/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மனித கழிவுகளை மக்கச்செய்யும் 'பயோ செப்டிக் டேங்க்' கழிவுநீரை மறு உபயோக நீராக மாற்றும் நுண்ணுயிரிகள்
/
மனித கழிவுகளை மக்கச்செய்யும் 'பயோ செப்டிக் டேங்க்' கழிவுநீரை மறு உபயோக நீராக மாற்றும் நுண்ணுயிரிகள்
மனித கழிவுகளை மக்கச்செய்யும் 'பயோ செப்டிக் டேங்க்' கழிவுநீரை மறு உபயோக நீராக மாற்றும் நுண்ணுயிரிகள்
மனித கழிவுகளை மக்கச்செய்யும் 'பயோ செப்டிக் டேங்க்' கழிவுநீரை மறு உபயோக நீராக மாற்றும் நுண்ணுயிரிகள்
ADDED : டிச 06, 2024 11:33 PM

ஏற்கனவே கட்டப்பட்ட எங்கள் வீட்டில், பெரியவர்கள் முதல் தளத்துக்கு செல்ல 'ஹோம் லிப்ட்' அமைக்கலாமா? மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து விளக்கவும்.
-சந்தோஷ், ராசிபாளையம்.
தாராளமாக அமைக்கலாம். தகுந்த பொறியாளரின் ஆலோசனையுடன் பாதுகாப்பாக நவீன கட்டிங் இயந்திரம் கொண்டு ஏற்கனவே உள்ள ரூப் ஸ்லாபை கட்டிங் செய்து வீட்டு லிப்ட் அமைக்கலாம்.
ஆறு பேர் வரை பயணிக்க கூடிய அளவில், வீல் சேர் இடவசதியுடன், தகுந்த பாதுகாப்பு அமைப்புகளுடன் 'ஹைட்ராலிக் ஹோம் லிப்ட்'கள் கிடைக்கின்றன. தானியங்கி கதவு, புளோரிங் மற்றும் சீலிங் போன்றவற்றிற்கு நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களை பொறுத்து, லிப்ட் விலை மாறுபடும்.
எங்களது வீட்டின் மேற்கூரையில் மழைக்காலத்தில் ஓதம் அடிக்கிறது. நீர் கசிவின் மேலே உள்ள பகுதியை மட்டும் 'வாட்டர் புரூப்பிங்' செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். ஆனால், மொட்டை மாடி முழுவதும் 'வாட்டர் புரூபிங்' செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். உங்கள் ஆலோசனை கூறவும்.
-ரமேஷ் பாபு, கீரணத்தம்.
கசிவு பிரச்னை உள்ள பகுதியின் நேர் மேலிருந்து மட்டுமே நீர் கசிவு வருகிறது என்று கூற இயலாது. சற்று பழுதான மொட்டை மாடி தளத்தில் ஓரிடத்தில் நீர் உட்புகுந்து, பின்னர் ரூப் சிலாபின் நுண்துளை வழியே பயணித்து, சற்று தள்ளி வேறு ஒரு இடத்தில் கசிவாக உருவாக வாய்ப்புள்ளது. அதனால், மொத்த ஏரியாவிற்கும் பராமரிப்பு பணிகள் செய்தல் நல்லது. தரமான கெமிக்கல் பயன்படுத்தினால், நீண்ட காலம் நீர்க்கசிவு பிரச்னை வராமல் தடுக்கலாம்.
எங்கள் கட்டடத்தில் சுவிட்ச்கள் மற்றும் சில உபகரணங்களை தொட்டால், 'ஷாக்' அடிப்பது எதனால்?
-ஜாபர், சின்னியம்பாளையம்.
தங்கள் கட்டடத்திற்கு முறையான 'கிரவுண்ட் எர்த்திங்' செய்யப்பட்டுள்ளதா என்று தகுந்த எலக்ட்ரீசியனை கொண்டு பரிசோதிக்க வேண்டும். மின் உபகரணங்களில் மின்சாரத்தை எடுத்து செல்லாத உலோக பாகங்களில் ஏற்படும் மின் கசிவை, பாதுகாப்பாக எடுத்து சென்று பூமியில் கடத்தி விடுவதற்கான ஜி.ஐ., அல்லது காப்பர் எர்த்திங் அமைத்து, தகுந்த 'பேக் பில்லிங் காம்பவுண்ட்' அமைத்தால், இப்பிரச்னை தீர்ந்து விடும்.
தற்போது அனைவரும் 'பயோ செப்டிக் டேங்க்' உபயோகிக்கிறார்கள். அதன் பலன்கள் பற்றி விளக்கம் அளித்தால் உபயோகமாக இருக்கும்.
-மணிகண்டன், சுந்தராபுரம்.
பயோ செப்டிக் டேங்குகள், ஒரு சுகாதாரமான வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு. பழமையான கழிவறை முறைகளில், 30 சதவீத கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படும். மீதமுள்ள கழிவுகள் செப்டிக் தொட்டியிலேயே தங்கிவிடும். அதனை கழிவு நீர் லாரி கொண்டு நாம் அப்புறப்படுத்த வேண்டும். செலவு அதிகம்; ஆனால், பயோ செப்டிக் டேங்கில் நிரப்பப்பட்ட நுண்ணுயிரிகள், 99.9 சதவீதம் மனிதக் கழிவுகளை மக்கச்செய்து அவற்றை மறு உபயோகத்திற்காக துாய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றி வெளியேற்றும். வெளிவரும் நீரில் நாற்றமும் இருக்காது. சுத்திகரிக்கப்பட்ட நீரை, வீட்டுத் தோட்டங்களிலும் பயன்படுத்தலாம்.
ஆட்டோமேட்டிக் பிரஷர் பூஸ்டர் பம்ப்களை, நமது குளியல் அறைகளில் பயன்படுத்தலாமா?
-தேவராஜ், பள்ளபாளையம்.
கண்டிப்பாக பயன்படுத்தலாம். பல்வேறு காரணங்களால் நிறைய வீடுகளில் குளியலறை மற்றும் பைப்களில் நீர் மிக மெதுவாக வரும். அந்த இடங்களில் மேற்கூறிய பூஸ்டர் பம்ப்கள் உபயோகிக்கலாம்.
ஆனால், 'பிரஷர் செக்கிங்' முறையில் தரமான பைப் மற்றும் பிட்டிங் கொண்டு பிளம்பிங் வேலை செய்திருத்தல் மிக அவசியம்.
இந்த பம்பினால் அனைத்து பைப்களிலும் சமமான அழுத்தம் கிடைக்கும். நாம் பைப்களை திறந்தால் மட்டுமே மோட்டார் செயல்படும். மற்ற நேரங்களில் இயங்காது. இதனால் மின் செலவு மிச்சப்படும்.
செவ்வேள்,
பொறியாளர்
துணைத் தலைவர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா).