ADDED : டிச 20, 2024 06:48 PM

புதிதாக வீடு கட்டும் பொழுது கரையான் மருந்து தெளிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே... அது கண்டிப்பாக தெளிக்க வேண்டுமா? அப்படி தெளிக்க வேண்டுமெனில், எந்தெந்த இடங்களில் தெளிக்க வேண்டும்?
--சுப்பிரமணிய சிவா,
வெள்ளலுார்.
புதிய வீடு கட்டும் போது, கரையான் மருந்து தெளிப்பது ஒரு முதலீடு ஆகும். இது உங்கள் வீட்டை நீண்ட காலம் பாதுகாக்கும். வீட்டின் அடித்தளம் முழுவதும் கரையான் மருந்து தெளிக்க வேண்டும். கதவுகள், ஜன்னல்கள், மரச்சட்டங்கள் போன்ற மரப்பொருட்களில், கரையான் மருந்து பூச வேண்டும். சுவர்களின் அடிப்பகுதி மற்றும் மூலைகளில், கரையான் மருந்து தெளிக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள மண்ணிலும், கரையான் மருந்து தெளிக்கலாம்.
எங்கள் வீட்டு சன்சேடில் வெடிப்புகள் வந்துள்ளன. இதற்கு என்ன காரணம்? இதை எவ்வாறு சரி செய்வது?
-காளிதாஸ், துடியலுார்.
வீட்டு சன்சேடில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சன்சேடு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள் தரமாக இல்லையென்றால் வெடிப்புகள் ஏற்படலாம். வெப்பநிலை மாற்றங்கள் சன்சேடில் விரிசல்களை ஏற்படுத்தும்.
சன்சேடு பொருத்தப்பட்டிருக்கும் அடிப்படை தளம், சரியாக இல்லையென்றால் அதுவும் வெடிப்புகளை ஏற்படுத்தும். அதை பொருத்தும் போது, சரியான முறைகள் பின்பற்றப்படாவிட்டால் வெடிப்புகள் ஏற்படலாம். வெடிப்புகளுக்கான சரியான காரணத்தை கண்டறியவும், அதற்கேற்ற சிகிச்சை முறையை பின்பற்ற, ஒரு நிபுணரை அழைப்பது நல்லது. சிறிய வெடிப்புகளுக்கு சில சிறப்பு பொருட்களைப் பயன்படுத்தி சரிசெய்யலாம். பெரிய வெடிப்புகளுக்கு சன்சேடை மாற்ற வேண்டியிருக்கும்.
வீட்டு மொட்டை மாடியில் விழும் மழை நீர், வடிவதற்கு தளம் போடும் பொழுது, சுருக்கி தளம் போடுவது சிறந்ததா? அல்லது 'சிப்ஸ் கான்கிரீட்' என்று சொல்லக்கூடிய கான்கிரீட் தளம் போடுவது சிறந்ததா?
-சித்ரா, சரவணம்பட்டி.
வீட்டின் மொட்டை மாடியின் தளம் சுருக்கி கொண்டு அமைப்பதன் மூலம், அதாவது சுருக்கி என்பது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவை கொண்டு, அமைக்கும் பொழுது வெப்பம் காரணமாக மேலே இருக்கும் சிமென்ட் தளத்தில் விரிசல்கள் வர நிறைய வாய்ப்பு உள்ளது.
அந்த விரிசல்களின் மூலம், நீர் கசிவு ஏற்பட்டு கீழே உள்ள கான்கிரீட் தளத்தை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, இன்றைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, சிறந்த முறையில் மழை நீர் வடிகால் அமைத்து, 'சிப்ஸ் கான்கிரீட்' மூலம் சிறந்த முறையில் வாட்டர் புரூப்பிங் செய்து மேல் தளம் அமைப்பது சிறந்த தேர்வாகும்.
வீட்டின் மொட்டை மாடியில் விழும் மழை நீரை சேகரிக்க, வீட்டை ஒட்டி மழை நீர் தொட்டி அமைக்கலாமா?
-சிவக்குமார், பாப்பம்பட்டி.
வீட்டின் மொட்டை மாடியில் விழும் மழை நீரை சேகரித்து பயன்படுத்துவது ஒரு நல்ல பழக்கம். இது நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள உதவும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் செலவை குறைக்கும். ஆனால், அப்படி அமைக்கப் போகும் மழைநீர் சேகரிப்பு தொட்டி, வீட்டின் அஸ்திவாரத்தை ஒட்டி அமைக்கக் கூடாது.
நமது வீட்டின் அஸ்திவாரம் 'லோடு பேரிங் ஸ்ட்ரக்சர்' அல்லது 'பிரேம் ஸ்ட்ரக்சர்' என எதுவாக இருந்தாலும், அதிலிருந்து சற்று தள்ளி அமைப்பது முக்கியம். ஏனெனில், மழை நீர் வடிகால் மூலம் நிலத்துக்கு செல்லும் நீர், நமது அஸ்திவாரத்தில் மண் அரிப்பை ஏற்படுத்தி, அஸ்திவாரத்தை வலுவடையச் செய்யும்.
வீடு கட்டிய உடனே உட்புற சுவர்களில் பட்டி வைக்கலாமா, இல்லை ஒரு வருடம் கழித்து பட்டி வைக்கலாமா. வீட்டின் வெளிப்புறத்தில் பட்டி வைக்கலாமா; அப்படி வைப்பதால் வெயில் மற்றும் மழையினால், அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
-குமார், சாய்பாபாகாலனி.
வீடு கட்டிய உடனே, உட்புற சுவர்களில் பட்டி வைப்பது நல்லதல்ல. புதிய சுவர்கள் முழுமையாக உலர வேண்டும். ஒரு வருடம் கழித்து பட்டி வைப்பதே நல்லது. வெளிப்புற சுவர்களில் பட்டி வைப்பது பற்றி, பட்டியின் வகை, சுவரின் தரம், காலநிலை போன்றவற்றை பொறுத்து முடிவு செய்ய வேண்டும். சரியான வகை பட்டி மற்றும் நல்ல நிறுவல் இருந்தால் வெயில், மழை ஆகியவற்றால் அதிக பாதிப்பு ஏற்படாது.
- கவிராஜ்,
மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).

