/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
'ரூப் சிலாப்' அமைத்த சிறிது நேரத்தில் வெடிப்பு காரணிகளை சரி செய்ய பொறியாளர்கள் 'டிப்ஸ்'
/
'ரூப் சிலாப்' அமைத்த சிறிது நேரத்தில் வெடிப்பு காரணிகளை சரி செய்ய பொறியாளர்கள் 'டிப்ஸ்'
'ரூப் சிலாப்' அமைத்த சிறிது நேரத்தில் வெடிப்பு காரணிகளை சரி செய்ய பொறியாளர்கள் 'டிப்ஸ்'
'ரூப் சிலாப்' அமைத்த சிறிது நேரத்தில் வெடிப்பு காரணிகளை சரி செய்ய பொறியாளர்கள் 'டிப்ஸ்'
ADDED : ஜூன் 07, 2025 01:11 AM

ரூப் சிலாப் அமைத்த சிறிது நேரத்தில் ஒரு சில இடங்களில் வெடிப்புகள் வருகின்றன; இதனை எப்படி சரிசெய்வது?
--சுப்ரமணியன், மாதம்பட்டி.
வெப்பமான வானிலை மற்றும் வறண்ட காற்று, பலகை அடைப்பு தரம், மோசமான வேலைப்பாடு மற்றும் நீர், சிமென்ட் விகிதத்தால் விரைவான ஈரப்பதம் இழப்பு ஏற்படும்பட்சத்தில் கான்கிரீட் விரிசல் ஏற்படுகின்றது. இந்த காரணிகளை சரி செய்வது மற்றும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கான்கிரீட் மேற்பரப்பில் சிமென்ட் கலந்த நீரை தெளித்து, அதை சமன் செய்வது மற்றும் இலகு ரசாயன கலவைகளை சரியான விகிதத்தில் பயன்படுத்துவதன் வாயிலாக, விரிசல்கள் உருவாவதை முற்றிலும் தவிர்க்கலாம்.
படிக்கட்டு மற்றும் பால்கனிக்கு எம்.எஸ்.கிரில் அல்லது எஸ்.எஸ். கிரில் இவற்றில் எது சிறந்தது?
-கிரிதரன், வடமதுரை
இவை இரண்டும் தனி தனி சிறப்பு உடையது. எம்.எஸ். கிரில் அமைத்தால் உறுதித்தன்மை அதிகம்; செலவு குறைவு. ஆனால், பராமரிப்பு செலவு அதிகம். எஸ்.எஸ். கிரில் அமைத்தால் சற்று உறுதித் தன்மை குறைவு; செலவு சற்று அதிகம். ஆனால், பராமரிப்பு செலவு குறைவுடன் நீண்ட நாட்களும் உழைக்கும். மேலும், அழகாகவும் இருக்கும்.
நான் புதிதாக வீடு கட்டி வருகிறேன். அதில், ஜன்னல் அடிமட்டத்தில் 'சில்கான்கிரீட்' போடவேண்டுமா?
-கோபி, சுந்தராபுரம்.
ஜன்னல் அடிமட்டத்தில் அவசியம். 'சில்சிலாப் கான்கிரீட்' அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் அமைத்தால் சிறப்பு. சில்சிலாப் கான்கிரீட் போடுவதால் ஜன்னல் மூலைகளில் வரும் வெடிப்புகளை தவிரக்கலாம்.
காலம் போட்டு பில்டிங் கட்டினால் ரூப் பீம் தேவையில்லை என மேஸ்திரி கூறுகிறார்; சரியா?
-பாலாஜி, கண்ணாப்பநகர்.
இது தவறான கட்டுமான முறை. காலம் போஸ்ட் போட்டு கட்டடம் கட்டும் போது கட்டாயம் ரூப் பீம் போடவேண்டும். ஒரு பொறியாளரின் ஆலோசனையை கேட்டு அதன்படி கட்டடம் கட்டினால் இது போன்று நடக்க வாய்ப்பு இல்லை.
காம்பவுண்ட் சுவர் காலம் போஸ்ட், பிளின்த் பீம் போட்டு கட்டியுள்ளேன். இருப்பினும் சுவரில் கீழிருந்து மேல் நோக்கி ஆங்காங்கே வெடிப்புகள் வந்துள்ளது. இதனை எப்படி சரிசெய்வது?
-செல்வராஜ், ஆலாந்துறை.
காலம் போஸ்ட், பிளின்த் பீம் போட்டு கட்டியிருந்தாலும், 10 அடிக்கு ஒன்று எனும் விகிதத்தில் பில்லர் அமைத்து, எக்பேன்சன் ஜாயின்ட் விட்டு, சில்லெவலில் சிலாப் அமைப்பது போல் காம்பவுண்ட் சுவரின் மேல்மட்டத்தில் கம்பி கட்டி சில்சிலாப் கான்கிரீட் அமைத்தால் இது போன்ற வெடிப்புகள் வராது.
புதிதாக வீடு கட்ட உள்ளேன். 'பிளான் அப்ரூவல்' வாங்க வேண்டுமா. வங்கி யில் கடன் வாங்கி வீடு கட்டினால்தான், பிளான் அப்ரூவல் வேண்டும் என்கிறார்களே?
-குமார், கிணத்துக்கடவு.
நீங்கள் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கினாலும் சரி அல்லது வாங்காமல் கையில் உள்ள பணத்தை வைத்து கட்டினாலும் சரி. கட்டாயம் பிளான் அப்ரூவல் வாங்க வேண்டும். வீடு கட்டிய பின்பு வீட்டு வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பிளான் அப்ரூவல் கட்டாயம் வாங்கியிருக்க வேண்டும்.
-பொறியாளர் மணிகண்டன்,
இணை செயலாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.