/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை எப்படி கட்டக்கூடாது? 90 'டிகிரி' மூலைகள் அமைப்பதை தவிர்க்க அறிவுரை
/
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை எப்படி கட்டக்கூடாது? 90 'டிகிரி' மூலைகள் அமைப்பதை தவிர்க்க அறிவுரை
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை எப்படி கட்டக்கூடாது? 90 'டிகிரி' மூலைகள் அமைப்பதை தவிர்க்க அறிவுரை
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை எப்படி கட்டக்கூடாது? 90 'டிகிரி' மூலைகள் அமைப்பதை தவிர்க்க அறிவுரை
ADDED : செப் 20, 2024 10:25 PM

கட்டட வேலை தொடங்கும் முன் முதன்முதலாக செய்யக் கூடிய வேலை கீழ்நிலை தொட்டி வேலை.
இந்த வகை தொட்டிகளை, செங்கல் கொண்டு கட்டுதல், கான்கிரீட் சுவர் அமைத்துக் கட்டுதல், 'ரெடிமேட்' முறையில் அமைத்தல், 'ஜனதா ரிங்' அமைத்து கட்டுதல் என நான்கு வகைகளில் அமைக்கலாம். கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் நீளம், அகலம், உயரம் இவற்றை பெருக்கி வரும் விடை கன அடியில் கிடைக்கும்.
வருகின்ற விடையை, 28.3/லி., என்ற எண்ணுடன் பெருக்கி வரும் விடை தான் கீழ்நிலை நீர் தேய்க்க தொட்டியின், மொத்த லிட்டர் கொள்ளளவு.
உதாரணமாக, தொட்டியின் உள்ளளவு நீளம், 8 அடி, அகலம் 5 அடி, உயரம் 6 அடி, 8*5*6=240 கன அடி; 240*28.3/லிட்டர்=6,792 லிட்டர்.
'காட்சியா' உறுப்பினர் விஸ்வநாதன் கூறியதாவது:
செங்கல் சுவர் கட்டும் போது, சரியான முறையில் கட்ட வேண்டும். சுவர் பூசும் போது, 'வாட்டர் புரூப்' செய்து பூச வேண்டும். கீழ்நிலை நீர் தேக்க தொட்டியின் அடித்தளம் சரியான முறையில் அமைக்க வேண்டும்.
கான்கிரீட் முறை
கான்கிரீட் முறையில் கட்டுதல் என்பது, மண்ணின் இலகுத்தன்மை பொறுத்து கட்டப்படுகின்றது. இவை பெரும்பாலும் மண் தன்மை வெகுவாக இலகுவாக இருப்பதால், கான்கிரீட் சுவர் அமைக்கப்படுகிறது. இவற்றிலும் வாட்டர் புரூப் செய்து பூச வேண்டும். அடித்தளம், மேல்தளம் கான்கிரீட் சரியான முறையில் அமைத்தல் வேண்டும்.
தொட்டியின் உள் மூலைகளில், நீர் அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே, அறை சுவர்கள் போன்ற, 90 டிகிரி கொண்ட சம்ப்/டேங்க் மூலைகளை கட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, வட்டமான மூலைகளை உருவாக்க வேண்டும். இதனால் நீரின் அழுத்தம் ஒரு பெரிய பகுதியில் வினியோகிக்கப்படுகிறது. மூலைகளை சுத்தம் செய்ய எளிதாகவும், அழுக்கு சேராமலும் இருக்கும்.
ரெடிமேட் தொட்டி
ரெடிமேட் தொட்டி என்பது, முன்பே வடிவமைக்கப்பட்டு அந்த அளவிற்கு ஏற்ப குழியை தோண்டி தொட்டியை அப்படியே புதைத்து வைத்து விடுவார்கள். தற்காலிக தொட்டி என்பது குழியை தோண்டி 'ஜனதா ரிங்' தேவைக்கேற்ப குழியில் இறக்கி இடுக்குகளை பூசி, அடித்தளத்தையும் மேல் தளத்தில், கான்கிரீட் சிலாப்பையும் போட்டு விடுவார்கள்.
எவ்வாறு கட்டக்கூடாது
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியானது, சாக்கடைக்கு அருகாமையிலோ, 'செப்டிக் டேங்க்' அருகாமையிலோ, தாழ்வான இடத்திலொ கட்டக் கூடாது. ஏனெனில் சாக்கடை தண்ணீர், மழைநீர், கழிவுநீர் எளிதில் உட்புகும் வாய்ப்பு உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு அமைந்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.
செங்கல் சுவர் கட்டும் தொட்டியில் சில சமயங்களில் மரத்தின் வேரானது உட்புகுந்து, செங்கல் சுவரை விரிவடையசெய்கிறது. இதனால் தொட்டியில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதை உடனடியாக நாம் சரி செய்ய வேண்டும். சுவரின் விரிசல் இருந்தால் 'எபோக்சி கோட்டிங்' மூலம் சரி செய்து முறையாக பராமரிக்கலாம். அவ்வப்போது குளோரின் கலந்து, தண்ணீரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை, தொட்டியை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.