/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டு முகப்பை அழகுப்படுத்தும் 'எலிவேஷன் டைல்ஸ்'
/
வீட்டு முகப்பை அழகுப்படுத்தும் 'எலிவேஷன் டைல்ஸ்'
ADDED : ஜன 24, 2025 11:06 PM

எலக்ட்ரிக் பைப் லைன் வரும் இடத்தில் வெடிப்புகள் வருவதற்கு காரணம் என்ன? அதை எப்படி தவிர்ப்பது?
-சந்தியா, வடவள்ளி.
எலக்ட்ரிக் பைப் லைனுக்கு காடி எடுக்கும் போது,  முடிந்தவரை கிடைமட்டமாக எடுக்காமல், செங்குத்தாகவோ அல்லது சரிவாகவோ எடுக்க வேண்டும். அதை சிமென்ட் கலவை கொண்டு சரியான முறையில் பேக்கிங் செய்ய வேண்டும். பிறகு, எலக்ட்ரிக் பைப் காடி எடுத்த இடம் மற்றும் சுவர் மற்றும் பில்லர், பீம் இணையும் இடத்திலும், நான்கு இன்ச் அகலம் உள்ள பைபர் மெஸ்ஸை, சிமென்ட் கலவை கொண்டு பொருத்திய பிறகு, முழு சுவற்றையும் பூச வேண்டும். அதற்கு குறைந்தது ஏழு நாட்கள் தவறாமல் நீர் பாய்ச்ச வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றினால் சுவற்றில் எந்த இடத்திலும், வெடிப்புகள் வராமல் தவிர்க்கலாம்.
ரூப் கான்கிரீட்டுக்கு ரெடி மிக்ஸ் கான்கிரீட் உபயோகிக்கலாமா அல்லது மிக்சர் மிஷின் வைத்து கான்கிரீட் போடலாமா?
-மோகன்குமார்,
வடவள்ளி.
சரியான மேற்பார்வை இல்லாத பட்சத்தில், மிக்சர் மெஷின் வைத்து கான்கிரீட் போடும்போது, அதில் கலக்கப்படும் மணல், ஜல்லி, சிமென்ட் மற்றும் நீரின் அளவு ஒவ்வொரு மிக்சிங்கிலும் மாறுபட வாய்ப்புள்ளது. எனவே, சரியான மிக்சிங்கில் தரமாக கிடைக்கும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டை உபயோகிப்பதே, தற்போதைய காலத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
வீட்டு முகப்பு டைல்ஸ்க்கு மாற்றுப் பொருளாக என்னென்ன உபயோகிக்கலாம்?
-தமிழ்ச்செல்வி, கோவில்பாளையம்.
வீட்டின் முன்புறத்தை அழகுப்படுத்த தற்போது பல டிசைன்களில் எலிவேஷன் டைல்ஸ்கள் வந்துள்ளன. அதை தாராளமாக உபயோகப்படுத்தலாம். அதற்கு மாற்றாக 'பெயின்டிங் டெக்சர்' வேலை பல டிசைன்களில் செய்து, அதன் மீது நமக்கு விருப்பப்பட்ட வண்ணத்தில் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம்.
'ஏ.சி.பி., சீட்' எனப்படும் அலுமினியம் காம்போசிட் பேனல் பொருத்தி, வீட்டின் முன்புறத்தை அழகாகவும், பிரமாண்டமாகவும் காட்டலாம். இது பெரும்பாலும் வணிக வளாகங்களில் பொருத்தப்படுகிறது. தற்போது, இதை வீடுகளின் முன்புறமும் பொருத்தும் நடைமுறை பிரபலமாகி வருகிறது. இதுவும் பல வண்ணங்களிலும், பல டிசைன்களிலும் கிடைக்கிறது.
நாங்கள் ஒரு புது வீடு கட்டி உள்ளோம். அதில் சோலார் பேனல் அமைக்கலாமா?
-சந்தோஷ், இருகூர்.
தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். பெரும்பாலான வீடுகளில் சோலார் வாட்டர் ஹீட்டர் அமைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றனர். அதேபோன்று நமது வீட்டில் உபயோகப்படுத்தும் அனைத்து மின் உபகரணங்களுக்கு தேவைப்படும், அனைத்து மின்சாரத்தையும் சோலார் பேனல் அமைத்து, சூரிய ஒளியின் மூலமாக உற்பத்தி செய்து நமது மின் கட்டணத்தை மிச்சப்படுத்துவதுடன், நமது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
இதற்கு ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால், மக்கள் இதை அமைத்துக் கொள்ள தயங்குகின்றனர். தற்போது, இதற்காக மத்திய அரசு சிறந்த மானியம் வழங்குகிறது. எனவே, இதை தாராளமாக பொருத்திக் கொள்ளலாம்.
ஹோம் ஆட்டோமேஷன் என்றால் என்ன?
-திருமூர்த்தி, சரவணம்பட்டி.
ஹோம் ஆட்டோமேஷன் என்பது, தற்போதைய நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக நமது வீட்டில் உபயோகப்படுத்தும் லைட்டிங், ஏர் கண்டிஷனர், டிவி, மியூசிக் சிஸ்டம் மற்றும் சில வீட்டு உபயோகப் பொருட்களை ஒரு செயலியின் மூலமாகவும், நமது கையில் இருக்கும் மொபைல் போன் மூலமாகவும், வாய்ஸ் கமென்ட் மூலமாகவும் கட்டுப்படுத்தும் செயல் முறையாகும். உதாரணமாக, இதன் மூலமாக நமது வீட்டில் உள்ள விளக்குகளை, நமக்கு விருப்பப்பட்ட நேரத்தில் எரிய வைக்கவும், அணைக்கவும், வெளிச்சத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும்.
செப்டிக் டேங்க் கட்டுவதற்கு, எங்கள் சைட்டில் இடம் குறைவாக உள்ளது; அதற்கு என்ன செய்யலாம்?
-ராஜேந்திரன், ஜோதிபுரம்.
செப்டிக் டேங்க் கட்டுவதற்கு இடம் குறைவாக இருக்கும் பட்சத்தில், தாங்கள் 'பயோ செப்டிக் டேங்க்' அமைத்துக் கொள்ளலாம். இதற்கு குறைவான இடம் இருந்தாலே போதுமானது. இந்த பயோ செப்டிக் டேங்கிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு வெளியேறும் கழிவு நீரை, தாவரங்களுக்கு உபயோகித்துக் கொள்ளலாம். இது, நமது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தடுக்கிறது.
ரமேஷ்குமார்,
முன்னாள் தலைவர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா)

