/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டடத்துக்கு நோயற்ற வாழ்வு தரும் 'கியூரிங்' அகத்தில் ஒருவித வேதிவினையை உருவாக்கும்
/
கட்டடத்துக்கு நோயற்ற வாழ்வு தரும் 'கியூரிங்' அகத்தில் ஒருவித வேதிவினையை உருவாக்கும்
கட்டடத்துக்கு நோயற்ற வாழ்வு தரும் 'கியூரிங்' அகத்தில் ஒருவித வேதிவினையை உருவாக்கும்
கட்டடத்துக்கு நோயற்ற வாழ்வு தரும் 'கியூரிங்' அகத்தில் ஒருவித வேதிவினையை உருவாக்கும்
ADDED : ஜூலை 25, 2025 09:03 PM

வீ டு கட்டுவது என்பது சவாலான ஒன்றுதான். ஏனெனில், பல்வேறு கட்டுமான முறைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை அக்கறையாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, கட்டி முடித்த சுவர்களின் மீதும், கான்கிரீட் தளங்களின் மீது தண்ணீர் சொரிவது மிக முக்கியமானது; ஆனால், சிலர் அந்த விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை.
'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:
புதிய கட்டடங்களில் நீரேற்றுதல் என்பது அவசியமான நடவடிக்கைகளில் ஒன்று. சிலர் இதை நனைத்தல் என்பார்கள், ஆனால் இது நனைத்தல் மட்டும் இல்லை. ஆங்கிலத்தில் இதற்கு 'கியூரிங்' என்று பெயர். இதை தமிழில் குணப்படுத்துதல் என்று கூறலாம்.
ஆனால், அப்படி யாரும் தமிழில் சொல்வதில்லை. தமிழகத்தின் பல கட்டுமான தளங்களில் கியூரிங் என்றுதான் சொல்வார்கள். கட்டி முடித்த சுவரும், இட்டு முடித்து கான்கிரீட் தளங்களும், துாண்களும் தரமாக இருக்க தண்ணீர் செலுத்துவது அவசியம்.
செங்கலை இணைத்து சுவர் ஆக்குவதற்கு 'சாந்து' வேண்டும். சுவரின்மீது பூசுவதற்கும் சாந்து தேவை. சாந்து என்பது சிமென்ட், மணல் கலந்து உருவாகிறது. தளங்களும், துாண்களும் கான்கிரீட்டால் உருவாகின்றன. கான்கிரீட்டில் சிமென்ட், மணல், கருங்கல், ஜல்லி கலந்திருக்கின்றன.
சாந்திலும், கான்கிரீட்டிலும் உள்ள முக்கிய இடுபொருள் தண்ணீர். இந்த நீர் ஆவியானதும், ஏற்கனவே நீர் இருந்த இடங்களில் வெற்றிடம் உருவாகும். அங்கு தொடர்ந்து நீரை செலுத்துவதன் வாயிலாக அகத்தில் ஒரு வேதியியல் வினை நடக்கும்.
உள்ளே புகும் நீரானது சிமென்டில் உள்ள கால்சியம் சிலிகேட் எனும் வேதிப்பொருளுடன் சேரும் விளைவாக, கந்தகம், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் கூட்டில் ஒரு பசையை உருவாக்கும். இந்த பசை ஏற்கனவே ஆவியான நீர் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடங்களை நிரப்பும். இந்த பசை கட்டியாகி, கான்கிரீட் சாந்தை வலுவாக்கும்.
இந்த வினை நடக்காவிட்டால் வெற்றிடங்கள் முழுமையாக நிரம்பாது. அந்த சாந்தும், கான்கிரீட்டும் குறைபட்டதாகவே இருக்கும். பிற்காலத்தில் பலம் இழந்து இரும்பு கம்பிகளில் துரு பிடித்தல், கான்கிரீட் வெடிப்பு ஏற்படும்.
தொடர்ந்து, கட்டுமானத்தின் ஆயுளும் குறையும். கான்கிரீட்டை எந்தவித சமரசமும் இல்லாமல் குறிப்பிட்ட காலத்துக்கு நீராற்ற வேண்டும். கியூரிங் முறை நடப்பதால் மட்டுமே கட்டுமானத்துக்கு நோயற்ற வாழ்வு அமையும். தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.