ரெனோ ‘டஸ்டர் ஹைபிரிட்’ மைலேஜ் 29 கி.மீ., ரேஞ்ச் 1,400 கி.மீ.,
ரெனோ ‘டஸ்டர் ஹைபிரிட்’ மைலேஜ் 29 கி.மீ., ரேஞ்ச் 1,400 கி.மீ.,
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 08:32 PM

‘ரெனோ’ நிறுவனம், உலக சந்தையில் இருக்கும் ‘டஸ்டர் ஹைபிரிட்’ எஸ்.யூ.வி., காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது உள்ள மிட் சைஸ் எஸ்.யூ.வி., கார்களை விட, டஸ்டர் ஹைபிரிட் காரின் மைலேஜ், செயல்திறன் மற்றும் ரேஞ்ச் அதிகமாக உள்ளது.
இந்த காரில், 1.8 லிட்டர், 4 – சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜினுடன், 1.4 கி.வாட்.ஹார்., ஆற்றல் கொண்ட லித்தியம் அயான் ஹைபிரிட் பேட்டரி, 8 – ஸ்பீட் மல்ட்டி மோட் ஆட்டோ கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த கார், நகர பகுதிகளில் 80 சதவீதம் இ.வி., மோட்டில் இயங்குவதால், ஒரு லிட்டர், பெட்ரோலுக்கு, 29 கி.மீ., மைலேஜ் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது. அதேசமயம், முழு டேங்க் பெட்ரோலில், 1,400 கி.மீ., ரேஞ்சும், 100 கி.மீ., வேகத்தை எட்ட வெறும் 9.6 வினாடியும் எடுக்கிறது.
சவுகரியமான பயணத்திற்கு சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்த காரில் 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இடம் பெறவில்லை. 10 மற்றும் 7 அங்குல இரு டிஸ்ப்ளே, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், இணைப்பு வசதிகள், பேனரோமிக் சன் ரூப், 6 காற்று பைகள் உட்பட 38க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
