/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
குடியிருந்த வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன?
/
குடியிருந்த வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன?
குடியிருந்த வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன?
குடியிருந்த வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன?
ADDED : ஆக 03, 2024 06:40 AM

''ஏற்கனவே குடியிருந்த வீட்டை நாம் வாங்கும் போது, அந்த வீட்டை உரிமையாளர் ஏன் விற்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்,'' என அறிவுறுத்துகிறார், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை மைய தலைவர் லட்சுமணன்.
நான் கட்டிய வீட்டை வாங்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அதன் தரம் பற்றி எப்படி அறிந்து கொள்வது?-
- எச்.மனோஜ்குமார், கருமத்தம்பட்டி.
நிலம் மற்றும் பட்டா சம்பந்தமான ஆவணங்கள், மின்னிணைப்பு பற்றிய தகவல்கள், கட்டுமானத்திற்கான அனைத்து அங்கீகாரங்கள், நில உரிமை ஆவணங்கள் மற்றும் கட்டுமான அனுமதி சரியானவையா என சரிபார்த்துக்கொண்டால் மட்டும் போதாது.தேவை ஏற்பட்டால், கட்டுமான நிறுவனம் அல்லது பொறியாளர் பற்றிய விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகளை சரிபார்க்கவும்.
பயன்படுத்தப்பட்ட சிமென்ட், இரும்பு, செங்கல், மரம் மற்றும் மற்ற கட்டுமானப் பொருட்களின் தரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
கட்டுமான பொருட்கள் தரமானவையா என்பதற்கான சான்றிதழ் பெற்றுள்ளனவா என்று பாருங்கள். மின்சாரம், நீர் வழிகால் மற்றும் இதர வசதிகள் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்கவும்.
ஒரு நிபுணர் அல்லது தொழில்முறை வீட்டு பரிசோதகரை கொண்டு, வீட்டின் தரம் முழுவதையும் பரிசோதிக்கவும். பள்ளிகள், மருத்துவமனை, கடைகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு அருகில் உள்ளதா என பார்க்கவும்.
ஏற்கனவே குடியிருந்த வீட்டை நாம் வாங்கும் போது, அந்த வீட்டை உரிமையாளர் ஏன் விற்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். முழுமையான விசாரணைக்கு பின்பே, அந்த வீட்டை வாங்குவது பற்றி யோசிக்க வேண்டும்.
வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தாலும் அல்லது வீட்டை பற்றி தவறான தகவல் இருந்தாலும், அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு முடிவெடுக்கலாம்.
ரியல் எஸ்டேட்டில் சிக்கல் உள்ளதா? அல்லது பட்டா போன்ற சொத்து ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பது பார்த்து வாங்குவது, உங்கள் பணத்தையும், எதிர்கால வாழ்க்கையையும்பாதுகாக்கும்.
பட்ஜெட்டுக்குள் வீடு கட்ட விரும்புகிறேன். பொருட்களின் செலவை குறைக்கும் வழிமுறைகள் இருக்கிறதா?--
-ஆர்.கமலேசன், பேரூர்.
'சிறுகக் கட்டி பெருக வாழ்' என்ற கோட்பாட்டை கடைபிடித்தாலே, குறைந்த பட்ஜெட்டில் வீட்டை கட்டலாம். ஒவ்வொரு சதுரடி கட்டுமானமும் செலவை கூட்டுகிறது. கட்டடத்தின் தரத்துடன் (செங்கல், மணல், சிமென்ட் போன்றவை) ஒரு போதும் சமரசம் செய்யாமல் இருப்பது நல்லது. சரியான திட்டமிடல், விபரம் மற்றும் பொருள் தேர்வு வாயிலாக, செலவை குறைக்க முடியும்.
இயற்கையாகவே வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பான வீட்டை கட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதிகபட்சமாக, உள்ளூரில் கிடைக்கும் பொருள் மற்றும் கட்டுமான நுட்பங்களை பயன்படுத்த முயற்சிக்கவும். உங்கள் பகுதியின் பாரம்பரிய கட்டடக்கலை மற்றும் பழைய கட்டடங்கள் ஆகியவற்றில் இருந்து, குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டின் உட்புறம், வெளிப்புற தோற்றம் ஆகிய இரண்டிலும் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு கட்டுவதை தவிர்க்கவும்.
'ஏஏசி' பிளாக்ஸ் கொண்டு சுவர் கட்டுவது, அலுமினிய ஜன்னல்கள், யு.பி.வி.சி., ஜன்னல்கள், ஸ்டீல் கதவுகள் போன்ற பொருட்கள் பயன்படுத்துவதால், வீடு கட்டும் செலவுகளை குறைக்கலாம்.