/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டு மாடியில் சோலார் மின்சார உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தும் போது...
/
வீட்டு மாடியில் சோலார் மின்சார உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தும் போது...
வீட்டு மாடியில் சோலார் மின்சார உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தும் போது...
வீட்டு மாடியில் சோலார் மின்சார உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தும் போது...
ADDED : செப் 07, 2024 12:00 PM

நம் நாட்டில் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கான வழிமுறைகளை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான வழிமுறையை பயன்படுத்த அதிக ஊக்கம் அளிக்கப்படுகிறது.
சில ஆண்டுகள் முன் வரை, பெரிய நிறுவனங்களின் வளாகங்களில் தான் இது போன்ற மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது, மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் இது முற்றிலுமாக மாறியுள்ளது.
குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர் அதன் மேல்தளத்தில் சோலார் மின்சார உற்பத்தி அமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
பொது கட்டட விதிகளில் இதற்கான கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், பணி நிறைவு சான்று பெற, இது கட்டாயம் என்ற நிலை வந்துள்ளது.
இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவோர் சோலார் மின்சார உற்பத்திக்கான ஏற்பாடுகளை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தினாலும், அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது வீடு வாங்குவோரின் பொறுப்பாகிறது. இந்நிலையில், தனி வீடுகளிலும் மொட்டை மாடியில் சோலார் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்த அடிப்படை விபரங்களை, மத்திய அரசின் இணையதளங்கள் வாயிலாக மக்கள் எளிதாக பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, வீடுகளில் சோலார் மின்சார உற்பத்திக்கான பேனல்களை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டினாலும், அதில் கிடைக்கும் மின்சாரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாக, பகல் நேரத்தில் இதில் மின்சாரம் கிடைக்கும் போது, வீட்டில் அதை பயன்படுத்துவதற்கான தேவை இருக்காது என்பதே முதல் காரணமாக உள்ளது.
இது போன்ற சூழலில் இருப்பவர்கள், எந்த விதத்திலும் கவலைப்பட வேண்டாம். சோலார் மின்சார உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தும் போது, மின்சார வாரியத்தை அணுகி மின்சாரம் கொடுப்பதற்கான மீட்டர் உள்ளிட்ட வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
இதனால், பகல் நேரத்தில் உங்கள் வீட்டில் ஒரு நாளைக்கு, 10 யூனிட் வீதம் மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்றால், அதை அப்படியே மின்சார வாரியத்துக்கு நீங்கள் கொடுக்கும் நிலையில், மின்சார வாரியத்தின் வழக்கமான இணைப்பு வாயிலாக அந்த மாதத்தில் நீங்கள் பயன்படுத்திய மின்சார நுகர்வு அளவில், இந்த 300 யூனிட் கழிக்கப்படும்.
இதையடுத்து, எஞ்சிய யூனிட் மின்சாரத்துக்கான கட்டணங்களை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்படுகிறது. இதனால், வீட்டில் மின்சார கட்டணத்துக்கான செலவுகள் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.