/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
/
அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
ADDED : பிப் 15, 2025 08:18 AM

புதிதாக வீடு வாங்குவதானாலும், கட்டுவதானாலும், நகர், ஊரமைப்பு சட்டப்படி உரிய துறையில் அனுமதி பெறப்பட்ட வரைபடம் இருக்க வேண்டும். அந்த வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வீட்டின் அமைப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே வாங்கிய நிலத்தில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கான பணிகளை துவங்கும் போது வரைபடம் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். புதிய வீட்டை கட்டும் பொறுப்பை ஒப்பந்த அடிப்படையில் யாரிடம் ஒப்படைத்தாலும், வரைபடம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களது புதிய வீட்டுக்கான வரைபடம் யார் வாயிலாக தயாரிக்கப்படுகிறது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
அந்த வரைபடத்துக்கு, சம்பந்தப்பட்ட அரசு துறையில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறும் பணிகளை ஒப்பந்ததாரர் அல்லது பொறியாளர் மேற்கொள்வதை உறுதி செய்யுங்கள்.
அரசு துறையில் அனுமதி பெறப்பட்ட வரைபடம் என்றாலும், அதில் நிபந்தனைகள் ஏதாவது விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். இப்படி முறையாக அனுமதி பெற்ற பின், அதன் அடிப்படையில் வீட்டை கட்டி முடிக்கும் நிலையில், பயன்பாட்டு ரீதியாக ஏதாவது பிரச்னை வரும் என நீங்கள் நினைத்து, சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை எழலாம்.
குறிப்பாக, வரவேற்பு அறை, படுக்கை அறை, குளியலறை போன்ற இடங்களில் நடுவில் துாண்கள் வரும் சூழல் ஏற்பட்டால், அது பயன்பாட்டு நிலையில் பிரச்னையை ஏற்படுத்தும். இது போன்ற துாண்கள் வரும் இடங்கள் சுவருடன் இணையும் வகையில் வீட்டின் வடிவமைப்பு இருக்க வேண்டும்.
ஆனால், உங்கள் கவனத்தையும் தாண்டி, வரைபடத்தில் குறிப்பிட்டபடி கட்டடம் கட்டினால் பயன்பாட்டில் பிரச்னை ஏற்படும் என தெரியவரும் நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்தில் தேவையான திருத்தங்களை செய்து, அதற்கும் ஒப்புதல் பெறுவது அவசியம்.
ஒரு முறை ஒப்புதல் வழங்கிவிட்டால் அது தான் இறுதியானது என்று நினைத்து, வரைபட திருத்தத்துக்கு விண்ணப்பிக்காமல் கட்டடத்தில் மாற்றம் செய்யாதீர். உங்கள் வீட்டுக்கான வரைபடத்தின் அடிப்படையில் மட்டுமே கட்டுமான பணிகள் நடக்க வேண்டும் என்பதில் முழு உறுதியுடன் இருங்கள்.
தவிர்க்க முடியாத நிலையில் கட்டுமானத்தில் சில இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அது குறித்து கட்டட அமைப்பியல் வல்லுனர், கட்டட வடிவமைப்பாளர், கட்டுமான பொறியாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பதிலாக, தன்னிச்சையாக மாற்றங்களை செய்தால் விதிமீறல் புகாருக்கு ஆளாக நேரிடும்.
நீங்கள் கட்டும் வீட்டுக்கு மட்டுமல்ல; அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் நீங்கள் வாங்கும் வீட்டின் வரைபடத்திலும் இதே அளவுக்கு கவனம் செலுத்த வேண்டும். வரைபடத்தில் குறிப்பிட்டபடி வீட்டின் அமைப்பு இருக்கிறதா என்பதை கவனமாக பாருங்கள்.
இதில் மாற்றங்கள் ஏதாவது தெரிய வந்தால், அது குறித்து கட்டுமான நிறுவனத்திடம் விசாரிக்கவும். இதற்கு திருத்தப்பட்ட வரைபடம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.