/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
சுயசான்று கட்டட அனுமதி பெறுவதில் ஜாக்கிரதை
/
சுயசான்று கட்டட அனுமதி பெறுவதில் ஜாக்கிரதை
ADDED : பிப் 15, 2025 08:15 AM

கட்டட அனுமதி பெறுவது குதிரைக்கொம்பு எனும் கலக்கத்தை மாற்றியது, அரசின் சுய சான்றிடப்பட்ட கட்டட அனுமதி அளிக்கும் திட்டமாகும். எளிதாகவும், விரைவாகவும் எந்த அலுவலகத்திற்கும் செல்லாமல் கிடைக்கும் இந்த அனுமதி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மனை பரப்பு, 2,500 சதுர அடிக்குள் இருந்து கட்டட பரப்பு, 3,500 சதுர அடிக்குள் இருப்பின், சுயச்சான்று அனுமதியை அரசின் இணையதளம் onlineppa.tn.gov.in மூலம் பெறலாம். இரண்டு குடியிருப்புகளுக்கும், 7 மீ., உயரத்திற்கும் மிகாமல், கட்டடம் இருக்க வேண்டும்.
பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர்(கோவை) கனகசுந்தரம் கூறியதாவது:
முன்புறம், சுற்றுப்புறம் காலியிடம் எவ்வளவு விடவேண்டும் என தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தொடர் கட்டட பகுதியிலும், பொருளாதாரத்தில் பின் தங்கியோர் பகுதியிலும், முன்புறம் குறைந்தது, 1 மீ., காலியிடமும் பிற பகுதியில், 1.5 மீ., காலியிடமும் விட வேண்டும்.
சைட்டின் அகலம் மீட்டருக்குள் இருப்பின் கட்டடத்தின் ஒரு புறத்தில், 1 மீ., காலியிடம் இருக்க வேண்டும். அதிக அகலம் இருப்பின் ஒவ்வொரு புறமும், 1 மீ., அல்லது ஒரு புறத்தில் மட்டும், 2 மீ., விடவேண்டும். பின்புறம் காலியிடம் தேவை இல்லை; ஒட்டி கட்டிக்கொள்ளலாம்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019க்கு உட்பட்டு இருக்க வேண்டும். கட்டட வரைபடம், எந்த விதிகளையும் மீறாமல் இருக்கும் வண்ணம், தயாரிக்கப்பட வேண்டும்.
கட்டட வரைபடம் உட்பட அனைத்து ஆவணங்களுக்கும், முழு பொறுப்பு விண்ணப்பதாரரையே சார்ந்தது. தவறான, உண்மைக்கு புறம்பான விண்ணப்பங்கள், சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்பட்டது. வங்கி கடனுதவியும் மறுக்கப்படும்.
அனுமதி பெற்ற பின், தெரிய வந்தால் அனுமதி திரும்ப பெறப்படும். கட்டடம் இடிக்கப்படும் சூழல் உருவாகும். தண்டம் மற்றும் கிரிமினல் வழக்கு பாயலாம்.
வரைபடம் ஒரு பதிவுபெற்ற பொறியாளரால் மட்டுமே தயாரிக்கப்பட்டு, கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, விண்ணப்பதாரர் பதிவு பெற்ற பொறியாளரை, நேரில் அணுகி தங்கள் தேவையை பொறுத்து, வரைபடம் தயாரிக்க வேண்டும்.
இடைத்தரகர்கள் மற்றும் கணனி மையம் மூலம் தயாரிப்பதை தவிர்க்க வேண்டும். பேனாவால் கையொப்பமிடப்பட்ட வரைபடத்தை பெற்று, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது, மிகுந்த பயன் தரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.