/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
சொத்தை கிரயம் செய்து கொடுத்து அடமான கடன் பெறலாமா?
/
சொத்தை கிரயம் செய்து கொடுத்து அடமான கடன் பெறலாமா?
ADDED : மே 02, 2025 09:18 PM
கோவை வடக்கு தாலுக்கா, குருடம்பாளையம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் வடக்கு பார்த்த, 1,150 சதுரடி கொண்ட மூன்றாம் தளத்தில், 13 ஆண்டுகள் பழமையான அனைத்து வசதிகளும் கொண்ட, 2 பிஎச்கே அபார்ட்மென்ட், கார் பார்க்கிங் வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுக்கலாம்?
- ரவிசங்கர், கோவை.
இந்த காலனியில் கடந்த, 10 ஆண்டுகளில், 15 பல்லடுக்கு குடியிருப்புகள் வந்துவிட்டன. பஞ்சாயத்தில் இருந்து மாநகராட்சிக்கு மாற உள்ளது. துடியலுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து, 1 கி.மீ., மற்றும் கோத்தாரி மில் ஸ்டாப்பில் இருந்து, 0.75 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு 2, 'பிஎச்கே' அபார்ட்மென்ட் வாடகை ரூ.12 ஆயிரத்து 500 என்று தெரிகிறது. எனவே, ரூ.40 லட்சம் முதல், 50 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கலாம்.
கோவை மாவட்டம், மதுக்கரை தாலுக்கா, பிச்சனுார் கிராமத்தில் வேலந்தாவளம் செல்லும் வழியில், பாலக்காடு மெயின் ரோட்டில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், 20 ஆயிரம் சதுரடி கொண்ட இண்டஸ்ட்ரியல் இடம் விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-சிவராமன், கோவை.
இந்த பகுதி, தொழில்மயமாகாமல் பின்தங்கியிருந்து வருகிறது. அவிநாசி, திருச்சி, பொள்ளாச்சி ரோடுகளுக்கு உள்ள முக்கியத்துவம், இதற்கு வராதோ என்ற தயக்கம் மக்கள், தொழில்முனைவோர் மத்தியில் இருக்கலாம். அது சரியான கண்ணோட்டம் அல்ல. துணிந்து வாங்கினால் மூன்று ஆண்டுகளுக்குள், 40-50 சதவீதம் விலை ஏற வாய்ப்புண்டு.
எனவே, சொத்தை பொறுத்தவரை இவ்வாறு கணக்கு செய்து பார்க்கவும். இரண்டு ஏக்கரில், 50 ஆயிரம் சதுரடி வரை குடோன் அல்லது தொழிற்சாலையே கட்டலாம். அப்படி கட்டி விடும் பொழுது சதுரடிக்கு ரூ.10 என கிடைத்தாலோ, மாதம் ரூ.5 லட்சம் வாடகை கிடைப்பது என்பது, 3-4 கோடி ரூபாய் பண முதலீடு செய்வதற்கு, போதுமான வருவாய்தானே.
கோவை வடக்கு தாலுக்கா, இடிகரை கிராமத்தில் உள்ள கூட்டுறவு நகரில், டீ.டி.சி.பி., அனுமதி பெற்ற தெற்கு பார்த்த, 5 சென்ட் இடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-தீனா, கோவை.
சாட்டிலைட் நகரங்கள் என்ற அடிப்படையில், அடுத்து உருவாக இருப்பது இடிகரை. விரைவில், கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. காந்திபுரத்தில் இருந்து, 17 கி.மீ., தொலைவில், துடியலுாரில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், கோவில்பாளையத்தில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் முக்கோண அணுகுபாதை கொண்டது. இன்று கோவையில் இருந்து, 15 கி.மீ., சுற்றளவில்தான் மனை இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தவறவிடாமல் சென்ட் ரூ.9 லட்சம் என்றால், வாங்கி பயன்பெறவும்.
எனது அவசர தேவைக்காக, வீட்டை அடமானம் வைத்து தனியாரிடம் இருந்து ரூ.10 லட்சம் கடன் பெற, எண்ணி உள்ளேன். சொத்தின் மதிப்பு ரூ.30 லட்சம். அவர் சொத்தை கிரயம் செய்து கொடுக்க சொல்கிறார். கடன் செலுத்திய பிறகு, மறு கிரயம் செய்துகொடுக்கிறேன் என்கிறார். இது சரியா?
-சந்தியா, திருப்பூர்.
உங்களது கடன் திருப்பும் காலம், மூன்று வருடம் என வைத்துக்கொண்டாலும், ஆரம்பத்தில் நீங்கள் விற்று, அவர்கள் வாங்குவதற்கான பதிவு கட்டணத்தை உங்களைத்தான் செலுத்த சொல்வார்கள். திரும்ப கிரயம் செய்யும்போதும், அதே கூடுதல் வழிகாட்டி மதிப்பு கட்ட வேண்டியிருக்கும்.
அதாவது, மொத்தமாக, 72 சதவீதம் ஆகிவிடும். கிட்டத்தட்ட வீட்டின் விலைக்கே கடன் வாங்கியதாகிவிடும். வீட்டை முதலில் கிரயம் செய்து கொடுத்தவுடன், அது அவர்களின் வீடாகிறது. அவர்கள் கிரயம் செய்துகொடுக்க மறுத்தால், நீங்கள்தான் கோர்ட்டுக்கு சென்று போராட வேண்டியிருக்கும்.
எனவே, அவர்கள் சொல்லும் வழி சரியல்ல. மாறாக ஈடு வைத்து, அதை பதிவு செய்து பணம் கடனாக பெறலாம்.
தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.