/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
தானப்பத்திரமாக எழுதிக்கொடுக்க முடியுமா?
/
தானப்பத்திரமாக எழுதிக்கொடுக்க முடியுமா?
ADDED : ஜூலை 04, 2025 10:21 PM
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கிராமத்தில், 40 சென்ட் நிலம் மற்றும், 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த, 5,000 சதுரடி குடோனை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
-வெங்கடாசலம், நீலகிரி.
மஞ்சூர் கிராமத்தில் குடோன் என்றால் டீ அல்லது விளைபொருள் சேமித்து வைப்பதற்காக இருக்கும். கட்டடமும் அதற்கு பாதையும் போக, 20 சென்டிலாவது பொருட்கள் விளைகின்றனவா என பார்க்கவும். இந்த இடம் லாரி போக்குவரத்துக்கு ஏதுவான இடமாக இருந்து, ஏதாவது பொது ரோட்டில் அமைந்து இருந்தால், சுமார் ரூ.80 லட்சம் கொடுத்து வாங்கலாம்.
உடுமலை தாலுகா, கோவை மெயின் ரோட்டில் இருந்து, 6 கி.மீ., தொலைவில், 30 அடி தார் ரோட்டில் இரண்டு ஏக்கர் தென்னை தோப்பு மற்றும், 1,500 சதுர அடிகள், 50 ஆண்டுகள் பழமையான வீடு விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுக்கலாம்.
-சுதர்சன், கோவை.
தென்னந்தோப்பு எனும்போதே, ரூ.20 முதல், 25 லட்சத்துக்கு காய்ப்பு மிக்க தோப்புகள் விலை போகும் நிலை உள்ளது. இதில், 30 அடி தார் சாலையுடன் அமைந்துள்ளது என்றால் மிகவும் சிறப்பானது. ரோடு மேல் உள்ளது என்பதால், பிற்காலத்தில் பிளாட் போட்டு விற்கலாம் என்று எண்ணி உடமைக்காரர் கூடுதலாக விலை சொல்லலாம். இருப்பினும் ரூ.70 லட்சம் என்பது தவறில்லாத விலை.
கோவை மாநகராட்சி, வடவள்ளி கிராமத்தில் தொண்டாமுத்துார் ரோடு, பொம்மனம்பாளையம் சந்திப்பில், பேரூர் செல்லும் வழி, 200 மீட்டர் தொலைவில் டீ.டி.சி.பி., சைட் விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம் என ஆலோசனை வழங்கவும்.
-கற்பகம், உக்கடம்.
டீ.டி.சி.பி., சைட் என்பதுடன் 'ரெரா'வின் அங்கீகாரமும் உள்ளதா என்பதை பார்க்கவும். அவ்வாறு இருப்பின் ஏற்கனவே வீடுகள் குறைந்து ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கையில் உருவாகியுள்ளதா என பார்க்கவும். ஆம் என்றால் சென்ட் ரூ.8 முதல், 10 லட்சம் வரையும், 20 முதல், 25 வீடுகள் இருக்கிறது என்றால் ரூ.10 முதல், 12 லட்சம் வரையும் கொடுத்து வாங்கவும்.
பூமியின் தன்மை களிமண் என்றால் ஒரு லட்சம் குறைத்து மதிப்பிடவும். அதேசமயம், அணுகுபாதையில் இருந்து மனை எவ்வளவு தாழ்வாக உள்ளது என்பதை அனுசரித்து, தேவைப்படின் மற்றுமொரு ரூ.50 ஆயிரம் குறைத்து கணக்கிட்டு வாங்கலாம்.
நான் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில், அடமானத்தில் உள்ள எனது வீட்டை(சுயசம்பாத்தியம்) எனது மகனுக்கு தானப்பத்திரம் வாயிலாக எழுதிக்கொடுக்க விரும்புகிறேன். மீதமுள்ள கடனை என் மகன் வங்கிக்கு செலுத்த தயாராக உள்ளேன். உயில் எழுதிவைக்க விருப்பமில்லை என்பதால் இது சாத்தியமா எனக்கூறவும்.
-கிருஷ்ணசாமி, கோவை.
கண்டிப்பாக சாத்தியம். நியாயமானதும் கூட. வங்கியும் மறுக்க இயலாது. வழிவகைகளை வங்கி அதிகாரியிடம் கலந்து, உங்கள் குடும்ப வக்கீலை வைத்து முறைப்படி பத்திரம் பதிந்து கொள்ளலாம். பதிந்த பின் உங்கள் மகனே கடனை செலுத்தி வரலாம்.
தகவல்: ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.