/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
பழைய வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
/
பழைய வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
பழைய வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
பழைய வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் கவனிக்க வேண்டியவை!
ADDED : பிப் 22, 2025 08:33 AM

புதிதாக கட்டிய வீட்டுக்கு முதல் முறையாக வண்ணம் அடிக்கும் போது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டடத்தில் சுவர்களுக்கான கட்டு வேலை முடிந்து, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின் பூச்சு வேலை மேற்கொள்ளப்பட வேண்டும்.
புதிய சுவர்களில் பூச்சு வேலை முடிந்து முறையாக நீராற்றும் பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். அதன் பின் சுவரின் மேற்பரப்பில் மேடு, பள்ளங்கள் இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். குறிப்பாக பூச்சு வேலையில் ஏற்பட்ட பிசிர்கள் இருந்தால் அகற்ற வேண்டும்.
இந்த விஷயத்தில் பணிகள் முடிந்த பின், சில நாட்கள் சுவர் நன்றாக உலர வாய்ப்பு அளிக்க வேண்டும். சுவரில் ஈரம் இல்லை என்பது உறுதியான பின், அதில் பூச்சு வேலைக்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், பழைய கட்டடத்தில் வண்ணம் அடிக்கும் பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பழைய கட்டடங்களை பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் ஏற்கனவே உள்ள வண்ணத்தை தவிர்த்து, புதியதை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில், முதலில் பழைய கட்டடத்தில் வண்ணம் அடிப்பதற்கான பணிகளை துவங்கும் முன், அதில் ஏற்கனவே உள்ள வண்ணம் என்ன? அதையே மீண்டும் அடிக்க வேண்டுமா அல்லது புதிய வண்ணத்தை அடிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக, பழைய கட்டடத்தில் வண்ணம் அடிக்க வேண்டும் என்று திட்டமிடும் போது, வழக்கமான செலவுகளுடன் சுவரில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகளுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும்.
பழைய கட்டடங்களில் ஓதம் உள்ளிட்ட காரணங்களால் சுவர்களில் ஈரம் காணப்படும். குறிப்பாக, பழைய கட்டடங்களில் வண்ணம் அடிக்கும் பணிகளை எந்த காலகட்டத்தில் மேற்கொள்கிறோம் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதில் மழைக்காலத்தில் ஓதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட சுவர் எனில் வண்ணம் அடிக்கும் பணிக்கு முன், கட்டுமான ரீதியாக சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பெரும்பாலான கட்டடங்களில் மழைக்காலத்தில் உட்புறத்தில் ஏற்பட்ட ஈரம், கோடைக்காலத்தில் இருக்காது என்பதால், இதை முறையாக கவனிக்க மக்கள் தவறுகின்றனர். பொதுவாக பழைய சுவர்களில் ஏற்கனவே இருக்கும் வண்ணத்தின் மேற்பரப்பை நன்றாக சுரண்டி சுத்தப்படுத்தி, பட்டி பார்க்க வேண்டும்.
சுவரில் மேற்பரப்பில் சமநிலை இருக்க வேண்டும் என்பதற்காக சமநிலையை பராமரிக்க நடவடிக்கை எடுக்கும் போது, நீர்க்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்ய கவனம் செலுத்த வேண்டும்.
சில சுவர்களில் ஈரம் உட்புறத்தில் இறங்கி இருந்தாலும் வெளிப்படையாக தெரியாது என்பதால், பிரைமர் அடிக்கும் முன், 'டாம்புரூப்' எனப்படும் ஈரம் தடுப்பு பொருளை பூச வேண்டும்.
பழைய சுவர்களில் குறைந்த செலவில், அவசர தேவைக்காக வண்ணம் அடிப்பது என்றால் சுத்தப்படுத்தும் பணிகளை முடித்து, ஏற்கனவே இருந்த வண்ணங்களை திரும்ப அடிக்கலாம். வண்ணம் மாற்றப்பட வேண்டும் என்றால், புதிதாக பிரைமர் அடிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.