ADDED : பிப் 18, 2026 08:02 AM

டெஸ்லா நிறுவனத்தில் இருந்த உங்களுக்கு, இ.வி., பைக்கை உருவாக்கும் யோசனை எப்படி வந்தது?
டெஸ்லா நிறுவனத்தில் 2019ல் ஒரு ஆண்டு பணியாற்றினேன். ஆனால், 2018லேயே இ.வி., பைக் உருவாக்கும் யோசனை வந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 2020ல் முழு நேரமாக இ.வி., பைக் உருவாக்கத்தை துவக்கினோம். டெஸ்லாவில் பயணித்த அனுபவம், இ.வி., பைக்கை உருவாக்கும் யோசனையை செயல் படுத்த துாண்டுதலாக இருந்தது.
உலகின் பணக்காரரான எலான் மஸ்கிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்?
புதுப்பிப்புகள், தொழில்நுட்பங்களை தாண்டி டெஸ்லா நிறுவனத்தின் கார்ப்ரேட் கலாசாரம் தனித்துவமாக இருக்கும். இதன் வாயிலாக, உலகளவில் அதிக புதுப்பிப்புகளை கொண்டுவர முடியும் என்பதை நான் நம்புகிறேன். இந்நிறுவனம் இல்லை என்றால், எதிர்காலத்தில் மனிதர்கள் இருக்க முடியாது என்ற இலக்குடன், அது பயணித்து வருகிறது. டெஸ்லா நிறுவனம், வெறும் கார் நிறுவனம் மட்டும் இல்லை.
எலான் மஸ்க் என்பவர் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால், அதையும் தாண்டி இப்படிப்பட்ட இலக்கை அந்நிறுவனம் வைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது .
இ.வி., பைக்கில் ஹை வோல்டேஜ் தொழில்நுட்பம் கொண்டு வரும் யோசனை எப்படி வந்தது?
மற்ற நிறுவனங்களை போல, நாங்களும் குறைந்த வோல்டேஜ் தொழில்நுட்பத்தில் தான், இ.வி., பைக்கை உருவாக்க துவங்கினோம். முதலில் 48, 96, 120 வோல்ட் பைக்குகளை உருவாக்கினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த திற னை அது வழங்க வில்லை என்பதால், இ.வி., கார்களில் வருவதை போன்ற ஹை வோல்டேஜ் கட்டமைப்பை தேர்வு செய்தோம். ஏழு ஆண்டு கடின ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பின், எங்களின் முதல் இ.வி., பைக்கான ராப்டீ டீ 30 பைக்கை அறிமுகப்படுத்தினோம்.
ராப்டீ டீ30 பைக்கில் உள்ள தனித்துவ அம்சங்கள் என்ன?
ஹை வோல்டே ஜ் கட்டமைப்பை உருவாக்குவதற்காக, இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் முதலீடு செய்த முதல் நிறுவனம் நாங்கள். எங்கள் இ.வி., பைக்குக்கு, 8 லட்சம் கி.மீ., வரை அடிப்படை உத்தரவாதம், கார் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்ய சி.சி.எஸ்., - 2 சார்ஜிங் போர்ட், 300 சி.சி., பைக்கை விட அதிக செயல்திறன், ஸ்மார்ட் போனுக்கு இணையாக 36 நிமிடத்தில் 80 சதவீதம் பாஸ்ட் சார்ஜிங், 150 கி.மீ., நிஜ உலக ரேஞ்ச் ஆகியவை இதன் சிறப்பம்சங் கள்.
மஸ்க்குடன் பயணித்த தமிழர்

