தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?

 எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?

 எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?


ADDED : ஆக 22, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 07:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறிய வீடுகளுக்குக்கூட மண் பரிசோதனை செய்ய வேண்டுமா? அருகில் உள்ள வீட்டின் 'பவுண்டேஷன்' விவரத்தை வைத்து கட்ட முடியாதா?: -கார்த்திகேயன்: அருகிலுள்ள கட்டடத்தின் பவுண்டேஷனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நமது வீட்டிற்கான அடித்தளத்தை முடிவு செய்வது சரியான பொறியியல் நடைமுறை அல்ல. ஒரே பகுதியில்மண்ணின் தன்மை, நிரப்புமண் ஆழம், நிலத்தடிநீர் அளவு மற்றும் தாங்கும் தன்மை மாறக்கூடும். மண் பரிசோதனை தரவுகள் வாயிலாக மண்ணின் அடுக்குகள், தாங்கும் திறன் மற்றும் 'செட்டில்மென்ட்' அபாயம் ஆகியவை அறியப்படுகின்றன. குறிப்பாக ஜி+1 மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டடங்கள், மண் இறுக்கம் குறைந்த நிலங்கள் மற்றும் முன்பு விவசாய நிலமாக இருந்த இடங்களில் மண் பரிசோதனை மிகவும் பயனுள்ளது.

புட்டிங் மற்றும் பிளிந்த் பீம் வேலை முடிந்துள்ளது. சில இடங்களில் சிறிய மயிரிழை விரிசல்கள் உள்ளன. 'புட்டிங்' போட்ட பிறகும் சிறிய விரிசல் வந்துள்ளது பயத்தை ஏற்படுத்துகிறது. இது கட்டுமான அமைப்பில் ஏற்பட்ட பிரச்னையா?: -பிரியா: அனைத்து விரிசல்களும் 'ஸ்டிரக்சுரல் பெயிலியர்' என்று குறிப்பிடமுடியாது. கான்கிரீட் சுருக்கம், கட்டடங்களுக்கு தண்ணீர் விடப்படும் 'கியூரிங்' குறைவு, வெப்பநிலை மாறுபாடு போன்ற காரணங்களாலும் மயிரிழை விரிசல் ஏற்படலாம். ஆனால் விரிசல் தொடர்ந்து பெரிதாகிறதா? என கவனிக்க வேண்டும். 'புட்டிங் காலம்' சந்திப்பு பகுதியில் விரிசல் உள்ளதா என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும். விரிசல் அகலம் மற்றும் அதன் வளர்ச்சியைப் பதிவு செய்து, ஸ்டிரக்சுரல் இன்ஜினியர் வாயிலாக ஆய்வு செய்வது நல்லது.

கான்கிரீட் போடும் போது அதிக தண்ணீர் சேர்த்தால் என்ன பிரச்னை? வேலை எளிதாக இருப்பதற்கு மேசன்கள் தண்ணீர் அதிகமாக சேர்க்கிறார்கள். அது உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துமா?: -ரமேஷ்: ஆம். அதிகமாக தண்ணீர் சேர்ப்பது கான்கிரீட் தரத்தை பாதிக்கக்கூடிய பொதுவான தவறுகளில் ஒன்று. தண்ணீர் அளவு அதிகரித்தால் கான்கிரீட் வலிமை குறையலாம். துளைகள் அதிகரிக்கும்; நீர் மற்றும் குளோரைடு போன்றவை உள்ளே எளிதாக சென்று கான்கிரீட் இரும்பில் அரிப்பை ஏற்படுத்தலாம். வேலைத்திறன் குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்ப்பதற்குப் பதிலாக, 'அப்ரூவ்டு அட்மிக்சர்' மற்றும் சரியான 'மிக்ஸ் டிசைன்' பயன்படுத்த வேண்டும்.

கட்டுமானத்துக்கு ஆற்று மணல் கிடைக்காததால் எம்.சாண்ட் பயன்படுத்த சொல்கிறார்கள். ஆர்.சி.சி.: -நவீன்குமார்: தரமான எம்.சாண்ட் இருந்தால் கான்கிரீட் பணிகளில் பயன்படுத்தலாம். ஆனால், எல்லா எம்.சாண்டும் ஒரே தரத்தில் இருக்காது. அதில் கலந்திருக்கும் துகள், வண்டல் உள்ளிட்டவை குறித்து தர ஆய்வு செய்ய வேண்டும். அதிக துகள், கலப்படம் என்பது பணியின் தரத்தையும், கட்டட வலிமையையும் பாதிக்கும். எனவே, தரமான எம்.சாண்ட் தேர்வு அவசியம்.

வீட்டின் மொட்டை மாடியில் 'வாட்டர் புரூப்' டைல்ஸ் போட உள்ளோம். வாட்டர் புரூப் கெமிக்கல் சரியான முறையில் பயன்படுத்தியும் தண்ணீர் வெளியேறுவதற்கான 'ஸ்லோப்' சரியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லையா?: -முரளிதரன்: மொட்டைமாடி வாட்டர் புரூப்பில் 'ஸ்லோப்' மற்றும் மழைநீர் வெளியேறும் வசதிதான் முதல் பாதுகாப்பு. நீர் நீண்ட நேரம் தேங்கும்போது இணைப்புகள், விரிசல்கள் மற்றும் மோசமான நிலையில் இருக்கும் இடங்கள் வழியாக கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. வாட்டர் புரூப்பிங் அல்லது கோட்டிங் மட்டுமே தண்ணீர் தேங்குவதில் ஏற்படும் பிரச்னையை நிரந்தரமாக சரி செய்யாது. மழைநீர் வெளியேறுவதற்கு சரியான ஸ்லோப் அமைப்பு அவசியம்.

-பழனிச்சாமி: தலைவர்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us