வீடு கட்டும் போது வாகனம் நிறுத்த இடம் ஒதுக்குவதில் கவனிக்க!
வீடு கட்டும் போது வாகனம் நிறுத்த இடம் ஒதுக்குவதில் கவனிக்க!
ADDED : ஆக 08, 2026 06:42 AM

புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டும் போது அதில் மொத்த பரப்பளவு, உயரம், அறைகளின் அளவுகள் போன்ற விபரங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க துவங்கி உள்ளனர். இதில் கட்டடத்தின் ஒவ்வொரு பாகமும் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, ஒரு கட்டடத்தின் அடிப்படை பாகங்கள் என்ன, அதற்கான அளவுகள் என்ன என்பதை கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக முடிவு செய்ய வேண்டும். இது விஷயத்தில் கட்டட அமைப்பியல் பொறியாளரின் வழிகாட்டுதலை பெற்று அதன் அடிப்படையில் பிற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்டடம் கட்டும் போது அதன் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள், மேல்தளம் அமையும் உயரம், மேல்தளத்தின் தடிமன் போன்ற விஷயங்களில் அளவுகளை துல்லியமாக பார்க்க வேண்டும். இத்துடன், வரைபட நிலையிலேயே அறைகளின் அளவுகள், அதற்கான நுழைவு பகுதி போன்ற விபரங்களையும் கவனிக்க வேண்டும்.
இந்நிலையில் கட்டுமான பணி ரீதியாக மட்டும் இந்த விஷயங்களை பார்க்காமல், பயன்பாட்டு நிலையில் எப்படி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, புதிதாக வீடு கட்டுவோர் அதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த உரிய இடவசதியை ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலான சமயங்களில், புதிய வீடு கட்டுவோர், அந்த சமயத்தில் தங்களிடம் கார் இல்லை என்பதற்காக கார் நிறுத்து மிடம் ஒதுக்குவதை தவிர்க் கின்றனர். உண்மையில், உங்களிடம் அப்போது கார் இருக்கிறது, இல்லை என்பதை கடந்து, ஒரு கட்டடம் என்றால் அதற்கான வாகன நிறுத்துமிடங்கள் முறையாக அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதில் ஒரு கார் நிறுத்த, 150 சதுரடி அளவுக்கு முகப்பு பகுதியில் இடம் விட்டால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், கார் நிறுத்துவதற்கு பொதுவான அளவீடு அடிப்படையில் இடம் விட்டால் போதும் என்று மக்கள் நினைப்பது தவறு.
சந்தையில், தற்போது பல்வேறு அளவுகளில் கார்கள் வந்துள்ள நிலையில், பெரிய கார் நிறுத்துவதற்கு என்ற அடிப்படையில் இடம் விடுவது நல்லது. கார் நிறுத்த மட்டும் இடம் விட்டால் போதும் என்று நினைக்காமல், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும், உரிய இடம் ஒதுக்க வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் முகப்பு பகுதியில் வாகனங்கள் நிறுத்த குறிப்பிட்ட அளவு இடம் விடும் போது, அந்த வழியே நடந்து செல்வதற்கான இடத்தை ஒதுக்க மறந்துவிடுகின்றனர். இதனால், வீட்டு முகப்பில் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் போது நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, வீடு கட்டும் போது, வாகனங்கள் நிறுத்த முறையான அளவுகளை கருத்தில் வைத்து இடம் ஒதுக்க வேண்டும், குறிப்பாக நடந்து செல்வது போன்ற தேவைகளுக்கும் இடம் இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
பெரும்பாலான வீடுகளில் முகப்பு பகுதியில் வாகனங்கள் நிறுத்த குறிப்பிட்ட அளவு இடம் விடும் போது, அந்த வழியே நடந்து செல்வதற்கான இடத்தை ஒதுக்க மறந்துவிடுகின்றனர்.
