ரத்து பண்ணப் பாக்குறாங்களாம். சென்னை போலீஸ் அதிகாரி ஒருத்தரோட பிரஷராலதான் இது நடக்குதாம்''
முன்னால் சென்ற லாரியை, முந்த முயன்றமித்ராவைத் தடுத்தாள் சித்ரா.
''மித்து... பா.ம.க. அன்புமணி திருப்பூர் வந்தார்ல... திடீர்ன்னு நொய்யல் ஆத்துல அன்புமணி இறங்கீட்டாரு... கட்சியினரோட ஆர்ப்பாட்டமும் செஞ்சாரு...
''போலீசுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கலையாம். சாமியானா போட்ருந்ததால அந்த இடத்தில போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்பட்டிருச்சாம்.
''ஒரு தனியார் டிவி நிருபர் ஏடாகூடக் கேள்வி கேட்டதால அன்புமணி டென்ஷனாயிட்டாராம். கட்சிக்காரங்க அவரு மேல பாய்ஞ்சிட்டாங்களாம்''
லாரி விலகிச்செல்லவும், ரிலாக்ஸாக வாகனத்தைச் செலுத்தினாள் மித்ரா.
பக்தர்கள் தவிப்பு ''கந்த சஷ்டியையொட்டி அலகுமலை கோவிலுக்கு பக்தர்கள் காப்புகட்ட குவிஞ்சிருக்காங்க... ஆனா, அதுக்கு கட்டாய வசூல் மட்டும் குறையவே இல்லையாம்க்கா.
''போன வருஷம் பா.ஜ. காரங்க காப்புக்கட்ட போயிருந்தாங்க... காப்புக்கட்ட 200 ரூபான்னு சொன்னதால டென்ஷன் ஆன இவங்க கம்ப்ளெயின்ட் பண்ணீட்டாங்க... அறநிலையத்துறை ஆபீசர்ஸ் விசாரிச்சாங்க...
''ஆனா, இந்த வருஷமும், காப்புக்கட்ட வந்த பக்தர்கள், 200 ரூபா கட்டி ரசீது வாங்கீட்டு வரணும்ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லீட்டாங்களாம். பல பக்தர்கள் காப்புக் கட்டாமயே திரும்பீட்டாங்களாம்.
''அறநிலையத்துறை மேல் அதிகாரிகளுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகுது. இதனால தான் துணிஞ்சு இந்த மாதிரி பக்தர்கள்ட்ட பிடுங்கறாங்க''
ஜில்லென்ற காற்று இருவரையும் உரசிச்சென்றது.
பொறுப்பற்ற துறை ''மித்து... அவிநாசி நடுவச்சேரி ஈஸ்வரன் கோவில் பக்கத்துல இருக்கிற குளத்துல, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ரோடு போட்டாங்க...
''இப்ப மழையால ரோடு மூழ்கி சேதமாயிடுச்சு...
''அத்திக்கடவு தண்ணீர் குளத்துக்கு வந்துட்டு இருந்துச்சாம். இப்ப அதை ஆபீசர்ஸ் நிறுத்தீட்டாங்களாம்.
''யாரைக் கேட்டு முடிவெடுக்கறாங்கன்னு தெரியலன்னு விவசாயிகள் டென்ஷன்ல இருக்காங்களாம்.
''பொதுப்பணித்துறை பொறுப்பற்ற துறையா இருக்குன்னு கோபப்படறாங்க... சட்டரீதியா பிரச்னையை அணுக முடிவு பண்ணீட்டாங்களாம்''
வாகனத்தைச் சிறிது வேகம் கூட்டினாள், மித்ரா.
