/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
புதிய வீட்டில் அறைகளின் உட்புற உயரத்தை சரி பார்ப்பது எப்படி?
/
புதிய வீட்டில் அறைகளின் உட்புற உயரத்தை சரி பார்ப்பது எப்படி?
புதிய வீட்டில் அறைகளின் உட்புற உயரத்தை சரி பார்ப்பது எப்படி?
புதிய வீட்டில் அறைகளின் உட்புற உயரத்தை சரி பார்ப்பது எப்படி?
ADDED : மே 10, 2025 07:24 AM

புதிய வீடு வாங்கும் போது அதன் அமைப்பு சார்ந்த பல்வேறு விஷயங்களில் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, நீங்கள் வாங்கும் வீட்டின் தரைமட்ட உயரம் என்ன, வெளிப்புற உயரம் என்ன, உட்புற உயரம் என்ன என்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இதில் தனி வீடு வாங்கும் போதும், அடுக்குமாடி திட்டங்களில் தரைதள வீட்டை வாங்கும் நிலையிலும் தரைமட்ட உயரம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அந்த பகுதியின் சாலையில் இருந்து வீட்டின் தரை மட்டம், 3 முதல், 5 அடி வரை உயர்ந்து இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
வீட்டின் தரைமட்ட உயரம் இந்த அளவுக்கு உயரமாக இருந்தால் மட்டுமே மழைக்காலத்தில் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுவதை தடுக்க முடியும். எனவே, புதிதாக வீடு வாங்கும் போது, வீட்டின் தரை மட்ட உயரம் சார்ந்த விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக, வீட்டின் தரைமட்ட உயரம் அதிகரிக்கும் நிலையில், வீட்டின் ஒட்டுமொத்த வெளிப்புற உயரம், உட்புற உயரம் சார்ந்த விஷயங்களிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலான கட்டுமான திட்டங்களில் வெளியில் இருந்து பார்க்கும் போது வீட்டின் வெளிப்புற உயரம் அதிகமாக இருப்பது போன்று தெரியும்.
வெள்ள பாதிப்பை தடுக்க வீட்டின் தரைமட்ட உயரத்தை அதிகரிப்பதால் தான் இந்த தோற்றம் ஏற்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் வீடு வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் அமைப்பு அடிப்படையிலும் உயரம் வேறுபடும்.
உதாரணமாக, தரைதளத்தில் இருந்து அத்திட்டம் துவங்குகிறதா அல்லது அடித்தளத்தில் இருந்து துவங்குகிறதா என்று பாருங்கள். இதில் அடித்தளம் அமைத்து அதன் மேல் தரைதளம் மற்றும் பிற தளங்கள்அமையும் போது வெளிப்புற உயரம் அதிகமாக இருப்பது போன்று தெரியும்.
அடித்தளம் அமைத்தாலும், அமைக்காவிட்டாலும், தரை மட்டத்தை எவ்வளவு உயர்த்தினாலும், வீட்டுக்குள் உட்புற உயரம் என்பது சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். பொதுவாக, பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், வீட்டிற்குள் தரையில் இருந்து மேல் தளத்துக்கான உயரம், 10 அடியாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன.
ஆனால், பயன்பாட்டு நிலையில் அளந்து பார்த்தால், 9.3 அடி உயரத்துக்கு தான் பெரும்பாலான வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் வீட்டில் வசிப்போர் அனைவரும் சராசரி உயரத்தில் தானே இருக்கிறோம், 10 அடிக்கு பதில் ஒன்பது அடி உயரம் இருந்தால் என்ன என்று தோன்றும்.
ஆட்கள் வந்து செல்வது மட்டுல்லாது, வீட்டில் மின்விசிறி, ஏசி, விளக்குகள், புகை போக்கிகள் போன்ற வசதிகள் அமைக்கும் போது உயரம் சார்ந்த பிரச்னைகள் தெரியவரும். .
எனவே, நீங்கள் வாங்கும் வீட்டில் தரையில் இருந்து மேல் தளம், 10.3 அடி உயரத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் உள்ளிட்ட விஷயங்களை சரியான முறையில் பராமரிக்க முடியும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.