/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டடத்தின் மேல்தள பராமரிப்பில் அலட்சியம் காட்டாதீர்!
/
கட்டடத்தின் மேல்தள பராமரிப்பில் அலட்சியம் காட்டாதீர்!
கட்டடத்தின் மேல்தள பராமரிப்பில் அலட்சியம் காட்டாதீர்!
கட்டடத்தின் மேல்தள பராமரிப்பில் அலட்சியம் காட்டாதீர்!
ADDED : செப் 15, 2024 08:35 AM
பொதுவாக கட்டடங்களில் நீர்க்கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் தான் மக்கள் வீடு கட்டுகின்றனர். ஆனால், அவர்களின் கவனத்தையும் மீறி சில சமயங்களில் நீர்க்கசிவு பிரச்னைகள் ஏற்படுவதை பரவலாக பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது.
புதிதாக வீடு கட்டும் ஒவ்வொருவரும் அதில் எந்த விதத்திலும் நீர்க்கசிவு பிரச்னைகள் வரக் கூடாது என்று தான் நினைக்கின்றனர். இதற்காக கட்டுமான நிலையில் பொறியாளர் சொல்லும் அனைத்து விஷயங்களுக்கு ஒப்புதல் தெரிவித்து, செலவுகளை உரிமையாளர்கள் ஏற்கின்றனர்.
இருப்பினும், பயன்பாட்டு நிலையில், கட்டடங்களில் நீர்க்கசிவு ஏற்படும் போது, உரிமையாளருக்கு ஏற்படும் அச்சம், பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. புதிய வீடு கட்டும் போது மேல் தளத்துக்கான கம்பிகளை தேர்வு செய்வது, கான்கிரீட் தேர்வு போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்கின்றனர்.
கான்கிரீட் போடும் பணிகள் முடிந்த நிலையில், அதன் மேல் மழை நீர் வடிந்து செல்ல வாட்டம் ஏற்படுத்துதல், வெளியேறும் குழாய்கள் அமைத்தல் போன்ற விஷயங்களில் தான் பெரும்பாலான தவறுகள் நடக்கின்றன. தரமான கம்பிகள், கான்கிரீட் போட்டாலும், மொட்டை மாடியின் மேல் பகுதியில் சீரமைப்பு பணிகள் முறையாக முடிக்கப்பட வேண்டும்.
அப்படியே முறையாக மேல்தள பணிகளை மேற்கொண்டாலும், அவற்றை தொடர்பான பராமரிப்பு என்பதில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. தனி வீடு கட்டுபவர்களானாலும், அடுக்குமாடி குடியிருப்புகள் என்றாலும், கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் தேவையில்லை என்று ஒதுக்கப்பட்ட பலகைகள், கட்டைகள், தகடுகள் போன்றவற்றை மொட்டை மாடியில் போட்டு வைக்கின்றனர்.
இவ்வாறு, மொட்டை மாடியில் நீங்கள் போட்டு வைக்கும் பொருட்கள் கூட மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற்றத்தை தடுக்க வாய்ப்புள்ளது. இவற்றால் மழைநீர் வெளியேறாமல் தேங்கும் நிலை ஏற்பட்டால், அது கான்கிரீட் தளத்தில் படிப்படியாக இறங்கிவிடும்.
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தேவையில்லாத மரப்பொருட்கள், பலகைகள், தகர ஷீட்கள் போன்றவற்றை இருப்பு வைப்பதை தவிருங்கள். இது போன்ற விஷயங்களில் ஏற்படும் சிறிய அலட்சியமே கட்டடத்தில் நீர்க்கசிவு போன்ற பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
கோடைகாலம், மழைக்காலம் எதுவாக இருந்தாலும், மொட்டை மாடியை வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக தண்ணீர் வெளியேறும் வடிகால் பகுதிகளில் அடைப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.