இப்படியும் 'ஆட்டை' ''சித்ராக்கா... சில பிரைவேட் டவுன் பஸ்கள்ல, கண்டக்டர்ஸ் பணத்தை பாக்கெட்ல போட்டுட்டு பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்காம விட்டுடறாங்களாம்,
''உதாரணத்துக்கு அவிநாசி புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட்ல இருந்து தாலுகா ஆபீஸ், சூளை, பட்டறை பகுதியெல்லாம் அருகில்தான் இருக்கு... இதுக்கான காசை வாங்கிக்கிட்டு வேலை இருக்குறதா பாவ்லா காட்டிட்டு டிக்கெட் கொடுக்காமலே ஸ்டாப் வர்ற வரைக்கும் நகர்ந்துடறாங்களாம்.
''இதனாலதான் நிறைய ஊர்ல பிரைவேட் பஸ் ஓனர்ஸ் இணைஞ்சு டிக்கெட் செக்கிங்குன்னு ஆளை நியமிச்சிருக்காங்க''
''மித்து... நீ சொல்றது கரெக்ட்தான். அதுக்காக எல்லாரையும் குறைசொல்ல முடியாது... மொதலாளிக்காக விசுவாசமா உழைக்கிற எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன்... கலெக்ஷனுக்காக தொண்டைத்தண்ணி வத்த கத்தி பயணிகளை ஏத்துற கண்டக்டர்ஸ் இருக்கத்தானே செய்றாங்க... எல்லா துறையிலயும் ஒன்னு, ரெண்டுபேரு அப்படித்தான் இருப்பாங்க... நீ வந்த பஸ்சுல அப்படிப் பார்த்திருப்ப போல''
கலகலவெனச் சிரித்தாள் சித்ரா.
மாநகராட்சியில் கலகலப்பு ''மித்து... குப்பை விவகாரம் தொடர்பா, கார்ப்பரேஷன் சிறப்புக்கூட்டம் நடந்துச்சுல்ல...
''அப்ப ஒற்றைத்தாள் தீர்மானம் ஒன்னு கொண்டு வந்தாங்க... தனியார் லே அவுட்டுக்கு அனுமதி அளிக்க, முந்தைய கூட்டத்தில ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் அது...
''இப்ப ஏன் கடைசி நேரத்தில இதைக் கொண்டு வர்றீங்கன்னு கவுன்சிலர்கள் பிரச்னையக் கெளப்புனாங்களாம்.
''அந்த வார்டோட கவுன்சிலர் அருணாசலம் எதிர்ப்பு தெரிவிக்காததால, தீர்மானத்தை ஒத்திவச்சோம். அவரோட சந்தேகத்தை நிவர்த்தி செஞ்சுட்டதால, தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்குன்னு மேயர் சொன்னாராம். தீர்மானத்தை ஒருவழியா நிறைவேற்றிட்டாங்க.
''கூட்டம் முடியறப்ப எழுந்த கவுன்சிலர் அருணாசலம், இப்பத்தான் தீர்மானத்தை நான் பார்த்தேன். எப்ப நிறைவேத்தினாங்கன்னு கேட்டாராம்.
''இந்நேரம் வரைக்கும் இந்தப்பிரச்னை தான் ஓடிட்டு இருந்துச்சு... என்னண்ணா செஞ்சிட்டிருந்தீங்கன்னு மேயர் கேட்க, அவை ஒரே கலகலப்பா மாறிடுச்சாம்''
இருவரிடமும் சிரிப்பு தொற்றிக்கொண்டது.
''மித்து... தீபாவளிக்கு மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு கவனிப்பு நடந்த விஷயம் வெளில தெரிஞ்சு, ஒரே பரபரப்பாயிடுச்சாம்ல''
''ஆமாக்கா... ஆனா, இதுல ஒரு சில கவுன்சிலருங்க மட்டும் விதிவிலக்கு. கடைசிலயாவது வாங்கிக்குவாங்கன்னு பார்த்தாங்களாம். ஆனா, வேணாம்ன்னு சொல்லிட்டாங்களாம்.
''அவங்களுக்கு ஒரு சல்யூட்.''
ஸ்கூட்டி, வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

